நரேந்திர மோடி அரசு பொறுப்பேற்றதிலிருந்து ஆக்கபூர்வமான சமிக்ஞைகள் அதிகம் வெளியான இடம் ‘நிதி ஆயோக்’ தொடர்பான கூட்டங்கள். சுதந்திர இந்தியாவின் வளர்ச்சியோடு பிரித்துப் பார்க்க முடியாதது திட்டக் குழுவின் பங்களிப்பு என்றாலும், அது ஒரு உளுத்துப்போன அமைப்பாகவே ஆகிவிட்டது. மாநிலங்களின் சுயமரியாதைக்கும் உரிமைகளுக்கும் எப்போதும் அது சவாலாக இருந்தது. பிற்காலத்தில் அரசியல்மயமான பின் மாநிலங்களை மேலும் அவமதித்தது. (மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநிலத்தின் முதல்வரை, நிதிக்காக ஒரு நியமன அதிகாரியின் முன் உட்காரவைப்பது எவ்வளவு மோசமான நடைமுறை!)
சிக்கலின் அடிப்படை எங்கே? நம்முடைய முதல்வர்களுக்கே தங்கள் பதவியின் உண்மையான மதிப்பு தெரிவதில்லை, அல்லது அற்பமான அரசியல் ஆட்டங்களைத் தாண்டி அவர்களுடைய பராக்கிரமங்கள் டெல்லியின் எல்லையைத் தொட்டதும் மாயமாகிவிடுகின்றன. பரப்பளவின்படி பார்த்தால், காங்கோவுக்கு இணையானது ராஜஸ்தான், இத்தாலிக்கு இணையானது மகாராஷ்டிரம். மக்கள்தொகை கணக்கின்படி பார்த்தால், கிட்டத்தட்ட பிரேசிலுக்கு இணையானது உத்தரப் பிரதேசம், பிரான்ஸைவிடப் பெரியது தமிழகம். சுதந்திர இந்தியாவின் 67 ஆண்டு வரலாறு நமக்குச் சொல்லும் உண்மை, நீங்களோ நானோ இதுவரையில் பெற்றிருக்கும் பெரும்பான்மை நலன்களுக்கும்/ தீமைகளுக்கும் காரணம் மாநில அரசுகளும் முதல்வர்களுமே; மத்திய அரசோ பிரதமரோ அல்ல. உண்மையான இந்தியா மாநிலங்களால்தான் ஆளப்படுகிறது. ஆனால், எத்தனை முதல்வர்கள் இதை உணர்ந்திருக்கிறார்கள்? ஆண்டுதோறும் மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு நடக்கும் சமயத்தில் மட்டும் மெல்ல முனகல்கள் கேட்கும். அந்தோ பரிதாபம், அதுவும் நிதி ஒதுக்கீட்டில் பற்றாக்குறைப் புலம்பலோடு முடிந்துபோகும்.

