நாம் அறிந்திருக்கும் இலங்கையைவிட, தமிழகக் கடலோடிகள் அறிந்திருக்கும் இலங்கை நெருக்கமானது. பல்லாண்டு காலமாக அவர்கள் இலங்கையோடு நெருக்கமாக இருந்திருக்கிறார்கள். பன்னெடுங்காலமாக, இரு பக்கக் கடலோடிகளுக்குமே பக்கத்து நாடு ஒரு நாடாக இல்லை; பக்கத்து ஊராக இருந்திருக்கிறது, தொலைவில் மட்டும் அல்ல; கலாச்சார உறவிலும்.
“எங்க முன்னோருங்க சொல்லுறது இது. பல ஆயிர வருஷங் களுக்கு முன்ன இந்த நெலப்பரப்பு முழுக்க ஒண்ணாதாம் இருந்திருக்கு. அப்புறம் கடக்கோளுல ஒடைஞ்சு இலங்கை தனியாவும் இந்தியா தனியாவும் ஆயிருக்கு. எடயில உள்ள சனம் முழுக்க கடல்ல போயிருக்கு. என்னைக்கா இருந்தாலும், தாயா புள்ளையா இருந்தவங்க நம்மல்லாம்பாங்க.”
- இது நாகப்பட்டினத்தில் கேட்டது.
“இங்கெ உள்ள தெதல், ஓட்டுமா, வட்டளாப்பம், பனை ஒடியக்கூழ் இப்பிடிப் பல சாப்பாட்டு அயிட்டங்கள் இலங்கையிலேர்ந்து இங்கெ வந்து ஒட்டிக்கிட்டதுதாம். அந்தக் காலத்துல ரெண்டு பேருல யார் பெரிய ஆளுன்னு நிரூபிக்க வுட்ற சவால்ல ஒண்ணு, மன்னார் ஓட்டம். தனுஷ்கோடிலேந்து தலைமன்னார் வரைக்கும் நீந்திப் போய்ட்டு வரணும். அந்தத் தலமுறையில கடைசி மனுஷன் நீச்சல் காளி. சில வருஷங்களுக்கு முன்னாடிதான் காலமானாரு. இங்கெ உள்ளவங்களுக்கு அங்கெ ஒரு வூடு இருக்கும், அங்கெ உள்ளவங்களுக்கு இங்கெ ஒரு வூடு இருக்கும். சும்மா வந்து ஒரு வாரம் தங்கி சினிமா பாத்துட்டுப் போற வழக்கமெல்லாம் இருந்துச்சு.”
- இது ராமேசுவரத்தில் கேட்டது.
“கடல் வியாபாரத்துல எப்பவுமே நமக்குத் தனி மரியாத அங்கெ இருக்கும். நம்மூர்லேந்து போற எதுவும் தரமா இருக்கும்ண்டு நம்புவாங்க. அவங்க ஊரு சாமானையேகூடக் கேலி பேசுவாங்க. கொழும்பு மக்களோட உபசரிப்ப வேற எந்த ஊரோடயும் ஒப்பிட முடியாது.”
- இது காயல்பட்டினத்தில் கேட்டது.
“அந்தக் காலத்துல கொழும்புன்னாலே நம்ம கடக்கரயில தனி மவுசு. அது எப்படின்னா, கொஞ்சம் வசதி ஏறிப்போச்சுன்னா, ‘என் பரம்பரயெல்லாம் குடிக்கிற தண்ணியக்கூட வள்ளத்துல கொழும்புலேந்து எடுத்தாந்து குடிச்ச பரம்பரயிடா’ன்னு பேசுவாங்க பாத்தீயளா, அப்பிடி.”
- இது குமரியில் கேட்டது.
இவையெல்லாம் அந்தக் காலத்தைப் பற்றிய குரல்கள். இன்றைய நிலவரம் என்ன?
“படகுல ஏறும்போது ஆழிய நெனச்சுக் கடலம்மாவ வணங்குற நாளெல்லாம் போச்சுங்க. ‘அம்மா... தாயீ... சிலோன் நேவிக்காரன் கண்ணுல படாமக் காப்பாத்து தாயி’ன்னு வேண்டிக்கிட்டுதாம் ஏறுறோம்.”
- இது வேதாரண்யத்தில் கேட்டது.
“கண்ணுல பட்ட வாக்குல தொரத்திச் சுத்தி வளைப்பாங்க. கையத் தூக்கச் சொல்லுவாங்க. அந்தப் படகுலேந்து ஒருத்தம் இந்தப் படகுக்கு வருவாம். தேவைப்பட்ட மீனுங்களை எடுத்துப்பாம். மிச்ச சொச்ச மீனுங்கள அப்பிடியே கடல்ல வாரி வீசி எறிவான். வலய அறுத்துடுவாம். கண்ணுல பட்டது எல்லாத்துக்கும் இதுதாம் கதி. எல்லாத்தயும் தூக்கி எறிஞ்சதுக்கு அப்புறம் எங்கள அப்படியே முட்டிப்போடச் சொல்லுவாம். பொரடியிலயே கையில கெடக்கிறத வெச்சு இருக்குவாம். தலையில, பொரடியில, முதுவுல. நாங்க தலய தொங்கப்போட்டுக்கிட்டே இருக்கணும். தல நிமிந்தா மூஞ்சிலயே அடிப்பாம். கீழ தடுமாறி வுழுந்தா, மூஞ்சிலயே பூட்சு காலால மிதிப்பாம். மூஞ்சிலயே துப்புவாம். இஸ்டத்துக்கு அடிச்சுட்டு, படகையும் நாசம் பண்ணிட்டு, அவம் பாட்டுக்குப் போய்க்கிட்டே இருப்பாம்.”
- இது கோட்டைப்பட்டினத்தில் கேட்டது.
“கண்ட வாக்குல சுடுவாங்க. படகைச் சுத்திச் சுடுவாங்க. ஈரக்கொலையெல்லாம் நடுங்கும். ஒரேயொருத்தம் உள்ள வருவான். ‘ஏய், நீ அந்தக் கம்பியக் கையில எடு... நீ, இந்தக் கட்டயக் கையில எடு... ஒருத்தனுக்கொருத்தன் மாத்தி மாத்தி அடிச்சுக்குங்கடா’ம்பாம். ‘மூஞ்சில மாறி மாறித் துப்பிக்கிங்க’ம்பாம். ஏய்க்க முடியாது. ‘உனக்கு அடிக்கத் தெரியாதாடா? அடின்னா இப்பிடி அடிக்கணும்’னு ஓங்கி ஓங்கி அறைவான். இதுக்குப் பயந்துக்கிட்டே இப்பம்லாம் அவங்க வர்றது கண்ணுல பட்டாலே படகுல இருக்குற எல்லாத்தையும் நாங்களே கடல்ல வீசியெறிஞ்சுர்றது. அப்பம்லாம் எங்க வேண்டுதல ஒண்ணே ஒண்ணுதாம். ‘ஆத்தா... எங்களை அடிச்சித் துவைக்கட்டும், அப்பிடியே புடிச்சிக்கிட்டுப் போயி ஜெயிலுக்குள்ள அடைக்கட்டும், என்னா சித்திரவதை வேணும்னா செய்யட்டும், சுட்டுடணும்கிற எண்ணம் மட்டும் அவனுக்கு வந்துராமப் பாத்துக்கம்மா’ன்னு வேண்டிக்குவோம்.”
- இது ராமேசுவரத்தில் கேட்ட குரல்.
“இப்பிடித்தாம் சுடுவான்லாம் இல்லீங்க. பதினெட்டு வருசத்துக்கு முன்னாடி இங்கேருந்து போன சூசைராஜோட படகை எப்படி அடிச்சாங்க தெரியுமா? ஹெலிகாப்டர்ல பறந்து சுட்டான். ஆறு உசுரு. போச்சு. நாலு வாரம் தேடித் திரிஞ்சோம் பொணம்கூடக் கிடைக்காம. பொஞ்சாதி புள்ளைங்க பரிதவிச்சு நிக்குது. பார்க்கச் சகிக்க முடியாமத் திரும்பத் திரும்ப ஓடுறோம். கொடும. கேவலம் பொழப்புக்கு மீன் புடிக்கப்போயி, அந்நிய நாட்டுப் படைக்காரனால சாவுறதைவிட இந்த நாட்டுல கொடும, அந்தப் பொணத்தைக் கொண்டாந்து அடையாளம் காட்டுனாத்தான் அரசாங்க இழப்பீடு கெடைக்கும். இல்லாட்டி ஏழு வருசம் வரைக்கும் இழப்பீடு வாங்கக் காத்துக் கெடக்கணும். பொணத்தை மீட்டோம். அழிஞ்சு செதைஞ்ச அந்தப் பிண்டங்களப் பாத்து வூட்டுல உள்ளவங்க கதறுனது இருக்கே... நாங்க கட்டையில போறவரைக்கும் மறக்காதுங்க...”
- இது பாம்பனில் கேட்டது.
இரு நாட்டு மக்களிடையே இருந்த அழகான ஓர் உறவு எப்படி நாசமானது? 1984-ல் முனியசாமியில் தொடங்கி இலங்கை ராணுவத்தால், இதுவரை சுடப்பட்டிருக்கும் கடலோடிகள் எத்தனை பேர்? அவர்களுடைய விதவைகள் எப்படி உயிர் பிழைக்கிறார்கள்? அவர்களுடைய குழந்தைகளெல்லாம் எப்படி இருக்கின்றனர்? உலகின் மிகப் பெரிய நாடுகளில் ஒன்றின் கடலோடிகளை, ஆசியாவின் மிகப் பெரிய சக்திகளில் ஒன்றின் குடிமக்கள் இப்படிக் கொல்லப்பட்டக் காரணம் என்ன? இதன் பின்னணியில் இருக்கும் ராஜாங்க சங்கதிகள் என்னென்ன?