யாருடைய எலிகள் நாம் மதிப்புரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
யாருடைய எலிகள் நாம் மதிப்புரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

யார் இந்த சமஸ் அல்லது எங்கே நிம்மதி? - அரவிந்தன்

யார் இந்த சமஸ்? - பலருக்கும் இந்தக் கேள்வி எழுந்திருக்கும். சிலருக்கு வியப்புடன், சிலருக்குக் கடுப்புடன். இரண்டுக்குமே நியாயமான காரணங்கள் இருக்கக் கூடும் என்ற முரண்பாடுதான் சமஸின் வசீகரத்துக்குக் காரணம்.

சரியான திசையில் இயங்கும் அக்கறைகள்: ராஜன் குறை கிருஷ்ணன்

சமஸ் குறித்து சிந்திக்கும்போது மகிழ்ச்சியாகவும் இருக்கிறது; கொஞ்சம் பொறாமையாகவும் இருக்கிறது. இவ்வளவு இளம் வயதில் இவ்வளவு பயன்மிக்க வாழ்வை வாழக் கற்றுக்கொண்டுவிட்டாரே என்பதுதான் பொறாமைக்கு காரணம். இப்படி ஒரு இதழியலாளர் தமிழில் இயங்குவது குறித்து மகிழ்ச்சி. அவருடைய அக்கறைகள் சரியான திசைகளில் இயங்குகின்றன என்பதற்கு இந்த தொகுப்பு நூல் முக்கிய சாட்சி.

இந்த நூலுக்கு மதிப்புரை வழங்கிய நான்கு பேருடைய சிறுபட்டியல் வியப்பளிப்பது. ஜெயமோகன், ஞாநி, எஸ்.வி.ராஜதுரை, அ.முத்துலிங்கம். இப்படியாக மிக வித்தியாசமான பார்வைகள் கொண்டவர்களை ஈர்க்கும்படியாக அவர் எழுதியிருக்கிறார் என்பது வியப்பாக இருக்கிறது. ஆனால் அதை சாதிக்க சமஸ் அவர் அதைச்சொன்னார், இவர் இத்தச்சொன்னார் என்று நிலைபாடுகள் எடுப்பதை தவிர்த்து ஒரு வலுவற்ற நடுநிலையை உருவாக்கவில்லை. மாறாக நடுநிலை என்பது ஒரு தார்மீகப் பார்வைதான் என்பதை சமஸின் எழுத்துகள் நிரூபிப்பதாகப் படுகிறது.

அரிய சமன்பாடுதான் சமஸிடம் பிடித்தது: பி.ஏ. கிருஷ்ணன்

சமஸ் எழுதிய ’யாருடைய எலிகள் நாம்’ புத்தகத்தைப் படித்து முடித்தவுடன் தோன்றியது இதுதான்: அவருடைய வயதில் எனக்கு அவருக்கு இருக்கும் தெளிவும் சமன்பாடும் ஏன் இல்லாமல் போய்விட்டது? புத்தகம் முழுவதும் அவருக்கு நமது சாதாரண மக்களின் மீது இருக்கும் அக்கறை தெளிவாக வெளிப்படுகிறது. அந்த அக்கறையைத் தாரை தம்பட்டங்கள் இல்லாமல் வெளிப்படுத்தியிருப்பதே சமஸில் வெற்றி என்று நான் கருதுகிறேன். அவரோடு ஒத்துப்போக முடியாத பல இடங்கள் புத்தகத்தில் இருக்கின்றன. ஆனால் அவரிடம் பேசி அவரை மாற்ற முடியும் அல்லது அவரால் தெளிவு பெற்று நான் மாறலாம். என்ற எண்ணத்தை எனக்கு அவரது எழுத்து அளிக்கிறது.

அழியாக்குரல் - ஜெயமோகன்


செய்தி என்பதற்கும் வரலாறு என்பதற்கும் என்ன உறவு? நேற்றைய செய்திகளால் ஆனது வரலாறு. இன்றைய செய்தியோ நேற்றைய செய்தியின் மீதுதான் வந்து விழுகிறது. அதை மறக்கவைக்கிறது. பொருளற்றதாக்குகிறது. நாலைந்து நாள் பழைய செய்தித்தாள்கூட என்ன இது என்ற துணுக்குறலையே அளிக்கிறது. இந்தப் பெரும் சவாலை ஏற்றுக்கொள்கிறான் செய்தி ஆய்வாளன். இன்றைய செய்தியை அவன் நேற்றைய செய்திகளால் ஆன ஒரு பெரிய பரப்பில் கொண்டுசென்று பொருத்துகிறான். செய்தியின் உடனடித்தன்மையை, முன்பின்னற்ற நிகழ்காலத்தன்மையை, வரலாற்றின் தொடர்ச்சியாக மாற்றிக்காட்டுகிறான். அப்படி மாற்றப்படாத செய்தி என்பது வெறும் தகவல். அதிலிருந்து சிந்தனைகள் கிளைப்பதில்லை. கொள்கைகள் உருவாவதில்லை. வரலாற்றில் வைத்துப்பார்க்கப்படாத செய்தி என்பது பரிசீலிக்கப்படாத செய்தியே.

ஒரு செய்தியில் இருந்து வரலாற்றுக்குச் சென்று வலுவான கேள்விகளையும் ஐயங்களையும் எச்சரிக்கைகளையும் முன்வைக்கும் கூரிய கட்டுரைகள் சமஸுடையவை. இந்நூலில் உள்ள அனைத்துக் கட்டுரைகளையுமே அவ்வகையிலான வரலாற்று வாதத்தை உருவாக்குபவை என்று சொல்லலாம்.