இந்தியாவின் வண்ணங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்தியாவின் வண்ணங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தேக்லோ பாய் இட்ஸ் அவர் இந்தியா!


இன்றோடு முடிகிறது இந்தியாவின் வண்ணங்கள் தொடர். ஒருவிதத்தில் ஆச்சரியமாக இருக்கிறது 33 அத்தியாயங்களை இந்தத் தொடர் தொட்டது. பெரிய முன்யோசனைகளோ, முன்தயாரிப்புகளோ ஏதும் இல்லை. இந்தியாவின் நான்கு மூலைகளையும் தொடும், ஒரு குறுக்கு நெடுக்குச் சுற்றுப்பயணம். உலகின் மிகப் பெரிய ஜனநாயக நிகழ்வான இந்தியத் தேர்தல் நடைபெறும் காலகட்டத்தில், அரசியல்ரீதியாக இந்தியாவைப் புரிந்துகொள்ள முனையும் ஒரு பயணம். இந்திய வரைபடத்தை மேஜையில் வைத்துக்கொண்டு, யோசிக்கும்போது இவ்வளவுதான் திட்டமாக இருந்தது. பயணத்தைத் தொடங்கிய பின்தான் தெரிந்தது... எவ்வளவு பெரிய நாடு இது... எவ்வளவு பெரிய மக்கள் திரள்... எத்தனை எத்தனை வகையான மனிதர்கள்... எத்தனை எத்தனை கலாச்சாரங்கள்... இப்படி ஒரு பயணத்தை மேற்கொள் பவரை நோக்கி சகஜமாக எல்லோரும் எழுப்பப்படும் இரு கேள்விகளுக்கு இந்த இறுதி அத்தியாயத்தில் பதிலளிப்பதோடு தொடரை நிறைவு செய்ய விரும்புகிறேன்.

இந்திய மனசாட்சிக்கு ஒரு கேள்வி


ஒரு குரலை இந்தியாவின் ஜனநாயகம் தவிர்க்கவே முடியாது. அந்தக் குரலின்றி இந்தியாவின் வண்ணங்கள் தொடரும் முழுமை பெறாது... ஐரோம் ஷர்மிளா. நாம் வாழும் காலத்தின் உலகின் தன்னிகரற்ற போராளி அவர்; நாம் வாழும் காலத்தின் உலகின் தன்னிகரற்ற போராட்டம் அவருடையது.

விவசாயிகள் இனியும் காத்திருக்க முடியாது: ஆறுபாதி கல்யாணம்


தகிக்கும் வெயிலில் வயலில் நிற்கிறார் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரான ஆறுபாதி கல்யாணம். எப்போதும் விவசாயிகள் பிரச்சினையில் களத்தில் முன்வரிசையில் நிற்கும் போராளி. ஒட்டுமொத்த தேசத்தின் விவசாயிகளுக்காகவும் சிந்திப்பவர்; பேசுபவர். இந்திய விவசாயிகளின் பின்னணியில் நம்முடைய அரசியலைப் பேசலானார்.

குறைந்தது நாட்டின் சரிபாதியினர் விவசாயம் சார்ந்திருப் பவர்கள். ஆனால், ஏன் விவசாய சமூகத்தால் அரசியலில் ஒரு சக்தியாக உருவாக முடியவில்லை?
அரசியல்வாதிகளின் பிரித்தாளும் திட்டம்தான் காரணம். முடிந்தால் கட்சியைச் சொல்லிப் பிரிப்பார்கள். இல்லா விட்டால், இருக்கவே இருக்கிறது சாதி, மதம், இனம்.

எந்தத் தொழில்காரர்களைவிடவும் விவசாயிகளிடத்தில்தான் இனப்பாகுபாடுகள் அதிகம் இருக்கின்றன. என்ன காரணம்? விடுபட வழியே இல்லையா?
விவசாயிகள் எளிய மனிதர்கள் என்பதும் அதனாலேயே அவர்கள் எளிய இலக்குகளாக மாறிவிடுகிறார்கள் என்பதும் தான் காரணம். ஒவ்வொரு விவசாயியின் கையிலும் நிலம் இருக்கும் நாளில் இனப் பாகுபாடுகள் தானே காணாமல் போகும்.

நாடு முதன்முதலில் வளர்ச்சியை முன்னிறுத்தி ஒரு தேர் தலைச் சந்தித்திருக்கும் நிலையில், விவசாயிகள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
அதாவது, 1951-ல் இந்தியாவின் மக்கள்தொகை 33 கோடி. அன்றைய உணவு உற்பத்தி 500 லட்சம் டன். இன்றைக்கு மக்கள்தொகை 120 கோடி. உணவு உற்பத்தி 2,630 லட்சம் டன். கிட்டத்தட்ட ஐந்து மடங்கு உணவு உற்பத்தியை அதிகரித்துக்கொடுத்திருக்கிறான் இந்நாட்டு விவசாயி. ஆனால், இன்றைக்கு விவசாயத்தின் நிலையும் விவசாயிகளின் நிலையும் இந்நாட்டில் என்ன? ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கும் ஒரு விவசாயி தற்கொலை செய்துகொள்கிறான். அப்படியென்றால், இது ஒரு தேசிய அவமானம் இல்லையா? ஒவ்வொரு இந்தியரும் வெட்கப்பட வேண்டிய சமாச்சாரம் இல்லையா? உணவுப் பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றுகிறீர்களே, விவசாயியையும் விவசாயத்தையும் பாதுகாக்க சட்டம் வேண்டாமா?

நடந்தது பசுமைப் புரட்சி அல்ல; பேராசைப் புரட்சி: எம்.எஸ். சுவாமிநாதன்


சுதந்திர இந்தியாவின் விஞ்ஞானிகளில் எம்.எஸ். சுவாமிநாதன் அளவுக்குக் கொண்டாடப்பட்டவரும் இல்லை; தூற்றப்பட்டவரும் இல்லை. நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா பரிசீலனைப் பட்டியலிலும் நோபல் பரிசுப் பரிசீலனைப் பட்டியலிலும் தொடர்ந்து அவர் பெயர் இடம்பெறுகிறது. ‘டைம்' இதழ் 20-ம் நூற்றாண்டின் இணையற்ற 20 பேரில் ஒருவராக அவரைத் தேர்ந்தெடுத்தது. ஒருபுறம் பசுமைப் புரட்சியின் தந்தை என்று புகழப்படும் அவர், இன்னொரு பக்கம் இந்தியாவின் பாரம்பரிய விவசாயத்தைச் சீரழித்தவர் என்ற சாபத்தையும் எதிர்கொள்கிறார். ஆட்சியாளர்கள் பலருடன் நெருக்கமாகப் பணியாற்றிய அனுபவம் அவருக்கு உண்டு. இந்திய விவசாயம் - இந்திய விஞ்ஞானம் இரு துறைகளைப் பற்றியும் அவரிடம் பேசினேன்.

இன்றைக்கு உங்களைப் பற்றி இரண்டு கதைகள் சொல்லப்படு கின்றன. நீங்கள் உங்களை எப்படி உணர்கிறீர்கள்? இந்திய வேளாண்மையில் மறுமலர்ச்சியைக் கொண்டுவந்தவராகவா? இந்தியப் பாரம்பரிய விவசாயத்தைச் சீரழித்தவராகவா?
நீங்கள் என்னுடைய பின்னணியைக் கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும். என்னுடைய அப்பா சாம்பசிவம் பெரிய மருத்துவர். கும்பகோணத்தில் சொந்தமாக மருத்துவமனை வைத்திருந்தவர். அந்த மருத்துவமனையை அவருக்குப் பின் பார்த்துக்கொள்ள வேண்டும்; அதற்கேற்ப நான் மருத்துவம் படிக்க வேண்டும் என்றே என்னுடைய குடும்பத்தார் ஆசைப் பட்டார்கள். 1954-ல் நான் டெல்லியில் இந்திய விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் சேர்ந்தபோது, எனக்கு முன் இருந்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட வாய்ப்புகள் எல்லா வற்றையும் உதறிவிட்டுதான் உள்ளே நுழைந்தேன். அன்றைக் கெல்லாம் பலராலும் அவநம்பிக்கையோடு பார்க்கப்பட்டது விவசாய ஆராய்ச்சித் துறை. இருந்தும் தேர்ந்தெடுத்தேன். ஏனென்றால், தேச பக்தி என்றால், அதை ஏதோ ஒரு விதத்தில் காரியமாக வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்த தலைமுறை என்னுடையது. வறட்சியையும் பஞ்சத்தையும் நேரடியாகப் பார்த்துத் துடித்த தலைமுறை என்னுடையது. இந்தியாவின் பிரதமர்கள் அன்றைக்கெல்லாம் நாட்டின் உணவுத் தேவையைப் பூர்த்திசெய்ய எவ்வளவு துடித்தார்கள் என்பதை நேருவின் எழுத்துகளைப் படித்தால் புரிந்துகொள்ள முடியும். சாஸ்திரி வாரத்தில் ஒருநாள் விரதம் இருக்குமாறு நாட்டு மக்களைக் கேட்டுக்கொண்ட காலம் அது. இன்றைக்கு அபரிமித உணவு உற்பத்திக் காலத்தில் இதையெல்லாம் அறியாதவர்கள் யாரைப் பற்றியும் எதையும் பேசலாம்.

அவசியம் பார்க்க வேண்டிய 5 வீடுகள்

காந்திஜி அறையில் சமஸ்

எப்போதுமே வீடுகளுக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. ஒரு மனிதனைப் பற்றி அவன் வெளியே கட்டமைக்கும் பிம்பங் களுக்கும் அவனுடைய தனிப்பட்ட வாழ்வுக்கும் எந்த அளவுக்கு நெருக்கம் இருக்கிறது என்பதை வெளிப்டையாக நமக்குக் காட்டுபவை அவை. இந்தப் பயணத்தில் அரசியல் தலைவர்கள் உள்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களின் வீடுகளைப் பார்ப்பதையும் ஒரு பகுதியாக வைத்திருந்தேன்.
இன்றைய அரசியல்வாதிகளை வீடுகளின் வழியே பார்க்க வேண்டும் என்றால், அவர்களுக்கு இடையே எந்த வேறுபாடும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். முதல்வர் ஜெயலலிதாவின் படாடோபமான போயஸ் கார்டன் வீட்டையும் பரந்து விரிந்த கொடநாடு எஸ்டேட்டையும் நமக்குத் தெரியும். பகுஜன் சமாஜ் கட்சித் தலைவி மாயாவதியின் பாதல்பூர் வீடு அதையும் தூக்கிச் சாப்பிடக் கூடிய மாளிகை. லக்னோ விக்ரமாதித்யா மார்கில் உள்ள சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் வீடும் மாளிகைதான். மும்பையை மிரட்டும் மஹாராஷ்டிர நவநிர்மாண் கட்சித் தலைவர் ராஜ் தாக்கரேவின் சிவாஜி பார்க் வீடு கனத்த இரும்புக் கதவுகள் அடங்கிய கான்கிரீட் சுவர்களோடு அவருடைய அச்சத்தை வெளிக்காட்டுகிறது. மும்பை, பாந்த்ரா கலா நகரில் உள்ள சிவசேனைக் கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேயின் வீடும் ஏகப்பட்ட பாதுகாப்புக்கு இடையே அதே கதியில்தான் இருக்கிறது. டெல்லி அரசியல்வாதிகள் அரசு கொடுத்திருக்கும் மாளிகைகளில் அல்லது அவர்களே உருவாக்கிக்கொண்ட மாளிகைகளில் குடியிருக்கிறார்கள்.

ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகளின் வீடுகளில் ஒரே விதிவிலக்கு மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியினுடையது. கொல்கத்தா ஹரீஷ் சாட்டர்ஜி தெருவே மிகச் சாதாரணமான ஒரு தெருதான். அங்கே உள்ள சுமாரான வீடுகளில் ஒன்றில் தன் சகோதரர்களோடு இருக்கிறார் மம்தா. வீட்டுக்கு வெளியே நான்கு போலீஸ்காரர்கள். அவ்வளவுதான் பந்தோபஸ்து. “தீதி பிரச்சாரத்துக்காக வெளியூர் போயிருக்கிறார். இரண்டு நாட்கள் தங்கினீர்கள் என்றால், ஊர் திரும்பிவிடுவார்; சந்திக்கலாம்” என்றார்கள். இதைத் தாண்டி பகிர்ந்துகொள்ள இன்றைய தலைவர்களின் வீடுகளில் ஏதும் இருப்பதாகத் தோன்றவில்லை. அதேசமயம், நம்முடைய முன்னோடிகளின் வீடுகளில் ஐந்து பேரின் வீடுகளைப் பற்றிக் கொஞ்சம் பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கிறேன். ஏராளமானோர் வீடுகளைப் பார்த்தேன் என்றாலும் இங்கே ஒரு தலைவர், ஒரு போராளி, ஒரு படைப்பாளி, ஒரு ஆன்மிக குரு, ஒரு வழிகாட்டி ஆகியோரின் வீடுகளை மட்டும் தருகிறேன்.

சவாரியின் வண்ணங்கள்


ஒரு பயணத் தொடரில் வாகனங்களுக்கு என்று ஒரு அத்தியாயம்கூட இல்லை என்றால் எப்படி? இந்த அத்தியாயத்தை நாம் வாகனங்களுக்கு அர்ப்பணிக்கலாம். கூடவே, நாட்டின் பல்வேறு பகுதிகள் பொதுப் போக்குவரத்தை எப்படியெல்லாம் வெற்றிகரமாகக் கையாள்கின்றன என்பதையும் பார்க்கலாம்.

திருவனந்தபுரம் ஆட்டோக்கள்



நாட்டிலேயே திருவனந்தபுர ஆட்டோக்காரர்கள் அளவுக்கு நியாயவான்களை எங்கும் சந்திக்க முடியவில்லை. குறைந்தபட்சக் கட்டணம் ரூ. 14. ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்குள் சென்றுவிட்டு 15 ரூபாய் கொடுத்தீர்களேயானால், ஒரு ரூபாய் மீதம் தருகிறார்கள்!

முதல் பூட்ஸ் ஆயுதப் படைகள், இரண்டாவது பூட்ஸ் வளர்ச்சி: விஜயகுமார் ஐ.பி.எஸ்.


இந்தியாவின் முடிவுகளைத் தீர்மானிக்கும் தலைகள் கூடும் ஜமா இந்திய சர்வதேச மையம். 1960-ல் இந்தியாவுக்குத் தேனிலவுக்காக வந்த ஜப்பான் மன்னர் அகிடோ கையால் இதை நிறுவினார் பிரதமர் நேரு. டெல்லியின் கௌரவம் மிக்க கலாச்சார அடையாளங்களில் ஒன்றான இந்த மையம் அறிவுஜீவி அரசியல்வாதிகள், பெரும் அதிகாரிகள், படைப்பாளிகள் உள்ளிட்டோரை உறுப்பினர்களாகக் கொண்டது. படிக்க அருமையான நூலகம் இங்கு உண்டு. நாட்டின் மதிப்புமிக்க அதிகாரிகளில் ஒருவரான விஜயகுமாரை இங்குதான் சந்தித்தேன். ஒரு காவல் துறைத் துணைக் கண்காணிப்பாளராகத் தன் வாழ்வைத் தொடங்கிய விஜயகுமார், தேசிய காவல் அகாடமியின் இயக்குநர் பதவி வரை காவல் துறையின் பெரும் பதவிகள் அனைத்தையும் பார்த்தவர். வீரப்பனை வீழ்த்தியது இவர் அடையாளம். இந்திய அரசு, சமகாலத்தில் எதிர்கொள்ளும் பெரும் உள்நாட்டுப் பிரச்சினையான மாவோயிஸ்ட் பிரச்சினையை எதிர்கொள்ள விஜயகுமாரைத்தான் தேர்ந்தெடுத்தது மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சி.ஆர்.பி.எஃப்.) தலைவராக. காஷ்மீர் பிரச்சினையிலும் அரசுக்கு அவர் ஆலோசனை சொன்னார். இப்போது உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் இருக்கும் விஜயகுமார், வெறும் ஆலோசகராக மட்டும் இல்லை; களத்தில் நிற்கிறார். தேர்தல் புறக்கணிப்பைப் பிரகடனப்படுத்திய மாவோயிஸ்ட்டுகள் பஸ்தாரில் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர்கள் மூவர் உயிரிழந்த செய்தி வந்தபோது, இந்த உரையாடல் நடந்துகொண்டிருந்தது. ஒருபுறம் செல்பேசியில் அடுத்தடுத்த கட்டளை களை அனுப்பிக்கொண்டே மறுபுறம் இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்த அதிகாரவர்க்கத்தின் பங்களிப்பைப் பற்றிப் பேசினார் விஜயகுமார்.

இரு கிராமங்களின் கதை!


இந்தியா என்பது கிராமங்களின் தொகுப்புதான். இந்திய கிராமங்களைப் பற்றி எழுதுவது என்றால், ஒவ்வொரு கிராமத்தைப் பற்றியும் எழுதலாம். அவ்வளவு பொக்கிஷங்களை அவை புதைத்துவைத்திருக்கின்றன. எனினும், குஜராத்தின் மதாபரும் தேசாரும் எதனாலோ திரும்பத் திரும்ப ஞாபகத்துக்கு வந்துகொண்டிருக்கின்றன.

அழிவதற்கு ஒரு நகரம்!


ஒரு நகரத்தைப் பற்றி இப்படி ஒரு தலைப்புடன் எழுதலாமா என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது. பிழைப்பதற்காகச் செத்துக்கொண்டிருப் பவர்கள் வாழும் ஒரு நகரத்தைப் பற்றி எழுதும்போது வேறு எப்படித் தலைப்பிட முடியும்? நீங்கள் அலாங்கைப் பார்க்க நேரில் வர வேண் டாம்; அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களின் கதைகளைக் கொஞ்ச நேரம் கேளுங்கள். இதைவிட மோசமான ஒரு தலைப்பையே தேடு வீர்கள். அலாங்கின் கதை நாம் அவசியம் பேச வேண்டியது. ஏனென்றால், அதன் அழிவு, வளர்ச்சி என்ற சொல்லிலிருந்தே தொடங்குகிறது.

வாழ்வதற்கு ஒரு நகரம்!


இந்தியா வேகமாக நகர்மயமாகிக்கொண்டிருக்கிறது, நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும். மாநகரங்கள்தான் வசதியான வாழ்க்கையைத் தரும் என்று அரசாங்கங்களும் நம்புகின்றன; மக்களும் நம்புகிறார்கள். இந்த நம்பிக்கைகளைத் தாண்டி பெருநிறுவனங்களும் முதலாளிகளும் அதையே விரும்புகிறார்கள்; தீர்மானிக்கிறார்கள். எப்படியும் மாநகரங்கள் தலைவிதியாகிவிட்ட சூழலில், ஒரு மாநகரத்தின் ஆன்மா எப்படி இருக்க வேண்டும் என்பதை கொல்கத்தாவில் கண்டேன்.

கொல்கத்தாவைப் பற்றி பணக்கார வங்காளிகளிடம் கேட்கக் கூடாது. முக்கியமாக வங்க முதலாளித்துவ எழுத்தாளர்களிடம் கேட்கவே கூடாது. இப்படித்தான் தோன்றியது கொல்கத்தாவில் இருந்த நாட்களில். ஏனென்றால், வங்காளிகள் இப்போது பெரும் குழப்பத்தில் இருக்கிறார்கள். ஒருகாலத்தில் பிரிட்டிஷ் இந்தியாவின் தலைநகரமாக வணிகத்திலும் கல்வியிலும் கலைகளிலும் கலாச்சாரத்திலும் திளைத்துக்கொண்டிருந்த அன்றைய கல்கத்தா, இன்னமும் அவர்கள் நினைவிலிருந்து அகலவில்லை. கல்கத்தாவுக்கும் கொல்கத்தாவுக்குமான இடைவெளி அவர்களைக் குழப்புகிறது. மும்பையுடனும் சென்னையுடனும் பெங்களூருவுடனும் ஒப்பிடுகையில் அவர்களுடைய கொல்கத்தா வளர்ச்சியில் பின்தங்கிவிட்டதாக நினைக்கிறார்கள். இந்த மாநகரம் தொழில்முனைவோருக்கான களம் இல்லை என்று அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். வங்க எழுத்தாளர்களோ இது அழிந்துகொண்டிருக்கும் மாநகரம் என்று புலம்புகிறார்கள். ஒரு நகரத்துக்குப் புதிதாகச் சென்று சில நாட்கள் தங்குவோருக்கும் அந்த நகரத்திலேயே வாழ்வோருக்கும் கிடைக்கும் பார்வைகள் வெவ்வேறானவை. நிச்சயம் உள்ளூர்க்காரர்களின் புரிதல்கள் வெளியிலிருந்து செல்லும் ஒருவருக்குக் கிடைக்காது. ஆனால், இந்தியா முழுவதும் சுற்றிவிட்டுச் செல்லும்போது ஒப்பீட்டளவில் கொல்கத்தா மட்டுமே இதயத்தை இன்னும் உயிர்ப்போடு வைத்திருக்கும் மாநகரமாகப் படுகிறது. இந்தியாவில் வாழ்வதற்கு ஒரு மாநகரம் என்றால், அது கொல்கத்தாவாக மட்டுமே இருக்க முடியும் என்று தோன்றுகிறது.

சாகும் வரை போராடு!




இந்தியாவில் எவ்வளவோ வாழ்க்கை முறைகள் இருக்கின்றன. ஆனாலும், ஜந்தர் மந்தரின் வாழ்க்கை முறையை எந்தக் கலாச்சாரத்தோடும் ஒப்பிட முடியாது. போராட்டத்தையே வாழ்க்கையாக வரித்துக்கொண்டவர்களின் வாழ்க்கை முறை இது. ஒருகாலத்தில் ஜெய்ப்பூர் மகாராஜா இரண்டாவது ஜெய் சிங் கட்டிய கால நிர்ணய ஆய்வுக்கான கட்டிடங்களுக்காக டெல்லியில் பேர்போன இடம் ஜந்தர் மந்தர். இப்போதோ, இந்திய மக்களுக்குப் போராட்டத்தில் இருக்கும் நம்பிக்கைக்கான அடையாளம். டெல்லியில் ஆண்டு முழுவதும் ஆயிரக் கணக்கில் போராட்டங்கள் நடக்கும் களம் இது. “போராட வேண்டும் என்றால், ஜந்தர் மந்தர் வாருங்கள்” என்று டெல்லி காவல் துறையே அழைக்கும் இடம்.

வரலாறு இங்கே எழுதப்படுகிறது
எல்லா அரசாங்கங்களும் போராட்டங்களை வெறுக்கவே செய்கின்றன. நகரின் மையத்தில் போராட்டங்கள் நடந்தால், மக்கள் கவனத்தை அவை ஈர்க்கும் என்பதால், நகரின் மையத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக அவர்களை மக்கள் பார்வைக்கு அப்பால் துரத்தும் உத்தியையே கையாள்கின்றன. டெல்லி அரசு நாடெங்கிலிருந்தும் வரும் போராட்டக்காரர்களை அப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக மையத்திலிருந்து விரட்டி, இறுதியில் அவர்கள் அடைக்கலமான இடம்தான் ஜந்தர் மந்தர்.
பொதுவாக, மாநில அரசாங்கங்களால் புறக்கணிக்கப்பட்டு, தங்கள் கோரிக்கைகளோடு மத்திய அரசாங்கத்தை அணுக வரும் ஜந்தர் மந்தர் போராட்டக்காரர்களை இரு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று, பெரும் கூட்டத்துடன் திரளும் தற்காலிகப் போராட்டக்காரர்கள். இவர்கள் எல்லா ஊர்களையும்போல பொதுவான கோரிக்கைகளுடன் ஓரிரு நாட்களிலிருந்து ஒரு வாரம் வரை நீடிக்கும் போராட்டங்களில் ஈடுபடுபவர்கள். இரண்டு, ஆண்டுக் கணக்கில் இங்கேயே அமர்ந்திருக்கும் நீண்ட காலப் போராட்டக்காரர்கள். தங்கள் கோரிக்கைகளுக்காகவும் போராட்டங்களுக்காகவுமே உயிரைவிடவும் தயாராக இருப்பவர்கள். நிறைய பேர், முதல் வகை போராட்டக்காரர்களாக வந்து இரண்டாம் வகை போராட்டக்காரர்களாக மாறியவர்கள்.

கொஞ்சம் படிப்பு... நிறைய அரசியல்!


ஒரு வகுப்பறை. ஆசிரியர் மன்மோகன் சிங். கரும்பலகையில் குச்சியை வைத்து சுட்டிக்காட்டிப் பாடம் நடத்துகிறார் சிங். மாணவர்களாகத் தரையில் குத்தவைத்து உட்கார்ந்திருக்கிறார்கள் அவருடைய மந்திரிமார்கள். கரும்பலகையில் எழுதப்பட்டிருக்கும் பாடத் தலைப்பு: ஊழல் செய்வது எப்படி?

இப்படி வரையப்பட்ட ஒரு சுவரோவியத்தை இந்தியாவில் எந்தக் கல்வி நிலையத்திலாவது - அதுவும் துணைவேந்தர் அறைக்கு எதிரிலேயே - நாம் பார்க்க முடியுமா? பிரதமரில் தொடங்கி அருணாச்சலப் பிரதேசத்தின் உள்ளூர் அரசியல்வாதி வரை சகலரையும் கிண்டலடிக்கும் கேலிச் சித்திரங்கள், இந்திய ராணுவம் காஷ்மீரில் நடத்தும் அத்துமீறல்களைக் காட்டமாக விமர்சிக்கும் சுவரொட்டிகள், இனவாத அரசியலுக்குக் கடுமையான எச்சரிக்கைகளை விடுக்கும் சுவரோவியங்கள்...
- டெல்லிவாசிகளுக்கு ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ஆச்சர்யம் இல்லை. ஆனால், டெல்லி எல்லைக்கு அப்பாலிருந்து வரும் எவரையும் ஆச்சர்யத்திலும் பரவசத்திலும் ஆழ்த்தும் ஒரு கனவுக் கல்விச்சாலை அது.

ஒரு குட்டி இந்தியா
டெல்லியின் தென் பகுதியில் ஆரவல்லி மலைத்தொடரின் கரடுமுரடான பரப்பில், கிட்டத்தட்ட ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விரிந்திருக்கும் ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ஒரு குட்டி இந்தியா. மலைப் பாறைகளும் புல்வெளிகளும் மரங்களும் நூற்றுக்கணக்கான பறவைகளும் வன உயிரினங்களும் அடங்கிய இந்தப் பல்கலைக்கழகத்தின் வளாகம், ஒரு பாடசாலை என்பது வெறும் செங்கற்களால் மட்டுமே கட்டப்படுவது இல்லை என்பதைச் சொல்லாமல் சொல்லக் கூடியது.

நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்து வரும் ஏழாயிரத்துச் சொச்ச மாணவ - மாணவிகள் இங்கு படிக்கின்றனர். தவிர, நூற்றுமுப்பது வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்கள். ஏராளமான துறைகள் இந்தப் பல்கலைக்கழகத்தில் உண்டு. அனைத்துத் துறை மாணவர்களுக்கும் பொதுவான துறை அரசியல்!

பேச்சுதான் ஆதாரச் சுருதி
ஒரு பல்கலைக்கழகம் என்பது மனிதநேயம், சகிப்புத்தன்மை, பகுத்தறிவு, உண்மையைத் தேடுவதற்கான களமாக இருக்க வேண்டும்; சாகச சிந்தனைகளை வளர்ப்பதற்கான களமாக இருக்க வேண்டும்; மிக உயர்ந்த லட்சியங்களுக்காக மனித இனம் மேற்கொள்ளும் முன்னோக்கிய பயணத்துக்கு உதவ வேண்டும் என்று கனவு கண்டார் நேரு. அவருடைய மகள் இந்திராவால் தொடங்கப்பட்ட இந்தப் பல்கலைக்கழகம், 40 ஆண்டுகள் ஆகும்போதும் அந்த தாகத்தை இன்னமும் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். எங்கு பார்த்தாலும் மாணவ - மாணவிகள் கைகோத்து நடக்கிறார்கள். நள்ளிரவிலும் மணிக்கணக்காக உட்கார்ந்து பேசுகிறார்கள். “பேச்சுதான் இந்தப் பல்கலைக்கழகத்தின் ஆதாரச் சுருதி. பாலினச் சமத்துவத்திலிருந்துதான் இந்தப் பல்கலைக்கழகத்தின் ஜனநாயக மாண்புகள் தொடங்குகின்றன” என்கிறார்கள்.

வாய்ப்பு அல்ல; அதிகாரம்


உலகின் மிகப் பெரிய ஜனநாயக நிகழ்வான இந்தியத் தேர்தலை தேசத்தின் திருவிழா என்று குறிப்பிட்டால் அது மிகையான வர்ணணையாக இருக்காது என்று நினைக்கிறேன். ஏனைய திருவிழாக்களைப் போலவே விந்தைகளுக்கும் விசித்திரங்களுக்கும் கொஞ்சமும் பஞ்சம் இல்லாத இந்தியத் தேர்தலின் வெவ்வேறு வடிவங்களை தேசத்தின் வெவ்வேறு பகுதிகளில் பார்க்கும்போது கிடைக்கும் சுவாரஸ்யம் அலாதியானது.

இந்தியாவின் முதல் தேர்தலைப் பற்றிப் படிக்கும்போது பல விஷயங்கள் ஆச்சர்யம் அளிக்கக்கூடியவையாக இருக்கும். பாலைவனத்தில் ஒட்டகங்களை ஓட்டிக்கொண்டு, சாப்பாடு கட்டிக்கொண்டு ஓட்டுப் போட வந்தவர்கள் கதைகள், முதல் நாளே வந்து காத்திருந்து ஓட்டுப் போட்டவர்கள் கதைகள், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் அழுது புரண்டவர்கள் கதைகள், வயதானவர்களைத் தூக்கிக்கொண்டுவந்து ஓட்டுப் போட வைத்தவர்கள் கதைகள்... இந்தக் கதைகளுக்கெல்லாம் கொஞ்சமும் பஞ்சம் இல்லாத கதைகள் இப்போதும் இருக்கின்றன. இன்னமும் நீளும் என்றே தோன்றுகிறது. காரணம்... இந்நாட்டின் மக்களுக்கு இந்தத் தேர்தல் அமைப்பின் மீது இருக்கும் ஆழமான நம்பிக்கை.

இந்திய ஜனநாயகத்தின் மீது முன்வைக்கப்படும் கடுமையான விமர்சனங்களில் முக்கியமானது நம்முடைய தேர்தல் முறை. நிச்சயம் ஏராளமான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய ஒரு முறைதான் இது. ஆனால், விமர்சிப்பவர்கள் பலரும் சொல்வதுபோல நிராகரிக்கக் கூடிய முறை இல்லை அது என்பதை இந்தப் பயணம் வலுவாகவே உறுதி செய்தது. காஷ்மீரிகள் வாக்களிப்பதற்கு ஒரு நியாயம் இருக்கிறது என்றால், அசாமிகள் வாக்களிப்பதற்கு ஒரு நியாயம் இருக்கிறது. தமிழகத்திலும் உத்தரப் பிரதேசத்திலும் அந்த நியாயங்கள் வேறுபட லாம். ஆனால், தங்கள் தலையெழுத்தைத் தீர்மானிப்பவர்களின் தலையெழுத்தைத் தீர்மானிப்பதில் தங்க ளுக்குப் பங்கிருக்க வேண்டும் என்பதில் மக்களிடத்தில் இருக் கும் உறுதிப்பாடு அசாத்தியமானது. இந்த விஷயத்தில் நாட்டின் எல்லாக் குடிமக்களுக்கும் அவர்களுடைய இந்த உரிமையை உறுதிசெய்யும் தேர்தல் ஆணையத்தின் பணி மகத்தானது.

இரண்டு ஓட்டுகளுக்கு ஒரு சாவடி


சத்தீஸ்கரில் ஒரு சில குடும்பங்கள் மட்டுமே வசிக்கும் ஏராளமான கிராமங்கள் உண்டு. சுற்றிலும் வனம்தான். சாலை, மருத்துவமனை, மின்சாரம் எதுவும் கிடையாது. அப்படிப்பட்ட கிராமங்களில் ஒன்றுதான் கோரியா மாவட்டத்தைச் சேர்ந்த சேரதந்த். தேவராஜ் சேர்வா, அவருடைய மனைவி பூளாவாட்டி சேர்வா, மகன் மஹிபால் சேர்வா இந்த மூவருக்காக மட்டும் இங்கே ஒரு வாக்குச்சாவடி ஒவ்வொரு தேர்தலின்போதும் அமைக்கப்படுகிறது. மலைப் பாதையில் ஏராளமான சங்கடங்களுக்கு இடையே பயணிக்கிறது தேர்தல் அலுவலர்கள் குழு, கூடவே பாதுகாப்புப் படையினர் ஐந்து பேருடன். இப்போது பூளாவாட்டி சேர்வா இறந்துவிட்டார். இரு ஓட்டுகளுக்காகப் பயணிக்கிறார்கள். தேவராஜ் சேர்வாவுக்குக் கல்வி, மருத்துவம், மின்சாரம் எல்லாவற்றையும்விட கோடையில் கிணற்றில் தண்ணீர் ரொம்ப ஆழத்துக்குச் சென்றுவிடுவதுதான் பிரச்சினை. ஆனால், இதையெல்லாம் அரசாங்கத்திடம் எப்படிக் கேட்க முடியும் என்று அவருக்கு அவரே ஆறுதல்படுத்திக்கொள்கிறார். அவரைச் சந்திக்க நாம் செல்வதையே அவர் ஒரு பெருமையாக நினைப்பார் என்று சொல்கிறார்கள் அதிகாரிகள்.

மோடி, குஜராத், வளர்ச்சி: கதவுகளில் கசியும் உண்மை!

வளர்ச்சியின் குறுக்குவெட்டுத் தோற்றம்: அகமதாபாத் நகரில் புழுதி அப்பும் சாலையுடன் உள்ள ஒரு வீதி... கலவரங்களின்போது எதிர்கொள்ள கதவுடன்.  

இந்தச் சுற்றுப்பயணத்தில் நாடு முழுவதும் நான் மக்களிடம் அதிகம் கேட்ட மூன்று வார்த்தைகளுக்கு இந்த அத்தியாயத்தை ஒதுக்கலாம் என்று நினைக்கிறேன்: மோடி - வளர்ச்சி - குஜராத்.

வரலாற்றில் வித்தியாசமான தேர்தல்


இந்திய வரலாறு மிக வித்தியாசமான ஒரு தேர்தலை எதிர்கொள்கிறது. இதுவரையிலான 15 மக்களவைத் தேர்தல்களும், இந்திய மக்கள் முன் எத்தனையோ பேசுபொருள்களை முன்னிறுத்தியிருக்கின்றன. சாதனைகளும் வாக்குறுதிகளும் முன்னிறுத்தப்பட்ட தேர்தல்கள், ஊழல்களும் அதிகார துஷ்பிரயோகங்களும் முன்னிறுத்தப்பட்ட தேர்தல்கள், மரணங்களும் தியாகங்களும் முன்னிறுத்தப்பட்ட தேர்தல்கள், தனிக்கட்சி ஆட்சியும் நிலையான அரசும் முன்னிறுத்தப்பட்ட தேர்தல்கள், கூட்டாட்சியும் அனைவருக்குமான வளர்ச்சியும் முன்னிறுத்தப்பட்ட தேர்தல்கள்... எல்லாத் தேர்தல்களிலுமே குறைந்தபட்சம் மக்கள் முன் இரு தேர்வுகள் முன்னிறுத்தப்பட்டது உண்டு: இந்தக் கட்சியா, அந்தக் கட்சியா அல்லது இந்தக் கூட்டணியா, அந்தக் கூட்டணியா?

முதல்முறையாக மக்களவைத் தேர்தலை அதிபர் தேர்தல்போல எதிர்கொள்கிறது இந்தியா. பிரச்சாரத்தில் கட்சிகளின் பெயர்கள் அடிவாங்கிவிட்டன. இன்னும் சொல்லப்போனால், ஒரேயொரு மனிதரும் அவர் முன்னிறுத்தும் முழக்கமும்தான் இன்றைய இந்தியாவின், இந்தத் தேர்தலின் பேசுபொருள்: மோடி - குஜராத் - வளர்ச்சி.

நாட்டின் மிகப் பெரிய கட்சியான காங்கிரஸ் மோடிக்குப் பதில் அளிப்பதை மட்டுமே தேர்தல் பணியாகக் கொண்டிருக்க… ஏனைய கட்சிகளோ, மோடியை நோக்கிக் கேள்வி எழுப்புவதையே தேர்தல் பணியாகக் கொண்டிருக்கின்றன. ஆக, வாக்காளர்கள் முன் ஒரேயொரு கேள்விதான் எங்கும் தொக்கிநிற்கிறது: மோடி - குஜராத் - வளர்ச்சி வேண்டுமா; வேண்டாமா?

மக்களிடம் இப்படி ஒரு கேள்வி தொக்கி நிற்கிறது என்றால், நாடு முழுவதும் உள்ள ஊடகங்களிலும் இப்போது இதுதான் முக்கியமான விவாதம் - குஜராத்தில் உண்மையான வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறதா, இல்லையா? அது உண்மையாகவே ஒரு நல்ல முன்மாதிரிதானா, இல்லையா? மக்கள் உண்மையாகவே எப்படி இருக்கிறார்கள்? எது குஜராத்தில் மீண்டும் மீண்டும் மோடியைப் பதவியில் அமர்த்துகிறது?

மாற்று அரசியல் இடதுசாரிகளால்தான் சாத்தியம்: பிரகாஷ் காரத்


இந்திய இடதுசாரிகளின் குவிமையம் எப்போதுமே கேரளம்தான். இந்திய அரசியலில் எப்போதும் இல்லாத அளவுக்கு வலதுசாரிகள் சூறாவளி வேகத்தில் முன்னேறும் சூழலில், இடதுசாரிகளின் கப்பலை வழிநடத்துகிறார் கேரளத்திலிருந்து வந்த பிரகாஷ் காரத். நாட்டின் பிரதானக் கட்சிகளான காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி இரண்டுக்குமே பொருளாதாரக் கொள்கைகளில் வேறுபாடுகள் இல்லாமல் போய்விட்ட நிலையில், காரத் இடதுசாரிகளின் மாற்றுப் பொருளாதாரக் கொள்கையை நோக்கி மக்களுக்கு அழைப்பு விடுக்கிறார் . கட்சி தொடங்கிய காலம் முதல் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் எல்லா விமர்சனங்களுக்கும் இடம் தந்தார்; ஒரு கேள்வி நீங்கலாக எல்லாக் கேள்விகளுக்கும் பதில் தந்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அரை நூற்றாண்டுக்கு முன் பிரிந்ததற்கான நியாயம் இன்னும் நீடிக்கிறதா? ஏன் இந்தியாவில் உள்ள எல்லா இடதுசாரி அமைப்புகளும் ஒன்றுசேரக் கூடாது?

இந்தியாவுக்குத் தேவை மகிழ்ச்சிகரமான முதலாளித்துவம்: அரிந்தம் சௌத்ரி


அரிந்தம் சௌத்ரி இன்றைய தலைமுறையின் முக்கியமான பிரதிநிதிகளில் ஒருவர். பன்முக ஆளுமை. அடிப்படையில் பொருளாதார நிபுணரான அரிந்தம், திட்டமிடல் - மேலாண்மைக்கான இந்திய நிறுவனம் (ஐ.ஐ.பி.எம்.) எனும் மேலாண்மைக் கல்வி நிறுவனத்தின் தலைவர். எதையும் பிரம்மாண்டமாக யோசிக்கச் சொல்லும் அரிந்தம், தன்னுடைய 'சண்டே இந்தியன்' பத்திரிகையை 14 மொழிகளில் தொடங்கியவர். திரைப்படத் தயாரிப்பாளராக மூன்று முறை தேசிய விருதுகள் பெற்றிருக்கிறார். மத்திய திட்டக் குழுவின் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக இருந்திருக்கிறார். கடந்த 2001-ல் தொடங்கி ஒவ்வோர் ஆண்டும் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முந்தைய தினம், தொலைக்காட்சியில் மாற்று பட்ஜெட் ஒன்றைத் தாக்கல்செய்வது இவருடைய வழக்கம். அரிந்தத்தின் ‘கவுண்ட் யுவர் சிக்கன் பிஃபோர் தே ஹேட்ச்' மற்றும் ‘டிஸ்கவர் த டைமண்ட் இன் யூ' இரு புத்தகங்களும் தலா பத்து லட்சம் பிரதிகள் விற்றவை. ஃபேஸ்புக்கில் 44.32 லட்சம் பேர் அரிந்தத்தைப் பின்தொடர்கிறார்கள். அரிந்தம் வசிப்பது டெல்லியில் என்றாலும், அவர் மனம் வாழ்வது கொல்கத்தாவில். ஒரு வங்காளியான அரிந்தம், மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளின் கால் நூற்றாண்டு ஆட்சியைத் தகர்ப்பதில் முன்வரிசையில் நின்றவர்.

இடது சிந்தனை பேசும் வலதுசாரி என்று உங்களை அழைக்கலாமா?

நல்ல கேள்வி! நான் சுதந்திரமான சந்தை, தடையற்ற தொழில் முதலீடு ஆகியவற்றில் நம்பிக்கை உள்ளவன். இதை நான் ‘மகிழ்ச்சிகரமான முதலாளித்துவம்' என்று அழைப்பேன். இதையே ‘ஜனநாயக முதலாளித்துவம்' என்றால் மற்றவர்களை ஏற்க வைப்பது எளிதான செயல் அல்ல. ஆனால், இதுதான் எனது நம்பிக்கை. கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, நீதி பெறும் உரிமை ஆகிய அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வழிகண்டுவிட்டால் பிறருடைய ஆக்கபூர்வ சிந்தனைகளுக்கும், தொழில் முனைவோர்களுக்கும் தடை விதிப்பதற்கு அவசியமே ஏற்படாது.

வளர்ச்சி என்பதற்கு உங்களுடைய இலக்கணம் என்ன?முந்தைய கேள்விக்குச் சொன்ன அதே பதில்.

மோடிஜியைப் பற்றி நான் பேச விரும்பவில்லை: குதுபுதீன் அன்சாரி


உலகை உலுக்கிய புகைப்படங்களில் ஒன்று குதுபுதீன் அன்சாரியினுடையது. உடலில் காயங்களுடனும் சட்டையில் ரத்தக் கறைகளுடனும் கண்களில் மரண பயத்துடனும் இரு கைகளையும் கூப்பி உயிர்ப் பிச்சை கேட்கும் குதுப்பின் படம்தான் குஜராத் கலவரத்தின் கொடூர முகத்தை உலகம் முழுவதும் கொண்டுசென்றது. 2002, பிப்ரவரியில் முஸ்லிம்கள் மீது இந்து அமைப்புகள் நடத்திய வெறியாட்டத்தை நரேந்திர மோடியின் காவல் துறை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சூழலில், அகமதாபாதில் துணை ராணுவப் படைகள் நுழைந்தன. அகமதாபாத் நகரின் மேல் கரும் புகை சூழ்ந்திருந்தது. ஆங்காங்கே தீவைக்கப்பட்டிருந்த முஸ்லிம்களின் வீடுகளில் ஒன்று குதுப்பினுடையது. இரு நாட்களாகவே வெவ்வேறு கும்பல்கள் அந்தப் பகுதியையே சூறையாடிக்கொண்டிருந்த நிலையில், உயிருக்குப் பயந்து பதுங்கியிருந்தார் குதுப். அன்று காலை அந்த வீடும் கலவரத்துக்கு இலக்கானது. வீட்டைச் சுற்றிலும் தீ சூழ்ந்திருந்த நிலையில் - மரணத்தின் தீ நாக்குகள் - நெருங்கிக் கொண்டிருந்த சூழலில்தான் - அதிர்ஷ்டவசமாக ஒரு துணை ராணுவ வாகனம் அந்தப் பகுதியில் நுழைந்தது. குதுப் மீட்கப்பட்டார். ‘ராய்ட்டர்ஸ்’ நிறுவனத்தில் பணியாற்றிய அர்கோ தத்தாவால் எடுக்கப்பட்ட குதுப்பின் படம் மறுநாள் உலகெங்கும் உள்ள பல முன்னணிப் பத்திரிகைகளிலும் வெளியான பின் அந்தப் படம் குதுப்பை வாழ்நாள் முழுக்கத் துரத்தத் தொடங்கியது. அவர் உயிர் பிழைக்க குஜராத்திலிருந்து மகாராஷ்டிரம் சென்றார்; அங்கிருந்து அவர் வேலையை விட்டு அந்தப் புகைப்படம் துரத்தியது. மேற்கு வங்கம் சென்றார்; அங்கும் துரத்தியது. 10-க்கும் மேற்பட்ட முதலாளிகள் இந்தப் படத்தைப் பற்றித் தெரியவந்த பின்னர், அவரை வேலையை விட்டுத் துரத்தினர். ஒருகட்டத்தில் குதுப்பே இந்தத் துரத்தலுக்கு முடிவுகட்டினார். அவர் மீண்டும் குஜராத் திரும்பினார். அடிப்படையில் ஒரு தையல்காரரான அவர், தன் தையல் இயந்திரத்திடம் தன்னை ஒப்படைத்துக்கொண்டார். சிறிய வீடொன்றை அவர் இப்போது கட்டியிருக்கிறார். அங்கு தாய், மனைவி, இரு குழந்தைகளுடன் வசிக்கும் குதுப்பைச் சந்தித்தேன். இன்னமும் மறையாத பயமும் நிறைய தயக்கமும் உறைந்திருக்கும் குதுப்பிடமிருந்து வெளிப்படும் வார்த்தைகள் நேரடியானவை அல்ல. ஆனால், அவற்றின் பின் ஆயிரமாயிரம் அர்த்தங்கள் பொதிந்திருக்கின்றன. மனிதத்தின் மனசாட்சியை உலுக்கும் வார்த்தைகள் அவை.

உண்மையான ஜனநாயகத்தைப் பெற இந்த ஜனநாயகம் அவசியம் - பினாயக் சென்


இந்தியாவின் தாறுமாறான வளர்ச்சியின் கோரமான முகத்துக்குச் சரியான உதாரணம் மத்திய இந்தியாவின் சத்தீஸ்கர். தலைநகர் ராய்பூரின் பிரம்மாண்டமான மேக்னட்டோ மால் ஒரு முனை என்றால், சாலையில் ஐந்து ரூபாய்க்குச் சவாரி ஏற்றத் தயாராக இருக்கும் ரிக்‌ஷாக்கள் இன்னொரு முனை. சத்தீஸ்கரின் 41% நிலம் வனம். கனிம வளங்களை இந்தியப் பெருநிறுவனங்கள் வாரியணைத்து அள்ளுகின்றன. இந்தியாவின் மின் உற்பத்தி, இரும்பு உற்பத்தியின் மையம் இன்றைக்கு சத்தீஸ்கர்தான். ஆனால், மனிதவளக் குறியீட்டில் இந்தியாவிலேயே மோசமான மாநிலமும் இதுதான். படித்தவர்கள் எண்ணிக்கை தேசிய சராசரியைவிடக் குறைவு. சுகாதாரத்திலும் நாட்டிலேயே மோசம். ஊட்டச்சத்துப் பற்றாக்குறை, குழந்தைகள் இறப்புவிகிதம் இப்படி எந்த விஷயத்தில் ஒப்பிட்டாலும் மோசம். மாவோயிஸ்ட்டுகள் ஆதிக்க பூமியான சத்தீஸ்கரில் அவர்களின் கோட்டைகளில் ஒன்றாகக் கருதப்படும் பஸ்தாரும் தண்டேவாடாவும் மாநிலத்திலேயே கல்வியறிவு குறைவான மாவட்டங்கள் - வறுமை தாண்டவமாடும் பகுதிகள் என்பது இந்திய வரலாற்றின் மிகப் பெரிய உள்நாட்டுப் போருக்கான அடிப்படையை நாம் புரிந்துகொள்ள உதவும்.

மனிதநேயம் மிக்க மருத்துவரான பினாயக் சென் சத்தீஸ்கரில் பணியாற்றச் சென்றபோது, அவருக்குள்ளிருந்த மனித உரிமைச் செயல்பாட்டாளர் வெளியே வந்தார். வறுமை யில் வாடிய சத்தீஸ்கர் மக்களிடையே கிராமம் கிராமமாகச் சென்று சேவையாற்றினர் சென்னும் அவருடைய மனைவி இலினாவும். தொழிலாளர்கள் அமைப்பால் நடத்தப்படும் சத்தீஸ்கர் முக்தி மோட்சா சாஹித் மருத்துவமனை கட்ட அவர் உதவினார். ஜன் ஸ்வஸ்த்யா ஸஹயோகின் அமைப்பின் ஆலோசகராக இருந்து பிலாஸ்பூர் பகுதியில் பழங்குடியின மக்களுக்கு நல்ல சிகிச்சைகள் கிடைக்க உதவினார். சென்னின் சேவைகள் மருத்துவ அமைப்புகளால் கொண்டாடப்பட்டன; சுகாதாரத்தை மேம்படுத்தும் அவருடைய சிந்தனைகள் இந்தியாவின் மிகச் சிறப்பு வாய்ந்த அறிவியலாளர்களில் ஒருவராக அவரை அடையாளப்படுத்தின. கூடவே, அடக்குமுறைக்கு எதிராக மனித உரிமைகளுக்காகவும் அவர் குரல் கொடுத்தபோது, சத்தீஸ்கர் அரசு மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்புபடுத்தி அவரைக் கைதுசெய்தது. அவர் தேசத் துரோகி ஆக்கப்பட்டார். சர்வதேச அளவில் அதிர்வுகளை உண்டாக்கிய இந்த வழக்கில் அமர்த்திய சென் முதல் நோம் சாம்ஸ்கி வரை சென்னுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார்கள். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பேரணிகள் நடந்தன. இதற்கு இடையிலேயே சென்னுக்கு உலகளாவிய சுகாதாரம் மற்றும் மனித உரிமைகளுக்கான ஜொனாதன் மன் விருது அறிவிக்கப்பட்டது. ஆனாலும், அரசு பொருட்படுத்தவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் அவருக்குப் பிணை மறுக்கப்பட்டது. இறுதியாக உச்ச நீதிமன்றம் அவரைப் பிணையில் விடுவித்தது. சென் வெளியிலிருந்து இப்போது வழக்கை எதிர்கொள்கிறார். சத்தீஸ்கரைப் பற்றியும் ‘வளர்ச்சி'யைப் பற்றியும் சென்னிடம் பேசினேன்.

கடவுள் ஊரின் அரசியல் கலாச்சாரம்


திருவனந்தபுரத்துக்குள் எங்கெல்லாம் சுற்றலாம் என்று உள்ளூர்க்காரர் யாரிடம் கேட்டாலும், “முதலில் பத்மநாப சுவாமி கோயிலைப் பார்த்துவிடுங்கள்” என்கிறார்கள். நியாயம்தான். ஊரின் பெயரே பத்மநாபர் பெயரில்தான் இருக்கிறது திரு + அனந்த + புரம். அனந்தரின் நகரம்.

உலகின் பணக்கார சாமி
தென்னிந்தியாவில் கோயில்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்துக்கு ஓர் அடையாளக் குறியீடு பத்மநாப சுவாமி கோயில். சேரமான் பெருமானால் எழுப்பப்பட்ட இந்தக் கோயில், ஆரம்பக் காலம் தொட்டே செல்வாக்குக்குக் குறைவில்லாதது. ராஜா மார்த்தாண்ட வர்மா 1750-ல் தனது அரசாங்கம், ராஜ்ஜியம், செல்வம் அனைத்தையும் அனந்த பத்மநாப சுவாமிக்குப் பட்டயம் எழுதித்தந்து, தன் உடை வாளையும் திருவடியில் வைத்துப் பரிபூரண சரணாகதி அடைந்த பின்னர், கோயில் இன்னும் செல்வாக்கு பெற்றதாகிவிட்டது. அதாவது, பத்மநாப சுவாமியே திருவிதாங்கூர் அரசின் தலைவர் ஆகிவிட்டார். ஆங்கிலேயர் காலத்தில், பத்மநாப சுவாமிக்கு 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதை செய்யும் வழக்கம் இருந்திருக்கிறது. சுதந்திர இந்தியாவில் மன்னர் மானிய முறை நீக்கப்படும் வரை இந்திய ராணுவமும் இந்தச் சடங்கைப் பின்பற்றியிருக்கிறது. இந்த வரலாற்றையெல்லாம் தாண்டி இப்போது உலகின் பணக்கார சாமி பத்நாப சுவாமி. கோயிலில் உள்ள ஆபரணங்களின் மதிப்பு மட்டும் சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய்.

கோயிலுக்குள் ஆண்கள் சட்டை அணிய அனுமதி இல்லை. போலீஸ்காரர்களுக்குக்கூட இங்கே துண்டும் வேட்டியும்தான் சீருடை. பெண்களுக்கும் புடவையுடன் மட்டுமே அனுமதி. ஆகையால், பேன்ட் அணிந்துவரும் ஆண் - பெண் பக்தர்கள் இருபாலரும் வித்தியாசமின்றி அதற்கு மேல் கோயிலில் தரப்படும் வேட்டியை அணிந்துகொண்டு சுற்றுகிறார்கள். “ஒருகாலத்தில் அரசப் பரம்பரையும் உயர் சாதி என்று சொல்லிக்கொண்டிருந்தவர்களையும் தாண்டி யாரையும் இந்தக் கோட்டை வீதிக்குள்கூட விட மாட்டார்கள். அவ்வளவு சாதிப் பாகுபாடு இங்கிருந்தது” என்று நினைவுகூர்ந்தார் ஒரு பெரியவர். கோயிலை ஒரு சுற்று சுற்றிவிட்டு, ஊரைச் சுற்ற ஆரம்பித்தேன்.

இந்தியாவின் மிகப் பெரிய வாக்கு வங்கி


ஒரு சுவாரஸ்யமான மனிதர் மூலமாக சுவாரஸ்யமான சயோனா சானாவைப் பற்றித் தெரிந்துகொண்டேன். மிசோரமின் பக்த்வாங் கிராமத்தின் ‘செல்வாக்கு' மிக்க குடிமகன் சயோனா சானா. ராஜ வாழ்க்கை என்று சொல்வார்களே... ஜனநாயக நாட்டில் அப்படி ஒரு வாழ்க்கையை வாழ்கிறார் இந்த மனிதர்.

மலைக் குன்றுகளும் ஏற்ற இறக்கங்களும் கொண்ட நிலத்தின் மீது பசும் போர்வையைப் போர்த்தியதுபோல இருக்கும் மிசோரம் மாநிலத்தின் பக்த்வாங் கிராமம்தான் சயோனாவின் ஆளுகைப் பிரதேசம். பெரும்பாலும் இரும்புத் தகடுகளால் அமைக்கப்பட்ட குடில்களிடையே நான்கு தளங்களில் 100 அறைகள், 22 படுக்கை அறைகள், 17 குளியல் அறைகளுடன் விரிந்திருக்கிறது சயோனாவின் கான்கிரிட் வீடான ‘சுவாந்தர் ரன்' - இந்தியாவின் மிகப் பெரிய வாக்கு வங்கி. இங்கேதான் 39 மனைவிகள், 94 பிள்ளைகள், 36 பேரப் பிள்ளைகளுடன் வாழ்வாங்கு வாழ்கிறார் எழுபது வயது சாயோனா, உலகின் மிகப் பெரிய குடும்பத் தலைவர்.