மத்திய லண்டன் பகுதியைக் கடக்கும்போதெல்லாம் டிரஃபால்கர் சதுக்கம் தன்னை நோக்கி இழுத்தது. பிரெஞ்சு, ஸ்பானிய கடற்படைகளை 1805-ல் ஸ்பெயின் நாட்டின் டிரஃபால்கர் முனையில் பிரிட்டிஷ் கடற்படை தளபதி நெல்சன் தோற்கடித்ததன் ஞாபகார்த்த சதுக்கம் இது. நெல்சனுக்கு ஒரு பெரிய நினைவுத் தூணும் அமைத்திருக்கிறார்கள். பீடத்தில் நான்கு பிரமாண்ட சிங்கங்கள் சுற்றி அமர்ந்திருக்க 169 அடி உயரத்தில் நிற்கிறார் நெல்சன்.
குளிர் காற்று வீசிக்கொண்டிருந்தது. இருவரும் சதுக்கத்தை நோக்கி நடந்தோம். சதுக்கக் கதைகள் சொன்னபடி வந்தார் ஹெலன். “இந்த இடத்துக்கு நீண்ட வரலாறு உண்டு. மக்கள் கூடும் ஒரு கலாச்சாரத் திடலாக இது இருக்க வேண்டும் என்று 1812-ல் இதைப் பொது இடமாக மேம்படுத்தினார் கட்டுமானவியலாளர் ஜான் நாஷ். 1830-ல் இதற்கு டிரஃபால்கர் சதுக்கம் என்று பெயரிட்டார்கள். 1838-ல் நெல்சனுக்குச் சிலை அமைக்கும் பணி தொடங்கியது. பீடத்தின் நான்கு புறங்களிலும் சிங்கங்களைச் சேர்க்கும் பணி 1867-ல் முடிந்தது. இந்தச் சிங்கங்கள் ஒவ்வொன்றின் எடையும் ஏழு டன்கள். சிங்கத்தின் கால் விரல்களைக் கவனியுங்கள். வித்தியாசமாக இருக்கும். இவை சிங்கத்தின் கால்கள் அல்ல; பூனையின் கால்கள் என்ற பேச்சு இங்குண்டு. உலகப் போரில் லண்டனைக் கைப்பற்றினால் இந்தச் சிலைகளை அப்படியே ஜெர்மனிக்குக் கொண்டுசெல்லும் திட்டம் ஹிட்லரின் படைகளுக்கு இருந்திருக்கிறது.”
பூனைக்கால் சிங்கங்களைப் பார்த்தேன். ஏனோ அவை மிகுந்த பரிதாபத்துக்குரியவையாகத் தோன்றின. வருடிக்கொடுத்தேன். பரிச்சயமான தமிழ் முகம் ஒன்றை அப்போது கண்டேன். இயக்குநர் கே.வி.ஆனந்த். நடிகர் சூர்யாவை வைத்து இயக்கும் படப் பணிகளுக்காக வந்திருப்பதாகச் சொன்னார். கொஞ்ச நேரம் அளவளாவிவிட்டு கலைந்தோம். சதுக்கத்தில் ஒரு இளைஞர் குழு நடனமாடி காசு வசூலித்துக்கொண்டிருந்தது. ஹல்க் வேஷத்தில் தரையில் கால்கள் படாமல் நின்றபடி காசு வாங்கிக்கொண்டிருந்தார் ஒரு பெண். எல்லா நாட்டுக் கொடிகளையும் தரையில் வரைந்திருந்தார் ஒரு இளைஞர். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அவரவர் நாட்டு கொடிக்கு அருகில் காசு போட்டார்கள்.