சுஜித் மரணத்துக்கு யார் பொறுப்பாளி?


சமூகவியலாளர் சீனிவாச ராமாநுஜம் அமெரிக்கா போனார். அமெரிக்காவுக்கு அது அவரது முதல் பயணம். நியூயார்க் புறநகர் விடுதி ஒன்றில் தங்குவதற்கு அவருக்கு ஏற்பாடு ஆகியிருந்தது. அங்கே சில வாரங்கள் அவர் தங்கியிருக்க வேண்டும். கொட்டும் பனியும் வீட்டு நினைவும் ஓய்வு நாள் ஒன்றில் இந்தியவுணவு சாப்பிடும் ஆசையை அவருக்குள் கொண்டுவந்தன. அங்காடிக்குச் சென்று, ஆயத்த தோசை பொட்டலத்தை வாங்கிவந்தவர் ஓவன் அடுப்பில் அதைச் சூடாக்க வைத்தார். தொலைபேசி அழைப்பானது சில நிமிஷங்கள் அவர் கவனத்தைப் பறித்துவிட அறை முழுக்கப் புகை மண்டியது. அடுப்பு தீப்பிடிக்கும் முன்னர் அவர் அதை அணைத்தாலும் தீ அலாரம் ஒலிக்கத் தொடங்கலானது. ஜன்னல்களை அவசரமாகத் திறக்க முற்பட்டார் ராமாநுஜம். விடுதி வரவேற்பறையிலிருந்து தொலைபேசி அழைப்பு. முதல் கேள்வி: “நீங்கள் பத்திரமா?”

விடுதிப் பணியாட்கள் ஓடி வருகிறார்கள். முதல் கேள்வி: “உங்களுக்கு ஒன்றும் பிரச்சினை இல்லையே!” அடுப்பை மின் இணைப்பிலிருந்து அவர்கள் துண்டிக்கிறார்கள். எல்லா ஜன்னல்களும் திறக்கப்பட்டு, புகை வெளியேற்றப்படுகிறது. ஆனாலும், தீ அலாரம் சத்தம் போடுவதை நிறுத்தியபாடில்லை. “இதை நிறுத்தலாமா?” என்கிறார் ராமாநுஜம். “இதை நிறுத்த எங்களுக்கு அதிகாரமில்லை. தீயணைப்புத் துறையினர் வந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் வந்துதான் நிறுத்த வேண்டும்.”

ஓரிரு நிமிஷங்களில் தீயணைப்பு வாகனம் வருகிறது. அறையைப் பார்வையிடுகிறார்கள். தீ அலாரத்தை நிறுத்துகிறார்கள். அடுப்பைப் பத்திரமாகத் தாங்கள் கொண்டுவந்த பெட்டிக்குள் எடுத்துக்கொண்டு புறப்படுகிறார்கள். விடுதிப் பணியாளர்கள் சொல்கிறார்கள்: “அது தடயவியல் துறை ஆய்வுக்குச் செல்லும். ஒருவேளை கூடுதல் நேரம் சூடாக்கப்பட்டு, தீப்பிடிக்கும் சூழல் உண்டானால் அடுப்பு தானாக மின்சாரத்தைத் துண்டித்துக்கொள்ள வேண்டும். தீப்பற்றும் சூழல் உண்டாகக் காரணம் என்ன - அந்தச் சாதனத்தின் தயாரிப்பில் உள்ள குளறுபடியா அல்லது பயன்படுத்தப்பட்ட விதத்தில் உள்ள குளறுபடியா என்று தடயவியல் துறையினர் கண்டறிவார்கள். தவறு நம் தரப்பிலானது என்றால், பிரச்சினை இல்லை; அடுப்புக்குக் காப்பீடு செய்திருக்கிறோம் வந்துவிடும்; ஒருவேளை அடுப்பு தயாரிப்பில் ஏதும் பிரச்சினை என்று கண்டறியப்பட்டால் அந்த நிறுவனம் தண்டனைக்குள்ளாகும்” என்கிறார்கள் விடுதிப் பணியாளர்கள்.

தன்னுடைய வேலைக்குப் புறப்படுகிறார் ராமாநுஜம். மாலையில் அவர் தனது அறைக்கு வந்தபோது புத்தம் புதிய ஓவன் அடுப்பு ஒன்று அங்கே இருக்கிறது. சில நாட்களில் ராமாநுஜம் விடுதியைக் காலிசெய்து ஊருக்குப் புறப்படுகிறார். எந்த சேதத்துக்கும் அவரிடம் விடுதி நிர்வாகம் ஒரு டாலர்கூட வாங்கவில்லை. அதைக் காட்டிலும் முக்கியம், அவரை யாருமே குற்றஞ்சாட்டவில்லை; அப்படி ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை.

இந்தியாவில் ஒவ்வொரு பேரிடருக்குப் பிறகும் நடக்கும் பழிபோடும் விளையாட்டின்போதும், இந்தக் கதையும் அது உள்ளடக்கியுள்ள ஒவ்வொரு இழையும் நினைவுக்கு வரும். ஒரு பேரிழப்புக்குப் பிறகும், பொறுப்பேற்பு தனி மனிதர்களுடையதா; அரசினுடையதா என்று விவாதிக்கும் ஒரு சமூகத்திடம் யாராலும் பொறுப்புணர்வை உட்புகுத்திவிட முடியாது. தனிமனிதர்கள் தவறிழைப்பது இயல்பு; அதை எதிர்கொள்ள ஒரு அமைப்பு ஒவ்வொரு நிலையிலும் எவ்வளவு பொறுப்புணர்வோடும் திட்டமிடலோடும் செயல்படுகிறது; ஒரு தனிநபரின் பிரச்சினையை எப்படி சமூகத்தினுடைய ஒரு உறுப்பின் பிரச்சினையாகக் கருதி அது அணுகுகிறது என்பதன் மூலமாகவே அமைப்புகள் சமூக மதிப்பீட்டைப் பெறுகின்றன.

நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில், வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்த இரண்டு வயது சிறுவன் சுஜித், கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து நான்கு நாட்கள் போராட்டத்துக்குப் பின்னும் சிதைந்த சடலமாக மீட்கப்பட்டது நம் ஒட்டுமொத்த சமூகமும் பொறுப்பேற்க வேண்டிய குற்றம் என்றே நான் நினைக்கிறேன். குழந்தையைப் பறிகொடுத்த பெற்றோரைக் காரணமாக்கிப் பேசுவது வக்கிரம்.

அடுத்த நூற்றாண்டின் பொதுவுடைமை இயக்கம்


வானம் அதிகாலையில்தான் வெக்காளித்திருந்தது. திரும்பவும் மழை வந்துவிட்டது. நேரத்துக்கு முன்கூட்டி இயங்குபவரான முதுபெரும் தலைவர் சங்கரய்யா, மழையையும் போக்குவரத்து நெரிசலையும் யோசித்திருக்க வேண்டும். பயண நேரம் என்னவோ அரை மணிதான் என்றாலும், கட்சி அலுவலகத்தில் காலை ஒன்பதரை மணிக்குத் தொடங்கவிருந்த நிகழ்ச்சிக்கு வீட்டிலிருந்து ஆறரை மணிக்கே புறப்பட்டு வந்திருந்தார். நூற்றாண்டை நெருங்கிக்கொண்டிருக்கிறார். உடலின் தளர்ச்சி செயல்பாட்டில் தெரியவில்லை. “அன்றாடம் ஏழு பத்திரிகைகள் வாசிக்கிறார். வானொலி கேட்கிறார். கட்சிக்காரர்கள், பொதுமக்களுடன் கலந்துரையாடுகிறார். அரசியலில் ஓய்வு என்பது ஏது?” என்கிறார்கள். சங்கரய்யாவை அன்றைய தினம் சந்தித்த பலரும் நெகிழ்ச்சிக்கு ஆட்பட்டிருந்தார்கள். இக்கட்டான சூழலில் சவால்களை எதிர்கொள்ளும் ஒரு குடும்பம், தன் தலைமகனுக்கு ஒருசேர முகங்கொடுப்பதற்கு ஒப்பான சூழல் அது.

இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டும் சிந்தனை உதித்த நூற்றாண்டைக் கொண்டாடும் அந்த நிகழ்ச்சியில் சங்கரய்யாவுமே உணர்ச்சிவசப்பட்டிருந்தார். ‘தோழர்களே!’ என்று தொடங்கி ‘இன்குலாப்... ஜிந்தாபாத்!’ என்று முடித்த சங்கரய்யா, “இந்த உலகம் முழுக்க சோஷலிஸ ஒளி பரவ வேண்டும் என்றால் அதற்கு, ஆசியாவில் 130 கோடி மக்களைக் கொண்டிருக்கும் இந்தியாவின் பங்களிப்பு முக்கியமானது. இந்தியாவுக்கான ஒளிக்கு தமிழ்நாட்டின் பங்களிப்பு முக்கியமானது” என்றார். இந்த நூற்றாண்டு முழுக்க இந்தியாவில் பொதுவுடைமை இயக்கத்தினர் எதிர்கொண்ட அடக்குமுறைகளைத் தன் பேச்சில் கொண்டுவந்தார் சங்கரய்யா. “எவ்வளவோ வேட்டையாடப்பட்டும் பொதுவுடைமை இயக்கம் நீடித்து நிற்கக் காரணம், இந்த இயக்கத்தோடு கரைத்துக்கொண்டவர்கள் கொடுத்திருக்கும் அர்ப்பணிப்பு; அவர்கள் செய்திருக்கும் தியாகங்கள்” என்று சங்கரய்யா சொன்னபோது, அவருடைய வாழ்க்கையை அறிந்தவர்கள் கண் கலங்கியதில் ஆச்சரியமில்லை. பசி, பட்டினி, தடியடி, சிறை எல்லாவற்றுக்கும் முகங்கொடுத்தவர் சங்கரய்யா.

உண்மையான சுயராஜ்ஜியம் இந்தியாவில் எப்போது மலரும்?


காமன்வெல்த் மாநாட்டு நிமித்தம் பிரிட்டன் சென்றிருந்தபோது, ‘நவ்ரூ’ எனக்கு அறிமுகமானது. காமன்வெல்த் உறுப்பினர்களிலேயே சிறியதான நவ்ரூ உலகின் சின்ன தீவு நாடுகளில் ஒன்று. “நீங்கள் நவ்ரூ வந்தால், ஒரே நாளில் தீவை நடந்தே சுற்றிவந்து, ஒரு நாட்டையே சுற்றிப் பார்த்த திருப்தியுடன் நாடு திரும்பலாம். எங்கள் நாட்டின் கடற்கரை நீந்துவதற்கும் மீன் பிடிப்பதற்கும் மிகவும் ஏற்றது. அப்புறம், ‘புவாடா லகூன் கடல் ஏரி’. அது நீந்துவதற்குத் தகுதியானது அல்ல என்றாலும், அதன் கரையில் உட்கார்ந்து நாளெல்லாம் அதன் அழகை ரசிக்கலாம்” என்று நவ்ரூவிலிருந்து வந்திருந்த நண்பர் சொன்னார்.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிரிட்டனால் கூட்டாக நிர்வகிக்கப்பட்ட நவ்ரூவுக்கு 1968-ல் சுதந்திரம் கிடைத்திருக்கிறது. பெரிய செல்வ வளம் இல்லை. சுற்றுலாதான் பெரும் ஆதாரம். ராணுவப் பாதுகாப்பு உள்பட பெரும்பாலான தேவைகளுக்கு ஆஸ்திரேலியாவையே நம்பியிருக்கின்றனர். நாட்டின் பரப்பளவு 21 சதுர கி.மீ. மொத்த மக்கள்தொகை 11,000 சொச்சம். மூன்றாண்டுகள் பதவிக் காலத்தோடு 19 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அவர்களில் ஒருவர் அதிபராகிறார். அவரே நாட்டுக்கும் அரசுக்கும் தலைவர். ஐந்து அல்லது ஆறு பேர் அமைச்சர்கள். 
பருவநிலை மாற்றத்தால் நாடே மூழ்கிவிடும் அபாயத்தை நவ்ரூ எதிர்கொள்கிறது. “அப்படி ஒருக்கால் கடல் சூழும் ஆபத்தால் இங்கிருந்து வெளியேறும் ஆபத்தை நாங்கள் எதிர்கொண்டாலும், எங்கள் மனங்களில் நவ்ரூ வாழும். சின்ன தீவு என்பதாலேயே பெரும் கலாச்சாரச் சூறாவளியை எப்போதும் எதிர்கொண்டுவருகிறோம். கிறிஸ்து பிறப்பதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு எங்களுக்கு உண்டு. பலபல நூற்றாண்டுகளுக்கு முன் பசிபிக் தீவுக்கூட்டங்களிலிருந்து இங்கு வந்து குடியேறிய பாலினேசியர்கள், மைக்ரோனேசியர்களின் வம்சாவழியாக வாழும் 12 தனித்தனி இனக் குழுவினர் இங்குண்டு. எங்கள் நாட்டுக் கொடியில் உள்ள 12 நட்சத்திரங்களும் அவர்களைக் குறிப்பதுதான். நவ்ரூவின் தனித்துவமான வரலாற்றையும் கலாச்சாரத்தையும் எங்கள் கல்வியின் வழி குழந்தைகளுக்குக் கடத்துகிறோம்; எங்கள் நாட்டில் கல்வி அனைவருக்கும் கட்டாயம். எங்கள் குழந்தைகளின் நினைவுகளின் வழி காலாகாலத்துக்கும் நவ்ரூ வாழும்.”
அவர் பேசிக்கொண்டேயிருந்தபோது இந்தியாவில் எத்தனை நவ்ரூகள் இருக்கின்றன என்று யோசித்துப் பார்த்தேன். பரப்பளவு எனக் கொண்டால், 32.87 லட்சம் ச.கி.மீ-க்கு விரிந்திருக்கும் இந்தியாவில் 1.56 லட்சம் சொச்சம் நவ்ரூகள் இருக்கின்றன; 130 கோடியைத் தாண்டிவிட்டிருக்கும் மக்கள்தொகை அடிப்படையில் பார்த்தால், 1.18 லட்சம் சொச்ச நவ்ரூகள் இந்தியாவில் இருக்கின்றன. பரப்பளவில் பாதி நவ்ரூவுக்குச் சமமான நான் பிறந்த ஊரான மன்னார்குடி நகரத்தின் இன்றைய மக்கள்தொகை 66,000 சொச்சம் என்கிறார்கள்; ஆக, ஆறு நவ்ரூகளுக்கு சமம் அது.