சமஸ் சிந்தனைகளின் அர்த்தம்: தமிழவன்


சமஸின் ‘அரசியல் பழகு’ நூலைப் படித்தபோது என் மனம் மிகுந்த உற்சாகம் கொண்டது.

சமீப காலத்தில் பலர் அவ்வப்போது சமஸ் பெயரைக் குறிப்பிடுவதைக் கேட்டிருக்கிறேன். எனக்கும் சமஸுக்கும் சுமார் 35 வயது வேறுபாடு. சமஸ் நூலைப் படிக்க ஆரம்பித்தபோது, ‘மரபையும் மேற்கையும் கலந்து சுவீகரித்துக்கொண்டு வளர்ந்துள்ளாரே, என் போன்ற ஒருவரிடம் இல்லாத பல விஷயங்களை இவர் கொண்டுள்ளாரே!’ என்ற வியப்பு எழுந்ததோடு, சமஸின் சிந்தனை அடிப்படைகள் எவையாக இருக்கும் என்ற கேள்வி தோன்றியது. அதோடு சமஸின் தலைமுறையில் யார் யார் இவரைப் போல் சிந்திக்கிறார்கள் என்று தேடவும் ஆர்வத்தை ஏற்படுத்தியது.

இன்றைய அரசியலின் பகட்டுக்கும் பதவி போகங்களுக்கும் வெளியில் இலக்கியம், சிந்தனை எனப் பயணப்பட்டு மேற்கத்தியச் சிந்தனைகளின் ஆழமான சில பகுதிகளைத் தமிழோடு சேர்க்க மிகுந்த பிரயத்தனங்கள் செய்பவர்களில் ஒருவன். பெருவாரித் தமிழ்ச் சமூகம் எங்களைப் போன்றவர்களின் போக்குகளை உடனடியாக அங்கீகரிக்காது என அறிந்து சிறுபத்திரிகைகளோடு கடந்த ஐம்பதாண்டுகளாக சிறுவாரித்தன்மையோடு அணி சேர்ந்திருப்பதே எங்களுடைய இயல்பாக இருந்திருக்கிறது. ஒருவகையில் பெருவாரியின் தமிழ் வெளிப்பாட்டை Subvert  செய்பவர்கள், அவர்களோடு உறவற்று இருப்பதில் மகிழ்ந்திருப்பவர்கள் என்றும்கூட எங்களைச் சொல்லலாம். இவ்வளவுக்கும் பல பல்கலைக்கழகங்களில் உயர் பொறுப்புகளில் இருந்தாலும், சிறுவாரியே என்னைப் போன்றவர்கள். சமஸ், பெருவாரித் தமிழ்ச்சமூகத்தோடு தொடர்புடையவர். கலாச்சாரம் மட்டுமே எல்லை என்று என்னைப் போல் குறுகாமல், அரசியலும் சார்ந்து பெருவாரித் தமிழ்ச் சமூகத்தோடு உரையாடும் – எனக்குத் தொடர்பில்லாத – ஊடகத் துறை சார்ந்தவர்.

நாங்கள் இளைஞர்களாக இருந்தபோது, இதழியலாளர் ஏ.என்.சிவராமன் எழுதிய மார்க்சியத்துக்கு எதிரான விஷயங்கள் அவரது சிந்தனைக் கனத்தை கவனிக்க வைத்தாலும் பொதுவான எம்போன்றோரின் திராவிட – மார்க்சிய பங்கெடுப்பு, காரணமாக அவரை மனதளவில் மறுதலித்ததோடு, ‘ஊடகத் துறையில் ஒருவர் சிந்தனையாளராய் வந்துவிடுவாரா என்ன!’ என்ற இளக்காரமான பார்வையையே இருந்தது. அதனால்தான் சமஸின் 13 கட்டுரைகளைக் கவனமாய் படித்த எனக்கு வியப்பும், அதிர்ச்சியும் ஏற்பட்டது. இப்படித் தமிழகத்தில் ஊடகத் துறையானது சிந்தனைத்தளத்தோடு தொடர்புற்றிருக்க முடியும் என்று நான் எதிர்பார்த்திருக்கவே இல்லை. அதனாலேயே சமஸ் மீதான என் வியப்புப் பன்மடங்கு ஆயிற்று.

அறிந்துகொள்வதும் பழகுவதும்: சீனிவாச ராமாநுஜம்

பழகுதல் என்பது செயல்பாட்டோடு தொடர்புகொண்டது. சிந்தனையோடு மட்டுப்பட்டதல்ல. பயிலுதலோடு தொடர்புகொண்டது. அரசியலைப் பயிலச் சொல்கிறார் சமஸ். கருத்தியல்ரீதியான, மொழிரீதியான உலகத்தோடு அவர் தன்னை மட்டுப்படுத்திக்கொள்ள மறுக்கிறார். பல சமயங்களில் சித்தாந்த அரசியல் வெறுமனே கருத்தியல்ரீதியாக, மொழிரீதியாகச் சுருங்கிப்போகிறது. இதிலிருந்து எவ்வாறு வெளியேறுவது என்பது சமஸின் அடிப்படையாக இருக்கிறது.

அரசியலை ஒரு சித்தாந்தமாக, கோட்பாடாக, கருத்தாக முன்வைத்து நம்மை நாம் வரையறுத்துக்கொள்ள முடியும். அது செயல்பாடாக மாறாமல் போகலாம். இந்தப் போதாமையைக் கணக்கில் கொண்டே இந்நூலின் தலைப்பை நாம் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. ஏனெனில், அனுபவங்களோடு தொடர்புகொண்டது அரசியல். உடலோடு தொடர்புகொண்டது. புலன்களோடு தொடர்புகொண்டது. அரசியலைக் கருத்தாக மட்டுமல்லாமல், அதைப் பழக முற்படும்போது நம்முடைய அரசியல் நிலைப்பாடு வாழ்க்கையிலிருந்து துண்டிக்கப்பட்டதாக இல்லாமல், மனிதர்களோடும் அன்றாட வாழ்க்கையோடும் இணைந்ததாகிறது. இதனால்தான், ‘குப்பையிலிருந்து தொடங்குவோம்’ என்கிறார் சமஸ்.