லண்டன்: நீர்நிலைதான் சமூக வாழ்வுக்கான அளவுகோல்!


அன்றாடம் இரவு தூங்கச்செல்வது சவாலான ஒரு காரியமாகிக்கொண்டிருந்தது. மெல்லிய தூறல் விழும் பகல்கள், ரம்மியமான வானிலை, பிடித்தமான குளிர், புதுப்புது மனிதர்கள் - அனுபவங்கள், பிரகாசமான நினைவுகள் இவ்வளவையும் தாண்டி அடையாளம் தெரியாத ஓருணர்வு நெஞ்சில் ஊடுருவியிருந்தது. ஒவ்வொருநாளும் அதன் அடர்த்தியின்  சுமை அதிகமானபடி இருந்தது. இரவில் வீதியில் படர்ந்திருந்த மஞ்சள் விளக்கொளி வேறொரு காலகட்டத்துக்கு, வேறொரு இடத்துக்கு அழைத்துச் சென்றது. கண்ணுக்குப் புலப்படாத ஒரு இழை வேறொரு வெளியோடு பிணைத்திருந்தது.


அன்றைய தினம் இரவு முழுவதுமாகவே உறங்கவில்லை. ஜன்னலின் வழியே விடியலின் கிரணங்களை எதிர்நோக்கியிருந்தேன். அதிகாலையில் முதல் கீற்று தென்பட்டபோது, ஜன்னல் திரைச்சீலைகளை விலக்கி கண்ணாடியைத் திறக்கிறேன். உள்ளே குத்தீட்டிகள்போல பாயும் குளிர்க்காற்று. தேம்ஸ் நதி நோக்கி அது அழைத்தது. 


அந்த அதிகாலையில் நீளமான கருநீல கோட் அணிந்த ஒரு முதிய தம்பதி என் கார் நிறுத்தப்பட்ட இடத்தில், பாலத்தின் கைப்பிடியைப் பற்றி ஓடி விரையும் தண்ணீரைப் பார்த்தபடி நின்றிருந்தார்கள். அதிகாலை நேர தேம்ஸ் சூழல் ஒரு ஓவியம்போல இருந்தது. ஆமாம், ஓவியத்துக்குள் நுழைவது மாதிரிதான் அது இருந்தது. சுமார் அரை மணி நேரம் இருக்கும். அந்தத் தம்பதி புறப்பட்டனர். பெரியவர் என்னைக் கடந்தபோது அவருக்கு வணக்கம் தெரிவித்தேன். என்னைப் பற்றி அவர் விசாரித்தார். “தேம்ஸைத் தெரிந்துகொள்ள அருங்காட்சியகம் செல்லுங்கள். அங்குள்ள பொருட்கள் தேம்ஸை மட்டும் அல்லாது மனித நாகரிக வளர்ச்சியைப் புரிந்துகொள்ளவும் உங்களுக்கு உதவியாக இருக்கும்” என்று சொல்லிவிட்டு கை குலுக்கினார்.

கருணாநிதி சகாப்தம்


உலகின் நீண்ட கடற்கரைகளில் ஒன்றான மெரினாவில் தனக்கென ஆறடி நிலத்தை வாங்கிக்கொண்டு கருணாநிதி மண்ணுக்குள் உள்ளடங்கியபோது, சிறு நண்டுக் கூட்டம் ஒன்று ராணுவ மரியாதை செலுத்த நின்றிருந்த சிப்பாய்களின் பூட்ஸ் கால்கள் இடையே சுற்றுவதும் மணல் வலைக்குள் போய்ப் பதுங்கி வெளியே ஓடி வருவதுமாக இருந்தது. மக்கள் வெள்ளம் சூழ, ராணுவ வாகனத்தில் கருணாநிதியின் உடலை ஏற்றி இறக்கி, டாப்ஸ் ஊதி, அஞ்சலிக்காக 21 துப்பாக்கிக் குண்டுகளை வெடிக்கச் செய்து, அவருக்கு இறுதி வணக்கம் செலுத்தியபோது, முப்படை வீரர்களின் மனநிலை என்னவாக இருந்திருக்கும்? இலங்கை சென்ற இந்தியப் படையினரால் அங்குள்ள தமிழர்கள் பாதிக்கப்பட்டபோது, அவர்கள் நாடு திரும்ப இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்ததோடு, நாடு திரும்பிய படையினரை வரவேற்கவும் மறுத்த முதல்வராக இருந்தவர் அவர்.

ஒரு பிரிட்டன், ஒரு பிரான்ஸைக் காட்டிலும் அதிகமான, ஜெர்மனிக்கு இணையான மக்களைக் கொண்ட தமிழ்நாட்டின் நீண்ட கால முதலமைச்சர் கருணாநிதி; நீண்ட கால எதிர்க்கட்சித் தலைவரும் அவர். ஐம்பதாண்டு காலம் திமுக எனும் பெரும் கட்சியின் அசைக்க முடியாத தலைவராக அவர் இருந்தார். அவர் கட்சி வென்றாலும் தோற்றாலும் அவருக்குத் தோல்வி தராமல் அறுபதாண்டு காலம் சட்ட மன்ற உறுப்பினராக மக்கள் திரும்பத் திரும்ப அவரைத் தேர்ந்தெடுத்தனர். எண்பதாண்டு காலப் பொது வாழ்க்கை. என்றாலும் ஆறடி நிலத்துக்கு, ஆளுங்கட்சியுடன் மரணத்துக்குப் பிறகும் அவர் போராட வேண்டியிருந்தது. காவிரி நதிப் படுகையில் பிறந்த கருணாநிதி, கூவம் நதிக்கரையின் கழிமுகத்தை வந்தடைந்த 95 ஆண்டு பயணத்தில் தூக்கிச் சுமந்த பாரம் மிக்க கனவு தமிழ்ச் சமூகத்தோடு பின்னிப் பிணைந்திருந்தது.

லண்டன்: இயந்திரமும் விலங்கும்


நண்பர்களிடமிருந்து இரவு உணவுக்கான அழைப்பு வந்தது. அன்று மால்ட்பீ வீதிக்கு அழைத்துச் செல்வதாகச் சொல்லியிருந்தார் ஆசாத். பிராட்வே, பெர்விக், ப்ராக்லி, கேம்டன், மால்ட்பீ இவையெல்லாம் லண்டனில் சாலையோரக் கடைகளுக்குப் பிரசித்தமான சந்தை வீதிகள். உலகின் பல்வேறு நாடுகளையும் சேர்ந்த ஆயிரம் வகை உணவுகள் இந்த வீதிகளில் ஒரே இடத்தில் கிடைக்கும். மால்ட்பீ வீதியிலுள்ள மெக்ஸிகன் உணவகம் ஒன்றில் சால்மன் மீன் வறுவல் விசேஷம் என்று சொன்னார் ஆசாத். வழக்கத்துக்கு மாறாக எனக்கு வெளியே எங்கும் செல்ல அன்று மனதில்லாமல் இருந்தது. தாமதமாக விடுதி திரும்பியவன் அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தேன். மனம் இருநூற்றைம்பது வருடங்கள் பின்னோக்கி தொழில்மயமாக்கல் காலகட்டத்தில் நிலைகொண்டிருந்தது.

இன்று நாம் எதிர்கொண்டுவரும் எத்தனையோ பிரச்சினைகளுக்கான வேர்கள் தொழில் புரட்சியோடு பிணைக்கப்பட்டிருக்கின்றன. மனிதகுல வரலாற்றிலேயே பெரும் திருப்புமுனையை உண்டாக்கிய தொழில் புரட்சியானது, அளவில் சின்னதான பிரிட்டனை வேறு எந்த நாட்டைவிடவும் செல்வாக்கும் அதிகாரமும் கொண்டதாக மாற்றியதோடு மட்டும் நிற்கவில்லை; ஒட்டுமொத்த உலகின் போக்கையும் திருப்பியது. உலகின் எல்லாக் கலாச்சாரங்கள், விழுமியங்கள் மீதும் மோதியது. நவீனத்துவத்தை ஏகாதிபத்தியமாக்கியது.

ரஷ்யப் புரட்சி, பிரான்ஸ், ஜெர்மனியின் எழுச்சி, அமெரிக்காவின் பாய்ச்சல், இரு உலகப் போர்கள் தந்த பின்னடைவு, சீனாவின் விஸ்வரூபம் இவற்றுக்கெல்லாம் பிறகு இன்று பிரிட்டன் சிறுத்துவிட்டிருக்கலாம். ஆனால், அது முன்னெடுத்த பாதையைத் தனக்கேற்பக்   கட்டமைத்துக்கொள்வதன் வாயிலாகவே நவீனப் பேரரசுகள் உருக்கொள்கின்றன. பிரிட்டன் உருவாக்கிய கற்பனையிலிருந்து உலகத்தால் விடுபடவே முடியவில்லை. தொழில்மயமாகும் எல்லா நாடுகளும் தங்களுக்கான நியாயத்தை வளர்ச்சிவாதத்திலிருந்தே பெறுகின்றன.

லண்டன்: காட்டுக்குள் ஒரு பெருநகரம்அன்று அதிகாலையிலேயே எழுந்துவிட்டேன். மரங்களுக்காக அந்த ஒரு முழு நாளை ஒதுக்கிக்கொள்வது என்று முந்தைய இரவில் முடிவெடுத்தேன். ஏழு நாள் லண்டன் பயணத்தில், மரங்களுக்காக ஒரு நாள் எனும் திட்டம் யோசித்தபோது மனதுக்குத் திருப்தி அளிப்பதாக இருந்தது. அது எவ்வளவு பெரிய அசட்டுத்தனம் என்பது விடுதியை விட்டுக் கிளம்பி சாலையில் கால் வைத்ததும் புரிந்தது. விடுதியைச் சுற்றியே இப்போது ஏராளமான மரங்கள் நின்றன. பெரிய பெரிய மரங்கள். நிறைய வயதான மரங்கள். எப்படி முதல் நாள் முழுமையிலும் கண்ணில் படாமல் போயின!

அன்றைக்கு மழை இன்னும் தொடங்கியிருக்கவில்லை. இரவு மழை பெய்த தடம் காற்றில் கலந்திருந்தாலும் மண்  உலர்ந்திருந்தது. வானம் கருநீலம் பூத்திருந்தது. மேகங்கள் கிழக்கு நோக்கி நகர்ந்துகொண்டிருந்தன. லண்டனிலிருந்து கடல் தூரம். ஆனால், காற்றில் கடல் வாடையடித்தது. ஒருவேளை இதுவரை அறிந்திராத ஏதேனும் ஒரு மரத்திலிருந்து வெளிப்படும் மணமாகவும் இருக்கலாம். அதிகாலைகளை மரங்கள் தங்களுடையதாக மாற்றிவிடுகின்றன. கருத்த, வெளுத்த, பழுப்பேறிய, சாம்பல் பூத்த மரங்களை ஒவ்வொன்றாகக் கடந்தேன். இன்னும் வெளிச்சம் முழுவதுமாகச் சூழாத அந்த அதிகாலையிலேயே நகரம் சுறுசுறுப்பாகியிருந்தது.

விக்டோரியா பூங்காவுக்கு வரச்சொல்லியிருந்தார் ஹெலன். அங்கிருந்து ஒவ்வொரு பூங்காவாகப் பார்க்கலாம் என்று திட்டம். வாழ்க்கையை எவ்வளவு எளிமையாகத் திட்டமிட்டுவிடுகிறது ஒரு தமிழ் மனம்? மூன்று பூங்காக்களைப் பார்த்த மாத்திரத்தில் திட்டத்தின் அபத்தம் பல் இளித்தது. நகரம் எங்கிலும் மொத்தம் 3,000 பூங்காக்கள். பூங்கா என்பது பெயர்தான். எல்லாம் சிறு, குறு காடுகள். 35,000 ஹெக்டேருக்கு இவை பசுமை போர்த்தியிருக்கின்றன. சொல்லப்போனால், லண்டன் பெரிய நகர்ப்புறக் காட்டைத் தன்னுள்ளே உருவாக்கிக்கொண்டிருக்கும் பெருநகரம் என்று அதைச் சொல்லலாம் அல்லது வளர வளரப் பெருக்கும் ஒரு பெருநகரத்தைத் தன்னுள் உள்ளடக்கி  விரித்துக்கொண்டேயிருக்கும் காடு என்றும் அதைச் சொல்லலாம். ஹெலன் சிரித்தார்.