ஒரு மோட்டார் சைக்கிள். சாயுங்காலம் பணி முடிந்ததும் அலுவலகத்திலிருந்து
வெளியே வரும் அந்த இளைஞன் மோட்டார்
சைக்கிளை எடுக்க எத்தனிக்கிறான். குப்பென்று
பறக்கின்றன அதுவரை அந்த மோட்டார்
சைக்கிளைச் சூழ்ந்திருந்த கொசுக்கள். நூறல்ல, இருநூறல்ல... ஆயிரத்துக்கும்
மேற்பட்ட கொசுக்கள். அந்த இளைஞன் அருகே
நிறுத்தப்பட்டிருக்கும் மோட்டார் சைக்கிள்களைத் தட்டுகிறான். மேலும் பல்லாயிரம் கொசுக்கள்.
அவனை அவை ஆக்கிரமிக்கத் தொடங்க
தன்னுடைய மோட்டார் சைக்கிளைக் கிளப்புகிறான். விளக்கொளியைச் சூழ்கின்றன... அந்தச் சாலை முழுவதையும்
ஆக்கிரமித்திருக்கும் கொசுக்கள். சென்னையில் இந்த வருடம் பலருக்கும்
காணக் கிடைத்த ஓர் அனுபவம்
இது.
ஒருகாலத்தில் கிராமங்களில் வேப்ப இலைகளுக்கும் நொச்சி
இலைகளுக்கும் அடங்கிய கொசுக்கள், வேப்ப
எண்ணெய் விளக்குக்கும் கற்பூரத் தண்ணீருக்கும் மயங்கி விழுந்த கொசுக்கள்,
மின் விசிறிக் காற்றுக்கு முன் பறக்க முடியாமல்
முடங்கிய கொசுக்கள்... இன்றைக்கு மின் விசிறி, கொசுவர்த்திச்
சுருள், பூச்சிக்கொல்லி தெளிப்பான், கொசுக்கொல்லி திரவம்... அத்தனையையும் தாண்டி படை எடுக்கின்றன.
நள்ளிரவில் தூக்கம் கெட்டு எலெக்ட்ரிக்
பேட்டுகள் துணையோடு போராடுகிறோம். கொசுக்கள் வர வர சாகின்றன...
சாக சாக வருகின்றன. ``எங்கள்
வாழ்நாளில் இவ்வளவு கொசுக்களை நாங்கள்
பார்த்தது இல்லை’’ என்று சொல்கிறார்கள்
வயது முதிர்ந்த பெரியவர்கள். நமக்கு கொசுக்கள் எங்கிருந்து
வருகின்றன என்று யோசிக்க நேரம்
இல்லை. அடுத்து எதை வாங்கி
கொசுக்களைச் சமாளிக்கலாம் என்று யோசிக்கிறோம். சரி,
வீட்டுக்குள் வரும் கொசுக்களை இன்னும்
வீரியமான விஷத்தைத் தெளித்துக் கட்டுப்படுத்திவிடலாம் என்று தேற்றிக்கொள்கிறோம். வீட்டுக்கு
வெளியில்?

