ஆருடமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆருடமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

இரு கனவுகள்... ஒரே செயல்திட்டம்!




இந்தியாவின் அடுத்த பிரதமர் மோடி அல்லது ஜெயலலிதா. முதன்முதலில் இப்படிச் சொன்னவர் சோ.

ஆருடமா, செயல்திட்டமா?

தேசிய அரசியலில் அன்றைக்கு மோடி இவ்வளவு செல்வாக்கானவர் இல்லை. பா.ஜ.க. அத்வானி கையில் இருந்தது. ஜெயலலிதாவும் இவ்வளவு உயரத்தில் இல்லை. முந்தைய தேர்தலில் ஜெயலலிதா, மாயாவதி, மம்தா மூவரையும் இணைத்து ‘15-வது மக்களவையைத் தீர்மானிக்கும் மூன்று சக்திகள்’ என்று தேசிய ஊடகங்கள் கட்டமைத்த பிம்பம் சுக்குநூறாகிவிட்டிருந்த நிலையில், ஜெயலலிதா அடுத்த பிரதமர் என்று அ.தி.மு.க. பொதுக்கூட்டப் பேச்சாளர்கள்கூட அன்றைக்குச் சொல்லத் தயங்கியிருப்பார்கள். சோ சொன்னார். தொடர்ந்து, ‘மோடி அல்லது ஜெயலலிதா’ எனும் முழக்கத்தைப் பொதுமேடைகளில் முன்வைக்க ஆரம்பித்த சோ, உச்சகட்டமாக ‘துக்ளக்’ பத்திரிகை ஆண்டு விழாவில் மோடி, அத்வானி இருவரையும் மேடையில் வைத்துக்கொண்டே “மோடி பிரதமராக அத்வானி உதவ வேண்டும்” என்று பேசினார். அந்தச் சமயத்தில் பேட்டிக்காக சோவைச் சந்தித்தபோது, மோடி அல்லது ஜெயலலிதா என்கிற தன்னுடைய குரலுக்கான அடிப்படைபற்றிச் சொன்னார்: “நான் ஒரு வாக்காளன். அந்த அடிப்படையில் ஒரு முன்மொழிவைச் சொல்கிறேன். இந்த நாட்டின் பிரதமராக மோடிக்கு எல்லாத் தகுதிகளும் இருக்கின்றன. ஒருவேளை பா.ஜ.க-வுக்கு மோடியைப் பிரதமர் ஆக்குவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டால், ஜெயலலிதா பிரதமராக அவர்கள் உதவ வேண்டும். அவ்வளவுதான்!”
அன்றைக்கு சோ சொன்னது அரசியல் ஆருடம் அல்ல. எளிமையான வார்த்தைகளில், “இது ஒரு வாக்காளனின் முன்மொழிவு” என்று அதை அவர் வர்ணித்தாலும், அது ஒரு செயல்திட்டம். கச்சிதமான செயல்திட்டம்.