சத்தியமங்கலம் வனப் பகுதிக்குச் சென்றிருந்தேன். மலைக்கு மேலே ஓரளவுக்கு மேல் சென்றுவிட்டால், நாம் எதிர்கொள்ளும் இந்தியாவில் பெரிய அளவில் மாநில வேறுபாடுகள் தெரிவதில்லை. நாடு முழுவதும் பழங்குடி மக்கள் பெருமளவில் ஒரே மாதிரியான துயரங்களையே எதிர்கொள்கிறார்கள். அவர்களுடன் பேசும்போது, தேர்தல் தொடர்பான அவர்களுடைய எண்ணப்போக்குகள் எப்படி இருக்கின்றன என்று தெரிந்துகொள்ள ஆர்வமாக இருந்தது. பலதும் பேசிக்கொண்டிருந்தபோது, பேச்சு அவர்களுடைய தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் தொடர்பாகச் சென்றது. ஆச்சரியமான விஷயம், நிறையப் பேர் திருப்தியாகப் பேசினார்கள்.
பவானிசாகர் சட்டமன்றத் தொகுதிக்கு உள்பட்ட பகுதி அது. காடு, மலை, பள்ளம் என்று பரப்பளவில் பரந்து விரிந்த மிகப் பெரிய தொகுதி. சட்டமன்ற உறுப்பினரைப் பார்க்க வேண்டும் என்றால், சாதாரணமாக 100 கி.மீ. பயணித்து வர வேண்டிய அளவுக்குத் தொலைவிலுள்ள கிராமங்களைக் கொண்டது. இப்போதைய சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.சுந்தரம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். மக்கள் அவரைப் பார்க்க வருவது சிரமம் என்பதால், மலையிலேயே ஒரு அலுவலகத்தைத் திறந்து, அவரே மக்களைப் பார்க்க வருகிறார் என்றார்கள்.
குன்றி மலைப் பகுதியில், சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து சாலையே இல்லாத காளிதிம்பம், இராமரணை, மாவநத்தம் உள்ளிட்ட பல கிராமங்களுக்குச் சாலை வசதியை உண்டாக்கித் தந்திருக்கிறார். காலங்காலமாக சாதிச் சான்றிதழுக்காகப் போராடிவந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்குச் சான்றிதழ்கள் வாங்கித் தந்திருக்கிறார். தொகுதியில் மூவாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பட்டா வாங்கிக் கொடுத்திருக்கிறார்; இருபதாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு முதியோர் ஓய்வூதியம் வாங்கிக் கொடுத்திருக்கிறார். முக்கியமான விஷயம், கை சுத்தம் என்றார்கள். மனைவி அஞ்சல் துறையில் வேலை செய்கிறாராம். சுந்தரத்தின் குடும்ப வாழ்க்கை மனைவியின் வருமானத்தில் ஓடுவது என்றார்கள். மீண்டும் இதே தொகுதியில் நிற்கிறார் சுந்தரம்.
இந்தத் தேர்தலில் நிறுத்தப்பட்டிருக்கும் வேட்பாளர்களில் நாம் கவனிக்க வேண்டிய ஒருவர் எம்.ஜெயசீலன். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் லால்குடியில் நிறுத்தப்பட்டிருப்பவர். பள்ளிவிடை கிராமத்தில் வெறும் 210 சதுர அடி அளவே உள்ள வீட்டில் தாய், மனைவி, இரு மகள்களும் வாழ்ந்துவரும் மனிதர். கட்சி தரும் சிறு தொகையில் வாழ்க்கையை ஓட்டிவந்த ஜெயசீலன், இவ்வளவு காலம் வங்கிக் கணக்குகூட இல்லாமல் இருந்திருக்கிறார். ஏராளமான மக்கள் போராட்டங்களில் பங்கெடுத்திருக்கும் ஜெயசீலன், எந்தப் பிரச்சினை என்றாலும் கூப்பிட்ட உடன் ஓடிவருபவர் என்கிறார்கள்.
சர்வமும் பணமயம் ஆகிவிட்ட இந்திய அரசியலில் இப்படியான வேட்பாளர்கள், மக்கள் பிரதிநிதிகளுக்கான சாத்தியங்களை கம்யூனிஸ்ட் கட்சிகளே பெருமளவில் மிச்சம் வைத்திருக்கின்றன. இடதுகளின் மக்கள் நலக் கூட்டணியில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பிலும் நிறுத்தப்பட்டிருக்கும் பல வேட்பாளர்கள் இப்படிக் கவனிக்கவைக்கிறார்கள். கம்யூனிஸ்ட்டுகளின் தனித்துவமும் பலமும் இது. எனினும், இயக்கத்துக்குள் வளர்ந்துவந்த இவர்களையெல்லாம் தாண்டி, வெளியே வளர்ந்து இடதுகளின் மநகூ சார்பில் போட்டியிடும் இரு வேட்பாளர்களே இன்றைக்குப் பெரும் கதையாடலாக மாறியிருக்கிறார்கள். முதலாமவர் வசந்திதேவி; இரண்டாமவர் ராமச்சந்திரன்!

