சந்திப்புகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சந்திப்புகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கொள்ளைநோய், வறுமைக்கு அடுத்துக் காத்திருக்கிறது குற்றம்: ஆ.சிவசுப்பிரமணியன் பேட்டி


நம் மக்களின் வழக்காறுகளில் கொள்ளைநோய்கள் என்னவாகப் பதிவாகியிருக்கின்றன? கரோனா காலத்திய உலகளாவிய போக்குகளைக் கடந்த காலத்தின் வழி புரிந்துகொள்ள முடியுமா? சமூக ஆய்வாளர் ஆ.சிவசுப்பிரமணியனுடன் பேசினேன். பேராசிரியர் இப்போது மதுரையில் இருக்கிறார். நள்ளிரவிலும் தூங்காத நகரம் இப்போது நண்பகலிலும் கொஞ்சம் அயர்ந்திருக்கிறது.

மதுரை என்றதுமே சிலப்பதிகாரம் நினைவுக்கு வந்துவிடுகிறது, சங்க காலம் நினைவுக்கு வந்துவிடுகிறது, திருவிழாக்கள் நினைவுக்கு வந்துவிடுகின்றன. தொன்மையான மதுரை நகரம், தமிழர்களின் நினைவுகளில் இடையறாது ஒளிர்ந்துகொண்டிருக்கும் நகரம். வீட்டுக்குள் இருக்கும் உங்கள் நினைவுகளில் ஊரடங்கிய மதுரை எப்படியாகக் காட்சியளிக்கிறது?
ஒளி மங்கியதாகத் தோன்றுகிறது. அந்த ஒளி வேறு எதுவும் இல்லை, மக்களுடைய இடையறாத இயக்கம்தான் அது. வரலாற்றில் பல அடக்குமுறைகளையும் எதிர்கொண்ட நகரம்தான் இது. மக்களை ஒடுக்கிய ஆட்சியாளர்களின் அன்றைய அடக்குமுறைகள் எப்படி இருந்திருக்கும்? இந்த ஊரடங்கு அதைக் காட்டுவதுபோல இருக்கிறது.

பஞ்சம்தான் பெரிய கொள்ளைநோய்: கி.ரா. பேட்டி

படம்: புதுவை இளவேனில்

நாம் வாழும் காலத்தின் முதுபெரும் படைப்பாளியும் நூற்றாண்டை நெருங்குபவருமான கி.ராஜநாராயணன் இந்த ஊரடங்கு காலத்தில் எப்படி இருக்கிறார்? எத்தனையெத்தனை நோய்களையும் மக்களின் வருத்தப்பாடுகளையும் பார்த்தவர் அவர்! இந்த ஊரடங்கு காலத்தை அவர் எப்படிப் பார்க்கிறார்? நம்முடைய மூதாதையோரிடமிருந்து நாம் பெற்றுக்கொள்ள இன்றைக்கு ஏதேனும் செய்தி இருக்கிறதா? புதுச்சேரியில் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருப்பவருடன் பேசினேன்.

ஆந்திர முடிவு தவறு… ஒரு மாநிலம் – ஒரு தலைநகரம் ஏற்பாடே சிறந்தது!



இந்தி பேசாத மாநிலங்களில் பெரியதாக இருந்ததும், மொழிவழி எல்லையைக் கடந்து பிரிவினையை எதிர்கொண்டதுமான ஆந்திரம் இப்போது மூன்று தலைநகரங்கள் எனும் முக்கியமான முடிவை எடுத்திருக்கிறது. ஆந்திரத்திலிருந்து பிரிந்த தெலங்கானாவுடன் ஹைதராபாத் சென்றுவிட்ட நிலையில், புதிய தலைநகரமாக அமராவதியைக் கட்டமைத்தது சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திர அரசு. இப்போது ஆட்சி மாற்றத்துக்குப் பின் ஜெகன்மோகன் ரெட்டி அரசு, சட்டமன்றத்தைக் கொண்ட சட்டமன்றத் தலைநகராக அமராவதியையும், தலைமைச் செயலகத்தைக் கொண்ட நிர்வாகத் தலைநகராக விசாகப்பட்டினத்தையும், உயர் நீதிமன்றத்தைக் கொண்ட நீதித் துறைத் தலைநகராக கர்னூலையும் அறிவித்திருக்கிறது. சந்திரபாபு நாயுடுவின் அமராவதி கனவைக் குலைக்கும் வகையிலான ஜெகன்மோகன் ரெட்டியின் இந்த முடிவுக்குப் பின், பல்வேறு தனிப்பட்ட அரசியல் கணக்குகள் ஆந்திர அரசியலில் சொல்லப்பட்டாலும், அவற்றைத் தாண்டி நிர்வாகரீதியில் இந்த முடிவை எப்படிப் பார்ப்பது? இது எத்தகைய தாக்கங்களை உருவாக்கலாம்? அரசு நிர்வாகத் துறையில் நெடிய அனுபவம் கொண்டவரும், விமர்சகருமான ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி அஷோக் வர்த்தன் ஷெட்டி பேசுகிறார்.

அண்ணாவுக்கு எப்பவும் ஒரு இடம் இருக்கு - ந.முத்துசாமி பேட்டி


நவீன நாடகம் – சிறுகதை இரண்டிலும் அபாரமான சாதனைகளை நிகழ்த்திய ஆளுமையான ந.முத்துசாமியின் மனைவி அவயாம்பாள் இரு நாட்களுக்கு முன் காலமானார். ஒரு படைப்பாளியின் மனைவி என்கிற சராசரி அடையாளத்தைத் தாண்டிய முக்கியத்துவம் அவருக்கு உண்டு. முத்துசாமி ஒரு இயக்கமாக வாழ, அவருடைய ‘கூத்துப்பட்டைறை’ சமூக நீதியின், சமத்துவத்தின் பண்பைப் பெற தன்னையும் அர்ப்பணித்துக்கொண்டவர் அவயாம்பாள். சகலரும் சமையலறை வரை சகஜமாகப் புழங்கும் வீடாகவே அவர்கள் வீடு இருந்தது. தமிழ்நாட்டு நவீன படைப்பாளிகள் பலரையும் திராவிட இயக்கத்தின் ஒவ்வாமை சூழ்ந்திருந்த நாட்களில், தன்னுடைய வீட்டின் வரவேற்பறையில், அண்ணாவுடனான புகைப்படத்தை மாட்டி வைத்திருந்தவர்கள்; தன்னை அண்ணாவின் தொண்டராகவும் திமுக ஆதரவாளராகவும் வெளிப்படையாகக் காட்டிக்கொண்டவர்கள் முத்துசாமி – அவயாம்பாள் தம்பதி. அண்ணாவின் வரலாற்றைப் பேசும் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூலுக்காகப் பேட்டி எடுக்கச் சென்றிருந்தபோது உடல்நலம் குன்றிய நிலையில் இருந்தார் முத்துசாமி. ஆனாலும், அண்ணா என்ற சொல் தந்த உத்வேகம் அவரை உற்சாகத்தோடு பேசவைத்தது. முத்துசாமியின் மரணத்துக்கு முன் அவரிடம் எடுக்கப்பட்ட கடைசிப் பேட்டி இது. இடையிலேயே அவயாம்பாளும் சேர்ந்துகொண்டார்.

இந்திய மக்களின் கூட்டுணர்வே யதேச்சாதிகார பாஜகவை விரட்டியடிக்கும்: ப.சிதம்பரம்


வரலாற்று முக்கியத்துவம் மிக்க 2019 தேர்தலில் மக்கள் தரப்பிலிருந்து கொண்டாடத்தக்க விஷயங்களைப் பட்டியலிட்டால், காங்கிரஸின் தேர்தல் அறிக்கை அவற்றில் முதன்மை பெறும். ‘இது மக்களின் அறிக்கை’ என்ற பிரகடனத்துடன் வந்திருக்கும் இது, நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் 174 இடங்களில் விவசாயிகள், ஆசிரியர்கள், தொழில்முனைவோர் என்று பல்வேறு தரப்பு மக்களையும் சந்தித்து அவர்களிடமிருந்து பெற்ற கோரிக்கைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறது காங்கிரஸ். இந்தியாவில் இப்படி விரிவாக மக்களிடம் கருத்துகளைப் பெற்று ஒரு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படுவது இதுவே முதல் முறை. ஆளும் பாஜகவின் தேர்தல் அறிக்கை புத்தகத்தின் அட்டையை மோடி எனும் ஒரு தனிமனிதரின் படம் பிரதானமாக ஆக்கிரமித்திருக்க, காங்கிரஸின் தேர்தல் அறிக்கை புத்தகத்தின் அட்டையோ பல்லாயிரக்கணக்கான மக்களின் முகங்களைத் தாங்கி வந்திருக்கிறது. பாஜக அறிக்கை தேசியத்தையும் தேச அரசின் நலன்களையும் பிரதானப்படுத்தியிருக்க, மனித உரிமைகளையும் சமூக நலத் திட்டங்களையும் பிரதானப்படுத்தியிருக்கிறது காங்கிரஸ் அறிக்கை. இந்த அறிக்கை தயாரிப்பில் முக்கியப் பங்களித்த காங்கிரஸ் சித்தாந்த முகங்களில் ஒருவரான ப.சிதம்பரத்துடன் தேர்தல் தொடர்பில் உரையாடியதிலிருந்து...

தமிழ்நாட்டில் அறிவியக்கத்தின்மூலம் ஜனநாயகத்தைப் பரவலாக்கியவர் அண்ணா: ஆ.சிவசுப்பிரமணியன் பேட்டி



நவீன அரசியலில் தமிழ்நாடு எழுச்சி பெற்ற நூற்றாண்டின் சாட்சியங்களில் ஒருவர் ஆ.சிவசுப்பிரமணியன். நம் காலத்தின் முக்கியமான சமூகவியல் ஆய்வாளர்களில் ஒருவரும் இடதுசாரி அறிவுஜீவியுமான சிவசுப்பிரமணியன், தமிழ்நாட்டின் வெகு மக்களுக்கு எப்படி ஜனநாயகத்தைக் கற்பிப்பதாகவும் வளர்த்தெடுப்பதாகவும் அண்ணாவின் அரசியல் இருந்தது என்பதையும் திராவிட இயக்கம் எப்படி இங்கே ஒரு அறிவொளியை உண்டாக்கியது என்பதையும் மிக விரிவாகப் பேசினார். பேட்டியின் சுருக்கமான வடிவம் இது.

அண்ணாவின் காலத்துக்குக் கொஞ்சம் முன்பிருந்து நாம் கதையைத் தொடங்கலாமா?
அரசியல், ஜனநாயகம் இவையெல்லாம் வெகுமக்களுக்குப் புதிதுதானே! சுதந்திர இந்தியாவில்தான் சாமானியருக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்டது. சரியாக, ஜனவரி 26, 1950-ல் இந்தியா குடியரசாகிறது; நான்கு மாதங்களுக்கு முன்னால் செப்டம்பர் 17, 1949 அன்று திமுக பிறக்கிறது. முதல் தேர்தலில் திமுக போட்டியிடவில்லை, 1957-ல் நடந்த இரண்டாவது தேர்தலில்தான் அது போட்டியிட்டது என்றாலும் ஒரு முழு அரசியல் கட்சிக்கான ஆகிருதியோடுதான் முன்பிருந்தே அது நடந்துகொண்டது. பேச்சு, எழுத்துக்கு அது தீவிரமான கவனம் கொடுத்தது. என்னுடைய சிறுவயது நினைவிலிருந்து சொல்கிறேன். திருநெல்வேலியில் அப்போதே மாணவர்கள் மத்தியில் திராவிட இயக்கப் பத்திரிகைகளுக்குப் பெரிய செல்வாக்கு இருந்தது. ‘திராவிட நாடு’, ‘முரசொலி’, ‘நம்நாடு’, ‘மன்றம்’, ‘தென்றல்’, ‘இன முழக்கம்’, ‘போர்வாள்’ இப்படி நிறையப் பத்திரிகைகள் வரும். பள்ளிக்கூட மாணவர்களே சொந்தக் காசிலிருந்து ‘திராவிட நாடு’ வாங்கும் அளவுக்கு அந்தக் காலகட்டத்தில் அண்ணாவுக்கு ஒரு மவுசு இருந்தது. வாங்குவது மட்டுமல்ல; மனப்பாடமே செய்துவிடுவார்கள். அண்ணாவின் மொழிநடையும் இயல்பாகவே மனப்பாடமாகும். நான் பத்தாம் வகுப்பு படித்தபோது என்று நினைக்கிறேன். சிலப்பதிகாரத்தைப் பற்றி தேர்வில் ஒரு கேள்வி வந்தது. ‘சேரநாடு செந்நெல்லும் செங்கரும்பும் செழித்து வளர்ந்து வளம் கொஞ்சும் நாடு... எழிலுறத் திகழும் பொழில்கள், அப்பொழில்களைச் சுற்றி அடுக்கடுக்கான மாளிகைகள். அம்மாளிகைகளின் உள்ளே கலகலவென ஒலியெழுப்பிக் களிப்படையும் காரிகைகள், இத்தனையும் படைத்துச் செல்வத் திருநாடாய் இன்பத் திருவீடாய் இருந்தது சேர நாடு…” இப்படி! (கடகடவென ஒப்பிக்கிறார்) விடைத்தாள் கொடுக்கும்போது ஆசிரியர் என்னை அழைத்தார். எனக்கோ பயம். “திராவிட நாட்டைப் படிச்சி மனப்பாடம் பண்ணுனியா?” என்றார். தலையாட்டினேன். விடைத்தாளைக் கையில் கொடுத்துவிட்டார். இப்படி ஆசிரியரும் மாணவரும் ஒன்றுபோல் படிக்கும் சூழல் அன்றிருந்தது. பேச்சுப் போட்டி என்றால், திமுக பாணியில்தான் மாணவர்கள் பேசுவார்கள். நாடகப் போட்டி என்றால் அண்ணா, கருணாநிதி எழுதிய நாடக வசனங்களைத்தான் பேசினார்கள். பொதுவாக, அந்நாட்களில் மூன்று இயக்கங்கள் மாணவர்களிடம் செல்வாக்குப் பெற்றிருந்தன. பெரிய அளவில் திமுக, சிறு துளி மாதிரி தமிழரசுக் கழகம், இரண்டுக்கும் நடுவே பொதுவுடமை இயக்கம். காங்கிரஸுக்குப் பெரியவர்கள் மத்தியில் இருந்த செல்வாக்கு மாணவர்கள் மத்தியில் இருந்ததாகச் சொல்ல முடியாது. பெரியாருக்குத் தீவிர ஆதரவாளர்கள் இருந்தார்கள். அதேசமயம், அது பெருங்கூட்டம் என்று சொல்ல முடியாது. திராவிடர் கழகத்தின் வளர்ச்சியிலேயே அண்ணாவுக்குப் பங்கிருந்தது. ஒரு சரியான தருணம் முகிழ்ந்தபோது சமூக மறுமலர்ச்சி இயக்கமான அதிலிருந்து அரசியல் இயக்கத்தை உருவாக்கிய அண்ணா, அரசியல் களத்தை முழுவதுமாகத் தனதாக்கிக்கொண்டார். திமுக கூட்டங்களிலும் சரி, பத்திரிகை களிலும் சரி, பெரிய வசீகரம் தமிழ்.

தெளிவான சிந்தனையாளராகவும் முதிர்ச்சியான ராஜதந்திரியாகவும் வெளிப்பட்டார் அண்ணா: என்.ராம் பேட்டி


அண்ணாவின் அமெரிக்கப் பயணத்தின்போது அவரை அறிந்துகொண்டவர்களில், பின்னாளில் இந்திய அளவில் ஊடகத் துறையில் ஜொலிப்பவராக மாறிய ஒரு தமிழ்நாட்டுக்காரரும் இருந்தார். ‘தி இந்து’ குழுமத்தின் தலைவரான என்.ராம்தான் அவர். அப்போது அவர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ஊடகவியல் படிப்பதற்காக இந்தியாவிலிருந்து சென்றிருந்த முதல் தலைமுறையைச் சேர்ந்த மாணவர். அண்ணாவுடனான சந்திப்புதான் ராமுக்கு, அண்ணா மீது மட்டுமல்லாமல், திராவிட இயக்கத்தின் மீதான வலுவான ஈர்ப்புக்கும் காரணமாகிறது. திராவிட இயக்கத்தை ஆய்வுநோக்கில் ஆராயத் தொடங்கியவர், காலப்போக்கில் அந்த இயக்கத்துக்கான தேவையையும் நியாயத்தையும் பேசுபவர் ஆனார். திராவிட இயக்கத்தவரால் ‘மவுண்ட் ரோடு மஹாவிஷ்ணு’ என்று குறிப்பிடப்பட்ட ‘தி இந்து’ நாளிதழின் வரலாற்றுப்போக்கில் பிற்பாடு ஒரு திருப்புமுனையை உண்டாக்கியவரான ராம், அண்ணாவின் அமெரிக்கப் பயணத்தை நினைவுகூர்ந்தார்.

திராவிட இயக்கம் மேலான தீண்டாமைக்குத் தமிழிலக்கியவாதிகளுடைய பிராமணியப் பார்வைதான் காரணம்- கி.ரா. பேட்டி


தமிழ்நாட்டின் வெகுமக்கள் மொத்தமாக அண்ணாவைப் பேரறிஞர் என்று கொண்டாடியிருந்திருக்கலாம். ஆனால், நவீனத் தமிழிலக்கிய கர்த்தாக்களில் பெரும் பகுதியினர் மத்தியில் அவர் மீது கீழான பார்வையே அக்காலத்தில் இருந்தது. “அண்ணாவின் குப்பைப் புத்தகங்களெல்லாம் அவரது மரணத்தை எருவாகக் கொண்டு, குருக்கத்திப் பூக்களாய் மலர்ந்துவிடப்போவதில்லை. அவரை அறிஞர் என மூடர்களே அழைக்கலாயினர். அவரைப் பேரறிஞர் என்று பெருமூடர்களே அழைக்கலாயினர்” என்று அண்ணாவின் மரணத்தையொட்டி - எழுத்துலகில் மட்டும் அல்லாமல், சமூக அரசியல் தளத்திலும் கொண்டாடப்பட்ட எழுத்தாளுமையான - ஜெயகாந்தன் எழுதிய குறிப்பை இங்கே ஓர் உதாரணமாகக் கொள்ளலாம். அண்ணாவைப் பற்றியோ, அவர் வழிவந்த திராவிடக் கட்சிகளின் தலைவர்களைப் பற்றியோ ஆக்கபூர்வமான மதிப்பீடுகள், விமர்சனங்கள், இடையீடுகள் நம்முடைய அறிவுசார் தளத்தில் நடக்காமல்போனதும் திராவிட இயக்கத்தினருக்கும் நவீன இலக்கியவாதிகளுக்கும் அக்கால கட்டத்தில் ஒரு நல்லுறவு உருவாகாமல்போனதும் பெரும் துரதிர்ஷ்டம்தான். ஆனால், திட்டவட்டமான ஒரு தீண்டாமை இதன் பின்னணியில் இருக்கவே செய்தது. நம் காலத்தின் தலைசிறந்த கதைசொல்லியான கி.ராஜநாராயணனுடன் இது தொடர்பாக உரையாடினேன்.

சாமானிய இந்தியனுக்கான அரசியல் முன்னுதாரணம் அண்ணா- கொடிக்கால் ஷேக் அப்துல்லா பேட்டி




தமிழ்நாட்டு அரசியலில் அரிதான அனுபவங்களைக் கொண்டவர்களில் ஒருவர் கொடிக்கால் ஷேக் அப்துல்லா. ஓர் ஏழை இந்துவாக, ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவராக, செல்லப்பாவாகப் பிறந்த கொடிக்கால், தமிழ்நாட்டின் தலித் அரசியல் எழுச்சி முகங்களில் ஒன்றாக அறியப்பட்டவர். சாதிக்கு எதிரான தன்னுடைய போராட்டத்தின் ஒரு பகுதியாகத் தனது ஐம்பது வயதுக்கு மேல் அம்பேத்கர் வழியில் இந்து மதத்தைத் துறந்தவர், இஸ்லாத்தை வரித்துக்கொண்டார். பொதுவுடைமை இயக்கம்தான் இவரது ஆரம்ப அரசியல் களம். குமரி மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளராக இருந்த காலகட்டத்தில் போர்க்குணம் மிக்க போராட்டங்களை முன்னெடுத்த வரலாறு அவருக்கு உண்டு. அதன் பின் ஒடுக்கப்பட்டோர் மத்தியில் நம்பிக்கை முகமாகப் பார்க்கப்பட்ட இளையபெருமாளுடன் இணைந்து பணியாற்றினார். சிறுபான்மையின முன்னேற்றப் பயணத்திலும் இணைத்துக்கொண்டவர். மைய நீரோட்ட அரசியல் பாதையே விளிம்புநிலையினருக்கான பாதை என்பவர். சுதந்திர  இந்தியாவின் எழுபதாண்டு வரலாற்றுக்கான சாட்சியமான கொடிக்கால், தன்னுடைய பயணம் நெடுகிலும் காங்கிரஸையும் திராவிட இயக்கத்தையும் விமர்சனபூர்வமாக அணுகியவர், வாழ்வின் பிற்பகுதியில் காந்தியையும் அண்ணாவையும் அடையாளம் கண்டார்.
மொழியுரிமையில் உங்களுக்குள்ள பிடிப்பின் காரணமாகவே தெற்கெல்லைப் போராட்டத்தில் சிறை சென்றிருக்கிறீர்கள். சாதி எதிர்ப்பும் உங்கள் இயல்பிலேயே இருக்கிறது. அப்படியிருக்க, திராவிட இயக்கம் எப்படி உங்களை இழந்தது?
முதலாவது விஷயம் பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கை. நான் பெரிய கடவுள் பக்தன் அல்ல என்றாலும் ஆன்மிகம் எங்கோ மனிதனுக்கு அவசியம் என்பதை எப்போதுமே உணர்ந்திருக்கிறேன். இரண்டாவது, இந்த திராவிட நாடு என்று சொல்லப்பட்ட இன்றைய ஐந்து மாநிலங்களில் நாங்கள் திருவிதாங்கூர் ராஜ்ஜியத்தில் இருந்தோம். மலையாள மொழி ஆதிக்கமும், மேல் சாதி ஆதிக்கமும் இணைந்து எங்களைப் பல வழிகளில் இம்சித்துவந்த அன்றைய காலகட்டத்தில், திராவிட நாடு அமைந்தால் திருவிதாங்கூர் ராஜ்ஜியம் எப்படியானதாக மாறும் என்பதில் குழப்பம் இருந்தது. நான் சொல்லும் அந்த இம்சைகளின் தீவிரத்தையும் இங்குள்ள தமிழர்களின் எதிர்மனோநிலையையும் நீங்கள் புரிந்துகொள்ள ஒரு உதாரணம் சொல்கிறேன். அப்போது பிரஜா சோஷலிஸ்ட் கட்சியின் பட்டம் ஏ.தாணுப்பிள்ளை ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. அது தமிழர் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது என்று சொல்லியும் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளை சென்னை மாகாணத்துடன் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் அந்தக் கட்சியின் கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினரான டி.எஸ்.ராமசாமிப் பிள்ளையே சொந்தக் கட்சிக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவந்து  ஆட்சிக் கலைப்புக்கு வழிவகுத்தார் என்றால், இதை உங்களால் நம்ப முடிகிறதா? 
அப்படிப்பட்ட நாட்களில் ம.பொ.சி. தலைமை வகித்த தமிழரசுக் கழகம், திராவிட இயக்கத்தைக் காட்டிலும் கூடுதல் ஈர்ப்பைத் தருவதாக இப்பகுதியைச் சேர்ந்த எங்களுக்கு இருந்தது. ஆனால், அங்கும் நான் தொடர்ந்து இருந்திடவில்லை. ‘மொழி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் – தமிழ் பேசும் பகுதிகள் சென்னை மாநிலத்துடன் இணைக்கப்பட வேண்டும்’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி சிறை சென்றேன் இல்லையா, சிறைக்குள் கிடைத்த அறிமுகங்களும் அனுபவங்களும் வர்க்க மற்றும் சாதி அடிப்படையிலான போராட்டத்தை முன்னெடுக்கும் சக்தி, நான் சார்ந்திருந்த தமிழரசுக் கழகத்தில் இல்லை என்பதை விரைவிலேயே உணர்த்திவிட்டன.  சிறையில் நான் சந்தித்த இடதுசாரி இயக்கத்தினர் “சாதி, இனம், வர்க்க விடுதலைக்குப் பரந்துபட்டு சிந்திக்கும் ஒரு அமைப்பின் கீழ் பணியாற்ற வேண்டும் – அதற்கு ஒரே வழி பொதுவுடைமை இயக்கம்” என்றார்கள். ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தை உருவாக்கக் கனவுகாணும் சங்கம்புழாவின்  ஒரு கவிதையை அவர்கள் வாசித்தபோது கம்யூனிஸ்ட் ஆகிவிட்டேன். அடுத்த இருபத்தைந்து வருஷங்கள் அதுவே என் இயக்கமாக இருந்தது.
அண்ணாவை முதன்முதலாக எப்போது, எங்கு பார்த்தீர்கள்?
திருத்தமிழகம் விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவாக வடசேரியில் உள்ள பெரியாரசிங்கம் தெருவில் நடந்த கூட்டத்துக்கு வந்திருந்தார். தேதிகூட ஞாபகம் இருக்கிறது 30.7.1954. அன்றுதான் அண்ணாவைப் பார்க்கிறேன். ஆளையே அடித்துப்போடுவதாக அவருடைய பேச்சு இருந்தது. பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று கூறப்பட்டாலும், எப்படி வடக்கத்திய - சனாதன ஏகாதிபத்தியத்தின் கீழ் நாடு இருக்கிறது – ஏன் தமிழ் மக்களுக்கும் ஏனைய திராவிட இனத்தினருக்கும் சுயாட்சி வேண்டும் என்று பேசினார். இன்றைக்குத் திரும்பப் பார்க்கும்போது அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் எவ்வளவு தீர்க்கதரிசனம் என்பது புரிகிறது.

பிரிட்டிஷ் முத்த அதிர்ச்சியிலிருந்தே தமிழனால் இன்னும் மீள முடியவில்லை - இளைய அப்துல்லாஹ் பேட்டி




பிரிட்டனில் தமிழர் வாழ்க்கை என்னவாக இருக்கிறது? பலருடன் உரையாடினேன் என்றாலும், ஒரு பேட்டி விசேஷமாக எனக்குத் தோன்றியது. கவிஞர், சிறுகதையாசிரியர், ஊடகவியலாளர் எனப் பன்முக ஆளுமையான இளைய அப்துல்லாஹ்வுடனான உரையாடல்தான் அது. முல்லைத்தீவில் பிறந்த ஸ்ரீபாலமுருகன் பின்னாளில் எப்படி இளைய அப்துல்லாஹ் ஆனார் என்ற அவருடைய இளமைக் கால இலங்கைக் கதையே ஒரு நாவலுக்கான களம். அவர் ஐரோப்பா வந்து சேர்ந்தது, பிரிட்டனைத் தன்னுடைய நாடாக்கிக்கொண்டது, இங்கு தன்னை நிலைநிறுத்திக்கொள்ள இன்றளவும் அவர் பட்டுக்கொண்டிருக்கும் பாடுகள் யாவையும் அவர் வாய்வழி கேட்கும்போது சுவாரஸ்யமாக்கிவிடுவது அவருடைய கதையாடல் திறன் என்றாலும், முதுகுத்தண்டைச் சில்லிடவைக்கும் வலி மிகுந்தவை அவை. ‘லண்டன் உங்களை வரவேற்பதில்லை’ என்ற இவருடைய கட்டுரை நூல் பிரிட்டனின் இன்னொரு முகத்தைச் சொல்வது.

ஒருநாள் தொலைக்காட்சி அறிவிப்பாளர், மறுநாள் டாக்ஸி ஓட்டுநர்... வாழ்க்கை எப்படி இருக்கிறது?
பிரிட்டன் வந்து இருபது வருஷம் ஆகிறது. ஒரு கன்டெய்னரில் வந்து லண்டனில் இறங்கினேன். டெலிபோன் காட் விற்றேன். ஊருக்கு அப்போதெல்லாம் தொலைபேசி அட்டை மூலம்தான் போன் பேச முடியும். அதில் வாரத்துக்கு 200 பவுண்டு சம்பாதித்தேன். பிறகு, உருளைக்கிழங்கு ஆலையில் வேலை செய்தேன். அடுத்து, பெட்ரோல் நிலையம். பிறகு, ‘தீபம் தொலைக்காட்சி’. 12 வருஷங்களுக்குப் பிறகு ‘தீபம் தொலைக்காட்சி’யைப் புதிய நிறுவனம் ஒன்றுக்கு அதன் உரிமையாளர்கள் விற்றார்கள். அதற்குப் பிறகு வேலை நெருக்கடி ஏற்பட்டது. பழைய வேலையாட்களை நீக்கினார்கள். நான் விமான நிலையத்துக்கு ஆட்களை ஏற்றி இறக்கும் டாக்ஸி ஓட்ட ஆரம்பித்தேன். இப்போது ஐபிசி தொலைக்காட்சியில் வேலை பார்த்தபடி டாக்ஸியும் ஓட்டுகிறேன். இது நல்ல வித்தியாசமான அனுபவம். எவ்வளவோ கஷ்டங்களைப் பார்த்துவிட்டபடியால் இதில் கஷ்டம் ஏதும் தெரியவில்லை. உருளைக்கிழங்கு ஆலையில் இருந்தேனே, அங்கு எனக்கு என்ன வேலை தெரியுமா? இயந்திரத்திலிருந்து தோல் உரித்து வரும் உருளைக்கிழங்கில் இருக்கும் கறுப்புப் புள்ளிகளை அகற்றும் வேலை. சின்ன கூரான கத்தி கொடுப்பார்கள். கத்தி கையில் வெட்டும். ரத்தம் கொட்டும். கை குளிர் தண்ணீரில் எரியும். கிழங்குகளை வெட்ட வேண்டும். வெட்டி வெட்டி கைகள் குளிரில் விறைத்துப்போகும். அந்த வட இந்திய முதலாளி பதினைந்து வினாடிகள்கூடச் சும்மா இருக்க விடமாட்டார். ஒரு மணி நேரத்துக்கு இரண்டு பவுண்டுதான் சம்பளம். நான் வேலைக்குப் புதிது என்பதால், இந்த நாட்டின் குறைந்தபட்சக் கூலிச் சட்டவுரிமை இதெல்லாம் எதுவும் அப்போது தெரியாது. அந்த வேலையோடு ஒப்பிட இதுவெல்லாம் ஒன்றுமே இல்லை. ஒரு எழுத்தாளனால் சும்மா இருக்க இயலாது. இந்த அனுபவங்கள் எல்லாம் அதற்கு நன்றாகவே தீனி போடுகின்றன. அனுபவங்களைச் சொல்ல இந்தப் பேட்டியில் இடம்போதாது. அனலைத்தீவுக் கடலில் மீன் பிடித்திருக்கிறேன், மாத்தளையில் பாமஸி வேலை, உடுப்பிட்டியில் தச்சு வேலை, வல்வெட்டித்துறையில் கொத்து வேலை, ‘சிந்தாமணி’ பத்திரிகையில் எழுத்து வேலை, இலங்கை வானொலியில் நிகழ்ச்சி வேலை… இந்த இடத்துக்கு வந்து சேர எவ்வளவு நீண்ட பயணம்… அப்பாடா!

பிரதிபலன் பாராது கொடுப்பதைத்தான் டாடாக்களிடம் இந்தியத் தொழில் சமூகம் கற்றுக்கொள்ள வேண்டும்: சுந்தர் சருக்கை பேட்டி


சுந்தர் சருக்கை, சமகாலத்தின் குறிப்பிடத்தக்க தத்துவவியலாளர்களில் ஒருவர். டாடா நிறுவனத்தின் வரலாற்றை சமூக - தத்துவப் புலத்தில் ஆராய்ந்தவர். டாடா நிறுவனம் 150-வது ஆண்டைக் கொண்டாடும் இந்தத் தருணத்தில் நவீன இந்தியாவுக்கு, டாடா என்ன பங்களிப்பு செய்திருக்கிறது என்று பேசினோம்.

திமுக மாவட்டச் செயலாளர் போர்த் தளபதி மாதிரி தயாராக இருக்க வேண்டும்: பொன்முடி


திமுகவின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான க.பொன்முடி அரசியல் அறிவியல் பட்டதாரி. கல்லூரி ஆசிரியராக இருந்தபோது, திராவிடர் கழகத்தின் பகுத்தறிவு ஆசிரியர் அணியின் மாநிலத் தலைவராகவும் இருந்தவர். திமுகவின் உயர்நிலைக் குழுவிலும் கருணாநிதியின் அணுக்க வட்டத்திலும் இடம்பெற்றிருக்கும் பொன்முடி, இன்றும் விழுப்புரம் மாவட்டத்தின் செயலாளராகவும் நீடிப்பவர். கட்சியின் மேல்மட்டம் தொடங்கி வேர்மட்டம் வரை முழு அமைப்போடும் நேரடித் தொடர்பில் இருப்பவர், திமுக அமைப்புரீதியாக எப்படிச் செயல்படுகிறது என்பதை விவரித்தார்.

அனைத்துச் சமூகத்தினருக்குமான இயக்கமாக பாமக உருவெடுக்கும்: ராமதாஸ்



பிடிவாதமாக சென்னைக்கு வெளியே தன்னை இருத்திக்கொண்டிருக்கும் தலைவர் ராமதாஸ். திண்டிவனம் – புதுச்சேரி சாலையில் உள்ள தைலாபுரம் செல்லும் பயணம் தமிழ்நாட்டின் அரசியல் சூழலுக்கும் சமூக, பொருளாதாரச் சூழலுக்கும் உள்ள பிணைப்பைக் குறுக்குவெட்டாகப் பார்க்க உதவுகிறது. அகலமான சாலையின் இருபுறங்களி
லும் நீளும் வயற்காட்டின் பெரும் பகுதி தரிசாகக் கிடக்கிறது. பிரதான சாலையிலிருந்து பிரிபடும் கிராமத்துச் சாலைகளின் நுழைவாயிலை ஒட்டி ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் கொடி மரங்கள், பிராந்தியத்தின் அரசியலைத் தீர்மானிக்கும் சமூகச் சூழலைச் சொல்கின்றன. சிறுத்தைகள், சிங்கங்கள் படங்களும் பொம்மைகளும் மாறி மாறி கடக்கின்றன. சாதிக்கு அப்பாற்பட்டு பெரும்பான்மையான மக்கள் வறண்ட கண்களுடனேயே நிற்கிறார்கள். வழிநெடுகிலும் தென்படும் மாடுகள் விவசாயிகளை மேய்ச்சல் எப்படி காத்துக்கொண்டிருக்கிறது என்பதைச் சொல்கின்றன. ராமதாஸ் வீட்டு எல்லையின் தொடக்கத்தில் மார்க்ஸ், பெரியார், அம்பேத்கர் மூவரின் சிலைகளும் நிற்கின்றன. மதில்கள் உயர்ந்த, மரங்கள் அடர்ந்த வீட்டில் வரவேற்கிறார் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ்.

இந்தியாவின் மகத்தான இடதுசாரிகள் காந்தி, பெரியார், அம்பேத்கர்: கோவை ஞானி பேட்டி


இந்தியாவுக்கேற்ற பொதுவுடைமை இயக்கத்தை உருவாக்கும் சிந்தனைப் பயணத்தில் மிக முக்கியமான ஒரு புள்ளி கோவை ஞானி. இந்தியத் தளத்தில் மார்க்ஸையும் பெரியாரையும் இணைப்பது ஞானியினுடைய சிந்தனையின் மையம். 30 ஆண்டுகளுக்கு முன், அவருடைய 50-களில் நீரிழிவு நோய் முழுமையாக ஞானியின் பார்வையைப் பறித்தது. எனினும், தன்னுடைய வாசிப்பையோ, எழுத்தையோ, பேச்சையோ எது ஒன்றும் நிறுத்திவிட அவர் அனுமதிக்கவில்லை. காலை 11 மணி தொடங்கி மாலை 5 மணி வரை அவருடைய சிஷ்யையான மீனாட்சி வாசிக்கக் கேட்கிறார். நினைத்ததைச் சொல்லி எழுதுகிறார். முதுமை அவரைச் சங்கடத்துக்குள்ளாக்குவதையும் உணர முடிகிறது. உரையாடலில் உட்கார்ந்துவிட்டால் உற்சாகமாகிவிடுகிறார்.

கி.பழனிசாமி, எப்போது ஞானி ஆனீர்கள்?

என்னுடைய பால்ய கால சினேகிதர் துரைசாமி. ஒரே ஊருக்குள் இருந்தாலும் கருத்துகளைக் கடிதங்களாகப் பறிமாறிக்கொள்வதை விளையாட்டாகச் செய்துவந்தோம். அவர் ஞானி என்ற பெயரில் எழுதுவார். ஒருநாள் ‘இந்தப் பெயரை நான் விட்டுவிடுகிறேன். நீ எடுத்துக்கொள்’ என்றார். தத்துவங்கள் மீது எனக்கு ஈடுபாடு இருந்ததால், இளம் வயதிலேயே நான் ஞானி ஆகிவிட்டேன்.

மார்க்ஸும் ஆழ்வார்களும் வேறுவேறல்ல: எஸ்.என்.நாகராஜன்



இந்தியாவின் அசலான மார்க்ஸிய அறிஞர்களில் ஒருவர் எஸ்.என்.நாகராஜன். நவீன இந்தியாவின் பாரதூர வளர்ச்சிக்கான இன்னொரு சாட்சியம். விஞ்ஞானி. சமூகவியலாளர். எழுத்தாளர். மார்க்ஸின் இருநூற்றாண்டையொட்டி, நடத்தப்பட்ட உரையாடல் இது. நாகராஜன் காட்டாறு. ஒவ்வொரு கேள்வியும் அவருள்ளிருந்து வெளிக்கொணரும் எண்ணக் கூட்டத்திலிருந்து சில வரிகளில் பதிலைத் தொகுப்பது எளிதானதல்ல. பல நாட்கள், பல மணி நேர உரையாடல்களிலிருந்து தொகுக்கப்பட்ட சுருக்கம் இது.


இந்தப் பெயர் நீங்களாகச் சூட்டிக்கொண்டதா? பொதுவாக, ஐயங்கார் குடும்பங்களில் நாகராஜன் என்ற பெயர் அரிதானது என்பதால் கேட்கிறேன்...
சரியாகத்தான் பிடிக்கிறீர்கள். என் பெற்றோருக்கு நான் ஒன்பதாவது பிள்ளை. மூத்தவள் அக்கா. அதற்கு அப்புறம் ஏழு பிள்ளைகள். எல்லாம் செத்துவிட்டன. சீனிவாஸ சேஷன் என்றுதான் பெயர் சூட்ட யோசித்திருக்கிறார்கள். நானாவது நிலைக்க வேண்டும் என்ற யோசனைப்படி, தவிட்டுக்குத் தத்துக்கொடுத்து வாங்கி வைக்கப்பட்ட பெயர்தான் நாகராஜன்.

எப்போது கம்யூனிஸ்ட் ஆனீர்கள்?
கம்யூனிஸ்ட் ஆகவில்லை; எனக்குள்ளிருந்த கம்யூனிஸ்ட்டைக் கண்டுகொண்டேன். கல்லூரி நாட்களில் என்னுடைய பேராசிரியர் ஏ.கே.என்.ரெட்டி ஒரு புத்தகத்தைக் கொடுத்தார். கம்யூனிஸம் என்றால் என்னவென்று தெரிந்துகொண்ட மாத்திரத்தில், நான் ஒரு கம்யூனிஸ்ட் என்று உணர்ந்துகொண்டேன். நம் மரபிலேயே இது இருக்கிறது. வைணவத்தில் ‘முக்குறும்பைத் துறத்தல்’ என்று சொல்வார்கள். சாதிச் செருக்கு, செல்வச் செருக்கு, ஞானச் செருக்கு இது மூன்றையும் கைவிட்டால்தான் சக மனுஷனைச் சமமாக ஒருவன் பாவிக்க முடியும். சமத்துவம் பேச முடியும். மார்க்ஸியத்தை வைணவத்துடன் நான் பொருத்தும் புள்ளியும் இதுதான். வீட்டுச் சூழல், ஊர்ச் சூழல், காலச் சூழல் இவையெல்லாம் சேர்ந்துதான் என்னை உருவாக்கின.

உங்கள் வீட்டுச் சூழலைச் சொல்ல முடியுமா?
பிறந்து வளர்ந்தது சத்தியமங்கலம். பின்னாளில் பெங்களூர், கல்கத்தா, சென்னை என்று படிப்பு - உத்தியோகம் சார்ந்து பல ஊர் பார்த்தாயிற்று. பல சாதி பிள்ளைகளும் படிப்பதால், பள்ளிக்கூடத்துக்குப் போய்வந்தாலே, “உடுப்பை அவிழ்த்துப்போட்டுவிட்டு குளித்துவிட்டு வா” என்று சொல்லும் அளவுக்குப் பிராமண வீடுகளில் ஆச்சாரம் இருந்த காலகட்டம் அது. எங்கள் வீடு அப்படி இல்லை. கொஞ்சம் திறந்த சூழல் இருந்தது. என்னுடைய தகப்பனார் படித்தது கிறிஸ்தவக் கல்லூரி. பிற்பாடு அரசாங்க உத்தியோகத்தில் இருந்தார். அதனால் எல்லோருடனும் பழக்கம் இருந்தது. நேர்மையாளர். உத்தியோகத்தில் பாகுபாடு காட்ட மாட்டார். மகாவீரப்பா என்று அவருக்கு ஒரு சினேகிதர். லிங்காயத்து. கடுமையான பிராமண எதிர்ப்பு கொண்டவர். அடிக்கடி வீட்டுக்கு வருவார். அவர் வீட்டில் என்னுடைய தகப்பனார் கை நனைக்க மாட்டார். ஆனால், என் வீட்டுக்கு வந்தால் மகாவீரப்பா சாப்பிட்டுவிட்டுப் போவார். அம்மாவுக்கு வீட்டு வைத்தியம் பார்க்கும் பழக்கம் இருந்தது. பல வீட்டுப் பெண்களும் குழந்தைக்கு முடியவில்லை என்று தூக்கிக்கொண்டு வருவார்கள். எல்லாக் குழந்தைகளையும் தொட்டு வைத்தியம் பண்ணுவாள். ஆனால், பட்டுத்துணியை மேலே போட்டுக்கொள்வாள். இந்த அளவுக்குத்தான் அந்தத் திறப்பு. அப்பா நிறைய மதிப்பீடுகளைப் பேசுவார். அவராலேயே எல்லைகளை முழுமையாகக் கடக்க முடியவில்லை. ஏன் என்று ஒரு கேள்வி வரும் இல்லையா? நாளெல்லாம் கடவுளைப் பற்றி பேசுபவர்களாலேயே ஏன் முக்குறும்பை விட முடியவில்லை என்ற கேள்வி வந்தது. சமூகத்தில் எழுந்துவந்த பிராமண எதிர்ப்பானது ஒரு பிராமணனான எனக்குள்ளும் இந்த எதிர்ப்புக்கான காரணம் என்னவென்று யோசிக்க வைத்தது. இப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும் உருவான கேள்விகள்தான் என்னை உருவாக்கின.

தமிழ்நாட்டில் பிராமணர் அல்லாதோர் இயக்கம் எழுச்சி பெற்ற ஒரு காலகட்டத்தில் பிறந்து வளர்ந்திருக்கிறீர்கள். பிராமணிய எதிர்ப்புக்கான காரணமாக எது இருந்தது?
பிராமணர்களோட அகங்காரம். அதிகாரம். பிராமணன் இங்கே பெரிய பணக்காரன் கிடையாது. நிலமெல்லாம் பெருவாரியாகப் பிராமணர் அல்லாத சமூகங்களிடம் இருந்தது. ஆனால், அரசாங்க அதிகாரத்தில் உட்கார்ந்துகொண்டு ஏனையோரைத் துச்சமாகப் பார்ப்பது என்பது பிராமணர்களிடம் இருந்தது. இங்கே உள்ள அமைப்பு என்ன மாற்றத்தைக் கண்டாலும் அதைத் தங்களுக்கானதாக மாற்றிக்கொள்ளும் தந்திரமும் இருந்தது. புதிதாகப் படிக்கப்போன சமூகங்களுக்கு இது புரிபட்டது. பிராமணியத்துக்கு எதிரான போராட்டம் எழுந்தது.

ஆனால், பிராமணியத்துக்கு எதிரான போராட்டம் சாதியத்துக்கு எதிரான போராட்டமாக மாறவில்லை. பிராமணர்கள் இடத்தில் தங்களை இருத்திக்கொள்வதுதான் ஒவ்வொரு சாதியின் வேட்கை என்றாகிவிட்டது. பாகுபாட்டைக் களைய முடியவில்லையே ஏன்?
இந்தியாவின் சாபக்கேடே அதுதான். பிராமணர்கள் உட்கார்ந்திருக்கிற இடம் பிரச்சினை இல்லை. அதில் யார் உட்காருவது என்பதில்தான் பிரச்சினை. ஆக, பிராமணியம் எல்லோருக்கும் தேவைப்படுகிறது. ஒரு உதாரணம். இன்று இந்தியாவின் பெரும்பான்மை கிராமங்களில் பிராமணன் இல்லை. அவன் நகரத்துக்கு வந்து ஏகாதிபத்தியத்துடன் கூட்டு சேர்ந்துவிட்டான். சரி. அப்படியென்றால், கிராமங்களில் சாதியத்தைக் காப்பவர்கள் யார்? பிராமணியத்தை எதிர்த்தவர்களால் ஏன் பிராமணியத்தின் ஆதிக்கத்தை இம்மியளவுகூடத் தகர்க்க முடியவில்லை?

நம்முடைய அரசியலமைப்புச் சட்டத்தின் பல பகுதிகள் செத்துவிட்டன - நாகநாதன் பேட்டி


திமுகவின் சித்தாந்தக் குரல்களில் முக்கியமானவர் நாகநாதன். தமிழகத்தின் குறிப்பிடத்தக்க பொருளாதார நிபுணர்களில் ஒருவர். அரசியலமைப்புச் சட்டத்திலும் நிபுணத்துவம் உடையவர். பெரியார், அண்ணா, கருணாநிதி என்று திராவிட இயக்கத்தின் மூன்று பெரும் ஆளுமைகளுடனும் உறவில் இருந்தவர். குடும்பப் பின்னணி சார்ந்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட் இயக்கங்களின் செயல்பாடுகளையும் நெருக்கத்தில் பார்த்தவர். கருணாநிதியின் நடைப்பயிற்சி இணையுமான நாகநாதன், திமுக ஆட்சியில் மாநிலத் திட்டக் குழுத் துணைத் தலைவராகவும் இருந்தவர். வரலாற்றில் தொட்டு திராவிட இயக்கம், தமிழகம், இந்தியா செல்ல வேண்டிய பாதை என்றெல்லாம் பேசினார் நாகநாதன்.

சாதி ஒழிப்பில் நெருக்கக் கூட்டாளி திராவிட இயக்கம்! - தொல்.திருமாவளவன் பேட்டி


தமிழகத்தில் தலித் அரசியல் எழுச்சியின் சமகால வடிவம் தொல்.திருமாவளவன். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர். அம்பேத்கரையும் பெரியாரையும் ஒரு புள்ளியில் இணைத்து நெருக்கமாகப் பார்ப்பவர். அம்பேத்கரிய இயக்கங்களில் நாட்டிலேயே துணை தேசியத்தை - இங்கே தமிழ்த் தேசியத்தைச் சாதி ஒழிப்புக்கான ஒரு அரசியல் ஆயுதமாகக் கையில் எடுத்தவர். நூறாண்டு திராவிட இயக்கத்தின் பணி, அரை நூற்றாண்டு திராவிடக் கட்சிகளின் ஆட்சி, கருணாநிதியின் அறுபதாண்டு சட்ட மன்றப் பணி மூன்றையும் சாதி ஒழிப்பு - சமூக நீதித் தளத்தில் மதிப்பிட்டார். ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ நூலிலிருந்து...

திராவிட இயக்கத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இந்தியச் சமூகம் சாதியக் கட்டமைப்புகளால் ஆனது. சாதியக்கூறுகள் இல்லாமல் ஒரு தனி மனிதனின் வாழ்க்கை இங்கே நகர்வதில்லை. இது ஆயிரக்கணக்கான தலை முறைகளாக நிலவுகிறது. சாதிக்கு எதிராக, ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று வள்ளுவர் பாடிய காலத்தில் இருந்து, ‘ஆண் சாதி பெண் சாதி ஆக இரு சாதி. வீண் சாதி மற்றதெல்லாம்’ என்று சித்தர்கள் பாடிய காலத்திலிருந்து எதிர்க் குரல்களும் ஒலிக்கின்றன. சாதியை எதிர்த்துப் போராடியவர்கள் சாதியை ஒழிக்கவில்லை. காரணம், முடியவில்லை. ஆனால், ஒவ்வொரு போராட்டமும் ஒரு தாக்கத்தையும் விளைவையும் உருவாக்கியிருக்கிறது. திராவிடர் இயக்கத்தையும் இதன் நீட்சியாகவே நான் பார்க்கிறேன்.

பெரியாருடைய பணிகளை இன்றைக்கு எப்படிப் பார்க்கிறீர்கள்?

தமிழகத்தைப் பொறுத்தவரை பெரியாருக்கு முன், பெரியாருக்குப் பின் என்றே இரண்டாகப் பகுக்கலாம். பெரியாருக்கு முன் இங்கே இரட்டைமலை சீனிவாசன், அயோத்திதாசப் பண்டிதர், எம்.சி.ராஜா என்று தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே சாதி அமைப்புக்கு எதிராக அரசியல் தளத்தில் பேசியிருக்கிறார்கள். பெரியார்தான் இதை உடைக்கிறார். பிராமண ஆதிக்க எதிர்ப்பை மையமாகக் கொண்டிருந்தாலும் நீதிக் கட்சி சாதி ஒழிப்பைப் பிரதானப்படுத்தவில்லை. சமூக நீதியை, இட ஒதுக்கீட்டை ஒரு ஆயுதமாக அது கைக்கொண்டது சாதி அமைப்புக்கு அது கொடுத்த வலுவான அடி. என்றாலும், சாதி சமத்துவத்தை நோக்கியே அது நகர்கிறது; சாதி ஒழிப்பை நோக்கி அல்ல. பெரியார்தான் அந்தப் புள்ளியை நோக்கி நகர்கிறார். சாதி ஒழிப்பைப் பேசுகிறார். பெண் விடுதலையை உயர்த்திப்பிடிக்கிறார். மொழி, இன உரிமைகளையும் பேசுகிறார். பெரியார் ஏன் கடவுள் மறுப்பை முன்வைக்கிறார் என்று நாம் ஆராய்ந்தால், அவருடைய அக்கறையையும் தொலைநோக்கையும் நாம் விளங்கிக்கொண்டுவிடலாம். சாதியத்தை இங்கே கட்டிக்காப்பது மதமும் கடவுளும் என்று பெரியார் உணர்கிறார். மக்கள் கடவுளுக்கு அஞ்சுகிறார்கள், மதத்திற்குக் கட்டுப்படுகிறார்கள். ஏற்றத்தாழ்வுகள், தீண்டாமை எல்லாம் கடவுளாலும் மதத்தாலும் ‘முற்பிறவியின் பயன்’ என்று நியாயப்படுத்தப்படுகின்றன. ஆகையால்தான், ‘மதமும் பிழை, கடவுளும் பொய்’ என்று சொல்ல வேண்டிய நிலை பெரியாருக்கு ஏற்படுகிறது. சாதி ஒழிப்பானது குடும்பம் என்ற அமைப்பிலிருந்தே கற்பிக்கப்பட வேண்டியது. ஏனென்றால், குடும்பத்திலிருந்துதான் கடவுள் நம்பிக்கை கற்பிக்கப்படுகிறது, உயர்வு தாழ்வு கற்பிக்கப்படுகிறது, சாதிப் பெருமை, சாதித் தாழ்வு கற்பிக்கப்படுகிறது. பெண்கள் துணையின்றி குடும்பத்தில் சீர்திருத்தம் சாத்தியம் இல்லை. ஆனால், குடும்ப அமைப்பானது பெண்களையும் அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது. அவர்களுடைய சிந்தனையையும் அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது. ஆகையால், பெண் விடுதலையைப் பேசுகிறார். இதனூடாகவே மொழிரீதியாக, இனரீதியாக நிகழ்கிற ஒடுக்குமுறைகளையும் எதிர்க்க வேண்டும் என்கிற நிலைக்கு அவர் வருகிறார். அதற்குக் காரணம் இந்து என்கிற பெயரால், இந்தியா என்கிற கட்டமைப்பு இங்கே நிறுவப்பட்டிருக்கிறது. இந்தியா என்கிற கட்டமைப்பின் பெயரால் இந்தி பேசுகிறவர்களின் ஆதிக்கம், வடவர் ஆதிக்கம் நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. விளைவாக தமிழ் உள்ளிட்ட ஏனைய மொழிகள் நசுக்கப்படுகின்றன. தமிழர் கள் உள்ளிட்ட ஏனைய இனத்தவர் நசுக்கப்படுகிறார்கள். ஆகையால், அந்தந்தப் பிராந்திய மொழிகளுக்கான உரிமைகளை உயர்த்திப் பிடிப்பதன் மூலமாகவே இந்த ஆதிக்கத்தைத் தகர்க்க முடியும் என்று கருதுகிறார். இப்படிப் பெரியார் பிராமண ஆதிக்க எதிர்ப்பில் தொடங்கி, சமூக நீதி, சாதி ஒழிப்பு, பெண் விடுதலை, மொழி, இன உரிமை, மாநில உரிமை என்று முன்னெடுத்த அரசியலானது சாதாரணமானதல்ல. இன்றைக்கு நாடு எதிர்கொள்ளும் ‘இந்து - இந்தி - இந்துஸ்தான்’ ஆதிக்க அரசியலுக்கு நேர் எதிர் அரசியலை, தீர்வை முன்வைப்பது. அம்பேத்கரியத்துக்கு மிக நெருக்கமான அரசியல் கருத்தாக்கமாகவே பெரியாரியத்தைப் பார்க்கிறோம்.

இந்தப் பிறவி தலைவருக்கானது - சண்முகநாதன் பேட்டி

படம்: பிரபு காளிதாஸ்

கருணாநிதியின் நிழல் என்று இவரைச் சொல்லலாம். சண்முகநாதன். கருணாநிதியின் செயலர். அவர் இல்லாமல் இவருக்கும் இவர் இல்லாமல் அவருக்கும் முடியாது. சண்முகநாதனுக்கும் இப்போது 75 வயது ஆகிவிட்டது. உடலில் ஏகப்பட்ட கோளாறுகள். முதுமையின் விளைவாக கருணாநிதி மௌனமாகி ஓராண்டு நெருங்கும் நிலையிலும், வழக்கம்போல அன்றாடம் கருணாநிதியின் வீட்டுக்கு வந்துவிடுகிறார் சண்முகநாதன். “தலைவர் சீக்கிரமே தேறிவிடுவார்; கூப்பிடுவார்” என்று கோபாலபுரம் வீட்டில் அவருக்கென உள்ள சின்ன அறையில் எந்த நேரமும் வேலைக்கான ஆயத்த நிலையில் கணினி முன் உட்கார்ந்திருக்கிறார். பத்திரிகையாளர்கள் சூழவே இருந்துவந்தாலும் இதுவரை சண்முகநாதன் தன் வேலையைத் தாண்டி யாரிடமும் பேசியதில்லை. தன் வாழ்வில் அவர் அளித்த முதல் பேட்டி இது.

தமிழ்ப் பாதையே ‘தினத்தந்தி’யின் பாதை!


தமிழ்ச் சமூகத்தை நாளிதழ் வாசிப்பை நோக்கி அலையலையாகத் திருப்பிய ‘தினத்தந்தி’ 75 ஆண்டுகளை நிறைவுசெய்திருக்கிறது. சி.பா.ஆதித்தனார், பா.சிவந்தி ஆதித்தன், அடுத்து சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் என்று மூன்றாவது தலைமுறையாகக் குடும்ப நிர்வாகத்தால் இயக்கப்படும் ‘தினத்தந்தி’ இன்று இந்தியாவிலேயே அதிகம் வாசிக்கப்படும் பத்திரிகைகளில் முதல் வரிசையில் உள்ள நாளிதழ். அச்சு ஊடகத்தைத் தாண்டி வானொலி, செய்தித் தொலைக்காட்சி என்று விரியும் ‘தினத்தந்தி குழும’த்தின்’ பயணம் குறித்து அதன் இயக்குநர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தனிடம் பேசினேன். அவருடைய முதல் பேட்டி இது.

தலைவர் என்றொரு அப்பா - மு.க.ஸ்டாலின் பேட்டி!

படம்: பிரபு காளிதாஸ்

கருணாநிதியின் தள்ளாமைக்குப் பிறகு, திமுகவின் செயல் தலைவரான மு.க.ஸ்டாலினின் தோள்களில் முழுச் சுமைகளும் இறங்கியிருக்கின்றன. கருணாநிதியின் வேலைகளை ஒருவர் பதிலீடு செய்வது சாத்தியமற்றது - ஒரே நேரத்தில் பல தளங்களில் இணையான தீவிரத்தோடு அயராது இயங்கியவர் அவர். ஸ்டாலின் ஈடுகொடுக்க முயற்சிக்கிறார். ஒரு தலைவராகத் தன்னுடைய வழிகாட்டியான தந்தையைப் பற்றி ஆத்மார்த்தமாகப் பேசினார்.

பிள்ளைகளுடனான உறவு உங்கள் அப்பாவுக்கு எப்படி இருந்தது?

எனக்கு மட்டும் இல்லை, சின்ன வயசுல எங்க அண்ணன் தங்கச்சி எல்லோருக்குமே அம்மாதான் நெருக்கமா இருந்தாங்க. அவங்க மூலமாதான் எந்தக் காரியமும் நடக்கும். மாசத்துக்கு ஒரு முறை தலைவரோட பேச முடிஞ்சா அதிசயம். மாடியில அவரோட அறை. நேரா அங்கே போய்டுவார், சாப்பாடு - குளியல் எல்லாமே அங்கேதான். கிளம்பும்போதும் மாடியிலேர்ந்து இறங்கி நேரா வெளியே போய்டுவார். உண்மையைச் சொல்லணும்னா, அவரோட கட்சித் தோழர்கள் பலருக்கு அவர்கூட கிடைச்ச நேரத்துல சொற்பம்கூட எங்க யாருக்கும் கிடைக்கலை. எங்களோட படிப்பு விஷயங்களையெல்லாம்கூட மாறன் மாமாதான் கவனிச்சார். ஆனா, ஒரு பெரிய பிரியம் எங்க மேல அவருக்கு உண்டுங்கிறதை மட்டும் எப்படியோ உணர்த்திட்டார். மத்த அப்பாக்கள் மாதிரி அவர் இல்லைங்கிற குறை தோணியது இல்லை. பொங்கல் அன்னிக்கு வீட்டோட உள்கூடத்துல எல்லோரும் தலைவர்கூட உட்கார்ந்து ஒண்ணா சாப்பிடுவோம். அப்புறம், வெளியூர் பயணங்கள் புறப்படுற அன்னிக்கு வழியனுப்புறதுக்கு அவருக்கு எல்லோரும் இருக்கணும். அவங்க அம்மா, அப்பா படத்தை வணங்குவார். எங்க எல்லோரையும் பார்த்து, பெயர் சொல்லித் தனித்தனியா ‘போய்ட்டு வர்றேன்’னு சொல்வார். அதுவே எங்களுக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கும்.