திமுகவின் ‘முதல்வரை ஸ்டிக்கர்ல பாத்திருப்பீங்க, பேனர்ல பாத்திருப்பீங்க, ஏன் டிவியில பாத்திருப்பீங்க.. நேர்ல பாத்திருக்கீங்களா? என்னம்ம்ம்மா இப்படிப் பண்றீங்களேம்மா!' விளம்பரமும் ஜெயலலிதாவின் 68-வது பிறந்த நாள் களேபரங்களும் தேசியக் கவனம் பெற்றிருக்கின்றன. இந்த 5 ஆண்டுகளில் சென்னையிலிருந்து கொடநாடு, பெங்களூருவைத் தாண்டி ஜெயலலிதா சென்ற இடங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். மக்கள் - அரசியல்வாதிகள் இடையேயான தொலைவுக்கான குறியீடு ஜெயலலிதாவின் அரசியல்.
இந்திய அரசியலில் கேலிக்கூத்துகளுக்கு எந்தக் காலத்திலும் பஞ்சம் இருந்ததில்லை. எனினும், ஜெயலலிதாவையும் அதிமுகவினரையும் அந்தப் பட்டியலில் சேர்க்க முடியாது. எட்ட முடியாத உயரத்தில் அவர்கள் இருக்கிறார்கள். வெள்ளத்தில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு நின்ற மக்களுக்குத் தன்னார்வலர்கள் கொண்டுசென்ற நிவாரணப் பொருட்களைப் பறித்து, ஜெயலலிதா ஸ்டிக்கர்களை அதிமுகவினர் ஒட்டியதாகட்டும்; சியாச்சின் பனிச்சரிவில் உயிரிழந்த வீரர் கணேசனுக்கு அஞ்சலி செலுத்தச் சென்ற அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு, கதறியழுத தாயின் கையில் ஜெயலலிதா படத்தைத் திணித்ததாகட்டும்; பிறந்த நாள் கொண்டாட்டம் என்ற பெயரில், கதறக் கதற சிறுமியின் கையில் ஜெயலலிதா உருவப்படம் பச்சை குத்தப்படுவதை அதிமுக அமைச்சர்கள் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மேற்பார்வையிட்டதாகட்டும்; இந்தியாவின் ‘பின்நவீனத்துவ அரசியல்’ பிம்பம் ஜெயலலிதா.
ஆயிரம் அடி உயரத்தில் ஹெலிகாப்டர் தெரியும்போதே அஷ்ட கோணலாய் ஜெயலலிதாவின் அமைச்சர்கள் போடும் கும்பிடுக்கு ஈடு இணையே இல்லைதான். எனினும், முழுப் பெருமையையும் பேசும்போது, ஒரு முன்னோடியை விட்டுவிட முடியாது. அதுவும் அவரது நூற்றாண்டு தருணத்தில். சரியாக 40 ஆண்டுகளுக்கு முன்பு “பச்சை குத்திக்கொள்வீர்! பொதுச்செயலாளர் புரட்சித்தலைவர் ஆணை!” என்று அறிவிப்பு வெளியிட்டவர் எம்ஜிஆர். பச்சையைக் கட்சி விசுவாசச் சின்னமாக அமல்படுத்தியவர்.
திராவிட இயக்கம் வழிவந்தவர்கள் பச்சை குத்திக்கொள்வதா என்று பலர் திடுக்கிட்டார்கள். சிலர் வெளிப்படையாகவே கேட்டார்கள். “இதுவரை எதற்கு யாரைக் கேட்டேன்? இதற்குக் கேட்பதற்கு?” என்பதுபோல எம்ஜிஆர் பதில் அளித்தார். கோவை செழியன், பெ.சீனிவாசன், கோ.விஸ்வநாதன் மூவரும் ‘இது பகுத்தறிவுப் பாதைக்கு முரணானது' என்று கடிதம் எழுதினார்கள். மூவரையும் கட்சியிலிருந்து எம்ஜிஆர் நீக்கினார்.
அதிமுக, இப்படித்தான் வளர்ந்தது அல்லது வளர்த்தெடுக்கப்பட்டது.

