கோலா உருண்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கோலா உருண்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சிம்மக்கல் கறி தோசையும் கோலா உருண்டையும்

      
                    என்னதான் வாழ்க்கை வசதிக்காக நகரங்களை நோக்கி ஓடினாலும் ஒவ்வொருவருக்கும் கிராமத்தின் மீது ஒரு காதல் இருக்கத்தானே செய்கிறது. நகரத்தின் எல்லா வசதிகளோடும் ஒரு பெரிய கிராமம் கிடைத்தால் எப்படி இருக்கும்? மதுரைக்காரர்களுக்குக் கொஞ்சம் கொடுப்பினை இருக்கிறது!

                           மதுரையின் ஒவ்வோர் அம்சத்திலும் ஒட்டிக்கொண்டிருக்கும் அந்தக் கிராமத்து வாசனைதான் சிம்மக்கல் கறி தோசை, கோலா உருண்டையின் விசேஷம். ஊர் உலகம் எல்லாம் ரவா தோசை, வெங்காய தோசை, மசாலா தோசை என்று நூறு ரகமாய்ப் போட்டும் மாறாத தோசையின் சைவ முகத்தை ஆராவாரம் இல்லாமல் அசைவமாக மாற்றியிருக்கிறார்கள் மதுரைக்காரர்கள். மதுரை சிம்மக்கல்லில் இரவில் மட்டும் திறந்திருக்கிறது ‘கோனார் மெஸ்’. பெயர்ப் பலகையெல்லாம் கிடையாது; கேட்டால் "இது மக்கள் வைத்த பெயர்'' என்கிறார்கள். வழக்கமாக அசைவச் சாப்பாட்டுக் கடைகளில் கிடைக்கும் புரோட்டா, சால்னா, பிரியாணி கதையெல்லாம் இங்கு கிடையாது. சகலமும் கறி தோசைதான். வெள்ளாட்டுக் கறி தோசை, மூளை தோசை, ஈரல் தோசை, நாட்டுக்கோழிக் கறி தோசை என்று கறிப் பித்துதான் பிடிக்கவைக்கிறார்கள். தொட்டுக்கொள்ளவும் இதே வகைகளில் தினுசு தினுசாய்க் குழம்பு; எதைக் கேட்கிறீர்களோ அதைத் தருகிறார்கள்.