அபூர்வமான எழுத்து: அ.முத்துலிங்கம்

பத்திரிகை அலுவலகம் பரபரப்பாக இயங்கியது. செய்தியாளர் தன் மேசையில் ஒரு தாளில் தலைப்பை எழுதிவைத்துவிட்டு உட்கார்ந்திருந்தார். அதில் இருந்த வாசகம் இதுதான்: ‘புகைக்கூண்டில் சிக்கிய மாடு’.
ஆசிரியர் கேட்டார்: ”இது என்ன தலைப்பு?”
செய்தியாளர் சொன்னார்: “இந்தத் தலைப்பு கவர்ச்சியாக இருக்கிறது. எதற்கும் எழுதிவைத்துவிட்டு காத்திருக்கிறேன். ஒருநாள் உண்மையாக இப்படி நேரும்போது இந்த தலைப்பை உபயோகிக்கலாம் அல்லவா?”

இப்படியான சூழலில்தான் பத்திரிகை உலகம் இயங்குகிறது. முன்கூட்டியே எதையும் யோசித்துவைக்க வேண்டும். எல்லாமே அவசரம்தான். உடனுக்குடன் செய்தி தேவை. அடுத்த பத்திரிகை ஒன்றை எழுதுவதற்கு முன்னர் எழுதிவிடவேண்டும். எழுத்து நன்றாக அமைந்து வாசகரைக் கவர வேண்டும். எழுதுவதில் நம்பகத்தன்மை இல்லையென்றால், அது வாசகர்களைச் சென்றடையாது. ஆகவே அடுத்த சில நிமிடங்களில் அச்சுக்குப் போக இருக்கும் பத்திரிகைக்குத் தகுந்த ஆதாரங்களை திரட்டித் தரவேண்டும். இதுதான் ஒரு பத்திரிகையாளர் எதிர்கொள்ளும் தினசரி அவலம்.

*

கனடாவில் பிரபலமான பத்திரிகை ‘ரொறொன்ரோ ஸ்டார்’. காலையில் அநேகம் பேர்களின் கைகளில் அது காணப்படும். 25 வருடங்களாக அந்தப் பத்திரிகையில் ஆசிரியராக பணியாற்றியவரிடம், ‘ஒரு நல்ல பத்திரிகையாளருடைய இலக்கணம் என்ன?’ என்று கேட்டேன். அவர் இரண்டு வரிகளில் பதில் சொன்னார். ’எழுதுவது சுவாரஸ்யமாக இருக்க வேண்டும். எழுத்தில் உண்மை வெளிப்படவேண்டும்.’
சமஸின் கட்டுரைகளைத் தொகுப்பாகப் படித்தபோது எனக்குத் தோன்றியது அதுதான். அவருடைய எழுத்தில் இவை இரண்டும் இருந்தன.

நான் சமஸைச் சந்தித்தது கிடையாது; அவரிடம் பேசியதும் இல்லை. ஆனால், எப்பொழுதெல்லாம் சமஸ் கட்டுரைகள் என் கண்களில் படுகின்றனவோ அப்பொழுதெல்லாம் அவற்றைப் படித்துவிடுவேன். அதற்குக் காரணம் அவர் வாதங்களைத் திறமையாக அடுக்கி அதன் தர்க்க முடிவு நோக்கி வாசகர்களை நகர்த்திக்கொண்டு செல்லும் நேர்த்திதான். சமஸுடைய மொழிநடை அபூர்வமானது. ஆழமான ஆற்றை மேலே நின்று பார்த்தால் அது ஓடுவதே தெரியாது. அதுபோலத்தான் சமஸுடைய எழுத்தும். ஆர்ப்பாட்டமில்லாமல் ஆழத்தில் பாயும்.


சமகால வரலாற்றுக் களஞ்சியம் - எஸ். வி. ராஜதுரை

சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்பது ஒரு கலை. எல்லோருக்கும் கை கூடாதது. சமூகத்துக்குத் தேவையான செய்திகளை, ஆழமான பார்வையுடன், இதழியல் உலகம் விதித்திருக்கும் வரம்புகளைக் கருத்தில் கொண்டும், சாதாரண வாசகர்களுக்கும்கூட புரியும் வகையிலும் எழுதுவது அவ்வளவு எளிதானது அல்ல. சமஸ் இந்தக் கலையில் தேர்ச்சி பெற்றவர்.
தமிழக அரசியல், ஈழப் பிரச்சினை, சாதியம், ஜனநாயகம், சுதந்திரம், வேளாண்மை, பொருளாதாரம், சுற்றுச்சூழல், ஊடக நெறிகள், மருத்துவம், பாலினம், பாலியல் என வீச்சும் விரிவுமிக்க களங்களில் இறங்கி அவர் எழுதியுள்ள கட்டுரைகளைப் படிக்கையில், ஒரு சமகால வரலாற்றுக் களஞ்சியத்தைப் படிக்கும் உணர்வு உருவாகிறது. இன்னும் ஐம்பது, நூறாண்டுகளுக்குப் பிறகு தமிழக, இந்திய அரசியல், பொருளாதார, பண்பாட்டு வரலாற்றை எழுதப் போகிறவர்களுக்கு முக்கியத் தரவுகளைக் கொண்டிருக்கின்றன இந்தக் கட்டுரைகள்.

பாரீஸ் ஏன் பாரீஸாக இருக்கிறது?


தொலைக்காட்சியில் பார்த்தபோது, எழுந்து நின்று அந்தப் பெருங்கூட்டத்தின் கூடவே சேர்ந்து உச்சஸ்தாயியில் கத்த வேண்டும் போல் இருந்தது: “நானும் ஷார்ல்!”

ஒரு மொழியில் ‘மக்கள் எழுச்சி’ என்பதுபோல, ஜனநாயகத்தை உந்தித் தள்ளும் இரு சொற்களின் சேர்க்கைக்கு இணை இல்லை. வரலாற்றில் மிக அரிதான தருணங்களே இந்த ஜோடி சொற்களை உண்மையாகப் பயன்படுத்தும் வாய்ப்பை வழங்குகின்றன. இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாலஸ்தீன அதிபர் முஹம்மது அப்பாஸ் என 40 உலகத் தலைவர்கள் மத்தியில் நின்று பிரான்ஸ் அதிபர் பிரான்ஸிஸ் ஹோலந்த் “இன்று பாரீஸ் உலகின் தலைநகரம்” என்று முழங்கியது கூடுதலான வர்ணனை அல்ல; ‘பாரீஸ் ஷார்ல் ஹிப்டோ பேரணி’ வரலாற்றில் என்றென்றைக்கும் நிலைத்திருக்கக் கூடிய மக்கள் எழுச்சி. கருத்துச் சுதந்திரம் மீதும் படைப்பாளிகள் மீதும் தாங்கள் கொண்டிருக்கும் மதிப்பை வெளிப்படுத்தி, பிரெஞ்சு மக்கள் வெளியிட்டிருக்கும் சர்வதேசப் பிரகடனம்!

அடிப்படைவாதிகளும் ஆயுதங்களும்


செய்தி மேஜையின் மேல் வரிசையாக வந்து விழுந்துகொண்டே இருக்கின்றன பிரெஞ்சு பத்திரிகையான ‘ஷார்ல் ஹிப்டோ’வைப் பற்றிய செய்திகள். பயங்கரவாதிகள் எப்போது, எப்படி வந்தார்கள்... பத்திரிகை அலுவலகத்துக்குள் எப்படிப் புகுந்தார்கள்... எப்படிச் சுட்டுக் கொன்றார்கள்... எப்படிக் கைதுசெய்யப்பட்டார்கள்... எந்த அமைப்பு இந்தப் படுகொலைக்குப் பின்னணியில் இருக்கிறது...

செய்திகள் ஒன்றன் மீது ஒன்றாக விழுகின்றன. கூடவே படங்களும் வந்து விழுகின்றன. சிரித்துக்கொண்டிருக்கும் அதன் ஆசிரியரின் படம். அலுவலகத்தில் பரபரப்பான வேலையில் ஈடுபட்டிருக்கும் அதன் ஆசிரிய இலாகாவினரின் படம். கணினி முன் படம் வரையும் அதன் கேலிச் சித்திரக்காரர்கள் படம். கூடவே கேலிச் சித்திரங்களும் வந்து விழுகின்றன. உலகெங்கும் இந்தப் படுகொலைக்குக் கண்டனம் தெரிவித்து வரையப்பட்ட கேலிச் சித்திரங்கள். இடையிடையே துண்டு துண்டாகக் குறிப்புகளில் வந்து விழுகிறது அதன் வரலாறு.

யார் இந்த சமஸ் அல்லது எங்கே நிம்மதி? - அரவிந்தன்

யார் இந்த சமஸ்? - பலருக்கும் இந்தக் கேள்வி எழுந்திருக்கும். சிலருக்கு வியப்புடன், சிலருக்குக் கடுப்புடன். இரண்டுக்குமே நியாயமான காரணங்கள் இருக்கக் கூடும் என்ற முரண்பாடுதான் சமஸின் வசீகரத்துக்குக் காரணம்.

சரியான திசையில் இயங்கும் அக்கறைகள்: ராஜன் குறை கிருஷ்ணன்

மஸ் குறித்து சிந்திக்கும்போது மகிழ்ச்சியாகவும் இருக்கிறது; கொஞ்சம் பொறாமையாகவும் இருக்கிறது. இவ்வளவு இளம் வயதில் இவ்வளவு பயன்மிக்க வாழ்வை வாழக் கற்றுக்கொண்டுவிட்டாரே என்பதுதான் பொறாமைக்கு காரணம். இப்படி ஒரு இதழியலாளர் தமிழில் இயங்குவது குறித்து மகிழ்ச்சி. அவருடைய அக்கறைகள் சரியான திசைகளில் இயங்குகின்றன என்பதற்கு இந்த தொகுப்பு நூல் முக்கிய சாட்சி.

இந்த நூலுக்கு மதிப்புரை வழங்கிய நான்கு பேருடைய சிறுபட்டியல் வியப்பளிப்பது. ஜெயமோகன், ஞாநி, எஸ்.வி.ராஜதுரை, அ.முத்துலிங்கம். இப்படியாக மிக வித்தியாசமான பார்வைகள் கொண்டவர்களை ஈர்க்கும்படியாக அவர் எழுதியிருக்கிறார் என்பது வியப்பாக இருக்கிறது. ஆனால் அதை சாதிக்க சமஸ் அவர் அதைச்சொன்னார், இவர் இத்தச்சொன்னார் என்று நிலைபாடுகள் எடுப்பதை தவிர்த்து ஒரு வலுவற்ற நடுநிலையை உருவாக்கவில்லை. மாறாக நடுநிலை என்பது ஒரு தார்மீகப் பார்வைதான் என்பதை சமஸின் எழுத்துகள் நிரூபிப்பதாகப் படுகிறது.

அமைப்புகளை நோக்கி அதிகம் பேசும் குரல்: அ.ராமசாமி

காலைத் தினசரிகளில் நான் காலையில்முதலில் வாசிப்பன செய்திகள். அடுத்து நீண்ட செய்திகள். நேரமிருந்தால் செய்திக் கட்டுரைகள். பலரும் பங்கேற்ற நிகழ்வுகள் பற்றிய செய்திகள் இருந்தால்அன்றைய காலை வாசிப்பில் செய்திக் கட்டுரைகள் ஒதுக்கி வைக்கப்பட்டு மாலைக்குரியதாக மாறிவிடும். பல்கலைக்கழகம் போய்விட்டு வந்து மாலையில் படிப்பேன்.
மாலையில் படிக்கலாம் என வைத்துவிட்டுப்போன பல செய்திக் கட்டுரைகள் படிக்கப்படாமலே நின்றுபோய்விடுவதுமுண்டு. படிக்கப்படாமல் போய்விடுவதற்கு எனது நேரமின்மை மட்டுமே காரணமாகிவிடாது. செய்திக் கட்டுரையை எழுதியவரின் ஈர்ப்பும் ஒரு காரணம். சமஸின் ‘யாருடைய எலிகள் நாம்?’ தொகுப்பில் இருக்கும் பல கட்டுரைகள் எனது மாலை நேர வாசிப்பில் வாசித்தவை என்பது திரும்பவும் படிக்கும்போது தோன்றுகின்றது.

ஒரு செய்திக்கட்டுரையாளனும் பத்தி எழுத்தாளனும் நிகழ்வுகளுக்காகக் காத்துக் கொண்டிருப்பவர்கள். நிகழ்ச்சி முடிந்ததைத் தகவலாகக் கருதி எழுதிக்காட்டும் வேலையைச் செய்தால் செய்தியாளனாக இருக்கிறான். நிகழ்ந்து முடிந்துவிட்டபின் காரணகாரியங்களைத் தேடிச் சொல்வதை வேலையாக்கிக்கொள்ளும்போது அவன் செய்திக் கட்டுரையாளனாக ஆகி விடுகிறான். இதழியல் துறையில் இருப்பவர்களுக்குச் செய்தியாளனாக இருப்பதிலிருந்து செய்திக் கட்டுரையாளனாக ஆவது என்பது ஒரு பணி மேம்பாடு. பணி மேம்பாடு என்றவுடன் கூடுதல் சம்பளம் என்பதாகக்கொள்ள வேண்டியதில்லை. அவன் தனது துறையில் தனது அடையாளத்தை வெளிக்காட்டவும், நிலை நிறுத்தவுமான வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டவன் என்ற தகுதியை அடைகிறான். தங்களைத் தகுதிக்குரியவர்களாக்கிக்கொள்ளும் வாய்ப்பை நோக்கி நிற்கும் இதழாளர்களால் நிரம்பி வழியவில்லை நமது பத்திரிகை உலகம். பெரும்பாலான பத்திரிகைகள் - தினசரி, வார இதழ்களின் தேவை செய்தியாளர்கள் மட்டுமே; செய்திக் கட்டுரையாளர்கள் அல்ல.

சமஸ் - இந்தப் புத்தகத்தின் வாயிலாக அறிமுகமான பெயரல்ல. நான் வாசித்த தினசரிகளின் வாயிலாக அறிமுகமான பெயர். அவர் எழுதிய கட்டுரைகளை அவை அச்சில் வந்த காலங்களிலேயே வாசித்திருக்கிறேன். அப்படி வாசித்தபோதெல்லாம் ஒரு செய்திக் கட்டுரையாளர் என்ற அடையாளத்தோடு நின்று போயிருந்தார். இப்போது அவற்றை ஒரே புத்தகமாக வாசிக்கும்போது அந்த அடையாளத்திலிருந்து இன்னும் மேலேயொரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் என்பதை உணர்கிறேன். அதற்கான காரணங்கள் அவர் பின்பற்ற நினைக்கும் இதழியல் நெறிகள் சார்ந்தவைகளாக இருக்கின்றன என்பது அவர் மீது கூடுதலான ஈர்ப்பை உண்டாக்குகின்றன. ஏனென்றால் நிகழ்கால ஊடக உலகம் அவற்றிற்கான நெறிகளைத் தொலைத்த உலகமாக இருக்கிறது. அப்படிச் சொல்வதுகூடச் சரியில்லை; நெறிகளை உருவாக்கிக்கொள்ளாத உலகமாக இருக்கிறது என்று சொல்வதே சரியானது.

அரிய சமன்பாடுதான் சமஸிடம் பிடித்தது: பி.ஏ. கிருஷ்ணன்

மஸ் எழுதிய ’யாருடைய எலிகள் நாம்’ புத்தகத்தைப் படித்து முடித்தவுடன் தோன்றியது இதுதான்: அவருடைய வயதில் எனக்கு அவருக்கு இருக்கும் தெளிவும் சமன்பாடும் ஏன் இல்லாமல் போய்விட்டது? புத்தகம் முழுவதும் அவருக்கு நமது சாதாரண மக்களின் மீது இருக்கும் அக்கறை தெளிவாக வெளிப்படுகிறது. அந்த அக்கறையைத் தாரை தம்பட்டங்கள் இல்லாமல் வெளிப்படுத்தியிருப்பதே சமஸில் வெற்றி என்று நான் கருதுகிறேன். அவரோடு ஒத்துப்போக முடியாத பல இடங்கள் புத்தகத்தில் இருக்கின்றன. ஆனால் அவரிடம் பேசி அவரை மாற்ற முடியும் அல்லது அவரால் தெளிவு பெற்று நான் மாறலாம். என்ற எண்ணத்தை எனக்கு அவரது எழுத்து அளிக்கிறது.

அழியாக்குரல் - ஜெயமோகன்


செய்தி என்பதற்கும் வரலாறு என்பதற்கும் என்ன உறவு? நேற்றைய செய்திகளால் ஆனது வரலாறு. இன்றைய செய்தியோ நேற்றைய செய்தியின் மீதுதான் வந்து விழுகிறது. அதை மறக்கவைக்கிறது. பொருளற்றதாக்குகிறது. நாலைந்து நாள் பழைய செய்தித்தாள்கூட என்ன இது என்ற துணுக்குறலையே அளிக்கிறது. இந்தப் பெரும் சவாலை ஏற்றுக்கொள்கிறான் செய்தி ஆய்வாளன். இன்றைய செய்தியை அவன் நேற்றைய செய்திகளால் ஆன ஒரு பெரிய பரப்பில் கொண்டுசென்று பொருத்துகிறான். செய்தியின் உடனடித்தன்மையை, முன்பின்னற்ற நிகழ்காலத்தன்மையை, வரலாற்றின் தொடர்ச்சியாக மாற்றிக்காட்டுகிறான். அப்படி மாற்றப்படாத செய்தி என்பது வெறும் தகவல். அதிலிருந்து சிந்தனைகள் கிளைப்பதில்லை. கொள்கைகள் உருவாவதில்லை. வரலாற்றில் வைத்துப்பார்க்கப்படாத செய்தி என்பது பரிசீலிக்கப்படாத செய்தியே.

ஒரு செய்தியில் இருந்து வரலாற்றுக்குச் சென்று வலுவான கேள்விகளையும் ஐயங்களையும் எச்சரிக்கைகளையும் முன்வைக்கும் கூரிய கட்டுரைகள் சமஸுடையவை. இந்நூலில் உள்ள அனைத்துக் கட்டுரைகளையுமே அவ்வகையிலான வரலாற்று வாதத்தை உருவாக்குபவை என்று சொல்லலாம்.

தமிழின் palimpsest வரலாறு: சாரு நிவேதிதா


மிழ்ச் சமூகத்தை philistine சமூகம் என்று பல ஆண்டுகளாக விமர்சித்து வருகிறேன்.  தமிழ்ச் சமூகமே ஒட்டு மொத்தமாக சராசரிகளின், பாமரர்களின் உலகமாக மாறி விட்டது.  சென்ற மாதம் ஒரு கருத்தரங்கத்திற்குச் சென்றிருந்தேன்.  ஆயிரம் பேர் குழுமியிருந்தனர்.  ஒரு விஞ்ஞானி பேசினார். "அமெரிக்கர்களும் ஜப்பானியர்களும் ரஷ்யர்களும் செய்ய முடியாத விண்வெளிச் சாதனையை நாம் நிகழ்த்தி விட்டோம்."  மங்கள்யான் பற்றிப் பேசுகிறார் விஞ்ஞானி.  அரங்கத்தில் கூடியிருந்த ஆயிரம் பேரும் கைகளைத் தலைக்கு மேல் தூக்கி கோஷம் எழுப்பினார்கள்.  இப்படிப்பட்ட வெட்டிப் பெருமையிலேயே இன்பம் கண்டு  கொண்டிருக்கிறது தமிழ்ச் சமூகம்.  ஏன் வெட்டிப் பெருமை என்று சொன்னேன் என்றால், இங்கே நடப்பதற்கோ வாகனங்களில் செல்வதற்கோ சாலைகள் இல்லை.  பல்லாங்குழிச் சாலைகள் என்ற பதம் செய்தித்தாள்களில் பொது வழக்காகி விட்டது.  ஏதோ போர்க்கள பூமியைப் போல் காட்சி அளிக்கின்றன சாலைகள்.   ஏழைகளுக்கு மருத்துவ வசதி கிடையாது.  கல்வி வசதி கிடையாது.  ஏழைகளுக்கு ஒரு கல்வி; மேட்டுக்குடிக்கு ஒரு கல்வி.  குப்பத்துக் குழந்தைகள் குப்பத்திலேயே இருக்க வேண்டியதுதான்.  மேலேறிச் செல்வதற்கான பாதை தரமான கல்வி மறுக்கப்படுவதன் மூலம் நான்கு வயதிலேயே அடைக்கப்பட்டு விடுகிறது.   இது எல்லாவற்றையும் விடக் கொடுமை, பெண்கள் தனியாக நடமாடவே முடியாத நிலை.  இப்படிப்பட்ட கொடூரமான ஏற்றத்தாழ்வுகளும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் மலிந்த இந்த சமூகத்தைப் பற்றிய எந்தக் கவலையோ அக்கறையோ விழிப்புணர்வோ இல்லாமல் செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் விடுவது பற்றிப் பேசுகிறார் விஞ்ஞானி.  இதைத்தான் பாமரர்களின் உலகம் என்று சொல்லி வருகிறேன்.  எவ்வளவோ சாதனைகள் புரிந்திருந்தாலும், தங்கள் துறையில் எப்பேர்ப்பட்ட மேதைகளாகவே இருந்தாலும் சமூகப் பிரக்ஞை என்று வரும் போது ஒரு பாமரனைப் போலவே பேசுகிறார்கள்.

இந்தச் சூழ்நிலையில் பத்திரிகைத் துறை எப்படி இருக்கும்?  ஒட்டு மொத்த சமூகமே சராசரித்தனத்தால் மூடிக் கிடக்கும் போது பத்திரிகையில் எழுதுபவரிடம் மட்டும் நாம் எப்படி ஒரு சமூகப் பிரக்ஞையையும் பொறுப்புணர்வையும் கலாச்சார சுரணையுணர்வையும் எதிர்பார்க்க முடியும்?  அதனால்தான் ஆங்கிலப் பத்திரிகைகளின் நடுப்பக்கக் கட்டுரைகளோடு தமிழ்ப் பத்திரிகைகளால் போட்டி போட முடியவில்லை.  இந்த ஒட்டு மொத்த மொண்ணைத்தனத்துக்கு எதிராகத்தான் கடந்த ஒரு நூற்றாண்டுக் காலமாக சிறுபத்திரிகைகள் நடத்திப் போராடி வருகிறார்கள் இலக்கியவாதிகள்.  இதே போன்றதொரு குரலைத்தான் சமஸின் கட்டுரைகளில் நான் காண்கிறேன்.   சமஸ் சிறுபத்திரிகைகளில் இயங்காமல் வெகுஜன இதழ்களிலும் நாளிதழ்களிலும் பணியாற்றியதால் இவரது கட்டுரைகள் லட்சக் கணக்கான மக்களைச் சென்று அடைந்தது ஒரு அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும்.

இடதுசாரிகள் ஒண்ணா சேரணும் - நல்லகண்ணு


சென்னை சி.ஐ.டி. நகரிலுள்ள வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில், ரூ. 4,500 வாடகை வீட்டில் இன்முகத்தோடு வரவேற்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு. இன்றைக்கு 90-வது பிறந்த நாள். இந்த வயதிலும் ஆள் அசரவில்லை. ஒரு ஆர்ப்பாட்டத்துக்குப் போய்விட்டு அப்போதுதான் வந்திருந்தவர் நள்ளிரவு வரை நீண்ட நேர்காணலுக்கு நிதானமாகப் பதில் அளித்தார்.