சொத்துக்குவிப்பு வழக்கில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் குற்றம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது; மரணம் அவரை விடுவித்துவிட்டாலும், அவருடைய தோழி சசிகலா, அவருடைய உறவினர்கள் சுதாகரன், இளவரசிஆகியோர் நான்காண்டுகள் சிறைத் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தத் தீர்ப்பு அரசியல்வாதிகளுக்கு ஒரு எச்சரிக்கை என்று பலரும் கூறுகிறார்கள். இருக்கலாம். கூடவே இந்திய நீதித் துறையில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்களையும் இத்தீர்ப்பு நமக்கு உணர்த்துவதாகவே நான் கருதுகிறேன்.
லட்சம் கோடிகளை ஊழல்கள் எட்டிவிட்ட காலகட்டத்தில், வெறும் ரூ.66.6 கோடி சொத்துக்குவிப்பு வழக்கில் அளிக்கப்பட்டிருக்கும் தண்டனை இன்றைய தலைமுறையினர் பலருக்கு ஆச்சரியமாகவும், சிலருக்கு அதீதமாகவும்கூடத் தோன்றலாம். 1991-96 காலகட்டத்தை நினைவில் வைத்திருப்பவர்களுக்கு இந்த வழக்கின் முக்கியத்துவம் புரியும்.
தமிழகத்தின் இருண்ட காலகட்டங்களில் ஒன்று அது. வீதிக்கு வீதி சுவர்களில் ‘அன்னையே’, ‘மேரி மாதாவே’, ‘துர்க்கையே’ என்ற பட்டங்களோடும் அந்தந்தக் கடவுளர் தோற்றங்களோடும் ஜெயலலிதா சிரித்த காலகட்டம். ஊர்கள்தோறும் ஐம்பதடி, நூறடி கட் அவுட்களில் ஜெயலலிதா நின்ற காலகட்டம். ஜெயலலிதா சாலையைக் கடக்கிறார் என்றால், சிக்னலில் பிரதமர் நரசிம்ம ராவ் சிக்னலில் காத்திருக்கவைக்கப்பட்ட காலகட்டம். துறைகள்தோறும் ஜெயலலிதா-சசிகலாவின் பெயரால் லஞ்சமும் ஊழலும் மலிந்திருந்த காலகட்டம். கொஞ்சம் பெரிதாக வீடு கட்டுபவர்கள் “ஜெயலலிதா - சசிகலா கும்பல் கண்ணுல இது பட்டுடாம இருக்கணும்” என்று கிண்டலாகக் கூறிக்கொண்ட அளவுக்கு தோழியர் பெயரால் சொத்துக்குவிப்புகள் நடந்த காலகட்டம். சட்டப்பேரவையில் சபாநாயகரின் நாற்காலியில் எந்தப் பதவியிலும் இல்லாத சசிகலாவை உட்காரவைத்து எல்லா மாண்புகளையும் ஜெயலலிதா உருக்குலைத்த காலகட்டம். எதிர்த்த அரசியல் செயல்பாட்டாளர்கள், விமர்சித்த பத்திரிகையாளர்கள், அடக்குமுறைக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த வழக்குரைஞர்கள் கொடூரத் தாக்குதலுக்குள்ளான காலகட்டம். அடுத்த தேர்தலில் ஜெயலலிதாவே பர்கூர் தொகுதியில் தோற்கும் அளவுக்கு மக்களிடத்தில் அதிருப்தியும் கோபமும் கொந்தளித்திருந்த காலகட்டம். சசிகலா குடும்பத்தின் மீதான தமிழக மக்களின் வெறுப்பு அந்தக் காலகட்டத்தில் வேரூன்றிய விருட்சம்.

