சென்னைப் புத்தகக் காட்சியில் வழக்கமான ஜனவரி பனிச் சூழல் கோலாகலத்தை இந்தாண்டு ஜூன் வெம்மைச் சூழலில் பார்க்க முடியவில்லை. வெள்ளத்தின் தொடர்ச்சியாக தள்ளிவைக்கப்பட்டு நடத்தப்படும் இந்தப் புத்தகக்காட்சியில் சனி, ஞாயிறு இரண்டு நாட்களைத் தவிர்த்து வாரத்தின் ஏனைய நாட்களில் கூட்டம் இல்லை. ஊருக்கு மூட்டை கட்டிக்கொண்டிருந்த ஒரு பதிப்பாளர், “டீ செலவை ஈடுகட்டுற விற்பனைகூட இல்லை” என்றார். ஒரு கவிதைப் புத்தகத்தைக் கையில் கொடுத்தார். அட்டையே சாதாரண காகிதத்தில் அச்சடிக்கப்பட்டிருந்தது. “கவிதைப் புஸ்தகம் வாங்க ஆளே இல்லை. இந்தப் புத்தகம் இருபது ரூபாய். ரெண்டு டீ காசு. எறநூத்தம்பது அடிச்சோம். ஒண்ணு விக்கலை” என்றார்.
பிரபலமான பெரிய, ஏற்கெனவே பலமான வாசகர் வட்டத்தைப் பெற்றிருக்கிற பதிப்பகங்கள், ஊடக நிறுவனங்கள் நீங்கலாக பெரும்பாலான பதிப்பகங்கள் இம்முறை பாதிக்கப்பட்டிருக்கின்றன. “சென்னையில் ஜனவரியில் புத்தகக்காட்சி நடக்கும்போது மார்கழி இசை விழா, நாட்டிய விழா, புத்தாண்டு பொங்கல் கொண்டாட்டங்களோடு அதுவும் கூட்டு சேர்ந்துகொள்கிறது. புத்தகக்காட்சிக்குக் குடும்பத்தோடு செல்வதும் ஆளுக்கொரு புத்தகமேனும் வாங்குவதும் அப்போது ஒரு பொழுதுபோக்கு சம்பிரதாயம் ஆகிவிடுகிறது. இந்தக் கோடையில் அப்படி யாரும் வருவதில்லை. தீவிர வாசகர்களின் வருகை மட்டுமே விற்பனைக்குப் போதுமானதாக இல்லை” என்று சொன்னார்கள்.
இந்த முறை புத்தகக் காட்சி நடக்கும் இடமான தீவுத்திடலுக்கு ஒரு வரலாறு உண்டு. சென்னையில் வருஷத்தின் எல்லாப் பருவங்களிலும் ஏதாவது ஒரு பொருள்காட்சி நடக்கும் இடம் இது. எந்தப் பொருள்காட்சியும் கூட்டம் இல்லை என்று சொல்லி முடங்கியதாகத் தெரியவில்லை. வெயில் புழுக்கம் பெரும் சங்கடம் என்றாலும், அதை மட்டுமே காரணமாகச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை.

