மைசூர் பாகு மற்றும் சுத்தியல்!


                         மைசூர் பாகு என்ற பெயரை உச்சரிக்கும்போதே கத்தி, சுத்தியல், கடப்பாறை இன்ன பிற கடின ரக வஸ்துகள் ஞாபகமும் கூடவே வருவது பழக்கமாகிவிட்டது. இதற்கான காரணம் நாமல்ல, பொறுப்பை இல்லத்தரசிகளும் பத்திரிகை தமாசு எழுத்தாளர்களுமே ஏற்க வேண்டும். விசேஷ நாட்களில் முறுக்கு, அதிரசம், பஜ்ஜி, சொஜ்ஜி, சுழியன் போன்ற பாரம்பரிய பலகாரங்களிலிருந்து விலகி, புதிதாக ஏதேனும் செய்துபார்க்க முனையும் பெரும்பாலான இல்லத்தரசிகளின் எளிய இலக்கு மைசூர் பாகு. இந்தப் பரிசோதனை முயற்சியில் களபலியாகும் எளிய இலக்கு கணவன்மார்கள். தமாசு எழுத்தாளர்களும் இதற்கு விதிவிலக்கு அல்லவே. ஆகையால், இல்லாளிடம் பட்டதை எங்கு கொண்டுபோய்க் கொட்டுவது என்று தேடி அலையும் அவர்களுக்கும் மைசூர் பாகு தமாசுகள் எளிய இலக்காகிவிடுகின்றன. 'மைசூர் பாகில் மைசூர் எங்கே?' என்பதில் தொடங்கி, 'வீட்டு விசேஷத்துக்கு வந்து ஒரேடியாகத் தங்கிவிட்ட மாப்பிளையைத் துரத்துவதற்கான அஸ்திரமாக மைசூர் பாகைப் பயன்படுத்துவது' வரை ஆயிரக் கணக்கான கடிகள், தமாசுகள் வந்துவிட்டன என்றாலும், விசேஷம் என்று வந்துவிட்டால், மைசூர்பாகும் வந்துவிடுகிறது; தமாசுகளும் வந்துவிடுகின்றன.

                         மைசூர் பாகின் பிறப்பிடம் கர்நாடகம். மைசூர் அரண்மனை சமையல்காரர் காகசுரா மாடப்பாவால் முதன்முதலில் தயாரிக்கப்பட்டதாகவும் அதனாலேயே மைசூர் பாகு என்ற பெயர் வந்ததாகவும் ஒரு கதை உண்டு. மைசூர் அரண்மனைக்கு வரும் ராஜ விருந்தாளிகள் அரண்மனையைக் கண்டு எத்தனை வியக்கிறார்களோ அதே அளவுக்கு அங்கு பரிமாறப்படும் மைசூர் பாகின் சுவையை ருசித்தும் வியப்பார்களாம். அத்தனை ருசியாக இருக்குமாம். மைசூர் பாகு செய்ய கடலை மாவு, ஜீனி, நெய் போதுமானவை என்பதால், சமையல்காரர்களிடம் பக்கு வம் கேட்டுக்கொண்டு செல்லும் விருந்தினர்கள் ஊருக்குப் போனவுடன் முதல் வேலையாக மைசூர் பாகு செய்வதில் இறங்கிடுவார்களாம். ஊருக்கு ஊர் மைசூர் பாகு இப்படிதான் பரவியது என்று அந்தக் கதை சொல்கிறது. தமிழகத்தில் அனேகமாக இனிப்பகங்கள் உள்ள எல்லா ஊர்களிலுமே மைசூர் பாகு கிடைக்கிறது. லேசுபாசான ஒரு மஞ்சள் நிறத்தில், சற்று நீள வாக்கில், சற்றேழத்தாழ செவ்வக வடிவில், சில இடங்களில் கல்லைப் போல, சில இடங்களில் கொஞ்சம் கொதகொதவென இப்படியான ஒரு வடிவில் அது கிடைக்கிறது. அதாவது, மைசூர் பாகு. மன்னிக்க வேண்டும். உண்மையை விளக்குவது என்றால், வேறு வழியில்லை; சில இனிப்பகக்காரர்கள் இல்லத்தரசிகளையே மிஞ்சிவிடுகிறார்கள் (தமாசு ஏழுத்தாளர்கள் கவனிக்க).

கொடுத்துப் பெறுவதும் ராஜதந்திரம்!நீங்கள் நூறு ரூபாய் பெருமானம் உள்ள, ஒன்றுக்கும் உதவாத, உங்களுக்கு முழுமையாக பாத்தியதை ஆகாத , பிரச்னைக்குரிய ஒரு நிலத்தை வைத்திருக்கிறீர்கள். அந்த நிலத்தைப் பாதுகாக்க எவ்வளவு வரை செலவழிப்பது லாபம்?
ஐம்பது ரூபாய்?
எழுபது ரூபாய்?
தொன்னூறு ரூபாய்?
அதிகபட்சமாக, நூறு ரூபாய்கூட செலவழிக்கலாம். அந்த நிலத்தைப் பாதுகாக்கப் போராடிய உங்கள் ஈகோவைக் காப்பாற்றிக்கொள்வது லாபம்.
ஆனால், மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் செலவழிப்பீர்களா? அதற்காக ஆண்டுதோறும் உயிர்களைப் பலி கொடுப்பீர்களா? அப்படிச் செலவழித்து, பலி கொடுப்பது புத்திசாலித்தனம்தானா?
தனி மனிதர்களே செய்யத் தயங்கும் அப்படியான விஷயத்தைத்தான் ஒரு தேசம் செய்துகொண்டிருக்கிறது. நம்முடைய எல்லைப் பிரச்னைகளை நம் அரசு இப்படித்தான் அணுகுகிறது.

                 சீனாவின் இதுவரையிலான அத்துமீறல்களுக்கும்,  இந்திய எல்லைக்குள் 19 கி.மீ. வந்து ராக்கி நாளாவில் அவர்கள் முகாம் அமைத்து நடத்திய சமீபத்திய ஊடுருவலுக்கும் வேறுபாடு ஏதேனும் உண்டா? உண்டு. இந்த அத்துமீறல் இந்தியர்களுக்கு ஒரு தெளிவான செய்தியைச் சொல்கிறது: இந்தியா இனியும் தன்னுடைய எல்லைப் பிரச்னைகளைத் தள்ளிப் போடக் கூடாது.

ஏஞ்சலினா மார்பகங்கள் இனி யாருடையவை?                பெண்களுக்கு ஒரு முக்கியமான செய்தியைப் பகிர்ந்திருக்கிறார் ஏஞ்சலினா ஜோலி.  தனக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படக்கூடிய அபாயத்தைப் பரிசோதனைகளின் மூலம் அறிந்துகொண்ட அவர், புற்றுநோயைத் தவிர்க்க  மாஸ்டெக்டோமி அறுவைச் சிகிச்சை முறை மூலம் தன் இரு மார்பகங்களையும் அகற்றிக்கொண்டிருக்கிறார். 'நியூயார்க் டைம்ஸ்'  பத்திரிகையில் இது தொடர்பாக எழுதியுள்ள கட்டுரையில், "என்னுடைய தாயை அவருடைய 56 வயதில் புற்றுநோய்க்குப் பறிகொடுத்தேன். இப்போது எனக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கு 87 சதவீதமும் கருப்பைப் புற்றுநோய் ஏற்படுவதற்கு 50 சதவீதமும் வாய்ப்பு இருப்பதைப் மரபணுப் பரிசோதனைகள் மூலம் அறிந்துகொண்டேன். அந்த அபாயத்தை முடிந்தவரை குறைத்துக்கொள்ளும் நோக்கிலேயே இந்த முடிவை எடுத்தேன்" என்று எழுதியிருக்கும் ஏஞ்சலினா அடுத்து சொல்லியிருக்கும் செய்திகள் முக்கியமானவை. "என் மார்பகங்களை இழந்ததால் ஒரு பெண்ணாக எதையும் இழந்துவிட்டதாக நான் நினைக்கவில்லை. உலகெங்கும் ஆண்டுதோறும் 4.58 லட்சம் பெண்கள் மார்பகப் புற்றுநோயால் உயிரிழக்கின்றனர். குறிப்பாக பொருளாதாரரீதியாக பின் தங்கியிருக்கும் நாடுகளில். பலருக்கு நோயைத் தவிர்க்க இப்படியான முடிவுகளை எடுக்கும் வாய்ப்புகள் இருப்பது தெரியாது. என் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் அந்த வாய்ப்புகளைப் பேச விரும்புகிறேன்" என்று தெரிவித்திருக்கிறார். மேலும், இந்தச் சிகிச்சைக்குப் பின் புற்றுநோய் அபாயம் 87 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைந்துவி்ட்டதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.


                  வருமுன் காப்பது சாலச்சிறந்தது. அதேசமயம், அந்தக் காப்புமுறை உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு, வாழ்க்கைச் சூழல் போன்ற வழிமுறைகளால் நடக்க வேண்டும் என்பது என் எண்ணம். இப்படியான முன்கூட்டித் திட்டமிடும் சிகிச்சைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. இந்தியா போன்ற - வந்த பின்னரான சிகிச்சைக்கே வழியில்லாத - நாட்டில் இதைப் பற்றிப் பேசுவதிலும் அர்த்தம் இல்லை (தவிர, இத்தகைய பரிசோதனைகள், செய்திகளின் பின்னணியில் மருந்து நிறுவனங்களின் ராட்சஷ லாபி உண்டு). ஆனால், இவற்றை எல்லாம் தாண்டி ஏஞ்சலினா ஜோலியின் அனுபவத்தில் மூன்று செய்திகள் ஒளிந்திருக்கின்றன.

மோடி பலூனை ஊதுவது யார்?                     லைவனுக்காகக் காத்திருக்கும் தேசம், மோடிக்காகக் காத்திருக்கும் இந்தியா, மோடி தயார் . . . இந்தியா தயாரா . . . - இப்படி ஊதிப் பெருக்கப்படும் மோடி பலூனுக்குக் காற்று கொடுப்பவர்கள் யார்? இந்தியத் தொழில் துறை மோடியைத் தூக்கிவைத்துக் கொண்டாடக் காரணம் என்ன? ஊடகங்கள் திட்டமிட்டு மறைக்கும் அந்த உண்மையைத் தலைமைத் தணிக்கைக் கணக்காயர் அலுவலகம் (CAG) வீதிக்குக் கொண்டுவந்து இருக்கிறது.

                    லஞ்சம், ஊழல் மற்றும் விதிமீறல் காரணங்களால் 2009 - 2011 இரு நிதியாண்டுகளில் மட்டும் ரூ. 17 ஆயிரம் கோடி குஜராத் அரசுக்கு இழப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று சொல்கிறது தலைமைத் தணிக்கைக் கணக்காயரின் அறிக்கை. அரசின் இந்த இழப்புகளைப் பெரும் பகுதி ஏப்பம் விட்டு செரித்திருப்பவை பெருநிறுவனங்கள். குஜராத் மாநில பெட்ரோநெட் நிறுவனத்துக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கும் இடையேயான எரிவாயு உடன்படிக்கையில் செய்யப்பட்ட விதிமீறல்களால் மட்டும் ரிலையன்ஸ் நிறுவனம் ரூ. 52.27 கோடி பலன் அடைந்துள்ளது. இதேபோல, மாநில அரசின் குஜராத் யுர்ஜா விகாஸ் நிகாம் நிறுவனம், அதானி பவர் நிறுவனத்துடன் செய்துகொண்ட மின் கொள்முதல் ஒப்பந்தத்தில் செய்யப்பட்ட திமீறல்களால், அதானி நிறுவனம் ரூ.160.26 கோடி பலன் அடைந்துள்ளது. சூரத்தில் எஸ்ஸார் உருக்கு நிறுவனம் ஆக்கிரமித்திருந்த 7.24 லட்சம் சதுர மீட்டர் நிலத்தை சதுர மீட்டர் ரூ. 700 என்கிற மட்டி விலைக்கு எஸ்ஸார் நிறுவனத்துக்கே உரித்தாக்கி இருக்கிறது மோடி அரசு. இதேபோல், ஃபோர்டு இந்தியா, லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனங்களுக்கு அரசு நிலத்தைக் கொடுத்ததிலும் விதிமீறல்கள் நடந்திருக்கின்றன என்கிறது அந்த அறிக்கை.

                    ஒரு மாநில அரசு மீது ரூ. 17 ஆயிரம் கோடி அளவுக்கு முறைகேடு குற்றஞ்சாட்டப்படுவது பெரிய செய்தி. அதுவும் கறை படியாத கரங்களுக்குச் சொந்தக்காரர் என்றும் தலைசிறந்த நிர்வாகி என்றும் பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தப்படும் ஒருவர் மீதான நாட்டின் உயர்ந்த தணிக்கை அமைப்பின் இந்தக் குற்றச்சாட்டு பெரிய அளவில் பேசப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தேசிய ஊடகங்கள் இந்தச் செய்தியை இரு பத்திகளுக்குள் அடக்கம் செய்தன.

மோடி அரசு மீதான குற்றச்சாட்டுகள் புதிதல்ல. அதானி குழுமத்துடன் மோடி அரசுக்குள்ள தொடர்புகள் தொடர்ந்து விவாதத்தில் இருக்கின்றன. கடந்த ஆண்டு இறுதியில் அரவிந்த் கேஜ்ரிவால் அம்பலப்படுத்திய குஜராத் மாநில பெட்ரோலிய நிறுவனம் - ஜியோ குளோபல் நிறுவனம் இடையேயான ஒப்பந்தம் கிட்டத்தட்ட இரண்டாம் அலைக்கற்றை ஒதுக்கீட்டை ஞாபகப்படுத்தக் கூடியவை (ஒப்பந்தத்தின்போது வெறும் 64 டாலர் - அன்றைய மதிப்பில் ரூ. 3200 சொத்து மதிப்பைக் கொண்ட ஜியோ குளோபல் நிறுவனம் பின்னர் 10 ஆயிரம் கோடி நிறுவனமானதை அம்பலப்படுத்தினார் கேஜ்ரிவால்). ஆனால், ராபர்ட் வதேராவின் முறைகேடுகளைப் புரட்டி எடுத்த ஊடகங்கள் மோடியின் செய்தியை அன்றோடு அடக்கம் செய்தன.

நான்கு பேர் மோட்டார் சைக்கிளைச் சிந்தியுங்கள்!            போக்குவரத்து நெரிசலும் பெட்ரோல் விலை உயர்வும் செய்தியாகும்போது எல்லாம் இப்படி ஓர் எண்ணம் தோன்றும்: ஏன் இந்திய அரசாங்கம் நான்கு பேர் வரை பயணிக்கத்தக்க இரு சக்கர வாகனங்களுக்கு அனுமதி அளிக்கக் கூடாது?

            இது ஒரு பெரிய விஷயம் அல்ல. இங்கிலாந்தின் ஸ்டாம்போர்ட் பகுதியைச் சேர்ந்த காலின் ஃபர்ஸ் சமீபத்தில் 25 பேர் பயணிக்கத் தக்க ஸ்கூட்டரை உருவாக்கி இருக்கிறார். ஒரு பிளம்பரான காலின் தன்னுடைய 125 சிசி ஸ்கூட்டரின் பின்பக்கத்தைப் பாதி அளவுக்கு வெட்டி எடுத்து, 22 மீட்டர்  நீளம் கொண்ட அலுமினிய சேஸுடன் இணைத்து உருவாக்கி இருக்கும் ஸ்கூட்டர்தான் இப்போது உலகின் நீளமான ஸ்கூட்டர். சமீபத்தில் தன்னுடைய ஸ்கூட்டரில் 23 பேரை உட்காரவைத்து கின்னஸ் சாதனைக்காக சவாரி அழைத்துச் சென்றார் காலின். இதற்கு முன் ரஷ்யாவின் ஒலெக் லெஷி ரகோ 9.57 மீட்டர் நீளத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் செய்திருக்கிறார். இதுபோல நீளமான - 20, 25 பேர் பயணிக்கத் தக்க - சாதனை வாகனங்கள் அன்றாட நடைமுறை வாழ்க்கைக்கு உதவாதவையாக இருக்கலாம். ஆனால், அவை புதுப்புது சாத்தியங்களை நமக்கு அறிமுகப்படுத்துகின்றன.

வழிப்போக்கர்களின் கட்டுச்சோறு!


                      

                      கோயில்களில் சுவாமி தரிசனம் எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியம் பிரசாதம். பிரசாதம் என்றால் விபூதி அல்லவே; கட்டுச்சோறாக்கும்!
புளி, எலுமிச்சை, தயிர்... இன்னும் என்னவெல்லாம்  கூடுமோ எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு பின்னால் சாதத்தையும் சேர்த்துக்கொள்ளும். கட்டுச்சோறாகிவிடும். மூட்டையைக் கட்டிக்கொண்டு கிளம்புமுன் ஒரு கதை உண்டு. கட்டுச்சோறு கதை. கேட்கலாமா?

சமஸ் என்றால் என்ன அர்த்தம்?

சமஸ்

ன்னை முதன்முதலாகச் சந்திக்கும் நண்பர்கள் அதிகம் கேட்கும் கேள்வி...
சமஸ் என்றால், என்ன அர்த்தம்?
சமஸ் என்பது என் தாய், தந்தையினரின் பெயரோடு அவர்கள் என்னை அழைத்த பெயரை இணைத்து உருவாக்கப்பட்ட பெயர்ச்சொல். அது புனைப்பெயர் அல்ல. என்னுடைய அதிகாரபூர்வமான பெயர். ஆரம்பத்தில் யாராவது கேட்டால், சமஸுக்கு என்ன அர்த்தம், அது ஒரு பெயர் அவ்வளவுதான் என்று சொல்லிவிட்டு கடந்துவிடுவேன். அப்புறம் எனக்கே ஓர் ஆர்வம் உண்டாக சமஸ் என்கிற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று உலகின் பல்வேறு மொழிகளை ஆராய ஆரம்பித்தேன். நிறைய அர்த்தங்கள் கிடைத்தன. அவற்றுள் தொகுக்கப்பட்ட இந்த அர்த்தங்களை என் பெயரின் விளக்கமாக அளிக்கிறேன்.

யார் அனுப்பிய வெளிச்சம் அது?


                       வெயில் காலம் வந்துவிட்டால் வெளியேதான் தூக்கம். நகர வாழ்க்கையில் மொட்டைமாடி ஒரு தோதான இடம், போன மாதத்தில் ஒரு நாள். புழுக்கமும் கொசுக்களும் சூழ புரண்டுகொண்டிருந்தபோது நடந்த கதை இது. திடீரென வானத்தில் மேகங்களின் பின்னணியில் வெளிச்சம். இப்படியும் அப்படியுமாக ஒரு வெள்ளை வெளிச்சம் உருண்டையாக நகர்ந்தது. முதலில் இட வலமாகப் போக ஆரம்பித்த வெளிச்சம் அப்புறம் வல இடமாக, இட வலமாக, குறுக்கு நெடுக்காக, நெடுக்குக் குறுக்காக என நால்புறமும் வேக வேகமாக இப்படியும் அப்படியுமாகப் பாய்ந்தது. நிச்சயமாக அது ஒரு விளக்கு வெளிச்சம்போலவோ, ஓர் ஒழுங்கான தோற்றத்திலோ இல்லை. காயத்தைத் துடைக்க ஆஸ்பத்திரியில் கம்பவுண்டர் கட்டிலிருந்து பிய்த்து எடுப்பாரே பஞ்சு, அப்படி ஓர் ஒழுங்கில்லாத தோற்றம். மனைவியை எழுப்பிக் காட்டினேன். அவளும் வாயைப் பிளந்தாள்.

சிதம்பரம் கொத்சு!

               ல்லா ஊர்களிலும் கோயில்கள் இருக்கின்றன. ஆனால், சில ஊர்கள் மட்டுமே கோயிலோடு பிணைந்துவிடுகின்றன. அந்த ஊர்களின் பெயரை உச்சரித்தால் மனம் முதலில் கோயிலையே அவதானிக்கிறது - வாடிகன்போல, கேன்டர்பெரிபோல, சிதம்பரம்போல!

               சிதம்பரத்தையும் நடராஜர் கோயிலையும் பிரித்துப் பார்க்க முடிவதில்லை. மேலோட்டமாய் யோசித்தால் ஒரு நாட்டியக்காரனின் சாஸ்வதம் தோன்றி மறையும் இந்த இடத்தில், சற்று தீவிரமாய்ப் போனால் ஓர் அமானுஷ்ய உலகம் உங்களை இழுத்துக்கொள்ளும். பஞ்சபூத ஸ்தலங்களில் சிதம்பரம் ஆகாய ஸ்தலம். மூன்று நிலைகளில் இறைவன் இங்கு உறைந்திருக்கும் நிலை அருவ நிலை. இறைவனை எப்படி வழிபடுகிறார்கள் தெரியுமா? மந்திர வடிவில். மந்திரத்தில் இறைவன் இருக்கும் இடத்தைத் திருவம்பலச்சக்கரம் என்பார்கள். தன்னையே தேடுவோருக்குத் தன்னையே தரும் இறைவன், லோகாயுதவாதிகளுக்குத் தன்னிடத்தில் ஒன்றை மட்டும் விட்டுவைத்திருக்கிறான்; அது... அவனே சொக்கிக் கிடக்கும் கத்திரிக்காய்க் கொத்சு. சிதம்பரத்தில் சாயங்காலம் இரண்டாம் கால பூஜையின்போது இறைவனுக்குச் சம்பா சாதத்துடன் கொத்சு நைவேத்தியம் செய்கிறார்கள். வேகவைத்த கத்திரிக்காயை இடித்து, உப்பு, புளி சேர்த்து, சுண்டக் கொதிக்கவிட்டு, பசைப் பக்குவத்தில், காரமல்லிப் பொடி சேர்த்து, நல்லெண்ணையில் கொதிக்கவிட்டு, தாளித்த சூட்டோடு இறக்கப்படும் கொத்சை ஒரு துளி சுவைத்துப் பார்த்தால் இறைவனின் மீது பொறாமையே வரும். கடவுளர்களுக்குத்தான் சாப்பாடு எப்படியெல்லாம் வாய்க்கிறது?! இருந்த இடத்திலேயே வேளாவேளைக்கு நோகாமல் கடவுளர்களுக்கு மட்டும் இப்படி விதவிதமான சாப்பாடு கிடைப்பது பொறுக்காமல்தான் கடவுளர்களை மனிதன் சாப்பிடவிடாமல் செய்துவிட்டான்போலும்! அது போகட்டும், சிதம்பரத்தில் கொத்சு நிலைத்து நின்றதே ஒரு பெருமைதான் தெரியுமா?

கோடிக்கு மேல் சிந்தியுங்கள்!

 
              வ்வோர் ஆண்டும் இந்தியாவின் நிதிநிலை அறிக்கை மட்டும் அல்ல; இந்திய அரசியல்வாதிகளின் ஊழலின் மதிப்பும் உயர்கிறது. அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு 1763790000000; நிலக்கரி ஒதுக்கீடு முறைகேடு 1800000000000 என்று நம் அரசியல்வாதிகளின் வேகம்  விஸ்வரூபம் எடுக்கும் சூழலில், கோடி என்கிற வார்த்தையின் போதாமை வெளிப்படுகிறது.

                உலகுக்கு பூஜ்ஜியத்தைத் தந்த நாடு கோடிக்குள் முடங்கிவிடக் கூடாது; பில்லியன், ட்ரில்லியன்களைத் தாண்டி நாம் சிந்திக்க வேண்டியது அவசியம். பழந்தமிழ் இதற்கு உதவுகிறது. கோடிக்கு மேற்பட்ட எண்ணிக்கையைக் குறிப்பிடும் வார்த்தைகள் இவை.

1,00,00,000 - கோடி
10,00,00,000 - அற்புதம்
1,00,00,00,000 - நிகற்புதம்