மோடிகள், பாகவத்துகள், கார்த்திகள் யுகத்தில் சாஸ்திரிகள்!


வாராணசியில், “இந்தியப் பிரதமர்களில் அரிதானவர்” என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தால் புகழப்பட்ட நாளில், மேடை பின்னணியில் படமாக இருந்த லால் பகதூர் சாஸ்திரியின் ஆன்மா என்னவெல்லாம் நினைத்திருக்கும் என்று தெரியவில்லை. காங்கிரஸ் தலைவர்களைச் சுவீகரித்துக்கொண்டு புதிய வரலாற்றை உருவாக்கும் ஆர்எஸ்எஸ்/ பாஜக அரசின் செயல்திட்டத்தின் சமீபத்திய இலக்கு சாஸ்திரி. மோடி அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் கையில் இப்படி 72 பெயர்களைக் கொண்ட பட்டியல் இருக்கிறது. இந்தப் பட்டியலில் ஆர்எஸ்எஸ்/ பாஜகவின் முன்னோடிகளான வீர சாவர்க்கர், தீன் தயாள் உபாத்யாய, ஷியாமா பிரசாத் முகர்ஜி போன்றவர்களைக் காட்டிலும் இந்துத்துவப் பரிவாரங்களோடு சம்பந்தமில்லாதவர்கள்/ காங்கிரஸ் தலைவர்களின் எண்ணிக்கை அதிகம். காங்கிரஸ் - பாஜக இரு முகாம்களுக்கும் அப்பாற்பட்ட அரவிந்தர், விவேகானந்தர், பாரதியார், தாகூர், அம்பேத்கர், பகத் சிங், தெரசா ஆகியோரின் பெயர்களும்கூடப் பட்டியலில் உண்டு. பிரதான நோக்கம், இந்திய மக்களிடம் காங்கிரஸுக்கு இன்றைக்கும் இருக்கும் அதன் ஆதார பலம் எதுவோ- அந்தச் சுதந்திரப் போராட்ட வரலாற்றை- நொறுக்கித்தள்ளுவது. நுட்பமான அரசியலின்படி, இனி தேசப்பிதா காந்தியும் இந்துத்துவ சித்தாந்தங்களின்  பிதாமகனான வீர சாவர்க்கரும் சரிசமமான இருக்கைகளில் உட்கார்ந்திருப்பார்கள். இந்தியாவின் பன்மைத்துவத்துக்கு ஆதரவாகவும், இந்துத்துவ ஆதிக்கத்துக்கு எதிராகவும் போராடிய அபுல் கலாம் ஆசாத் இனி நினைவுகூரப்படுவார், அவருடைய கல்விச் சேவைக்காக மட்டும். நேரடியான உதாரணம், வழக்கமாக இந்தியப் பிரதமர்கள் எப்போதும் அக்டோபர் 30 அன்று இந்திரா காந்தியை நினைவுகூர்வார்கள். இந்த முறை மோடி, அன்றைய தினத்தன்று படேலின் பிறந்த நாளை நினைவுகூர்ந்தார். காங்கிரஸின் கை விரலையே எடுத்து, அதன் கண்ணையே குத்திக் குருடாக்கும் உத்தி இது.

ஒரு காந்தியின் வருகையும் ஒரு காந்தியின் புறப்பாடும்


நூறு வருடங்களுக்கு முன்பு 1915-ல் தென்னாப்பிரிக்காவிலிருந்து மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி இந்தியா திரும்பியபோது அவருக்கு வயது 45. அப்போது காங்கிரஸ் கட்சிக்கு வயது 29. பம்பாய் கோகுல்தாஸ் தேஜ்பால் சம்ஸ்கிருதக் கல்லூரியில், 1885 டிசம்பர் 28 அன்று 72 பேருடன் கூடிய அகில இந்திய காங்கிரஸின் முதல் மாநாட்டுப் புகைப்படம் காந்திக்கு முந்தைய காங்கிரஸின் வரலாற்று முகத்தை ஒரு நொடியில் சொல்லிவிடக் கூடியது. பிரிட்டிஷ் இந்தியாவின் படித்த, உயர்குடி இந்திய வர்க்கத்தின் அதிகாரக் கனவுக்கான மேடை அது.

ரொம்பக் காலம் அது அப்படித்தான் இருந்தது. இந்தியாவின் மேற்கில் கொஞ்சம், கிழக்கில் கொஞ்சம், தெற்கில் கொஞ்சம் என்று பம்பாயிலும் கல்கத்தாவிலும் சென்னையிலும் நகரங்களில் ஆங்கிலம் பேசும் உயர்குடி வர்க்கத்தின் இயக்கமாகவே காங்கிரஸ் வளர்ந்தது. கூடவே, அன்றைய இந்தியாவின் இந்துத்துவ – ஆதிக்க சாதிய சக்திகளுக்கும் அதுவே மேடையாக இருந்தது. கோபால கிருஷ்ண கோகலே போன்றவர்கள் தலை யெடுக்க ஆரம்பித்தபோது, விடுதலை இயக்கத்தைப் பற்றி காங்கிரஸ் வலுவாகப் பேச ஆரம்பித்தது. காந்தி – ஜின்னா இருவருக்குமே ஆதர்சமாக விளங்கிய கோகலே காங்கிரஸில் நிறைய மாற்றங்களுக்காகக் கனவு கண்டவர்; குறிப்பாக, 1905-ல் அவர் காங்கிரஸ் தலைவரான பிறகு. ஆனாலும், காங்கிரஸை ஒரு சின்ன மேட்டுக்குடி கும்பலிட மிருந்து மீட்டு, மாபெரும் மக்கள் இயக்கமாக உருமாற்ற காந்தி வர வேண்டியிருந்தது.

காந்தியும் கோகலேவும்
கோகலேவுக்கும் காந்திக்கும் இடையே ஓர் அற்புதமான உறவு இருந்தது. பரஸ்பர ஆளுமையும் மதிப்பீடுகளும் விழுமியங்களும் உருவாக்கிய மரியாதைக்குரிய உறவு அது. தென்னாப்பிரிக்க இந்தியர்களின் போராட்டத்தை இங்குள்ள இந்தியச் சமூகத்தின் கவனத்துக்குக் கொண்டுவர காந்தி முயன்றபோது, கோகலே அதற்குப் பெரும் ஆதரவாக இருந்தார். அந்நாட்களில் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்குப் பயணம் வந்த காந்தி, கோகலேவுடன் தங்கினார். இந்தியச் சமூகவியலில் கோகலேவுக்கு இருந்த புரிதலாலும் அரசியலில் மிதமான நிலைப்பாட்டுடன் எல்லோரையும் அரவணைக்கும் ஆற்றலாலும் அவர் வசம் ஈர்க்கப்பட்டார். பின்னர், தென்னாப்பிரிக்கா திரும்பிய பின், அங்கு கோகலேவை காந்தி அழைத்திருந்தார். அங்குள்ள ஆட்சியாளர்களிடம் இந்தியத் தரப்பில் கோகலேவைப் பேச வைத்தார். கோகலே – காந்தி உறவில் இந்த இரு பயணங்களும் முக்கியமான அத்தியாயங்கள் என்று சொல்ல வேண்டும். தென்னாப்பிரிக்காவில் 21 வருஷங்கள் இருந்த காந்தியிடம் இருந்த அசாத்தியமான போராளியை கோகலே சரியாக அடையாளம் கண்டார். காந்தியைச் சந்தித்துவிட்டு வந்த பிறகு, 1912-ல் பம்பாயில் நடந்த ஒரு கூட்டத்தில் கோகலே பேசுகிறார்: ‘‘காந்தியிடம் அற்புதமான ஒரு ஆன்மிக சக்தி இருக்கிறது. அதனால், அவர் தன்னைச் சுற்றியுள்ள சாதாரணர்களையும் பெரும் வீரர்களாகவும் தியாகிகளாகவும் மாற்றிவிடுகிறார்.’’

காந்தி இந்தியா திரும்பும் வரலாற்று விதி ஆட்டத்தில் கோகலே முக்கியக் கண்ணியாக இருந்தார். காந்தியின் தென்னாப்பிரிக்கத் தேவை முடிந்துவிட்டதையும் இந்தியாவுக்கு அவர் திரும்ப வேண்டியதையும் அவர் தொடர்ந்து வலியுறுத்தினார். காந்தியை விட மூன்று வயது மூத்தவர் கோகலே. காந்தியோ தன் வழிகாட்டியாகவே அவரை மதித்தார். கோகலேவின் வார்த்தைக்கு காந்தியிடம் அவ்வளவு செல்வாக்கு இருந்தது. ‘‘இந்தியப் பொதுவாழ்க்கை எனும் கொந்தளிப்பான கடலில் பயணிக்க சரியான மாலுமி ஒருவர் எனக்குத் தேவைப்பட்டார். கோகலேவை அத்தகைய மாலுமியாகக் கொண்டுவந்ததோடு, அவர் இருக்கப் பயமில்லை எனும் துணிவோடும் இருந்தேன்’’ என்று ‘சத்திய சோதனை’யில் குறிப்பிடுகிறார் காந்தி.

மாலுமி காட்டிய மகத்தான வழி
அப்படிப்பட்ட ‘மாலுமி’ கோகலே, இந்திய அரசியலைப் புரிந்துகொள்ள காந்திக்குச் சொன்ன வழி இது: ‘‘காதைத் திறந்துகொண்டு, வாயை மூடிக்கொண்டு இந்தியாவை ஒரு வருஷம் சுற்றுங்கள்!’’