பகுலாஹி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பகுலாஹி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வழிகாட்டுகிறது பகுலாஹி!


இப்படிப்பட்ட மனிதர்களும் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதே ஆச்சரியமாக இருக்கிறது; ‘மாஞ்சி’ படம் பார்த்தீர்களா? - இப்படிக் கேட்கும் நண்பர்களிடம் எல்லாம் கூடுதலாக ஒரு செய்தியைப் பரப்பிக்கொண்டிருக்கிறேன்: “பகுலாஹி செய்தியைக் கேள்விப்பட்டீர்களா?”

நவாசுதீன் சித்திக் - ராதிகா ஆப்தே நடிப்பில் வெளியாகியிருக்கும் இந்திப் படமான ‘மாஞ்சி’, பிகாரைச் சேர்ந்த ஏழை விவசாயியான தசரத் மாஞ்சியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. பிஹாரின் கயா மாவட்டத்தில் உள்ள கெலார் எனும் சின்ன மலைக் கிராமத்தைச் சேர்ந்தவர் தசரத் மாஞ்சி. பிஹார் போன்ற ஒரு மாநிலத்தில், மலைக் கிராமங்களில், அதுவும் ஒடுக்கப்பட்ட மக்கள் பெரும்பான்மையாக வாழும் ஊரில் அடிப்படை வசதிகள் எப்படியிருக்கும் என்று சொல்லவும் வேண்டுமா? கெலார் மக்கள் பக்கத்திலுள்ள நகரமான வஜூர்கஞ்சை அடைய வேண்டும் என்றால், மலையைச் சுற்றிக்கொண்டு 80 கி.மீ. தூரம் செல்ல வேண்டும். இதைவிடப் பெரிய கொடுமை, குடிதண்ணீர் வேண்டும் என்றாலே, மலைக்கு மறுபக்கம் சென்றுதான் எடுக்க வேண்டும். 1959-ல் இப்படி ஒரு நாள் தண்ணீர் எடுப்பதற்காகச் சென்றார் தசரத் மாஞ்சியின் மனைவி பல்குனிதேவி. கல் இடறி தவறி விழுந்ததில், பாறைகளில் உருண்டு படுகாயம் அடைந்தார். வஜூர்கஞ்ச் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் பாதி வழியிலேயே பல்குனிதேவியின் உயிர் போய்விட்டது. ஒரு சாதாரண மனிதரான தசரத் மாஞ்சியை ‘மலை மனிதர்’ ஆக்கியது இந்தச் சம்பவம். தன் மனைவிக்கு ஏற்பட்ட நிலை இன்னொருவருக்கு ஏற்படக் கூடாது என்று முடிவெடுத்தார். உளி, சுத்தியல். இரண்டையும் கொண்டே தனி ஒரு ஆளாக மலையின் நடுவே 25 அடி உயரம், 30 அடி அகலம், 360 அடி நீளத்தில் ஒரு பாதையை அமைத்தார். கெலாரையும் சேர்த்து 60 கிராம மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை அந்தப் பாதை உருவாக்கியது. கிட்டத்தட்ட 22 ஆண்டுகள் உழைப்பு + கடுமையான அர்ப்பணிப்புணர்வின் பலன் இது.

அரசாங்கத்திடமிருந்தோ, சமூகத்திடமிருந்தோ தசரத் மாஞ்சி எதையும் எதிர்பார்க்கவில்லை. பின்னாளில், ‘பத்மவிபூஷண்’ விருதுக்கு மாஞ்சியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டபோதும்கூட, “ஒரு தனி மனிதர் இப்படி மலையைப் பிளந்து பாதை அமைத்தார் என்பதற்கு ஆதாரமில்லை” என்று கூறி மத்திய அரசு நிராகரித்தது. “எனக்கு விருதெல்லாம் வேண்டாம்; என் ஊர் மக்களுக்கு ஒரு மருத்துவமனை வேண்டும்; முடிந்தால் அதைச் செய்துகொடுங்கள்” என்று கூறி நிலமற்ற விவசாயியான தனக்கு, பிகார் அரசு அளித்த 5 ஏக்கர் நிலத்தையும் கொடுத்துவிட்டார். 2007-ல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தபோதுதான் தசரத் மாஞ்சி நம் அரசியல்வாதிகளின் கண்ணுக்குத் தெரிந்தார். பிஹார் அரசு மரியாதையோடு அவருடைய இறுதி நிகழ்ச்சிகள் நடந்தன.