1,76,000,00,00,000. இந்த எண்களை எழுத்துக்கூட்டிப் படிக்க எடுத்துக்கொண்ட சிரமத்தைப் பெரும்பான்மை இந்தியர்கள் தம் வாழ்வில் வேறு எந்த எண்களுக்கும் கொடுத்திருக்க மாட்டார்கள். ஞாபகம் இருக்கிறது. அநேகமாக, ‘அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல்’ என்று செய்தியைத் தந்த பெரும்பான்மை தேசிய ஊடகங்கள் ‘நாட்டுக்கு இழப்பு: ரூ.1.76 லட்சம் கோடி’ என்று தொகையை எழுத்தில் கொடுப்பதைக் காட்டிலும், எண்ணாகக் கொடுப்பதிலேயே உவகை அடைந்தன. ஏனென்றால், இதற்கு முன் இவ்வளவு பெரிய எண்ணை ஊடகங்கள் கையாண்டதில்லை.
அறிவியலாளர்கள், கணிதவியலாளர்கள்போல எண்களின் உலகத்துக்குள் சஞ்சரித்திருப்பவர்கள் அல்ல ஊடகவியலாளர்கள். தவிர, இந்தியச் சூழலில் லஞ்சம், ஊழலை வெளிக்கொணர்வதும் விவாதிப்பதும் ஊடகவியலாளர்களுக்கு அவ்வளவு இலகுவான சமாச்சாரமும் அல்ல. அது உயிர் விளையாட்டு. ஆட்சியாளர்களிடம் எல்லையற்ற அதிகாரம் இருக்கிறது. வாசல் வழியாகவும் வரலாம்; கொல்லைப்புறம் வழியாகவும் வரலாம் ஆபத்து. ஊடகவியலாளர் எந்த மிரட்டலுக்கும் அசையாதவர் என்றால், அமித் ஷா பாணியில் செய்தியை வெளியிடுவதற்கே நீதிமன்றத்தின் துணையுடன் சட்டபூர்வத் தடை வாங்கிவிடலாம். இவை எல்லாவற்றிலிருந்தும் விதிவிலக்கான, அரிதான விவகாரம் இது.
அலைக்கற்றை என்ற வார்த்தையையே நாட்டின் பெரும்பான்மை மக்கள் அப்போதுதான் முதல் முறையாகக் கேள்விப்பட்டனர். ‘இது சரி - தவறு’ என்று விவாதிக்கப் பலருக்கும் புரிபடாத விஷயம். தொகையைக் குறிப்பிட்டிருப்பதோ தலைமைக் கணக்காயர் அறிக்கை. தலைமைக் கணக்காயர் அலுவலகமானது, ஒரு தன்னாட்சி அமைப்பு. அரசியலமைப்புச் சட்டப்படி உருவாக்கப்பட்டது. ஆக, இந்த எண்ணை உச்சரிக்க, அதாவது இந்த எண்ணை ஊழல் தொகை என்று சொல்லவும் நிரூபிக்கவும் ஊடகங்கள் மெனக்கெட வேண்டியது இல்லை. சட்டரீதியிலான நம்பகத்தன்மையும் பாதுகாப்பும் இருக்கிறது. ஒரு ‘கட்டுக்குள் வளர்ந்த பிள்ளை’யான இந்திய ஊடகங்களுக்கு அலைக்கற்றை விவகாரத்தில் இருந்த ‘பாதுகாப்பான விளையாட்டு’ அளப்பரிய கிளுகிளுப்பையும் பரவசத்தையும் கொடுத்தது.
இந்திய ஜனநாயகத்தை மேம்படுத்தவும் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரவும் சில ஆண்டுகளுக்கு முன்புதான் (2005) தகவல் உரிமைச் சட்டத்தை மன்மோகன் சிங் அரசு கொண்டுவந்திருந்தது. விளைவாக, சின்னதும் பெரிதுமாக நிறைய முறைகேடுகள் ஆதாரத்துடன் வெளிவந்த வண்ணம் இருந்தன. இந்திய வாய்கள் அப்போதுதான் ஊழலைப் பொதுவெளியில் தயக்கமின்றிப் பேசவும் ஆரம்பித்திருந்தன. இந்தப் பின்னணியில்தான் அது நிகழ்ந்தது. எண்களை விசாரணையின்றிப் பயன்படுத்துவது ஒரு நாட்டின் அரசியலையும் வரலாற்றையும் எப்படியெல்லாம் மாற்றியமைக்கும் என்பது தொடர்பில் எந்தப் பிரக்ஞையும் இல்லாமலேயே பெரும்பான்மையோர் அதைக் கையாண்டனர் (உணர்ச்சிவசப்பட்டு எழுதியவர்களில் நானும் ஒருவன்; பின்னாளில் திருந்தியவன்).
அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான வழக்கு, தொலைத்தொடர்புத் துறையை ஆ.ராசா கையாண்ட விதம், ராசாவை வழக்கிலிருந்து விடுவிக்கும் இப்போதைய தீர்ப்பு… இவை எல்லாவற்றைக் காட்டிலும் இந்த வழக்கு இந்தியச் சமூகத்திலும் அரசியலிலும் எப்படியான மாற்றங்களை உண்டாக்கியிருக்கிறது; அது ஏற்படுத்தியிருக்கும் மோசமான ஒரு விளைவுக்கு நம்மிடம் என்ன பதில் இருக்கிறது என்பதே நாம் பிரதான கவனம் அளிக்க வேண்டிய விஷயம் என்று நினைக்கிறேன். ஏனென்றால், இந்தத் தீர்ப்பு வருவதற்குப் பல காலம் முன்னரே ‘1,76,000,00,00,000’ என்ற எண் பல்லிளித்துவிட்டது. நம்முடைய அமைப்பும் மனமும் எவ்வளவு பெரிய ஓட்டைகளை வைத்திருக்கிறது என்பதைக் காட்டிவிட்டது!