காந்தி துணையின்றி சமூக விடுதலை சாத்தியமா?தென்காசி போயிருந்தேன். ரயிலில் வழக்கம்போல் உடன் பயணித்தவர்களுடன் உற்சாகமான உரையாடல் அமைந்தது. இளைஞர்கள் இருவர் ஹைதராபாத் பல்கலைக்கழக ஆய்வு மாணவர் ரோஹித் வெமுலாவின் மரணம் தொடர்பாகப் பேச ஆரம்பித்தனர். உரையாடல் மெல்ல சாதி நோக்கி நகர்ந்தது. பேச்சு சமகால தலித் இயக்கங்கள், அம்பேத்கர், காந்தி என்று விரிந்து, காந்தி எனும் புள்ளியைத் தொட்டபோது, அவர்களிடமிருந்து கசப்பான வார்த்தைகள் விழத் தொடங்கின. “சமூக விடுதலைக்கு காந்தியை எப்படி ஒரு வழிகாட்டியாகக் கருத முடியும்?” என்றார் ஒருவர். “இந்தியாவில் தலித் அரசியலை சிசுவிலேயே சிதைக்கப்பார்த்தவர் காந்தி” என்றார் இன்னொருவர். சாதியத்துக்கு எதிரான காந்தியின் செயல்பாடுகள் சிலவற்றை நான் குறிப்பிட ஆரம்பித்தபோது, “காந்தி தலித்துகளுக்காகப் பேச ஆரம்பித்ததெல்லாம் பூனா ஒப்பந்தத்துக்குப் பிறகுதானே? அதுவும் அம்பேத்கர் அரசியலை எதிர்கொள்ள முடியாமல் பேச ஆரம்பித்தார்?” என்றார்கள் இருவரும். இப்படியான புரிதலற்ற பேச்சுகள் புதியன அல்ல. எனினும், நாளுக்கு நாள் இத்தகைய கசப்புணர்வுகள் இளைய தலைமுறையிடம் வளர்வது, இந்தியாவில் விளிம்புநிலை அரசியல் எதிர்கொள்ளும் பேராபத்தாகவே தோன்றுகிறது. காந்திய வெறுப்பு அரசியலுக்குப் பின், குறைந்தது நூற்றாண்டு வரலாறும் பலதரப்பு அரசியல் சதிகளும் இருக்கின்றன. காங்கிரஸை ஒழித்து தம் அரசியலை முன்னே கொண்டுவர அநேகமாக இந்தியாவின் ஏனைய அரசியல் கட்சிகள் பெரும்பான்மையும் காந்தி எதிர்ப்பை ஒரு செயல்திட்டமாகவே முன்னெடுத்திருக்கின்றன. மறுபுறம், காங்கிரஸோ காந்திய மதிப்பீடுகளிலிருந்து விடுபட காந்தியை மறக்கத் துடித்தது. இன்றைய சூழலில் எந்த அரசியல்வாதிக்குத்தான் காந்தி தேவைப்படுவார்!

சிறு வயதில் வீட்டு வேலைக்காரர் ஒருவரின் மகனுடன் விளையாடிக்கொண்டிருக்கிறார் காந்தி. இதைப் பார்க்கும் புத்திலிபாய் காந்தியை அழைத்து, அந்தச் சிறுவனுடன் பேசக் கூடாது என்று கூறி காந்தியைக் குளிக்கச் சொல்கிறார். காந்தி காரணம் கேட்கிறார். அந்தச் சிறுவன் கீழ்சாதியைச் சேர்ந்தவன் என்று குறிப்பிடும் புத்திலிபாய், அவனுடன் பேசியதால் தீட்டு ஏற்பட்டுவிட்டதாகவும் கூறுகிறார். அப்போது காந்தி தன் தாயிடம் கேட்கிறார், “நாம் எல்லோரும் ராமனின் குழந்தைகள் என்று சொல்வீர்களே, அப்படியென்றால் உக்காவும் ராமனின் குழந்தைதானே?”

உயர் கல்விக்காக காந்தி லண்டன் செல்ல முடிவெடுக்கும்போது அவருக்கு வயது 15. அவர் சார்ந்த மோத் சாதி வழக்கப்படி வெளிநாட்டுப் பயணத்தை அனுமதிக்க முடியாது என்று சொல்லி பஞ்சாயத்தைக் கூட்டுகிறார்கள் சாதியத் தலைவர்கள். “வெளிநாடு செல்வேன். இதில் சாதி தலையிடவே கூடாது” என்கிறார் காந்தி. காந்தியை சாதி பிரஷ்டம் செய்கிறார்கள். சாதியை மீறியே காந்தி வெளிநாடு சென்றார்.

தென்னாப்பிரிக்காவில் அவர் எதிர்கொண்ட முதல் அடித்தட்டு மனிதரின் வழக்கு பாலசுந்தரத்தினுடையது. தன்னுடைய முண்டாசுத் துணியைக் கக்கத்தில் வைத்துக்கொண்டு, இரு கைகளையும் கூப்பியவாறு கூனிக்குறுகி, உடைந்த பற்களிலிருந்து ரத்தம் வழிய காந்தி முன் வந்து நின்ற தமிழர். கூலித் தொழிலாளி. அவரை வேலைக்கு அமர்த்தியிருந்த ஆங்கிலேயர் பாலசுந்தரத்தை அத்துமீறித் தாக்கியிருக்கிறார். பாலசுந்தரத்தின் முழுக் கதையையும் கேட்கும் காந்தி அவருக்காகப் பேச முடிவெடுக்கிறார். பாலசுந்தரத்திடம் இதைத் தெரிவிக்கும்போது கூடவே சொல்கிறார், “தயவுசெய்து உங்கள் முண்டாசுத் துணியைக் தலையில் கட்டிக்கொள்ளுங்கள்.” பின்பு ‘சத்திய சோதனை’யில் எழுதுகிறார். “மனிதர்கள் தம் சகோதர, சகோதரிகளை அவமானப்படுத்துவதன் மூலம் தாங்கள் கவுரவிக்கப்படுவதாக எப்படி நினைக்கிறார்கள் என்பது என்றைக்குமே எனக்குப் புரிந்துகொள்ள முடியாத மர்மமாக இருக்கிறது.”

தென்னாப்பிரிக்காவில் கூலிகளாக இருந்த இந்தியர் களில் கணிசமானோர் தாழ்த்தப்பட்டவர்கள். ஒடுக்கப்பட்டவர்களுடனான ஆழமான உறவு காந்திக்கு அங்கே ஏற்பட்டுவிட்டது. இந்தியச் சேரிகளுக்கு இணையான குடியிருப்புகளே அங்கும் அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்தது. “நாம் நம்முடைய உரிமைகளைப் பெற வேண்டும் என்றால், முதலில் கண்ணியமான வாழ்க்கை முறைக்கு நாம் மாற வேண்டும்” என்று அவர்களிடம் கூறினார் காந்தி. கூலிகளின் சேரிகளுக்குச் சென்று பணியாற்றுகையில் அவர் தொடர்ந்து அவர்களிடம் வலியுறுத்திய இரு விஷயங்கள்: 1. சுகாதாரம், 2. கல்வி. தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலேயர்களை எதிர்கொள்ள ஆங்கிலம் படிப்பது அவசியம் என்று வலியுறுத்தினார் காந்தி.

ஆரம்ப நாட்களிலேயே உடன் வேலைசெய்வோரைப் பாகுபாடின்றி வீட்டில் தங்கவைக்கும் பழக்கம் காந்தியிடம் இருந்தது. அப்படித் தங்கியிருந்த ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்தவரின் கழிவுச்சட்டியைச் சுத்தம்செய்ய கஸ்தூர் பா மறுத்ததே காந்தி அவரிடம் கடுமையாக நடந்துகொள்ளக் காரணமாக இருந்தது. 1904-ல் பீனிக்ஸ் குடியிருப்பில் வேலைகள் தொடங்கிவிட்டன. பல்வேறு சமூகத்தினரும் சமத்துவத்தோடும் கூட்டுறவோடும் வாழும் முயற்சி இந்தக் குடியிருப்பு. ‘யார் எந்தப் பணியில் இருந்தாலும் சரி, உடலுழைப்பிலும் ஈடுபட வேண்டும், எல்லோரும் எல்லா வேலைகளிலும் பங்கேற்க வேண்டும்’ என்பது காந்தி வகுத்த அடிப்படைக் கட்டுப்பாடுகளில் ஒன்று. மலம் அள்ளுவது உட்பட.

1920 நாக்பூர் காங்கிரஸ் மாநாட்டின் காந்தி ஆற்றிய தலைமை உரையில் குறிப்பிடுகிறார், “நாம் ஆங்கிலேயரிடமிருந்து விடுதலைக்காகப் போராடுகிறோம். ஆனால், நம்மில் பெரும்பான்மை மக்களைச் சமமானவர்களாக நடத்தாமல், தீண்டாமைக் கொடுமையால் பிரித்துவைத்திருக்கிறோம். தீண்டாமை தொடரும் வரை நமக்குச் சுயராஜ்யம் சாத்தியமே இல்லை.”

வைக்கம் போராட்டம் 30.3.1924 அன்று தொடங்கியது. முன்னதாக வைக்கத்தில் உள்ள மோசமான சூழலை விவரித்து கேசவ மேனன் எழுதும் கடிதத்துக்கு 19.03.24 அன்று பதில் கடிதம் எழுதுகிறார் காந்தி. வைக்கம் போராட்டத்துக்குத் தன் முழு ஆதரவைத் தெரிவித்து எழுதும் இக்கடிதத்தில், காந்தி குறிப்பிடுகிறார், “அவர்கள் தீண்டாதவராக இருப்பது மட்டுமல்ல; சில தெருக்களில் நடக்கவும் கூடாது என்ற நிலை எவ்வளவு வேதனைக்குரியது! நமக்கு ஏன் இன்னமும் சுயராஜ்யம் கிடைக்கவில்லை என்பதில் எனக்கு ஆச்சரியமே இல்லை. நம் நாட்டின் தாழ்ந்த வர்க்கத்தினர் பொது வழிகளில் நடக்கக்கூடிய உரிமைகளைப் பெற்றே தீர வேண்டும்.”

முக்கியமான விஷயம், இந்த விஷயங்கள் எல்லாம் நடந்த காலகட்டங்களில் அம்பேத்கர் பிறக்கவேயில்லை அல்லது சிறுபிராயத்தில் இருந்தார் அல்லது படித்துக்கொண்டிருந்தார்.

கான்: ஒரு வழிகாட்டி!


கான் அப்துல் கஃபார் கானின் 125-வது ஆண்டு இது. தன்னுடைய வாழ்நாளில் 27 ஆண்டுகளைச் சிறையில் கழித்தவர். அதில் 14 ஆண்டுகள், இந்தியச் சுதந்திரப் போராட்டப் பின்னணியில் அவர் அனுபவித்தவை. ஒரு லட்சம் பஷ்தூனியர்கள் அணிவகுத்த அஹிம்சைப் படையை உருவாக்கியவர். இந்தியப் பிரிவினையின்போது, “எங்களை ஓநாய்களிடம்  வீசியெறிந்துவிட்டீர்கள்” என்று காந்தியிடம் கூறிவிட்டு, கலங்கிய கண்களுடன் விடைபெற்றவர். இந்தியாவில் ஒரு இடத்திலேனும் இந்த ஆண்டு கான் நினைவுகூரப்பட்டதாகத் தெரியவில்லை. அரசியல் அடையாள நிமித்தமாகவேனும் நேருவின் 125-வது ஆண்டைக் கொண்டாடிய காங்கிரஸ் கட்சி, கானை முற்றிலுமாகவே கைகழுவிவிட்டது. சரி, இந்திய முஸ்லிம்களே மறந்துவிட்ட ஒரு மாமனிதரை காங்கிரஸ் மறந்ததில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்? ஆனால், இன்றைக்கு இந்திய முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளுக்குத் தீர்வளிப்பவராக கான் இருக்க முடியும்.

காளைக்கும் பாலுக்கும் என்ன சம்பந்தம்?


அலங்காநல்லூர். இந்தக் குளிர்காலத்திலும் அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் வேலையை ஆரம்பித்துவிடுகிறார் செல்வம். வீட்டில் ஐந்து மாடுகள் நிற்கின்றன. இவற்றைத் தாண்டி உதவி என்று கேட்பவர்களின் மாடுகளைப் பராமரிக்கவும் ஓடுகிறார். “நமக்கு பால் மாடு வளப்புதான் பொழைப்பு. ஜல்லிக்கட்டு காளைகள பழக்குறது பொழுதுபோக்கு. ஆறு மாசக் கன்டா இருக்குறப்பவே காளய பழக்க ஆரம்பிப்பாய்ங்க. அதோட சேந்து நாமளும் நடக்கிறது, நீச்சல் அடிக்கிறது, குத்துப் பழக்குறதுன்னு விளையாடறப்ப நமக்கும் வயசு குறைஞ்சுரும்” என்கிறார்.

செல்வத்துடன் பேசிக்கொண்டே இருந்தால், ஒரு மாட்டை வாங்கிக்கொண்டு கிராமத்துப் பக்கமாகப் போய்விடலாமா என்று தோன்றும். அப்படி ஒரு பிரியமான பேச்சு மாடுகள் மீது!

“பொறந்ததுலேர்ந்து மாட்டோடதான்யா கெடக்குறோம். மாடுங்க இல்லாட்டி வாழ்க்கையே இல்லை. நம்மளவிட யாருக்கு மாட்டைப் பத்தி தெரியப்போவுது? இந்தச் சல்லிக்கட்டு சமயத்துலதான்யா பூராப் பயலும் மாட்டு மேல அக்கறையிருக்கிற மாதிரிப் பேசிக்கிட்டு வர்றாய்ங்க. நல்ல நாள்ல இங்கெ மாடுக என்ன கதியில கெடக்குதுன்னு ஒரு பயலுக்கும் அக்கறை கெடையாது.

தமிழ்நாட்டோட பாரம்பரிய மாட்டினம் பூராவும் அழிஞ்சுக்கிட்டுருக்கு. ஒருகாலத்துல முப்பது நாப்பது ரகம் சொல்லுவாய்ங்க மாட்டுத் தரகருங்க. இப்ப அஞ்சாறு இனத்தைக் காப்பாத்துறதுக்கே போராடிட்டுருக்கோம். இது விவசாயிங்களோட பிரச்சினை மட்டும் இல்ல. பால் குடிக்குற ஒவ்வொருத்தரும் கவலைப்பட வேண்டிய பிரச்சினை. எப்படின்னு சொல்றன்.

இந்தத் தாய்க்கு என்ன பதில்?


வெயில் சுள்ளென்று தெறித்துக்கொண்டிருந்த நேரத்தில், அற்புதம் அம்மாள் வந்திருந்தார். முதுமையின் படபடப்பு. பயணமும் அலைச்சலும் தந்த களைப்பு. முகச்சுருக்கங்களில் ஓடி வழியும் வியர்வை. மூச்சிரைப்பு இன்னும் அடங்கவில்லை. 69 வயதாகிறது. ஏறாத படிகள் இல்லை. சிறைச்சாலை, வழக்கறிஞர்களின் அலுவலகங்கள், அரசியல்வாதிகள் - மனித உரிமைச் செயல்பாட்டாளர்களின் வீடுகள், ஊடக அலுவலகங்கள் நீதிமன்றங்கள், சட்டப்பேரவை... மகனை மீட்பதற்காக 25 ஆண்டுகளாக அலைகிறார். பார்த்த மாத்திரத்தில் அவருடைய கனத்த பைக்குள் கைகள் செல்கின்றன. காகிதங்களை உருவுகிறார். “யப்பா, கடைசியில அறிவு வாழ்க்கைய சிறைக்குள்ளேயே முடிச்சுடுவாங்கபோல இருக்குப்பா. எல்லார் கவனத்துலேர்ந்தும் அதை வேற பக்கம் கொண்டுபோயிட்டாங்கப்பா!”

கத்தை கத்தையாகக் காகிதங்களை மேஜை மீது போடுகிறார்.

வெள்ளம் அடித்துச்சென்ற தீர்ப்பு 
தமிழகத் தலைநகரம் வரலாறு காணாத வெள்ளத்தில் தத்தளித்த 2015, டிச.2-ல், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது தொடர்பான வழக்கில் தீர்ப்பு வெளியானது. ராஜீவ் கொலை வழக்கில், மரண தண்டனை வளையத்திலிருந்து வெளியே வந்து, இப்போது ஆயுள் தண்டனையை அனுபவித்துவரும் இவர்களை விடுவிக்க தமிழக அரசு மேற்கொண்ட முயற்சிக்குப் பேரிடியாக விழுந்தது அன்றைய தினம் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு.

உச்ச நீதிமன்றம் குறிப்பிட்ட மூன்று விஷயங்கள் இத்தீர்ப்பில் முக்கியமானவை.

1. ஆயுள் தண்டனை என்பதற்கு, ‘எஞ்சிய ஆயுள் முழுவதற்குமான தண்டனை’ என்பதே அர்த்தம்.
2. மத்தியப் புலனாய்வு அமைப்பால் விசாரிக்கப்பட்ட வழக்கில் தண்டனைக் குறைப்பு வழங்க முற்பட்டால், அந்த முடிவை மாநில அரசு மட்டுமே எடுத்துவிட முடியாது; மத்திய அரசின் ஒப்புதல் வேண்டும்.
3. தேசப் பாதுகாப்பை மனதில் கொள்ளாமல் மன்னிப்பின்பேரில் ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுவிக்க முடியாது. தேசத் தலைவர்கள் கொல்லப்படுவதை உள்நாட்டு அல்லது வெளிநாட்டுத் தாக்குதல் நடவடிக்கையாகவே கருத வேண்டும்.

சாதாரண நாட்களில் வெளியாகியிருந்தால், தமிழகத்தில் பெரும் அதிர்வுகளை இந்தச் செய்தி உருவாக்கியிருக்கக் கூடும்.

உணவல்ல; உயிர் கொடுக்கிறோம்!


சென்னை, திருவல்லிக்கேணி உணவு விடுதிகளுக்குப் பேர் போனது. தலைநகரில் ஒண்டிக்கட்டைகளின் பேட்டை இது என்பது அதற்கான பின்னணிகளில் ஒன்று. நூற்றாண்டுகளைக் கடந்த படா படா உணவகங்களின் மத்தியில் ‘பாரதி மெஸ்’ அப்படி ஒன்றும் பழுத்த கிழம் அல்ல. சின்னதும்கூட. சென்னை வந்த புதிதில் வெளியே வீட்டுச் சாப்பாடு எங்கே கிடைக்கும் என்று தேட ஆரம்பித்தபோது நண்பர்கள் ‘பாரதி மெஸ்’ஸுக்கு வழிகாட்டினார்கள். கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது.

முதல் முறை உணவகத்துக்குள் நுழைந்தபோதே ஆச்சரியமாக இருந்தது. முகப்பிலேயே கடவுள் இடத்தில் பாரதி. தவிர, சுவர் எங்கும் பாரதியின் அரிய படங்கள். கூடவே, “இதுவரை பாரதியாரின் 5 புகைப்படங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. அவற்றில் மூன்று வகையான தோற்றத்தில் உள்ளார்” என்பது போன்ற சிறுசிறு குறிப்புகள். ஒரு அலமாரியில் பாரதியின் எல்லாப் படைப்புகளும். ஒரு அலமாரியில் சலுகை விலையில் ‘பாரதி கவிதைகள்’. ஒரு அலமாரியில் விலையில்லாப் புத்தகங்கள். விரும்புவோர் தாம் படித்த புத்தகங்களை இங்கே அளிக்கிறார்கள்; விரும்புவோர் அவற்றை எடுத்துச்செல்கிறார்கள். சுவரில் ஒரு இடத்தில் எழுதியிருந்தது, “இங்கு வீட்டு முறையிலேயே சமைக்கிறோம். அஜினோமோட்டோ, சோடா உப்பு, பாமாயில், டால்டா சேர்ப்பது இல்லை. வயிற்றுக்கு எந்தப் பழுதும் நேராது; மனதாரச் சாப்பிடுங்கள்.” ஒரு இடத்தில் எழுதியிருந்தது: “நாம் தோசையில் மேல் மாவு சேர்ப்பதில்லை.”

உணவின் சுவையில் மட்டும் அல்ல; தரத்திலும் தனித்துவம் தெரிந்தது. இப்படிதான் ‘பாரதி மெஸ்’ கண்ணன் அறிமுகமானார்.

கோடி எறும்புகள் காதுக்குள் புகுந்தால் பட்டத்து யானைகள் என்னவாகும்?நாஞ்சில் சம்பத் விவகாரம் அடங்கியபாடில்லை. ஒரு கட்சிப் பதவியிலிருந்து ஒருவர் நீக்கப்படுவது - மன்னியுங்கள், விடுவிக்கப்படுவது - அவ்வளவு பெரிய செய்தியா? இந்த ஆட்சியில் இதுவரை 22 முறை அமைச்சரவை மாற்றம் நடந்திருக்கிறது; 20 பேர் நீக்கப்பட்டிருக்கிறார்கள்; 10 பேர் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்; 6 பேர் நீக்கப்பட்டு மீண்டும் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இவை அத்தனைக்குமான காரணங்கள் நமக்குச் சொல்லப்பட்டனவா? நாம்தான் கேட்டோமா?

எல்லோரிடமும் மன்னிப்பு கோருகிறேன்!


புத்தாண்டு நாளுக்குப் பெரிய கவனம் கொடுப்பதில்லை. உட்கார்ந்து யோசிக்கவோ, கொண்டாடித் தீர்க்கவோ என்று நாட்களை ஒதுக்குவதும் இல்லை. ஆனால், பிறந்த நாள், திருமண நாள், புத்தாண்டு நாள் போன்ற தருணங்களைக் கொஞ்சம் யோசிக்க ஒதுக்குவது முக்கியம் என்று தோன்றுகிறது. ஒரே ஓட்டமாய் ஓடிக்கொண்டிருக்கும்போது நம்மைக் கொஞ்சம் திரும்பிப் பார்த்துக்கொள்ள இவையெல்லாமும் ஒரு வாய்ப்புதானே?

எங்கெல்லாம் குறை என்று கவனிக்க உட்காரும்போதுதான் சிக்கல் ஆரம்பிக்கிறது. ஏகப்பட்ட ஓட்டைகள். நம் முகத்தை நாமே அவலட்சணமாக உணர்வது அவலம். ஓட்டைகள் இருக்குமிடம் தெரியாமல் ஓடுவது தவறு என்றால், தெரிந்தும் திருத்திக்கொள்ளாமல் ஓடுவது அயோக்கியத்தனம்.

இப்போது சரிசெய்துகொள்ள ஆரம்பித்திருக்கிறேன். நிறைய. வீட்டில் ஆரம்பித்து அலுவலகம் வரையில். எல்லாவற்றையும் வெளியே சொல்லத் தேவையில்லை என்றாலும், அம்பலத்தில் செய்த தவறுகளுக்கு அம்பலத்திலேயேதானே பரிகாரமும் தேட வேண்டும்?

என்னுடைய வார்த்தைகள் - பேச்சு/எழுத்து இரண்டுமே - சில நேரங்களில் வெறுப்பை உமிழ்ந்திருப்பதை உணர்கிறேன். பொதுவாக, என் பக்கம் நியாயம் இல்லாமல் கோபிக்க மாட்டேன். ஆனால், வெறுப்பை எந்தக் கோபத்தைக் கொண்டும் நியாயப்படுத்தவே முடியாது; கூடாது.