குடும்ப அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குடும்ப அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வாரிசு அரசியல் ஒரு சமூகத்தில் உண்டாக்கும் பேரிழப்பு என்ன?


அடுத்த பட்டாபிஷேகத்துக்கான முன்னோட்டம்தான் அது. தலைமை நோக்கித் தன் மகன் உதயநிதியை நகர்த்தும் முயற்சியைக் கட்சியின் இளைஞரணி அமைப்பாளர் பதவியை அவருக்கு வழங்கியதன் மூலம் அதிகாரபூர்வமாகத் தொடங்கியிருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அன்றைய நாளில் வாதாம் மர நிழல் அடர்ந்த சாலைகள் வழியே காரில் வீட்டுக்குத் திரும்புகையில் கொஞ்சம் ஆச்சரியம்கூட அடைந்திருக்கக் கூடும். கட்சியின் முன்னணித் தலைவர்கள் எவரிடமிருந்தும் துளி முணுமுணுப்பு வெளியே வரவில்லை; அத்தனை பேரும் இதற்காகக் காத்திருந்தவர்களைப் போலக் காட்டிக்கொண்டனர்;  மாவட்ட அமைப்புகள் உதயநிதியை முன்மொழிந்து தீர்மானம் நிறைவேற்றியிருந்தன. ஸ்டாலினை இளைஞர் அணியின் பொறுப்பு நோக்கி அவருடைய தந்தை கருணாநிதி நகர்த்தியபோது, சூழல் இவ்வளவு இசைவாக இல்லை.

நாட்டின் மூத்த கட்சியான காங்கிரஸின் அடுத்தடுத்த வரலாற்றுத் தோல்விகளுக்குப் பின், அதன் தலைவர் ராகுல் காந்தியை முன்னிறுத்தி, நாடு முழுவதும் என்றைக்கும் இல்லாத அளவுக்கு இன்று ‘வாரிசு அரசியல்’ விவாதத்துக்குள்ளாகி, அதன் தொடர்ச்சியாக அவர் பதவி விலகியிருக்கும் சூழலில், இப்படி பட்டவர்த்தனமாக வாரிசுக் கொடியைப் பறக்கவிட எங்கேயோ ஒரு கட்சி கூச்சம் துறக்க வேண்டியிருக்கிறது. செம்மொழி மாநாட்டில் ஆய்வறிஞர்கள் மத்தியில், ‘ஸ்டாப் புகழ்’ பேத்தியைக் கவிதை வாசிக்க வைத்து கருணாநிதிி  அழகு பார்த்த காலகட்டத்திலேயே எல்லா இறக்கங்களையும் பார்த்துவிட்டதால், “குடும்ப அரசியல் எல்லாக் கட்சிகளிலுமே இருக்கிறது; திமுகவை மட்டும் ஏன் குற்றஞ்சாட்டுகிறீர்கள்?” என்று கம்பீரமாக முட்டுக்கொடுக்கும் நிலைக்கு முன்னேறியிருக்கிறார்கள் கட்சிப் பிரதிநிதிகள். அதிகாரம் தன் பிறப்புரிமை என்பதுபோல இருக்கின்றன உதயநிதியின் செயல்பாடுகளும், ஊடகங்களுக்கு அவர் இது தொடர்பில் முன்னதாக அளித்திருந்த பேட்டிகளும். எல்லோருக்குமே எங்கோ, யாரோ ஞாபகப்படுத்த வேண்டியிருப்பதால் இதைச் சொல்ல வேண்டியிருக்கிறது: அடிப்படையில், வாரிசு அரசியல் எதிர்ப்பிலிருந்து முகிழ்ந்த கட்சி திமுக.


ஒரு பேரியக்கத்தின் அஸ்தமனம்





 திருவாரூர். 1938. சுயமரியாதை இயக்கத்தின் முன்னோடியான பட்டுக்கோட்டை அழகிரி பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். 13 வயது கருணாநிதியின் மனதில் அரசியல் விதையாக விழுகிறது அழகிரியின் பேச்சு. பின் கருணாநிதி மாணவர் மன்றம் தொடங்குகிறார்; பத்திரிகை தொடங்குகிறார்; பேசுகிறார், எழுதுகிறார், நாடகம் போடுகிறார்; பெரியார், அண்ணாவைச் சந்திக்கிறார்… பின்னர் நடந்தவை எல்லாம் வரலாறு. சரியாக 77 ஆண்டுகளுக்கு முன் கருணாநிதியின் வரலாற்றில் பட்டுக்கோட்டை அழகிரி இடம்பெற்ற சூழலையும் இன்றைக்கு மு.க.அழகிரி இடம்பெறும் சூழலையும் இணைத்துப் பாருங்கள்… திராவிட இயக்கமும் கருணாநிதியும் தமிழக அரசியல் சூழலும் எவ்வளவு சீரழிந்திருக்கின்றன?

திராவிட இயக்கத்தின்பால் பற்றுகொண்ட எவரும் வாழ்வில் ஒருமுறையாவது அந்தக் கேள்வியை எதிர்கொண்டிருப்பார்கள்: கருணாநிதிக்குப் பின் தி.மு.க. என்னவாகும்? இதோ அதையும் தன் காலத்திலேயே நடத்திக்காட்ட ஆரம்பித்துவிட்டார் கருணாநிதி.