மிச்சமிருக்கும் விடுதலைப் போராட்டம்... காந்தி இருக்கிறார்; காந்தியர்கள் இருக்கிறார்களா?


இந்த இலையுதிர்காலத்தின் தொடக்க நாட்களில் ‘குறுங்காடு’ தங்கசாமி உதிர்ந்துபோனார். தன்னுடைய சொந்த ஊரான சேந்தங்குடியில் ஒரு சின்ன காட்டையே உருவாக்கியவர் தங்கசாமி. ஐம்பதாண்டுகளில் தனக்குச் சொந்தமான நிலத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மரங்களை வளர்த்ததோடு அல்லாமல், ஊர் ஊராகச் சென்று மரங்களை வளர்க்கப் பிரச்சாரம் செய்தார். கோடிக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள், விதைகளைத் தன் கை வழியே பரிமாறியவர் தங்கசாமி. தொடக்கத்தில் விவசாயத்திலிருந்து கரைசேர பொருளாதாரரீதியான ஒரு ஏற்பாடாக மரம் வளர்ப்பைப் பார்த்தவர், பிற்பாடு சுற்றுச்சூழலில் அது உண்டாக்கிய மாற்றங்களைப் பார்த்து வியந்து தன்னை ஒரு சூழல் பாதுகாப்புச் செயல்வீரராக மாற்றிக்கொண்டார். ஒவ்வொரு விவசாயியும் தன்னிடமுள்ள நிலத்தில் மூன்றில் ஒரு பங்கையேனும் மரம் வளர்க்க வேண்டும் என்பார் அவர். ஒரு வானொலி உரைச்சித்திரத்தைக் கேட்டு, மரம் வளர்ப்பை நோக்கித் திரும்பிய தங்கசாமியை மரபுவழி வேளாண்மையை நோக்கித் திருப்பியவர் நம்மாழ்வார்.

திருச்சியில் இருந்த நாட்களில் ஒரு காலகட்டம் நெடுகிலும் நம்மாழ்வாருடன் உரையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். ஸ்ரீரங்கத்தில் தனது நண்பரின் வீட்டில் தங்கியிருந்தார். நல்ல பனிக்காலம். அதிகாலையில் ததும்பத் ததும்ப நீர் செல்லும் காவிரியைக் கடந்து அவர் வீட்டுக்குச் செல்வேன். மொட்டை மாடியில் சின்ன குடிலில் இருப்பார். அதுவுமே அவருக்கு முகாம் அலுவலகம் மாதிரிதான் இருந்தது. சில மணி நேரம் பேசிக்கொண்டிருப்போம். அடுத்து, கூட்டங்களுக்கு அவரை அழைத்துச்செல்ல விவசாயிகள் வருவார்கள். இருபத்தைந்து பேர், ஐம்பது பேர், அதிகபட்சம் நூறு பேர். பெரும்பாலான கூட்டங்களில் இவ்வளவு பேர்தான் பார்வையாளர்கள். தமிழ்நாடு முழுக்க ஊர் ஊராகப் போய் பேசினார். இது போக ஓரிருவராகவோ நான்கைந்தராகவோ பார்க்க வருபவர்களிடம் பேசிக்கொண்டே இருந்தார். “எண்ணிக்கை முக்கியம் இல்ல. விதை ஆழமா விழணும். நல்ல விதை ஒண்ணு பிடிச்சுக்கிட்டா போதும். மொத்த சமுதாயத்துக்கும் அது இருக்குற வரைக்கும் நிழல் தந்துடும்!”

தனி ஒரு மனிதராகக் கடந்த கால் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் உணவுப் பண்பாட்டில் நம்மாழ்வார் நிகழ்த்திய மாற்றம் வேறு யாரும் செய்திராதது. தமிழ்நாடு முழுக்க இன்று சாலையோரங்கள் பழச்சாறுக் கடைகளாலும் கரும்புச்சாறு கடைகளாலும் இளநீர் வண்டிகளாலும் நிரம்பியிருக்கின்றன. சர்வதேச அளவில் குளிர்பானத் துறையில் கோலோச்சும் இரு பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் ஏற்பட்ட விற்பனைச் சரிவை ஈடுகட்ட வழி தேடி கள ஆய்வு நடத்துகின்றன. மதுக்கடைகள், பேரங்காடிகள், பெருந்திரையரங்குகள் போன்ற குறிப்பிட்ட இடங்களைத் தாண்டி தமிழ்நாட்டில் குளிர்பானம் விற்பதில்லை. தமிழில் தங்களுடைய குளிர்பானத்தின் பெயரை மாற்றிப்பார்த்தாலேனும் விற்க முடியுமா என்று நிறுவனங்கள் கையாண்டுபார்த்த உத்தியெல்லாம்கூட பலித்தபாடில்லை.

பிரிட்டன் கிராமங்களினூடே ஒரு பயணம்


விடியலுக்கு இன்னும் வெகுநேரம் இருந்த இரவிலேயே அங்கு வந்தடைந்திருந்தோம். கடும்பனி கார் ஜன்னலின் கண்ணாடி மீது நுங்கு தசைபோல் படர்ந்திருந்தது. அதிகாலையில் புறப்பட்டு இரவில் திரும்பிவிடும் வகையில் பயணத்தைத் திட்டமிட்டிருந்தார் ஹெலன். நெடுஞ்சாலையை ஒட்டியும், பிரதான சாலையிலிருந்து பிரிந்தோடி, ஊருக்குள் சுற்றி இன்னொரு பிரதான சாலையில் போய்ச் சேரும் வகையிலும் அமைந்திருந்த கிராமங்களாகத் தேர்ந்தெடுத்து இந்தப் பயணத்தில் அவர் கோத்திருந்தார். வெளியே இருந்த பொழுதுக்கும், கடிகாரம் காட்டும் நேரத்துக்குமான தொடர்புகள் முற்றிலுமாக அறுபட்டிருப்பதாகத் தோன்றியது. கார் கண்ணாடிக்கு வெளியே சாலைக்கு மேலே கொட்டிக்கிடந்த நட்சத்திரங்கள் மத்தியில் வானம் தன்னை உள்ளடக்கிக்கொண்டிருந்தது. அந்த இருட்டிலும் கிராமங்களின் சாலையும் நெடுஞ்சாலையும் இணையும் இடங்களில் அங்காடிகள், மருத்துவமனைகள், ரயில் நிலையங்கள், வங்கிகள், பெட்ரோல் நிலையங்கள் என்று அனேகமாக எல்லா வசதிகளும் தென்பட்டன. ஊருக்குள் பிரிந்த சாலை நோக்கி காரை ஓட்டலானார் ஹெலன். ஜன்னல் கண்ணாடியைக் கொஞ்சம் கீழ் இறக்கினேன். அடர் கருநீலத்தில் இருபுறங்களிலும் விரவிக்கிடந்த வயல்களில், அணிவகுப்பில் நிற்கும் சிப்பாய்களைப் போல அலையலையாகக் குத்திட்டு நின்றிருந்தன தானியக் கதிர்கள். இடைவெளி விட்டுவிட்டு தூரத்தில் விளக்கெரியும் பண்ணை வீடுகள். புரண்டுகொண்டிருந்த கிராமத்தை விளக்கொளி வழியே பார்த்தபடியிருந்தேன்.