இந்தியாவில் நோயாளிகளின் உரிமைகள் ஒரு குரூர நகைச்சுவை: குணால் சாஹா


மருத்துவ ஆராய்ச்சியாளர் குணால் சாஹா.
ந்திய மருத்துவத் துறையையே உறைய வைத்திருக்கிறார் குணால் சாஹா. தன்னுடைய மனைவி அனுராதாவின் மரணத்துக்கு மருத்துவர்களின் அலட்சியமான சிகிச்சைக்கு இழப்பீடாக ரூ. 11 கோடியை உச்ச நீதிமன்றத்திடமிருந்து தீர்ப்பாகப் பெற்றிருக்கிறார் சாஹா. இந்திய வரலாற்றில் மருத்துவத் துறை தவறுகளுக்காக விதிக்கப்பட்டிருக்கும் அதிகபட்ச அபராதத் தொகை இது. இந்திய மருத்துவத் துறைக்கு இது ஒரு கருப்பு நாள்என்று சொல்லும் அளவுக்கு இந்திய மருத்துவத் துறையை குறிப்பாக, தனியார் மருத்துவத் துறையைக் கொந்தளிக்கவைத்திருக்கிறது சாஹா பெற்றிருக்கும் தீர்ப்பு. ஆனால், சாமானியர்களோ கொண்டாடுகிறார்கள். சாஹாவிடம் பேசினால், ஒரு பெரிய கதை விரிகிறது. ஒரு தனிப்பட்ட மனிதனின் காதலில் தொடங்கும் அந்தக் கதை இந்திய நோயாளிகளின் அவலங்களை அம்பலப்படுத்துகிறது; கூடவே இந்திய மருத்துவத்தைச் சூறையாடும் பண வெறியையும்.

ஓர் இளம் ஆராய்ச்சியாளராக உங்கள் கனவு, உங்கள் மனைவியின் கனவு, உங்கள் மனைவியின் மரணம் உங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றம்இவை எல்லாமும் வாசகர்களுக்குத் தெரிய வேண்டும் என்று நினைக்கிறேன். சுருக்கமாக உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளுங்களேன்.
நாங்கள் இருவரும் கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்தவர்கள். ஆனால், 1985 வரை சந்தித்திருக்கவில்லை. அப்போது அனுராதா தெற்கு கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் படிப்பு முடித்திருந்தாள். அவள் தன் சகோதரனின் திருமணத்துக்காக இந்தியா வந்திருந்தாள். நானோ, கொல்கத்தாவில் மருத்துவம் முடித்துவிட்டு அமெரிக்காவுக்குப் புறப்படத் தயாராக இருந்தேன். பொது நண்பர் ஒருவரால் நாங்கள் சந்தித்தோம். அப்போதும் சரி, அதற்குப் பிறகும் சரி; நாங்கள் எங்களுக்காகப் பிறந்தவர்கள் என்றே நினைத்தோம். 1987-ல் நாங்கள் திருமணம்செய்துகொண்டோம்.

அமெரிக்காவுக்குப் புலம்பெயரும் இளம் தம்பதியர் பலரைப் போலவே நாங்கள் படித்துக்கொண்டே எங்கள் துறையில் நன்கு காலுன்ற கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. 1998-ல் நாங்கள் இருவரும் எங்கள் துறையில் மேல்படிப்பை முடித்தோம். எச்.ஐ.வி./எய்ட்ஸ் குறித்த ஆய்வும் உயர் பயிற்சியும் எனது துறை. நியூயார்க்கில் இருக்கும் உலகப் புகழ் பெற்ற கொலம்பியா பல்கலைக்கழகத்தில் குழந்தைகள் உளவியல்துறையில் முதுகலைப் பயிற்சியை அப்போதுதான் முடித்திருந்தாள் அனு.
நாங்கள் ஒன்றாய்ச் சேர்ந்து குடும்ப வாழ்க்கையைத் தொடங்க அதுவே தருணம். எனவே, பரபரப்பான நியூயார்க் நகரத்தை விட்டுப் புறப்படலாம் என்று முடிவெடுத்தோம். ஒஹியோ மாகாணப் பல்கலைக்கழகத்தின் எச்.ஐ.வி. ஆராய்ச்சி மையத்தில் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அனு தனது துறையில் முழுமூச்சுடன் இறங்குவதற்கு முன் குழந்தை பெற்றுக்கொள்வதற்காக சிறு இடைவெளி விடலாம் என்று நினைத்தாள். குழந்தையோடு, புது வாழ்வைத் தொடங்குவதற்கு முன் கொல்கத்தா சென்று தன் குடும்பத்தினரின் ஆசியைப் பெற்றுவரலாம் என்று விரும்பினாள். எங்கள் அமெரிக்கக் கனவை நிறைவுசெய்யும் விதத்தில் எல்லாமே கச்சிதமாக இருந்தது. ஆனால் விதி நினைத்ததோ வேறு.