எப்போது கொடூரங்களை நிறுத்தப்போகிறோம்?


அடித்து நொறுக்கப்பட்ட வீடு. நூறை நெருங்கும் ஒரு மூதாட்டி. கூரை ஓடுகள் சிதறிக்கிடக்கும் வீட்டின் வாசலில் சிதைவுகளின் நடுவே கால்கள் ஒடுங்கி  உட்கார்ந்திருக்கிறாள். அவளுடைய வெடவெடுத்த இரு கைகளும் கூப்பியிருக்கின்றன. இடுங்கிய கண்களிலிருந்து கண்ணீர் வழிகிறது. அவள் இறைஞ்சுகிறாள். நடந்ததை ஒரு கிராமத்தின் இரு சமூகங்களுக்கு இடையிலான மோதலாகச் சுருக்கிவிடுவது விஷயத்தை ஏறக்கட்டிவிட்டுக் கடக்க வசதியானது.

2019 தேர்தலின் பெரும் கேள்வி: பழனிசாமி முன்னெடுக்கும் அரசியல் என்னவாகும்?


தேர்தல் காய்ச்சலுக்குள்ளான தமிழ்நாட்டின் குறுக்கும் மறுக்குமாகக் கோடை வெக்கையில் சுற்றுவது வெயிலை உள்ளும்புறமுமாகக் குடிப்பதற்குச் சமானம். மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்ற பதைபதைப்பில் அரசியல்வாதிகள் சுற்றுகிறார்கள் என்றால், மக்களும் ஏராளமான கேள்விகளுடன்தான் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். ‘இந்தத் தேர்தலில் யார் வெல்வார்; எந்தக் கட்சிக்கு எவ்வளவு தொகுதிகள் கிடைக்கும்; டெல்லியில் ஆட்சி அமைக்கப்போவது யார்?’ என்கிற  வழமையான தேர்தல் கேள்விகளைத் தாண்டிய வேறொரு கேள்வியும் இம்முறை மக்களிடம் சேர்ந்துகொண்டிருக்கிறது: ‘எடப்பாடி கே.பழனிசாமி முன்னெடுக்கும் அரசியல் என்னவாகும்?’

இன்னும் கொஞ்சம் விஸ்தரித்து இந்தக் கேள்வியைக் கேட்கலாம் என்றால், ‘தமிழ்நாட்டின் ஏழு மண்டலங்களில் ஆறு மாவட்டங்கள், 38 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய ‘கொங்கு மண்டலம்’ என்றழைக்கப்படும் மேற்கு மண்டலம் இந்த மக்களவைத் தேர்தலில் என்ன முடிவெக்கும்?’

இந்திய மக்களின் கூட்டுணர்வே யதேச்சாதிகார பாஜகவை விரட்டியடிக்கும்: ப.சிதம்பரம்


வரலாற்று முக்கியத்துவம் மிக்க 2019 தேர்தலில் மக்கள் தரப்பிலிருந்து கொண்டாடத்தக்க விஷயங்களைப் பட்டியலிட்டால், காங்கிரஸின் தேர்தல் அறிக்கை அவற்றில் முதன்மை பெறும். ‘இது மக்களின் அறிக்கை’ என்ற பிரகடனத்துடன் வந்திருக்கும் இது, நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் 174 இடங்களில் விவசாயிகள், ஆசிரியர்கள், தொழில்முனைவோர் என்று பல்வேறு தரப்பு மக்களையும் சந்தித்து அவர்களிடமிருந்து பெற்ற கோரிக்கைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறது காங்கிரஸ். இந்தியாவில் இப்படி விரிவாக மக்களிடம் கருத்துகளைப் பெற்று ஒரு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படுவது இதுவே முதல் முறை. ஆளும் பாஜகவின் தேர்தல் அறிக்கை புத்தகத்தின் அட்டையை மோடி எனும் ஒரு தனிமனிதரின் படம் பிரதானமாக ஆக்கிரமித்திருக்க, காங்கிரஸின் தேர்தல் அறிக்கை புத்தகத்தின் அட்டையோ பல்லாயிரக்கணக்கான மக்களின் முகங்களைத் தாங்கி வந்திருக்கிறது. பாஜக அறிக்கை தேசியத்தையும் தேச அரசின் நலன்களையும் பிரதானப்படுத்தியிருக்க, மனித உரிமைகளையும் சமூக நலத் திட்டங்களையும் பிரதானப்படுத்தியிருக்கிறது காங்கிரஸ் அறிக்கை. இந்த அறிக்கை தயாரிப்பில் முக்கியப் பங்களித்த காங்கிரஸ் சித்தாந்த முகங்களில் ஒருவரான ப.சிதம்பரத்துடன் தேர்தல் தொடர்பில் உரையாடியதிலிருந்து...

எல்லோரையும் வரலாறு விசாரிக்கும் ஜெயமோகன்


நான் தொகுப்பாசிரியாக இருந்து, திராவிட இயக்கம் தொடர்பாக ‘இந்து தமிழ்’ நாளிதழ் வெளிக்கொண்டுவந்த ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ இரு நூல்கள் வெளிவரும் தருணத்திலும் நண்பர் ஜெயமோகன் கடுமையாக எதிர்வினையாற்றினார். இரண்டு புத்தகங்களுமே வெளிவருவதற்கு முன்பே - அறிவிப்புகள், முன்னோட்டங்களைப் பார்த்த வேகத்தில் - படிக்காமலேயே எழுதினார் என்பதை வாசகர்கள் இதைப் படித்து முடிக்கும் வரை ஞாபகத்தில் கொண்டபடி படிக்க வேண்டும். முதல் புத்தகத்துக்கு நான் எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை; இரண்டாவது புத்தகத்துக்கு ஒரு வாரத்துக்குள் ஐந்தாறு பதிவுகளை அவர் வெளியிட்டுவிட்ட சூழலிலேயே இந்த எதிர்வினையை எழுதுகிறேன்.

தமிழ்நாட்டில் அறிவியக்கத்தின்மூலம் ஜனநாயகத்தைப் பரவலாக்கியவர் அண்ணா: ஆ.சிவசுப்பிரமணியன் பேட்டிநவீன அரசியலில் தமிழ்நாடு எழுச்சி பெற்ற நூற்றாண்டின் சாட்சியங்களில் ஒருவர் ஆ.சிவசுப்பிரமணியன். நம் காலத்தின் முக்கியமான சமூகவியல் ஆய்வாளர்களில் ஒருவரும் இடதுசாரி அறிவுஜீவியுமான சிவசுப்பிரமணியன், தமிழ்நாட்டின் வெகு மக்களுக்கு எப்படி ஜனநாயகத்தைக் கற்பிப்பதாகவும் வளர்த்தெடுப்பதாகவும் அண்ணாவின் அரசியல் இருந்தது என்பதையும் திராவிட இயக்கம் எப்படி இங்கே ஒரு அறிவொளியை உண்டாக்கியது என்பதையும் மிக விரிவாகப் பேசினார். பேட்டியின் சுருக்கமான வடிவம் இது.

அண்ணாவின் காலத்துக்குக் கொஞ்சம் முன்பிருந்து நாம் கதையைத் தொடங்கலாமா?
அரசியல், ஜனநாயகம் இவையெல்லாம் வெகுமக்களுக்குப் புதிதுதானே! சுதந்திர இந்தியாவில்தான் சாமானியருக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்டது. சரியாக, ஜனவரி 26, 1950-ல் இந்தியா குடியரசாகிறது; நான்கு மாதங்களுக்கு முன்னால் செப்டம்பர் 17, 1949 அன்று திமுக பிறக்கிறது. முதல் தேர்தலில் திமுக போட்டியிடவில்லை, 1957-ல் நடந்த இரண்டாவது தேர்தலில்தான் அது போட்டியிட்டது என்றாலும் ஒரு முழு அரசியல் கட்சிக்கான ஆகிருதியோடுதான் முன்பிருந்தே அது நடந்துகொண்டது. பேச்சு, எழுத்துக்கு அது தீவிரமான கவனம் கொடுத்தது. என்னுடைய சிறுவயது நினைவிலிருந்து சொல்கிறேன். திருநெல்வேலியில் அப்போதே மாணவர்கள் மத்தியில் திராவிட இயக்கப் பத்திரிகைகளுக்குப் பெரிய செல்வாக்கு இருந்தது. ‘திராவிட நாடு’, ‘முரசொலி’, ‘நம்நாடு’, ‘மன்றம்’, ‘தென்றல்’, ‘இன முழக்கம்’, ‘போர்வாள்’ இப்படி நிறையப் பத்திரிகைகள் வரும். பள்ளிக்கூட மாணவர்களே சொந்தக் காசிலிருந்து ‘திராவிட நாடு’ வாங்கும் அளவுக்கு அந்தக் காலகட்டத்தில் அண்ணாவுக்கு ஒரு மவுசு இருந்தது. வாங்குவது மட்டுமல்ல; மனப்பாடமே செய்துவிடுவார்கள். அண்ணாவின் மொழிநடையும் இயல்பாகவே மனப்பாடமாகும். நான் பத்தாம் வகுப்பு படித்தபோது என்று நினைக்கிறேன். சிலப்பதிகாரத்தைப் பற்றி தேர்வில் ஒரு கேள்வி வந்தது. ‘சேரநாடு செந்நெல்லும் செங்கரும்பும் செழித்து வளர்ந்து வளம் கொஞ்சும் நாடு... எழிலுறத் திகழும் பொழில்கள், அப்பொழில்களைச் சுற்றி அடுக்கடுக்கான மாளிகைகள். அம்மாளிகைகளின் உள்ளே கலகலவென ஒலியெழுப்பிக் களிப்படையும் காரிகைகள், இத்தனையும் படைத்துச் செல்வத் திருநாடாய் இன்பத் திருவீடாய் இருந்தது சேர நாடு…” இப்படி! (கடகடவென ஒப்பிக்கிறார்) விடைத்தாள் கொடுக்கும்போது ஆசிரியர் என்னை அழைத்தார். எனக்கோ பயம். “திராவிட நாட்டைப் படிச்சி மனப்பாடம் பண்ணுனியா?” என்றார். தலையாட்டினேன். விடைத்தாளைக் கையில் கொடுத்துவிட்டார். இப்படி ஆசிரியரும் மாணவரும் ஒன்றுபோல் படிக்கும் சூழல் அன்றிருந்தது. பேச்சுப் போட்டி என்றால், திமுக பாணியில்தான் மாணவர்கள் பேசுவார்கள். நாடகப் போட்டி என்றால் அண்ணா, கருணாநிதி எழுதிய நாடக வசனங்களைத்தான் பேசினார்கள். பொதுவாக, அந்நாட்களில் மூன்று இயக்கங்கள் மாணவர்களிடம் செல்வாக்குப் பெற்றிருந்தன. பெரிய அளவில் திமுக, சிறு துளி மாதிரி தமிழரசுக் கழகம், இரண்டுக்கும் நடுவே பொதுவுடமை இயக்கம். காங்கிரஸுக்குப் பெரியவர்கள் மத்தியில் இருந்த செல்வாக்கு மாணவர்கள் மத்தியில் இருந்ததாகச் சொல்ல முடியாது. பெரியாருக்குத் தீவிர ஆதரவாளர்கள் இருந்தார்கள். அதேசமயம், அது பெருங்கூட்டம் என்று சொல்ல முடியாது. திராவிடர் கழகத்தின் வளர்ச்சியிலேயே அண்ணாவுக்குப் பங்கிருந்தது. ஒரு சரியான தருணம் முகிழ்ந்தபோது சமூக மறுமலர்ச்சி இயக்கமான அதிலிருந்து அரசியல் இயக்கத்தை உருவாக்கிய அண்ணா, அரசியல் களத்தை முழுவதுமாகத் தனதாக்கிக்கொண்டார். திமுக கூட்டங்களிலும் சரி, பத்திரிகை களிலும் சரி, பெரிய வசீகரம் தமிழ்.

தெளிவான சிந்தனையாளராகவும் முதிர்ச்சியான ராஜதந்திரியாகவும் வெளிப்பட்டார் அண்ணா: என்.ராம் பேட்டி


அண்ணாவின் அமெரிக்கப் பயணத்தின்போது அவரை அறிந்துகொண்டவர்களில், பின்னாளில் இந்திய அளவில் ஊடகத் துறையில் ஜொலிப்பவராக மாறிய ஒரு தமிழ்நாட்டுக்காரரும் இருந்தார். ‘தி இந்து’ குழுமத்தின் தலைவரான என்.ராம்தான் அவர். அப்போது அவர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ஊடகவியல் படிப்பதற்காக இந்தியாவிலிருந்து சென்றிருந்த முதல் தலைமுறையைச் சேர்ந்த மாணவர். அண்ணாவுடனான சந்திப்புதான் ராமுக்கு, அண்ணா மீது மட்டுமல்லாமல், திராவிட இயக்கத்தின் மீதான வலுவான ஈர்ப்புக்கும் காரணமாகிறது. திராவிட இயக்கத்தை ஆய்வுநோக்கில் ஆராயத் தொடங்கியவர், காலப்போக்கில் அந்த இயக்கத்துக்கான தேவையையும் நியாயத்தையும் பேசுபவர் ஆனார். திராவிட இயக்கத்தவரால் ‘மவுண்ட் ரோடு மஹாவிஷ்ணு’ என்று குறிப்பிடப்பட்ட ‘தி இந்து’ நாளிதழின் வரலாற்றுப்போக்கில் பிற்பாடு ஒரு திருப்புமுனையை உண்டாக்கியவரான ராம், அண்ணாவின் அமெரிக்கப் பயணத்தை நினைவுகூர்ந்தார்.