![]() |
| அருந்ததி ராயுடன் சமஸ் |
அருந்ததி ராயுடன் பேசுவது மனசாட்சியுடன் உரையாடுவதுபோல. உரையாடல் மிக நெருக்கமானதாக இருக்கும். ஆனால், உண்மையை எதிர்கொள்ளும் திராணி உங்களுக்கு வேண்டும். பொதுவாக தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கைபற்றிப் பேசுவதைத் தவிர்க்கும் அருந்ததி அன்றைக்கு எந்தக் கேள்வியையும் ஒதுக்காமல் பதில் அளித்தார்.
‘‘இன்றைய அருந்ததி ராய் உருவாக, சின்ன வயது வாழ்க்கை எந்த அளவுக்கு அடிப்படையாக இருந்தது என்று சொல்ல முடியுமா?’’
‘‘எனக்கு ஒரு வயதானபோது என் பெற்றோருக்கு விவாகரத்து ஆனது. கலப்புத் திருமணம் செய்துகொண்டு, கணவனைப் பிரிந்த ஒரு பெண் ஊர் திரும்பும்போது நம் சமூகம் எப்படி வரவேற்கும் என்று நான் சொல்ல வேண்டியது இல்லை. எல்லோராலும் நிராகரிக்கப்பட்ட நிலையில் நானும் என் அம்மாவும் இருந்தோம். அப்படிப்பட்ட ஓர் இடத்தில் இருந்துதான் உறவுகளும் சமூகமும் எனக்கு அறிமுகம் ஆனார்கள்.’’
‘‘உங்கள் வாழ்க்கையை வடிவமைத்ததில் உங்கள் அம்மாவுக்கு முக்கியப் பங்கு உண்டு என்று சொல்லி இருக்கிறீர்கள்...’’
‘‘நான் பார்த்த உன்னதமான பெண்களில் ஒருவர் என் அம்மா. ஒரு சாதாரன குடும்பத்தில் பிறந்த, சிந்திக்கத் தெரிந்த பெண் என்று அவரைச் சொல்லலாம். ஒரு குடும்ப நிகழ்ச்சிக்காக வெளியூர் போய் இருந்தபோது, வந்த இடத்தில் தன்னிடம் கல்யாணம் செய்துகொள்வோமா என்று கேட்ட மனிதனைத் திருமணம் செய்துகொண்டு அங்கேயே தங்கியவர் அவர். பெரிய காதல் எல்லாம் இல்லை. வாழ்க்கையை ஏதோ ஒரு வகையில் பிடித்துக்கொள்ள வேண்டும் என்ற நிர்ப்பந்தம். ஆனால், அந்தக் குடிகாரக் கணவன் தன்னுடைய பிழைப்புக்காக எந்த எல்லைக்கும் போகலாம் என்று முடிவெடுத்தபோது உதறிவிட்டு வந்துவிட்டார். அப்பாவைவிட்டு பிரிந்து வந்த பிறகு, ஊட்டியில் சின்ன இடத்தில் நாங்கள் இருந்தோம். சாப்பாட்டுக்கே வழி இல்லை. அப்புறம் கேரளத்துக்குப் போனோம். வாழ்க்கையில் பெரிய போராட்டங்களை அம்மா நடத்தினார். வாழ்க்கையின் சங்கடங்களை அந்த வயதிலேயே நேரடியாகப் பார்த்ததால், ‘உன்னைப் பாதுகாக்க யாரும் இருக்க மாட்டார்கள்... நீதான் மற்றவர்களைப் பாதுகாக்க வேண்டும்’ என்கிற பாடம் கிடைத்துவிட்டது. முழுமையான சுதந்திரத்தின் பரவசம், பயங்கரம் இரண்டையும் அந்தச் சூழல்தான் எனக்குக் கற்றுக்கொடுத்தது.’’

