நாட்டுப்பற்று கொண்ட ஒரு இளைஞன் ராணுவம் சம்பந்தமான செய்திகளை எப்படி அணுகுவான்? அதுவும் ஒரு போர் வந்தால், பத்து நாட்களுக்கு சண்டையிடுவதற்கான போர்த் தளவாடங்கள்கூட நம்முடைய வீரர்களிடம் இன்று இல்லை என்ற செய்தி வந்தால், அவன் எப்படிக் கொந்தளிப்பான்?
கல்லூரி நாட்களில், ‘அமெரிக்க ராணுவம், சீன ராணுவத்தோடு ஒப்பிட இந்திய ராணுவத்திடம் ஆயுதங்கள், தளவாடங்கள் குறைவு’, ‘இந்திய ராணுவத்துக்கான நிதி ஒதுக்கீடு போதாது’ என்றெல்லாம் டெல்லியிலிருந்து ‘தேசிய ஊடகங்கள்’ செய்தி வெளியிடுகையில் கடுமையான கொந்தளிப்பு உருவாகும். மூளை உஷ்ணம் அடையும். உடல் தடதடக்கும். நரம்புகளுக்குள்ளான ரத்தக் கொப்பளிப்பைத் தோலுக்கு வெளியிலும் பார்க்க முடியும்.
ஊடகத் துறைக்கு இரண்டு பண்புகள் உண்டு. வெளியே இருப்பவர்களுக்கு அது கற்பனைகளை அள்ளிக்கொடுக்கும். உள்ளே வந்தடைபவர்களிடம் முதலில் அது அவர்களுடைய கற்பிதங்களை உடைக்கும்.
செய்தி ஆய்வுக் கட்டுரைகளை எழுதும் முன் செய்திகளை எப்படி அணுக வேண்டும் என்று ஊடக வகுப்பு எடுத்த ஒரு மூத்த சகாதான் என்னுடைய கற்பிதங்களை உடைத்தார். “ஒரு காவல் நிலையத்தின் உள்விவகாரங்களை நாம் வெளிக்கொண்டுவந்தாலே விஷயம் வெளியே போனதற்காக அங்குள்ள போலீஸ்காரர்களை மேலதிகாரிகள் கிழித்துவிடுவார்கள். அப்படி இருக்கும்போது, ஒரு போர் வந்தால் பத்து நாட்களுக்கான ஆயுதங்கள்கூட ராணுவத்திடம் இல்லை என்பது மாதிரியான தகவல்கள் எப்படி இவ்வளவு சாதாரணமாக தேசிய ஊடகங்களை வந்தடையும்? உண்மையில் நம்முடைய ராணுவத்திடம் எவ்வளவு ஆயுதங்கள் கையிருப்பில் இருக்கின்றன, என்ன நிலையில் இருக்கின்றன என்பது ராணுவ ரகசியம் இல்லையா? ராணுவத் தலைமை, அரசு இரண்டுக்கும் இது உள்ளபடியே சங்கடம் தரும் செய்தி என்றால், இத்தகைய செய்திகள் ஏன் ஊடகங்களுக்குக் கசியவிடப்படுகின்றன?”
அவர் மேலும் பேசலானார். “இங்கே எல்லாவற்றிலும் லாபக் கணக்குகள் உண்டு. லாபி உண்டு. ராணுவத்திடம் உள்ள வாகனங்கள் பழசாகிவிட்டன என்று டெல்லியிலிருந்து வரும் ஒரு செய்தியை நீ படிக்கிறாய் என்றால், அந்தச் செய்திக்குப் பின் ஏதோ ஒரு வாகன நிறுவனம் இருக்கலாம், யாரோ சில அதிகாரிகள், யாரோ சில இடைத்தரகர்கள், யாரோ சில அரசியல்வாதிகள் இருக்கலாம் என்று சந்தேகி. செய்திகளில் சமூக அக்கறை மட்டும் அல்ல; வர்த்தக அக்கறைகளும் செயல்படலாம். ஆளுங்கட்சியில் மட்டும் இல்லை; எதிர்க்கட்சியிலும் அவர்கள் இருக்கலாம். செய்திகளைச் சந்தேகப்படு. நான் சொல்லும் டெல்லி பத்திரிகையாளர்களின் சொத்து விவரங்களை விசாரி. பத்திரிகையாளர்களாக மட்டும் இருந்துகொண்டு அவர்களால் எப்படி இத்தனை கோடி சொத்துகளைக் குவித்திருக்க முடியும் என்ற கேள்விக்குப் பதில் தேடு. புரியும்!”
பிற்பாடு டெல்லியில் சுற்றிய நாட்களில் எல்லாம் புரிபட்டது. 2014 மக்களவைத் தேர்தல் தருணத்தில் இந்திய ஒன்றியம் முழுவதும் பயணித்து, பல்வேறு தரப்பினரும் இங்கு ஜனநாயகத்தை எப்படி அணுகுகிறார்கள் என்று ‘இந்தியாவின் வண்ணங்கள்’ கட்டுரைத் தொடர் எழுதினேன். அப்போது நாடறிந்த சில பத்திரிகையாளர்களின் பேட்டியையும் அதில் கொண்டுவர விரும்பினேன். டெல்லியில் நடக்கும் பேரங்கள், பேச்சுவார்த்தைகளில் பத்திரிகையாளர்களின் இடையீட்டை அதில் பதிவுசெய்யும் நோக்கம் எனக்கு இருந்தது. ஜனநாயகத்தில் இத்தகைய இடையீடுகள், லாபிகளுக்கான தேவையைப் புரிந்துகொள்ளும் ஒரு முயற்சியாகவே நான் அதைச் செய்ய முயன்றேன். ஏனென்றால், அமைச்சர்களாலேயே செய்து தர முடியாத காரியங்களைக்கூட அனாயாசமாகப் பிரதமர்களிடம் பேசி முடித்துத் தரும் பத்திரிகையாளர்களின் கதைகளை நான் கேள்விப்பட்டிருந்தேன். துரதிர்ஷ்டவசமாக அப்படி ஒரு பேட்டிக்கு யாரும் தயாராக இல்லை.
உலகெங்கும் இன்றுள்ள அரசதிகாரக் கோட்டைகளின் உள் சூட்சமப் பாதைகளை அறிந்தவர்கள் ஒரு விஷயத்தை ஒப்புக்கொள்வார்கள்: நவீன அரசில் ஊழல்களின் தாய் ராணுவப் பேரங்களிலேயே குடிகொண்டிருக்கிறாள். தேச நலன் என்ற இரு வார்த்தைகள் போதும், தேசியத்தின் பெயரால் ஒரு அரசு எதையும் செய்யலாம்; எவ்வளவு பேரையும் பலியிடலாம்.