திமுக வெற்ற லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திமுக வெற்ற லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திமுக வெற்றியின் முக்கியத்துவம் என்ன?


புது டெல்லியின் கருத்துருவாக்கர்கள் 2021 ஐந்து மாநிலத் தேர்தலை எப்படி அணுகுகிறார்கள்? தேர்தல் ஆய்வாளரும், சமூகவியலாளருமான யோகேந்திர யாதவ் விரிவான ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார், ‘பாஜகவின் அஸ்வமேத யாகத்தை நிறுத்தி இந்தியாவுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியிருக்கிறது வங்கம்!’ முதல்வர் மம்தா இந்த வார்த்தைகளுக்குப் பொருத்தமானவர் என்பதில் சந்தேகமே இல்லை. கட்டுரையில் ஓரிரு வரிகளில் தமிழ்நாட்டைக் கடந்திருக்கிறார் யோகேந்திர யாதவ்.

பத்திரிகையாளர் சேகர் குப்தா ட்விட்டரில் தன்னுடைய இணையப் பத்திரிகையின் இரு தலையங்கங்களைப் பகிர்ந்திருந்தார். வங்கத்தைப் பற்றிய தலையங்கம் சொல்கிறது, ‘வங்கத் தேர்தலில் மூன்று முக்கியமான விஷயங்களைக் காண முடிகிறது. முதலாவது, மோடி யுகத்தில் பாஜக அடைந்த பெரிய தேர்தல் தோல்வி இது. பிரிவினை, வகுப்பியச் செயல்திட்டங்கள் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளை வெல்ல பாஜகவுக்கு உதவாது. மூன்றாவது, எல்லாம் வல்ல நரேந்திர மோடி என்ற ஆளுமை வழிபாடு இந்தி மாநிலங்கள், குஜராத் போன்றவற்றில் எடுபடலாம். அது ஏனைய பகுதிகளை ஈர்க்காது.’ அதேசமயம், சேகர் குப்தாவின் தமிழ்நாட்டைப் பற்றிய தலையங்கம் இப்படிச் சொல்கிறது, ‘தமிழ்நாட்டில் திமுகவின் வெற்றி ஒன்றும் ஆச்சரியமானதல்ல. ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோரின் சுரத்தே இல்லாத, சீரற்ற ஆட்சிக்குப் பிறகு ஜெயலலிதா இல்லாமல் அதிமுகவுக்குத் தொடர்ச்சியான மூன்றாவது வெற்றி சாத்தியமற்றதாகவே இருந்தது!’ அதே ஊடகத்தின் இன்னொரு ஆசிரியர் ராம லக்ஷ்மி – ‘வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையின் முன்னாள் செய்தியாளரும்கூட - இவர் ட்விட்டரில் இப்படி ஒரு வாக்கியத்தைப் பகிர்ந்திருந்தார்: ‘தமிழ்நாட்டின் பப்புவை வாக்கு இயந்திரமாக பிரஷாந்த் கிஷோர் எப்படி மாற்றினர் என்பதை வாசியுங்கள்... முரட்டுத்தனமான மாணவர் தலைவர் என்பதிலிருந்து முதல்வராகும் சாத்தியமுள்ளவராக - திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் இயல்பான உருமாற்றம்.’

இது வாடிக்கைதான். திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு, திராவிடக் கட்சிகள் ஆட்சியின் ஐம்பதாண்டு, அதன் தளகர்த்தர்களில் ஒருவரான கருணாநிதியினுடைய சட்டமன்றப் பணியின் அறுபதாண்டு முத்தருணங்களை ஒட்டி ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ நூலை உருவாக்குகையில் கட்டுரைக்காக அணுகியபோது, நவீன இந்தியாவின் வரலாற்றாய்வாளர் என்று தன்னை வரையறுத்துக்கொள்ளும் ராமசந்திர குஹா மறுத்தார். அதற்கு அவர் சொன்ன காரணம், ‘எனக்குத் தமிழ்நாட்டைப் பற்றித் தெரியாது!’ அது சரி, பேசவோ எழுதவோ விருப்பமற்ற ஒன்றை ஒருவர் ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்!

என்னைப் பொறுத்த அளவில், வங்கத்தில் மம்தாவின் வெற்றிக்கு இணையானதாகவே தமிழ்நாட்டில் ஸ்டாலினின் வெற்றியையும் காண்கிறேன்.