மோடி பலூன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மோடி பலூன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மோடி பலூனை ஊதுவது யார்?



                     லைவனுக்காகக் காத்திருக்கும் தேசம், மோடிக்காகக் காத்திருக்கும் இந்தியா, மோடி தயார் . . . இந்தியா தயாரா . . . - இப்படி ஊதிப் பெருக்கப்படும் மோடி பலூனுக்குக் காற்று கொடுப்பவர்கள் யார்? இந்தியத் தொழில் துறை மோடியைத் தூக்கிவைத்துக் கொண்டாடக் காரணம் என்ன? ஊடகங்கள் திட்டமிட்டு மறைக்கும் அந்த உண்மையைத் தலைமைத் தணிக்கைக் கணக்காயர் அலுவலகம் (CAG) வீதிக்குக் கொண்டுவந்து இருக்கிறது.

                    லஞ்சம், ஊழல் மற்றும் விதிமீறல் காரணங்களால் 2009 - 2011 இரு நிதியாண்டுகளில் மட்டும் ரூ. 17 ஆயிரம் கோடி குஜராத் அரசுக்கு இழப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று சொல்கிறது தலைமைத் தணிக்கைக் கணக்காயரின் அறிக்கை. அரசின் இந்த இழப்புகளைப் பெரும் பகுதி ஏப்பம் விட்டு செரித்திருப்பவை பெருநிறுவனங்கள். குஜராத் மாநில பெட்ரோநெட் நிறுவனத்துக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கும் இடையேயான எரிவாயு உடன்படிக்கையில் செய்யப்பட்ட விதிமீறல்களால் மட்டும் ரிலையன்ஸ் நிறுவனம் ரூ. 52.27 கோடி பலன் அடைந்துள்ளது. இதேபோல, மாநில அரசின் குஜராத் யுர்ஜா விகாஸ் நிகாம் நிறுவனம், அதானி பவர் நிறுவனத்துடன் செய்துகொண்ட மின் கொள்முதல் ஒப்பந்தத்தில் செய்யப்பட்ட திமீறல்களால், அதானி நிறுவனம் ரூ.160.26 கோடி பலன் அடைந்துள்ளது. சூரத்தில் எஸ்ஸார் உருக்கு நிறுவனம் ஆக்கிரமித்திருந்த 7.24 லட்சம் சதுர மீட்டர் நிலத்தை சதுர மீட்டர் ரூ. 700 என்கிற மட்டி விலைக்கு எஸ்ஸார் நிறுவனத்துக்கே உரித்தாக்கி இருக்கிறது மோடி அரசு. இதேபோல், ஃபோர்டு இந்தியா, லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனங்களுக்கு அரசு நிலத்தைக் கொடுத்ததிலும் விதிமீறல்கள் நடந்திருக்கின்றன என்கிறது அந்த அறிக்கை.

                    ஒரு மாநில அரசு மீது ரூ. 17 ஆயிரம் கோடி அளவுக்கு முறைகேடு குற்றஞ்சாட்டப்படுவது பெரிய செய்தி. அதுவும் கறை படியாத கரங்களுக்குச் சொந்தக்காரர் என்றும் தலைசிறந்த நிர்வாகி என்றும் பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தப்படும் ஒருவர் மீதான நாட்டின் உயர்ந்த தணிக்கை அமைப்பின் இந்தக் குற்றச்சாட்டு பெரிய அளவில் பேசப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தேசிய ஊடகங்கள் இந்தச் செய்தியை இரு பத்திகளுக்குள் அடக்கம் செய்தன.

மோடி அரசு மீதான குற்றச்சாட்டுகள் புதிதல்ல. அதானி குழுமத்துடன் மோடி அரசுக்குள்ள தொடர்புகள் தொடர்ந்து விவாதத்தில் இருக்கின்றன. கடந்த ஆண்டு இறுதியில் அரவிந்த் கேஜ்ரிவால் அம்பலப்படுத்திய குஜராத் மாநில பெட்ரோலிய நிறுவனம் - ஜியோ குளோபல் நிறுவனம் இடையேயான ஒப்பந்தம் கிட்டத்தட்ட இரண்டாம் அலைக்கற்றை ஒதுக்கீட்டை ஞாபகப்படுத்தக் கூடியவை (ஒப்பந்தத்தின்போது வெறும் 64 டாலர் - அன்றைய மதிப்பில் ரூ. 3200 சொத்து மதிப்பைக் கொண்ட ஜியோ குளோபல் நிறுவனம் பின்னர் 10 ஆயிரம் கோடி நிறுவனமானதை அம்பலப்படுத்தினார் கேஜ்ரிவால்). ஆனால், ராபர்ட் வதேராவின் முறைகேடுகளைப் புரட்டி எடுத்த ஊடகங்கள் மோடியின் செய்தியை அன்றோடு அடக்கம் செய்தன.