தொலைக்காட்சியில் அந்தச் செய்தி ஓடியபோது, பக்கத்தில் பிள்ளைகள் உட்கார்ந்திருந்தார்கள். என்ன நினைத்தானோ சின்னவன் அவன் உட்கார்ந்திருந்த நாற்காலியிலிருந்து எழுந்து ஓடிவந்தான். அப்படியே காலில் சாய்ந்தவன் முகத்தை மடியில் புதைந்துகொண்டான். வீடு அப்படியே உறைந்துபோன மாதிரி இருந்தது. மனம் பதைபதைத்துக்கொண்டே இருந்தது. யாராலும் பேச முடியவில்லை.
தமிழ்நாட்டில் கடந்த மூன்று வருஷங்களில் மட்டும் 80-க்கும் மேற்பட்ட சாதி ஆணவக் கொலைகள் நடந்திருப்பதாகச் சொல்கிறார்கள் மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள். பெண்களை உடைமைகளாகப் பார்க்கும் மனோபாவம் கற்காலத்திலிருந்தே தொடர்வது என்றாலும், சாதியை மீறித் திருமணம் செய்துகொள்ளும் அத்தனை பேர் மீதும் சாதிய திமிர் பாய்ந்துவிடவில்லை; இடம் பார்த்தே பாய்கிறது. பொதுவில் சாதி ஆணவக் கொலைகள் என்று உச்சரிக்கப்பட்டாலும், இப்படிக் கொல்லப்படுபவர்களில் பெரும்பாலானவர்கள் தலித்துகள்.
ஒவ்வொரு கொலையும் கொடூரமானது என்றாலும் உடுமலைச் சம்பவம் இவ்வளவு உக்கிரமாக நம்மைத் தாக்கக் காரணம் அந்த வீடியோ. அது ரத்தமும் சதையுமாக வெளிப்படுத்தும் உண்மை. நம்மில் பலர் வெறும் சொல்லாக அல்லது பெருமிதமாக மட்டுமே பயன்படுத்தும் சாதியின் அசலான குரூர முகம்.
நகரத்தில், ஊர்க் கடைவீதியில் பட்டப்பகலில் பலர் முன்னிலையில் அந்தக் கொலை சாவதானமாக நடக்கிறது. கடைக்குச் செல்லும் இளம் தம்பதியை மூன்று பேர் கொண்ட ஒரு குழு பின்தொடர்ந்து நடக்கிறது. இரு மோட்டார் சைக்கிள்களில் வந்து சேரும் இருவர் அவர்கள் அருகே வண்டியை நிறுத்துகின்றனர். தம்பதியை நோக்கி கும்பல் நகர்கிறது. கணவன் - மனைவி இருவரையும் சரமாரியாக வெட்டுகின்றனர். பின், சாவதானமாக மோட்டார் சைக்கிளை எடுக்கிறார்கள். சாவதானமாகச் செல்கிறார்கள்.
கொலை நடந்த இடத்தில் சுற்றி நின்று பார்த்துக்கொண்டிருந்த மக்களின் கையறு நிலை, நடந்துகொண்டிருந்த கொலை, துடித்துக் கொண்டிருந்த உயிர்கள்… இவை எல்லாவற்றையும் விட, பயங்கரமானது கொலையாளிகளின் சாவதானம். அவர்களுடைய திமிர். அவர்களுடைய அமைதி… எங்கிருந்து கிடைக்கிறது கொலையாளிகளுக்கு இவ்வளவு துணிச்சல்? சம்பவம் நடந்து இரு நாட்களாகியும் இன்னும் இந்தச் சம்பவம் தொடர்பாக ஒரு வார்த்தையைக்கூட உதிர்க்காத முதல்வர், பிரதான எதிர்க்கட்சித் தலைவர்களிடமிருந்து வெளிப்படும் அசாத்தியமான அமைதியையும் கொலையாளிகளிடமிருந்து வெளிப்பட்ட அமைதியையும் பிரித்துப் பார்க்க முடியவில்லை.

