சிகாகோவிலிருந்து ஒரு மின்னஞ்சல். அனுப்பியிருப்பவர் சதீஷ்குமார். இளைஞர். வேலையை ராஜினாமா செய்துவிட்டு சொந்த ஊரான வேலூர் வந்துவிடலாமா என்று நினைக்கிறேன். நம்மூரில் சமூகத்துக்காக எதாவது செய்ய வேண்டும். இன்றைய அரசியல் சூழலை எப்படி மாற்றுவது என்று கேட்டிருக்கிறார். கோவையிலிருந்து ஒரு மின்னஞ்சல். அனுப்பியிருப்பவர் மைதிலி. இரு குழந்தைகளுக்குத் தாய். இந்தச் சமூகத்துக்காக ஏதாவது செய்ய வேண்டும். ஆனால், எங்கிருந்து தொடங்குவது என்று கேட்டிருக்கிறார். மதுரையிலிருந்து ஒரு மின்னஞ்சல். தன் பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை அவர். நாட்டின் அரசியல் சூழல் மாற்றத்துக்குப் பங்களிக்க விரும்புகிறேன். ஆனால், என்னுடைய குடும்பச் சூழலில் வீட்டைவிட்டு வெளியே வர முடியாது. எங்களைப் போன்றவர்களுக்கு என்ன வழி இங்கே இருக்கிறது என்று கேட்டிருக்கிறார். நூற்றுக்கணக்கான மின்னஞ்சல்கள். நிறையப் பேர் மாணவர்கள். என்ன செய்வது; எங்கிருந்து தொடங்குவது என்பதே அவை சுமந்திருக்கும் அடிப்படைக் கேள்விகள்.
உண்மையில், செய்வதற்குக் கண் முன் ஏராளமான பணிகள் கொட்டிக் கிடக்கின்றன. தேவை என்னவென்றால், ஒரே ஒரு தெளிவு: எல்லாமே அரசியல்தான். அரசியல் மாற்றத்தை எங்கிருந்து தொடங்கலாம் என்றால், முதலில் வீட்டிலிருந்து, கழிப்பறையிலிருந்தேகூடத் தொடங்கலாம்.
கொஞ்சம் விளக்கமாகவே எழுதுகிறேன்.
என் தாத்தாவுக்கு முதுகுத்தண்டில் பிரச்சினை இருந்தது. கூடவே மூல உபத்திரவமும் இருந்தது. கழிப்பறைக்குச் செல்வது என்பது ஒவ்வொரு நாளும் அவரளவில் நரகத்துக்குச் சென்று திரும்பும் அனுபவம். இந்திய பாணிக் கழிப்பறையில் உட்காருவதும் எழுவதும் அவருக்கு மரண அவஸ்தை. பக்கவாட்டில் பிடித்துக்கொண்டு எழவும் உட்காரவும் சுவரில் ஒரு இரும்புக் குழாய் பதிக்கப்பட்ட இந்திய பாணிக் கழிப்பறையையே கடைசிவரை பயன்படுத்தினார். அதற்கு மூன்று காரணங்களை அவர் சொல்வார், 1. சுற்றுச்சூழலுக்கு ஓரளவேனும் இதுவே உகந்தது - தண்ணீர் சிக்கனம். 2. சுகாதாரத்துக்கு உகந்தது - நம்முடைய உடல் கழிப்பறையில் ஒட்டுவதில்லை. 3. உடலியக்கத்துக்கு நல்லது - நம்முடைய மலக்குடல் அமைப்புக்கு இப்படி உட்கார்ந்து கழிப்பதே சரியானது. தவிர, இது ஒரு வகையான ஆசனம். மூன்றுமே அறிவியல்பூர்மானவை.

