வாராணசியிலிருந்து புறப்பட்ட பாடலிபுத்திரா எக்ஸ்பிரஸ் சென்னையை நெருங்க இன்னும் கொஞ்ச தூரம் இருந்தது. குளிர்சாதன வசதியையும் தாண்டி வெயிலின் சூடு ரயிலுக்குள் தகித்தது. பெட்டிபடுக்கையைச் சரிசெய்தபடி தயாரானேன். இந்திய மக்களின் மனதை அறிய, பயணங்கள், குறிப்பாக ரயில் பயணங்களைப் போல ஒரு வழி இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. முந்தைய பயணங்களைப் போல இது நெடுநாளைய பயணம் இல்லை என்றாலும், இன்றைய இந்திய அரசியலின் போக்குகளைத் தீர்மானிக்கும் திசைகளைத் தொட முடிந்த வகையில் என்னளவில் இதுவும் ஒரு முக்கியமான பயணம். எதிரே உட்கார்ந்திருந்த கன்னடக் குடும்பத்துக்கு நன்றி சொல்லிவிட்டுப் புறப்பட்டேன். அவர்கள் பெங்களூரு செல்கிறார்கள். “கர்நாடகம் இன்னும் எவ்வளவு காலத்துக்குக் கன்னடியர்களின் நிலமாக இருக்கும் என்று தெரியவில்லை; ரொம்ப சீக்கிரம் சிதறடித்துவிடுவார்கள் என்று அஞ்சுகிறேன்” என்று முன்னதாகப் பேசிக்கொண்டிருந்தபோது குறிப்பிட்டார் அந்தக் குடும்பத்தின் பெரியவர். ஒவ்வொரு மாநிலத்திலும் இன்று ஒவ்வொரு விதமான பிரச்சினைகள். யாரும் உள்ளுக்குள் பேசிக்கொள்ள முற்படுவது இல்லை. நான் புறப்பட்டபோது அந்தப் பெரியவர் கையைப் பிடித்து அணைத்துக்கொண்டார்.
பாய்ந்து வரும் காற்றுக்கு முகங்கொடுத்தபடி கதவோரத்தில் நின்றிருந்தேன். ரயில் வேகமாகச் சென்னையின் எல்லைக்குள் நுழைந்துகொண்டிருந்தது. இந்தியாவில் 30 மாநிலங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் இவற்றில் ஏதோ சில மாநிலங்களில் தேர்தல்கள் நடந்தபடிதான் இருக்கின்றன. என்றாலும், நாட்டிலேயே அதிகமான மக்கள்தொகையைக் கொண்ட மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் 325/403 என்ற பிரம்மாண்டமான பெரும்பான்மையுடன் பாஜக கூட்டணி அடைந்திருக்கும் சமீபத்திய வெற்றியை அப்படிப் பத்தோடு ஒன்றாகக் கடந்து செல்ல முடியுமா?

