அன்புக்குரிய கேளிர், வணக்கம்!
உலகின் பழமையான விவாதம் ஒன்று இந்தக் கொள்ளைநோய் காலகட்டத்தில் மீண்டும் உயிர் பெறுகிறது. ‘நகரமா, கிராமமா; எது நம் நீடித்த நிம்மதியான வாழ்க்கைக்கு உகந்தது?’ லண்டன், நியூயார்க், மாஸ்கோ, சாவ் பாவ்லோ, மும்பை என்று மனித குலம் நம்பும் கனவு நகரங்கள் பலவும் கரோனா தொற்றுக்கு அதிகம் இலக்காகி இருப்பதும், நகரங்களை ஒப்பிட நெரிசலும் நெருக்கடியும் அற்ற கிராமங்கள் பாதுகாப்பாக இருப்பதும் இந்த விவாதத்துக்குக் கூடுதல் உத்வேகம் தந்திருக்கிறது. உலகின் பல நாடுகளில் நகரங்களில் வாழ்வோர் இன்று அங்கிருந்து வெளியேற ஆர்வத்தோடு இருப்பதாகச் சொல்கிறார்கள். குறைந்தபட்சம் நகரின் மையத்திலிருந்து விளிம்புக்கு, புறநகருக்கேனும் சென்றிட வேண்டும் என்று தெரிவிக்கின்றனர். இத்தகு உணர்வுகளை எப்படிப் புரிந்துகொள்வது?
பொதுவாக, நகரங்களை நவீனத்துடனும், கிராமங்களைப் புராதனத்துடனும் பொருத்திப் பார்க்கும் மனோபாவம் உலகம் முழுக்க நிலவுகிறது. உண்மை அப்படி இல்லை என்றாலும்கூட. அழிவில் புதையுண்டுபோன சிந்து சமவெளி, கீழடி தொடங்கி தம்மை மீட்டுருவாக்கியபடியே வந்திருக்கும் ஏதென்ஸ், ரோம், லண்டன் வரை நமக்குச் சொல்வது, நகரங்களின் புராதனத்தையும்தான். தீவிரமான விமர்சனங்களை நகரங்கள் மீது கொண்டிருந்தாலும் ஏன் மனித குலம் இடையறாது நகரங்களை உருவாக்கிக்கொண்டே இருக்கிறது? ஏனென்றால், வாழ்க்கையை நேற்றைய புதுமையும்கூட மூடிடாத வகையில் ஒவ்வொரு நாளும் புதுப்பிக்கும் பண்பை நகரங்கள் பெற்றிருக்கின்றன. அப்படியென்றால், கிராமங்கள் எப்படி நீடிக்கின்றன? அவை இன்றைய புதுமையையும் வாழ்க்கையின் நெடிய பழமையோடு இணைக்க முற்படுகின்றன. ஆக, மனித குலத்தின் புராதன புதுப்பிப்பு சக்தி நகரங்கள் என்றால், புராதனத்தைத் தக்கவைக்கும் சக்தி கிராமங்கள். இரண்டுக்கும் இடையிலான சமநிலை முக்கியம்.