தொலைக்காட்சியில் பார்த்தபோது, எழுந்து நின்று அந்தப் பெருங்கூட்டத்தின் கூடவே சேர்ந்து உச்சஸ்தாயியில் கத்த வேண்டும் போல் இருந்தது: “நானும் ஷார்ல்!”
ஒரு மொழியில் ‘மக்கள் எழுச்சி’ என்பதுபோல, ஜனநாயகத்தை உந்தித் தள்ளும் இரு சொற்களின் சேர்க்கைக்கு இணை இல்லை. வரலாற்றில் மிக அரிதான தருணங்களே இந்த ஜோடி சொற்களை உண்மையாகப் பயன்படுத்தும் வாய்ப்பை வழங்குகின்றன. இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாலஸ்தீன அதிபர் முஹம்மது அப்பாஸ் என 40 உலகத் தலைவர்கள் மத்தியில் நின்று பிரான்ஸ் அதிபர் பிரான்ஸிஸ் ஹோலந்த் “இன்று பாரீஸ் உலகின் தலைநகரம்” என்று முழங்கியது கூடுதலான வர்ணனை அல்ல; ‘பாரீஸ் ஷார்ல் ஹிப்டோ பேரணி’ வரலாற்றில் என்றென்றைக்கும் நிலைத்திருக்கக் கூடிய மக்கள் எழுச்சி. கருத்துச் சுதந்திரம் மீதும் படைப்பாளிகள் மீதும் தாங்கள் கொண்டிருக்கும் மதிப்பை வெளிப்படுத்தி, பிரெஞ்சு மக்கள் வெளியிட்டிருக்கும் சர்வதேசப் பிரகடனம்!


