ஊர்கள் எப்போதும் என் நினைவுகளில் மனிதர்களாகத்தான் படிகின்றன. ஒரு ஊரின் பெயரைச் சொல்லி “ஒரு நிமிஷம் கண்களை மூடி ஊரை யோசித்துப்பார்” என்று சொன்னால், நிலப்பரப்பையோ, கட்டிடங்களையோ, நீர்நிலைகளையோ காட்சிக்குக் கொண்டுவரும் முன், அங்கிருந்த மனிதர்களைத்தான் முதலில் மனம் நினைவுக்குக் கொண்டுவருகிறது. லண்டன் அப்படி நினைவுகளில் அள்ளிக்கொண்டுவரும் மனிதர்களில் சாதிக் கான் தவிர்க்கவே முடியாத மனிதராக இருப்பார்.
மேற்கத்திய நாடுகளின் தலைநகர் ஒன்றில் இவர்தான் முதல் முஸ்லிம் மேயர் என்பதற்கு அப்பால், சாதிக் கான் வடிவில் பாகிஸ்தானிலிருந்து பிழைப்புக்காக வந்த பஸ் ஓட்டுநர் ஒருவரின் மகன், இன்று லண்டன் மேயர் ஆகியிருப்பது பிரிட்டிஷாரின் ஜனநாயகத்தைக் கண்ணியப்படுத்துகிறது. லண்டன் மேயர் தேர்தலில் வெல்லுதல் எளிதானதல்ல. ஐரோப்பாவில் நடக்கும் பெரிய தேர்தல்களில் ஒன்று அதற்கானது. ஃபிரான்ஸ் அதிபர் தேர்தலுக்கு அடுத்து, இன்று அதிகமான வாக்காளர்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர் லண்டன் மேயர். பிரிட்டனில் மேயருக்கான பொறுப்புகளும் அதிகாரங்களும் அதிகம் - ஓர் உதாரணம் லண்டன் மெட்ரோ ரயில் சேவை, காவல் துறை மேயரின் அதிகாரத்தின் கீழ் வருகின்றன.

