என்றைக்கும் கட்சித் தொண்டர்களோ, பொதுமக்களோ வீட்டுக்குள் சாதாரணமாக நுழையும் பாங்கோடு இருப்பது கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களின் வீடுகளுக்கே உரிய அடையாளம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலர் தா.பாண்டியனின் வீடும் விதிவிலக்கல்ல. இக்கட்டான காலகட்டத்தில் கட்சி இருக்கும் நிலையில், தனிப்பட்ட வகையிலும் விமர்சனங்களை எதிர்கொள்கிறார் தா.பாண்டியன். வீட்டில் கட்சித் தோழர்களுடன் சாதாரணராகப் பேசிக்கொண்டிருந்தவர், பேட்டி என்றதும் உற்சாகமாகத் தயாரானார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அழிவுக் காலச் செயலாளர் என்று
உங்களைக் குறிப்பிடலாமா?
மனித குலத்துக்கும் உண்மைக்கும் எவ்வளவு ஆயுளோ அதே ஆயுள்
கம்யூனிஸ இயக்கத்துக்கும் உண்டு.
ஒருகாலத்தில் இந்திய கம்யூனிஸ்ட்டுகள் எவ்வளவு பலமாக
இருந்தீர்கள் என்பது உங்களுக்கே தெரியும். உங்கள் வீழ்ச்சியை நீங்கள் உணரவில்லையா?
இந்தியாவில் இதுவரை மூன்று முறை ஆளுகிறவர்களால் தடை செய்யப்
பட்ட கட்சி கம்யூனிஸ்ட் கட்சி. மற்ற காலங்களிலும் பெரும்பாலும் வேட்டையாடப்
படுகிறவர்களாகத்தான் எங்கள் கட்சியினர் இருந்திருக்கிறோம். அடக்குமுறைக் கால
கட்டங்களிலேயேகூட கம்யூனிஸ்ட் கட்சி சேதப்பட்டது உண்டு; செத்துப்போனதில்லை. இப்போதைய
பின்னடைவை நாங்கள் உணராமல் இல்லை. மீளக் கட்டியமைக்கும் வேலைகளில்தான் இப்போது
தீவிரமாக இறங்கியிருக்கிறோம்.
ஒடுக்கப்பட்டவர்கள் - முக்கியமாக தலித்துகள் - சாதி
அடிப்படையில் திரள கம்யூனிஸ இயக்கங்களின் தோல்விதானே காரணம்?
இல்லை... சில தலைவர்களின் பதவி ஆசைதான் காரணம். தலித்
இயக்கங்களையே எடுத்துக்கொள் வோம். பிளவுச் சக்திகளாகத்தான் நான் அவர்களைப்
பார்க்கிறேன். ஒரு தொழிலாளர் சமூகம் ஒன்றுபட்டு நிற்கும்போது, அங்கே சென்று சாதியைச் சொல்லிப்
பிரிப்பவர்கள் எப்படி நல்ல தலைவர்களாக இருக்க முடியும்? ஒரு தொழிலாளி பார்ப்பனராக
இருந்தாலும் தொழிலாளிதான்; தலித்தாக
இருந்தாலும் தொழிலாளிதான், வன்னியராக இருந்தாலும் தொழிலாளிதான் இல்லையா?
