காவிரி தீர்ப்பு இந்தியாவெங்கும் உருவாக்கப்போகும் சேதம் என்ன?


ஊரில் ‘ஆனது ஆகட்டும், கிழவியைத் தூக்கி மணையிலே வை’ என்று ஒரு சொலவடை உண்டு. அரை நூற்றாண்டு அலைக்கழிப்பின் தொடர்ச்சியாக காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை இந்நாட்டின் ஊடகங்களும் கருத்தாளர்களும் பெரும்பான்மை அரசியல் கட்சிகளும் அணுகும் விதத்தைப் பார்க்கையில், ஒரு வார காலமாக இந்தச் சொலவடைதான் திரும்பத் திரும்ப மனதில் ஓடுகிறது. ‘ஏதோ ஒருவிதத்தில் இது முடிவுக்கு வந்துவிட்டால் சரி’ என்ற நினைப்பு பலரிடத்திலும் உருவாகிவிட்டிருப்பதை உணர முடிகிறது. ஆனால், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பானது ஒரு விவகாரத்தின் முடிவாக அல்ல; எண்ணற்ற விவகாரங்களின் தொடக்கமாகவே தோன்றுகிறது.

எந்த ஒரு நதியின் நீரும் அது பாயும் எல்லாப் பகுதிகளுக்கும் உரிய வகையில் பங்களிக்கப்பட வேண்டும். காவிரி நீர்ப் பங்கீடு தொடர்பான ஆரம்ப கால ஒப்பந்தங்கள், கர்நாடக விவசாயிகளின் சமகாலத் தேவைகளைக் கருத்தில் கொள்ளவில்லை என்றால், மாறியிருக்கும் காலச் சூழலுக்கேற்ப உரிய நியாயம் செய்யப்பட வேண்டும் என்றே நான் கருதுகிறேன். எல்லா உயிர்களும் ஓர் உயிரே, எல்லா விவசாயிகளும் ஓர் நிறையே!

காவிரி நடுவர் மன்றம் தமிழ்நாட்டின் பங்காக ஒதுக்கிய 192 டிஎம்சி தண்ணீரை 177.5 டிஎம்சி ஆக இந்தத் தீர்ப்பில் குறைத் திருக்கிறது உச்ச நீதிமன்றம். இதனால், தமிழ்நாடு தன்னு டைய பங்கில் மேலும் 14.5 டிஎம்சி தண்ணீரை இழந்திருக்கிறது. ஒரு டிஎம்சி தண்ணீர் என்பது 100 கோடி கன அடி தண்ணீரைக் குறிக்கும். விவசாயிகளின் கணக்கில், ஒரு டிஎம்சி தண்ணீர் என்பது கிட்டத்தட்ட 7,000 ஏக்கர் நெல் பாசனத்தைக் குறிக்கும். அதாவது, நம்மூரில் 1,00,000 ஏக்கர் நிலம் இனி தரிசாகிவிடும். குறைந்தபட்சம் 50 லட்சம் வேலைநாட்களை, விவசாயிகளின் வேலைவாய்ப்புகளை இது காலியாக்கிவிடும்.

போகட்டும். இந்தப் பக்கம் தமிழக விவசாயிகளுக்கு இழப்பாகும் நீரும் பலன்களும், அந்தப் பக்கம் கர்நாடக விவசாயி களுக்கு வரவாகும் என்றால், அது கர்நாடக விவசாயிகள் இதுநாள் வரை கோரிவந்த நியாயத்துக்கான ஈடாக அமையும் என்றால், எல்லா வலிகளைத் தாண்டியும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கலாம். ஆனால், அந்தத் தண்ணீர் யாருக்குச் செல்லவிருக்கிறது? “பெங்களூரு மாநகரத்தின் குடிநீர்த் தட்டுப்பாடு அதிகரித்திருப்பதையும், தொழிற்சாலைகளுக்கான நீர்த் தேவை அதிகரித்திருப்பதையும் கருத்தில் கொண்டே கர்நாடகத்துக்கான தண்ணீர் ஒதுக்கீட்டை அதிகரித்திருக்கிறோம்” என்கிறது உச்ச நீதிமன்றம். சிக்கல் இங்கே பிறக்கிறது!

ஜெயலலிதா புன்னகைக்கிறார்... இந்திய ஜனநாயகத்துக்கு நல்லதுதான்!


இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன். ஜெயலலிதாவை எப்போதுமே முக்கியமானவராகக் கருதிவந்திருக்கிறேன். வாழ்ந்த காலம் நெடுகிலும் இந்நாட்டின் அமைப்பு எவ்வளவு ஓட்டைகள் நிரம்பியது என்பதை நமக்குத் தொடர்ந்து உணர்த்திவந்தவர் அவர். முக்கியமாக, நம்முடைய நீதி பரிபாலனத்தின் முன் எல்லோரும் சமம் என்கிற மாயையைப் பகிரங்கமாக உடைத்துக் காட்டியவர்.

வழக்குகள் இடையே வாழ்ந்தவர் ஜெயலலிதா. வருமானத்துக்கு மீறிய சொத்துக்குவிப்பு வழக்கு மட்டுமே நெடுங்காலம் அவரால் கடக்க முடியாததாக இருந்தது. அதையும் மரணத்தால் ஜெயித்தார். 18 ஆண்டுகள். 14 நீதிபதிகள். வாய்தாக்களால் நீதிமன்றத்துக்கு அவர் தண்ணீர் காட்டியபோது ஒருகட்டத்தில் நீதிபதி பச்சாபுரே வெறுத்துப்போய் கதறியது இன்னும் நினைவில் இருக்கிறது, “ஆறு மாத காலமாக விசாரணையே நடக்கவில்லை. விசாரணைக்கு ஜெயலலிதா தரப்பு ஒத்துழைப்பு தருவதே இல்லை. ஒவ்வொரு நாளும் நான் தனியாக வந்து நீதிமன்றத்தில் உட்கார்ந்து செல்கிறேன். தனிமைச் சிறையில் இருப்பதுபோல உணர்கிறேன்!’’