இன்றும் திராவிட நாகரிகத்தின் குறைந்தது ஆயிரமாண்டு எச்சங்களை நகரக் கட்டுமானத்தில் மிச்சம் வைத்திருக்கிற மன்னார்குடியின் ராஜகோபாலசுவாமி கோயில் தேரடித் திடலில் பிரம்மாண்டமான கூட்டம் கூடியிருக்கிறது. சுற்றுக் கிராமங்களிலிருந்து நகரை நோக்கி வரும் சாலைகள் அத்தனையும் மனிதத் தலைகளால் நிரம்பியிருக்கின்றன. கால்நடையாகத்தான் வருகிறார்கள் பெரும்பான்மையோர்; குழந்தைகளைத் தோளில் உட்காரவைத்தபடி நடந்து வருபவர்கள் அதிகம். மேடையில் உள்ளூர்ப் பேச்சாளரின் பேச்சின் இடையே குறுக்கிட்டு, மைக்கைப் பிடிக்கும் திமுக மாவட்டச் செயலாளர் மன்னை நாராயணசாமி சொல்கிறார், “நம் இதயங்களையெல்லாம் கொள்ளைகொண்ட பேரறிஞர் அண்ணா அவர்கள் தஞ்சாவூரிலிருந்து புறப்பட்டுவிட்டார். இன்னும் ஒரு மணி நேரத்தில் இங்கு வந்துவிடுவார்.” கூட்டம் பேரோசை எழுப்புகிறது.
அன்று பகல் ஒரு மணிக்கு அண்ணா பேசுவார் என்று முன்வரிசையில் இடம்பிடிக்க, காலை பத்து மணிக்கெல்லாம் வர ஆரம்பித்த கூட்டம் அது. மணி இப்போது மாலை ஐந்து. உள்ளூர்ப் பேச்சாளர்கள் தொடர்கிறார்கள். ஒரு மணி நேரம். மீண்டும் குறுக்கிடுகிறார் நாராயணசாமி, “வழியெல்லாம் மக்கள் அலை நடுவே நீந்தி வந்துகொண்டிருக்கிறார் நம் அண்ணன்.” இன்னும் அரை மணி நேரம். “தமிழினத்தின் விடுதலை விடிவெள்ளி அண்ணா வடுவூரைத் தாண்டிவிட்டார்.” மேலும் அரை மணி நேரம். “மன்னார்குடி எல்லையைத் தொட்டுவிட்டார் நம் தலைவர். இன்னும் ஐந்து நிமிடங்களில் நம் முன் உரையாற்றப்போகிறார், வரலாறு மாறப்போகிறது...” கூட்டம் ஆர்ப்பரிக்கிறது.
ஐந்தடி உயரம். கசங்கிய வேட்டி, சட்டை. மேல்துண்டில் புகையிலைப் பொடிக் கறை. கலைந்த தலைமுடி. ஒரு நாளைக்கு 20 கூட்டங்களுக்குத் திட்டமிட்டுக் கிளம்பினாலும், அதைத் தாண்டியும் வழியெங்கும் வண்டியை மறித்து ஒரு நிமிஷமேனும் தங்கள் ஊரில் பேசிவிட்டுச் செல்லப் பணிக்கும் மக்களின் அன்புக்காகப் பேசிப் பேசிக் களைத்தவரின் சோர்வு முகத்தில் தென்படுகிறது. ஆனால், கண் முன் தெரியும் மக்கள் வெள்ளத்தின் எழுச்சி தரும் புத்துணர்வு அவர் முகத்தை மலர்விக்கிறது. காரிலிருந்து இறங்குபவர் கூட்டத்தை உற்றுநோக்கியபடி சட்டையை லேசாகத் தூக்கிவிட்டு, வேட்டி மடியை இழுத்துக் கட்டுகிறார். அவர் ஒரு பேருரைக்கு உற்சாகமாக இருக்கிறார் என்பதற்கான அறிகுறி அது. எந்த வகையிலும் தன் உருவத் தோற்றத்தில் ஆளை வசீகரித்துவிடும் தன்மை அற்ற அந்த எளிய மனிதர் மேடை ஏறுகிறார். உன்மத்தம் பிடிக்கிறது கூட்டத்துக்கு. மைக்கைப் பிடிக்கிறார். பேரோசை; பேரோசை. அண்ணா பேச்சைத் தொடங்குகிறார். சன்னதம் ஆடிய கூட்டம் அப்படியே கட்டுண்டு சுருள்கிறது. அவர் உரையை முடிக்கிறார். ஒட்டுமொத்த கூட்டமும் விண்ணதிர அவர் பெயரைச் சொல்லி முழங்குகிறது, “அண்ணா... வாழ்க!”, “தமிழ்… வெல்க!” கூட்டத்தின் கண்களில் நீர் கசிகிறது.