ஆட்சிமன்றங்களில் உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்வு சம்பிரதாய நிமித்தமானது. ஊடகங்களில் பதவியேற்புச் செய்தியும் சம்பிரதாய நிமித்தமானது. இந்தியாவின் பதினேழாவது மக்களவையில் உறுப்பினர்கள் பதவியேற்ற நிகழ்வானது வழக்கமான நிமித்தத்தைத் தாண்டி, சர்வதேச ஊடக வெளிச்சத்தைப் பெற்றதற்கு இரு காரணங்கள் இருந்தன. உறுப்பினர்கள் பதவியேற்றபோது அதிகாரபூர்வ உறுதிமொழியோடு தத்தமது அரசியலைப் பிரகடனப்படுத்தும் முழக்கங்களையும் சேர்த்துக்கொண்டது முதன்மைக் காரணமானது. அதிகமான உறுப்பினர்கள் இம்முறை தத்தமது தாய்மொழியில் உறுதிமொழி எடுப்பதில் காட்டிய ஆர்வம் அடுத்த காரணமானது.
உலகில் இன்று எந்த நாட்டிலும் இப்படிப்பட்ட அட்டகாசத்தைப் பார்க்க முடியாது. “முழக்கங்கள் எழுப்புவது மரபல்ல; அவைக் குறிப்பிலும் முழக்கங்கள் இடம்பெறாது” என்று திரும்பத் திரும்ப வலியுறுத்தப்பட்டபோதும் எவர் காதிலும் அது விழுந்ததாகத் தெரியவில்லை. ஆட்டத்தைத் தொடக்கிவைத்தவர்கள் ஆளும் பாஜகவினர். பிரதமர் மோடி பதவியேற்க வந்தபோது “மோடி, மோடி, மோடி” என்று முழங்கியவர்கள் அடுத்து, தமக்குப் பிடித்தமானவர்கள் வந்தபோது “ஜெய் ஸ்ரீராம்” முழக்கத்தை முழங்கலாயினர். மேலும், தங்களுடைய பதவியேற்பு உறுதிமொழியோடு “பாரத் மாதா கீ… ஜே!”, “ஜெய் ஸ்ரீராம்!”, “ராதே ராதே! கிருஷ்ணம் வந்தே ஜெகத் குரு!”, “ஹரஹர மஹாதேவ்” என்றெல்லாம் முழுக்கங்களைச் சேர்த்துக்கொண்டனர். தொடர்ந்து, தங்களுக்குப் பிடிக்காத, எதிர் வரிசையில் உள்ளவர்கள் பதவியேற்க வரும்போதும், அவர்களைச் சீண்டும்விதமாக “ஜெய் ஸ்ரீராம்” முழக்கத்தை பாஜகவினர் ஒலிக்கலானபோது, எதிர்க்கட்சியினரும் முழக்கங்களைக் கையில் எடுத்தனர்.
திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர் காகோலி கோஷ் தஸ்திதர், “ஜெய் ஸ்ரீராம்” முழக்கத்துக்கு ஈடுகொடுக்க “ஜெய் மா காளி!”, “ஜெய் மா காளி!” என்று முழங்கியபடியே உறுதிமொழி எடுக்க வந்தார். முஸ்லிம் மஜ்லிஸ் கட்சி உறுப்பினரான அஸாதுதீன் ஓவைஸி பதவியேற்க வந்தபோது, பாஜகவினரின் முழக்கம் உச்சம் தொட்டது. தன் இரு கைகளையும் உயர்த்தி பாஜகவினரின் சீண்டலை வரவேற்பது போன்ற சைகையுடன் வந்தவர் “ஜெய் பீம்”, “ஜெய் மீம்”, “தக்பீர்”, “அல்லாஹூ அக்பர்”, “ஜெய் ஹிந்த்!” என்று சொல்லித் தன் உறுதிமொழியேற்பை முடித்தார். சமாஜ்வாதி கட்சி உறுப்பினர் எஸ்.டி.ஹசன் உறுதிமொழிக்குப் பின் “ஜெய் ஹிந்துஸ்தான்” என்று சொல்லி பாஜகவினருக்கே அதிர்ச்சி அளித்தார். ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினரான பகவத் மன் “இன்குலாப் ஜிந்தாபாத்” என்று முழங்கினார். பாஜக கூட்டணியிலுள்ள சிரோன்மணி அகாலி தளத்தின் சுக்பீர் சிங் பாதலைக்கூட அன்றைய சூழல் எங்கோ சீண்டியிருக்க வேண்டும். சீக்கிய மத குருவை வாழ்த்தும் “வஹே குருஜீ கா கால்சா, வஹே குருஜீ கி ஃபதே” முழக்கத்தை முழங்கிய அவர் தன்னுடைய உறுதிமொழியை நிறைவுசெய்தார்.
தமிழ்நாட்டின் எதிர்வினை
தமிழ்நாட்டின் உறுப்பினர்களில் அதிமுகவின் ஒரே உறுப்பினரான ஓ.பி.எஸ். ரவீந்திரநாத் மட்டும் “எம்ஜிஆர் வாழ்க, அம்மா வாழ்க, ஜெய்ஹிந்த், வந்தே மாதரம்” என்று சொல்லித் தன் உறுதிமொழியை முடிக்க, திமுக - காங்கிரஸ் - கம்யூனிஸ்ட் - விசிக - மதிமுக - உறுப்பினர்கள் பெரும்பான்மையோர் “பெரியார் வாழ்க”, “கலைஞர் வாழ்க”, “அம்பேத்கர் வாழ்க”, “காமராஜர் வாழ்க” என்று தத்தமது தலைவர்களுக்கான வாழ்த்துகளோடு, “தமிழ் வாழ்க” எனும் வாழ்த்தையும், “உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்”, “மதச்சார்பின்மை வாழ்க”, “இந்திய ஒற்றுமைப்பாடு ஓங்குக”, “தமிழ்நாடே என் தாய்நாடு; தாய்நாட்டின் உரிமை காப்போம்” என்றெல்லாம் முழங்கியது ஒரு ஆச்சரியத்தை மீண்டும் நினைவுக்குக் கொண்டுவந்தது. ஏனைய சமூகங்கள் மதரீதியிலான முழக்கங்களை மதரீதியிலாகவே எதிர்கொள்ள முற்படும்போது, ஒரு மொழி மட்டும் எப்படி கடவுளுக்கு இணையான இடத்தை எடுத்துக்கொள்கிறது என்பதும், அது மதத்துக்கு அப்பாற்பட்ட விழுமியங்களை எப்படி முழக்கங்களாகத் தர வழிவகுக்கிறது என்பதும்தான் அது.
நாடு முழுக்க இந்த ‘முழக்க அரசியல்’ விவாதிக்கப்பட்டாலும், இந்தக் கோணத்தில் விவாதங்கள் ஏதும் நடந்ததாகத் தெரியவில்லை. இந்தியாவில் மதவழி தேசியத்தை எதிர்கொள்ள மொழிவழி தேசியம்தான் வழியா என்பதும், இந்தப் போக்கு எப்படிச் செல்லும் என்பதும் விவாதித்திருக்க வேண்டிய ஒரு விஷயம். மேலும், இந்தியாவின் மொழிப் பன்மைத்துவத்தில் உறுப்பினர்கள் காட்டிய ஆர்வத்தோடு சேர்த்து விவாதித்திருக்க வேண்டிய விஷயமும்கூட இது.




