பெரியாரை எப்படிப் புரிந்துகொள்வது?


டுகொலைசெய்யப்பட்டார் காந்தி. மரணச் செய்தியை உள்ளடக்கிக்கொண்டு டெல்லியின் வீதிகள் வழியே பயணப்பட்டபோதே விஸ்வரூபம் எடுத்திருந்த கோட்ஸேவின் துப்பாக்கியிலிருந்து வெளிப்பட்ட சாம்பல் நிறப் புகை பெரும் கருமேகமாகி நாட்டின் மேல் பரவுகிறது. மக்கள் வெடித்தழுகிறார்கள். பேரதிர்ச்சி, தாங்கொணா துயரம், கட்டுக்கடங்கா வலி. எல்லோர் மத்தியிலும் இரண்டு கேள்விகள். ‘‘ஐயோ... இது உண்மைதானா?’’, ‘‘கொலையாளி யார்?’’

பிரிவினைக் கலவரங்களின் ரத்தச்சகதிக்கு நடுவே ஆட்சிப் பொறுப்பேற்றிருந்த இந்திய அரசுக்கு இரண்டாவது கேள்வி எவ்வளவு பெரிய ஆபத்தைச் சுமந்திருக்கிறது என்பது தெரியும். ஆகவே, இரண்டாவது கேள்விக்கான பதிலுடன் இணைத்தே முதல் கேள்விக்கான பதிலையும் சொல்கிறார் பிரதமர் நேரு. அதே நேரத்தில், நாடு முழுக்க கலவரங்களைத் தடுக்கும் விதமாகச் செல்வாக்குள்ள தலைவர்கள் மக்களிடம் பேசுகிறார்கள். பிராமணிய எதிர்ப்புக்குப் பேர்போன தமிழ்நாட்டில் காந்தியைக் கொன்ற கோட்ஸே ஒரு பிராமணர் என்ற தகவல் என்ன மாதிரியான விளைவுகளை உண்டாக்குமோ என்ற கவலை எல்லோருக்குமே இருக்கிறது.

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பக்கத்திலுள்ள சன்னாநல்லூரில் திராவிடர் கழகக் கூட்டம். வழக்கம்போல பிராமணியத்தை வெளுத்து வாங்கும் ஒரு இளம் பேச்சாளர் காந்தி படுகொலைச் சம்பவத்தை நோக்கி நகர்கிறார். கோட்ஸே ஒரு பிராமணர் என்பதைச் சொல்லும் அவர், தமிழ் பிராமணர்களின் ஆதிக்கத்தோடு கோட்ஸேவின் மேலாதிக்கக் குணத்தைப் பொருத்த முற்படுகிறார். மேடையில் அமர்ந்திருக்கும் பெரியார் தன் கையிலுள்ள தடியைத் தட்டுகிறார். பெரியார் இப்படி தடியைத் தட்டினால், அது ஒரு சமிக்ஞை. அதற்கான அர்த்தம் திராவிடக் கழகத்தினருக்குத் தெரியும்: இந்தப் பேச்சு தவிர்க்கப்பட வேண்டியது, முடித்துக்கொள்!

பிரிட்டிஷ் முத்த அதிர்ச்சியிலிருந்தே தமிழனால் இன்னும் மீள முடியவில்லை - இளைய அப்துல்லாஹ் பேட்டி




பிரிட்டனில் தமிழர் வாழ்க்கை என்னவாக இருக்கிறது? பலருடன் உரையாடினேன் என்றாலும், ஒரு பேட்டி விசேஷமாக எனக்குத் தோன்றியது. கவிஞர், சிறுகதையாசிரியர், ஊடகவியலாளர் எனப் பன்முக ஆளுமையான இளைய அப்துல்லாஹ்வுடனான உரையாடல்தான் அது. முல்லைத்தீவில் பிறந்த ஸ்ரீபாலமுருகன் பின்னாளில் எப்படி இளைய அப்துல்லாஹ் ஆனார் என்ற அவருடைய இளமைக் கால இலங்கைக் கதையே ஒரு நாவலுக்கான களம். அவர் ஐரோப்பா வந்து சேர்ந்தது, பிரிட்டனைத் தன்னுடைய நாடாக்கிக்கொண்டது, இங்கு தன்னை நிலைநிறுத்திக்கொள்ள இன்றளவும் அவர் பட்டுக்கொண்டிருக்கும் பாடுகள் யாவையும் அவர் வாய்வழி கேட்கும்போது சுவாரஸ்யமாக்கிவிடுவது அவருடைய கதையாடல் திறன் என்றாலும், முதுகுத்தண்டைச் சில்லிடவைக்கும் வலி மிகுந்தவை அவை. ‘லண்டன் உங்களை வரவேற்பதில்லை’ என்ற இவருடைய கட்டுரை நூல் பிரிட்டனின் இன்னொரு முகத்தைச் சொல்வது.

ஒருநாள் தொலைக்காட்சி அறிவிப்பாளர், மறுநாள் டாக்ஸி ஓட்டுநர்... வாழ்க்கை எப்படி இருக்கிறது?
பிரிட்டன் வந்து இருபது வருஷம் ஆகிறது. ஒரு கன்டெய்னரில் வந்து லண்டனில் இறங்கினேன். டெலிபோன் காட் விற்றேன். ஊருக்கு அப்போதெல்லாம் தொலைபேசி அட்டை மூலம்தான் போன் பேச முடியும். அதில் வாரத்துக்கு 200 பவுண்டு சம்பாதித்தேன். பிறகு, உருளைக்கிழங்கு ஆலையில் வேலை செய்தேன். அடுத்து, பெட்ரோல் நிலையம். பிறகு, ‘தீபம் தொலைக்காட்சி’. 12 வருஷங்களுக்குப் பிறகு ‘தீபம் தொலைக்காட்சி’யைப் புதிய நிறுவனம் ஒன்றுக்கு அதன் உரிமையாளர்கள் விற்றார்கள். அதற்குப் பிறகு வேலை நெருக்கடி ஏற்பட்டது. பழைய வேலையாட்களை நீக்கினார்கள். நான் விமான நிலையத்துக்கு ஆட்களை ஏற்றி இறக்கும் டாக்ஸி ஓட்ட ஆரம்பித்தேன். இப்போது ஐபிசி தொலைக்காட்சியில் வேலை பார்த்தபடி டாக்ஸியும் ஓட்டுகிறேன். இது நல்ல வித்தியாசமான அனுபவம். எவ்வளவோ கஷ்டங்களைப் பார்த்துவிட்டபடியால் இதில் கஷ்டம் ஏதும் தெரியவில்லை. உருளைக்கிழங்கு ஆலையில் இருந்தேனே, அங்கு எனக்கு என்ன வேலை தெரியுமா? இயந்திரத்திலிருந்து தோல் உரித்து வரும் உருளைக்கிழங்கில் இருக்கும் கறுப்புப் புள்ளிகளை அகற்றும் வேலை. சின்ன கூரான கத்தி கொடுப்பார்கள். கத்தி கையில் வெட்டும். ரத்தம் கொட்டும். கை குளிர் தண்ணீரில் எரியும். கிழங்குகளை வெட்ட வேண்டும். வெட்டி வெட்டி கைகள் குளிரில் விறைத்துப்போகும். அந்த வட இந்திய முதலாளி பதினைந்து வினாடிகள்கூடச் சும்மா இருக்க விடமாட்டார். ஒரு மணி நேரத்துக்கு இரண்டு பவுண்டுதான் சம்பளம். நான் வேலைக்குப் புதிது என்பதால், இந்த நாட்டின் குறைந்தபட்சக் கூலிச் சட்டவுரிமை இதெல்லாம் எதுவும் அப்போது தெரியாது. அந்த வேலையோடு ஒப்பிட இதுவெல்லாம் ஒன்றுமே இல்லை. ஒரு எழுத்தாளனால் சும்மா இருக்க இயலாது. இந்த அனுபவங்கள் எல்லாம் அதற்கு நன்றாகவே தீனி போடுகின்றன. அனுபவங்களைச் சொல்ல இந்தப் பேட்டியில் இடம்போதாது. அனலைத்தீவுக் கடலில் மீன் பிடித்திருக்கிறேன், மாத்தளையில் பாமஸி வேலை, உடுப்பிட்டியில் தச்சு வேலை, வல்வெட்டித்துறையில் கொத்து வேலை, ‘சிந்தாமணி’ பத்திரிகையில் எழுத்து வேலை, இலங்கை வானொலியில் நிகழ்ச்சி வேலை… இந்த இடத்துக்கு வந்து சேர எவ்வளவு நீண்ட பயணம்… அப்பாடா!

ஏன் ஒரு அரசு மக்களுக்குப் பொது வீடுகளைக் கட்டித்தர வேண்டும்?



பாரோ சந்தையின் கடைவீதி நடைபாதை ஓரத்தில் அமர்ந்திருந்த அந்த மூதாட்டியைப் பிடித்து இழுக்காத குறையாக போலீஸ்காரர் வண்டியில் ஏற்ற யத்தனித்துக்கொண்டிருந்தார். தேங்கி நின்றவனை ராஜ் இழுத்தார். முந்தைய நாள் இரவிலிருந்து ஒரு முழு நாளும் தொடர்ந்து பெய்துவந்த மழையை வழமையான மழையோடு ஒப்பிட முடியவில்லை. குளிரின் கடுமையைக் கன்னாபின்னாவென்று மழை கூட்டியிருந்தது. குளிர் எனக்குப் பிடித்தமானது. இந்தக் குளிர் அந்தக் குளிர் அல்ல. கொலைக் குளிர். கதகதப்புக்காக அணிந்திருந்த எல்லா உடைகளையும் ஊடுருவி உடலைப் பிளப்பதுபோல நிலைகுத்தி நின்றது அது. விரலெல்லாம் தெறித்துவிடும்போல் வலித்தது.

பிரிட்டன் வந்தது முதலாகக் குளிரைக் கவனிக்கலாயிருந்தேன். இங்கே அது தனி உருவம் எடுத்திருந்தது. அச்சுறுத்தியது. பிரம்மாண்டமான கட்டமைப்புகளைப் பார்க்கும்போதெல்லாம், இருட்டில் பனிப்பொழிவால் மூடப்பட்ட கோபுரங்களின் சுதைச் சிற்பங்களின் நடுவே நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ஒட்டிக்கொண்டு தொங்கியபடி ஓலமிடுவது போன்று இருந்தது. பனி அவர்களை மூடிவிட்டிருக்க அவர்கள் மெல்ல ஊர்ந்தார்கள்.

காவிரிப் படுகையிலிருந்து வந்த எனக்கு, மழை நாட்களில் ஏழைகள் படும் துயரம் தெரியும். நாற்புறமும் சின்ன களிமண் சுவர்கள், மேலே தென்னங்கீற்றுக் கூரை என்று எளிமையாகச் சுருங்கிவிடும் நம்மூர் குடிசைகள் ஒரு மறைப்பை ஏற்படுத்தித் தருவதையன்றி ‘வீடு’ என்று சொல்வதற்கான எந்த வரையறைக்குள்ளும் அடங்காதவை. வெயில் காலத்தில்கூட சமாளித்துவிடலாம். மழைக் காலத்தில் எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற ஆயத்தத்துடனேயே இருக்க வேண்டும். மழைத் தண்ணீரோடு சேர்ந்து வீட்டினுள் பாம்புகள் நுழையும். சூறைக்காற்றில் கூரை பறந்துபோகும். பெருவெள்ளம் வீட்டையே அடித்துச்செல்லும்.

கடலூர் அருகேயுள்ள விசூரில், திடீரென வீட்டுக்குள் புகுந்த வெள்ளம் அடுப்படியில் தீபாவளிக்கு முறுக்கு சுட்டுக்கொண்டிருந்த அம்மாவையும் அக்காவையும் கண் முன்னே வாரிச் சுருட்டிச்சென்று ஒரு புதைகுழிக்குள் கொண்டுதள்ள, இருவரையும் பறிகொடுத்து பிரமை பிடித்தவனாக முகாமில் அரற்றிக்கொண்டிருந்த பள்ளி மாணவன் மணிவேல் கண் முன்னே வந்துசென்றான்.

ஏழைகள் எங்கும் ஏழைகள்தான். பிரிட்டனில் கூடுதல் கொடுமை குளிர். டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மூன்று மாதங்களிலும் குளிரில் ஏராளமான ஏழைகள் செத்துப்போகிறார்கள். இந்த ஆண்டு மார்ச் மாதமும் சேர்ந்துகொண்டிருந்தது. “நீங்கள் வந்திருக்கும் நேரமோ என்னவோ, பிரிட்டன் வரலாற்றிலேயே குளிர்மிக்க மாதம் என்று இந்த மார்ச்சைச் சொல்கிறார்கள்” என்றார் ராஜ். வெறுமையாக அவரைப் பார்த்தேன்.

“பிரிட்டனில் குளிரை எப்படிச் சமாளிக்கிறீர்கள்?”

“கஷ்டம். குளிர்காலத்தில் பகலிலேயே அதிகபட்சம் 15டிகிரி வெப்பநிலைதான் இருக்கும். இரவுகளில் சமயத்தில் -10 டிகிரி வரைகூட கீழே செல்லும். அதுவும் வட இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்தின் மலைப்பகுதிகளில் இன்னும் மோசம். நம்மூரில் எப்படி வெயில் காலத்தில் ஏசி இயந்திரத்தைப் பயன்படுத்துகிறோமோ, அப்படி இங்கே குளிர்காலத்தில் ஹீட்டர் பயன்படுத்துவார்கள். ஏசி இல்லாமல்கூட வாழ்ந்துவிடலாம்; ஹீட்டர் இல்லாமல் வாழ முடியாது. குளிர்காலத்தில் வீட்டைப் போதுமான அளவுக்கு கதகதப்புக்குக் கொண்டுவர வசதியில்லாமலேயே வருடத்துக்கு மூவாயிரம் பேர் இங்கே சாகிறார்கள்.”

“குளிர் என்று சாவுக்கு இயற்கையை நாம் காரணமாக்கினாலும், வறுமைதான் உண்மையான காரணம், மக்களைப் பாதுகாக்காத ஆட்சியாளர்கள்தான் உண்மையான குற்றவாளிகள் இல்லையா?”

“ஆமாம். ஆனால், வறுமையால் குடிமக்கள் சாகக் கூடாது என்ற சூழலை உருவாக்க ஆட்சியாளர்கள் ஓரளவுக்கு இங்கே திட்டமிட்டுத் தொடர்ந்து பணியாற்றுகிறார்கள். ஐம்பதாண்டுகளுக்கு முன்பு எதன் பொருட்டெல்லாம் பிரிட்டனில் மக்கள் அதிகம் இறந்தார்களோ, அவை அத்தனைக்கும் எதிரான செயல்திட்டங்களைக் கொண்டுவந்து, மரணங்களை வெகுவாகக் குறைத்திருக்கிறார்கள். குளிருக்கு லட்சம் பேர் செத்த காலமும் இங்கே இருந்திருக்கிறது. இன்று எண்ணிக்கை குறைந்திருக்கிறது. தொழிற்சாலைக் கடுஞ்சூழல், சாலை விபத்துகள், புகை மாசு இப்படி அதிகமான மரணங்களை உண்டாக்கிய எல்லா விஷயங்களிலும் நிலைமையை மாற்றியமைத்திருக்கிறார்கள். பிரிட்டனின் அரசு வீடு - கவுன்சில் ஹவுஸ் தொடர்பில் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்தானே?”

“ஓ… ராஜ், நானே அதுபற்றி உங்களிடம் கேட்கவிருந்தேன்.”

விரியும் நகரங்களில் பெருகும் மக்கள்தொகைக்கேற்ப வீட்டு வசதியை உண்டாக்குவதற்கான பிரிட்டனின் முயற்சி இந்தப் பொது வீடுகள். அரசே வீடுகளைக் கட்டிவிடும். அவரவர் வருமானப் பிரிவுக்கேற்ப குறைந்த வாடகையில் இந்த வீடுகளை மக்களுக்கு வழங்கும். குறிப்பிட்ட காலகட்டத்துக்குப் பின்னர் இந்த வீடுகளை வாடகைதாரர்கள் வாங்கிக்கொள்ளலாம். அப்படி வீட்டை வாங்குபவர்களுக்கு, வீட்டின் மதிப்பில் ஒரு கணிசமான தொகையை அரசு மானியமாகவும் தருகிறது.