விவசாயிகள் தற்கொலையா, படுகொலையா?


முக்கால் மணி நேரத்துக்கு ஒரு விவசாயி உயிரை மாய்த்துக்கொள்ளும் இந்த நாட்டில், ஒரு விவசாயியின் தற்கொலையால் நாடாளுமன்றம் முடக்கப்படுவது அசாதாரண நிகழ்வுதான். காண்டாமிருகத் தோலைவிடக் கடினமான, கருணைக்கோ, சொரணைக்கோ இடமே இல்லாததாகிவிட்ட இந்திய அரசியல் வர்க்கத்தின் இதயத்தைக் கொஞ்சமேனும் சுரண்டியிருக்கிறது ஒரு மரணம். விபத்துகளால் உருவாகும் வரலாற்றின் போக்கை திசை மாற்றும் சக்தி சில தற்கொலைகளுக்கு உண்டு. கஜேந்திர சிங்கின் ஆன்மா சாந்தி அடையட்டும்!

நாம் ஏன் மர்மங்களினூடே நேதாஜியைப் பார்க்கிறோம்?


சுபாஷ் சந்திர போஸ் மரணம் தொடர்பான கோப்புகளை இந்தியா பகிரங்கப்படுத்துகிறதோ இல்லையோ, கூடிய சீக்கிரம் உக்ரைன் மூலம் ரகசியம் வெளியே வந்துவிடும் என்று சொன்னார் ஒரு நண்பர். சோவியத் ஒன்றிய காலத்திய 8 லட்சத்துக்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்களைப் பொதுப் பார்வைக்கு வெளியிடுவது என்று உக்ரைன் அரசு சமீபத்தில் முடிவெடுத்தது. ‘சுபாஷ் விமான விபத்தில் இறக்கவில்லை; அவர் ஸ்டாலின் காலத்தில் யாகுட்ஸ்க் சிறையில் அடைக்கப் பட்டிருந்தார்’ என்று நம்புபவர்களில் ஒருவர் அவர்.  ஸ்டாலின் அரசால் சுபாஷ் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சுப்பிரமணியன் சுவாமிபோலச் சந்தேகிப்பவர். ஆகையால், உக்ரைன் அரசு வெளியிடும் ஆவணங்களில் சுபாஷைப் பற்றிய குறிப்புகளும் வெளியே வரும் என்பது அவர் கணிப்பு.

இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றிய பெரியவர் ஒருவரிடம் சின்ன வயதில் சுபாஷின் மரணம்பற்றிப் பேசப்போய் அறை வாங்கியது நினைக்குவருகிறது. ஓங்கி அறைந்துவிட்டுத் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தார் அந்தப் பெரியவர். சுபாஷ் இறந்துவிட்டார் என்பது இந்தியாவில் பலரால் ஏற்றுக்கொள்ள முடியாதது. கடந்த ஆண்டு கொல்கத்தா போனபோது, சுபாஷ் நினைவு இல்லத்தில் வங்காளிகள் சிலருடன் பேசிக்கொண்டிருந்தேன். இன்னமும் துர்கா பூஜையின்போது சுபாஷ் திரும்புவார் எனும் நம்பிக்கை அங்கு செத்துவிடவில்லை. ஒருவேளை சுபாஷ் இப்போது திரும்பினால் அவருக்கு 118 வயதாகி இருக்கும்.

வரலாற்று வாய்ப்பு இது... சென்னையில் அல்ல; டெல்லியில் பேசுங்கள்!


ரேந்திர மோடி அரசு பொறுப்பேற்றதிலிருந்து ஆக்கபூர்வமான சமிக்ஞைகள் அதிகம் வெளியான இடம் ‘நிதி ஆயோக்’ தொடர்பான கூட்டங்கள். சுதந்திர இந்தியாவின் வளர்ச்சியோடு பிரித்துப் பார்க்க முடியாதது திட்டக் குழுவின் பங்களிப்பு என்றாலும், அது ஒரு உளுத்துப்போன அமைப்பாகவே ஆகிவிட்டது. மாநிலங்களின் சுயமரியாதைக்கும் உரிமைகளுக்கும் எப்போதும் அது சவாலாக இருந்தது. பிற்காலத்தில் அரசியல்மயமான பின் மாநிலங்களை மேலும் அவமதித்தது. (மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநிலத்தின் முதல்வரை, நிதிக்காக ஒரு நியமன அதிகாரியின் முன் உட்காரவைப்பது எவ்வளவு மோசமான நடைமுறை!)

சிக்கலின் அடிப்படை எங்கே? நம்முடைய முதல்வர்களுக்கே தங்கள் பதவியின் உண்மையான மதிப்பு தெரிவதில்லை, அல்லது அற்பமான அரசியல் ஆட்டங்களைத் தாண்டி அவர்களுடைய பராக்கிரமங்கள் டெல்லியின் எல்லையைத் தொட்டதும் மாயமாகிவிடுகின்றன. பரப்பளவின்படி பார்த்தால், காங்கோவுக்கு இணையானது ராஜஸ்தான், இத்தாலிக்கு இணையானது மகாராஷ்டிரம். மக்கள்தொகை கணக்கின்படி பார்த்தால், கிட்டத்தட்ட பிரேசிலுக்கு இணையானது உத்தரப் பிரதேசம், பிரான்ஸைவிடப் பெரியது தமிழகம். சுதந்திர இந்தியாவின் 67 ஆண்டு வரலாறு நமக்குச் சொல்லும் உண்மை, நீங்களோ நானோ இதுவரையில் பெற்றிருக்கும் பெரும்பான்மை நலன்களுக்கும்/ தீமைகளுக்கும் காரணம் மாநில அரசுகளும் முதல்வர்களுமே; மத்திய அரசோ பிரதமரோ அல்ல. உண்மையான இந்தியா மாநிலங்களால்தான் ஆளப்படுகிறது. ஆனால், எத்தனை முதல்வர்கள் இதை உணர்ந்திருக்கிறார்கள்? ஆண்டுதோறும் மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு நடக்கும் சமயத்தில் மட்டும் மெல்ல முனகல்கள் கேட்கும். அந்தோ பரிதாபம், அதுவும் நிதி ஒதுக்கீட்டில் பற்றாக்குறைப் புலம்பலோடு முடிந்துபோகும்.