நான் தமிழீழ
விடுதலைப் புலிகளின் எதிரி
கிடையாது. அதேசமயம்
நண்பன்
என்றும் கூற
மாட்டேன். ஒரு
மகத்தான போராட்டம் சீரழிந்து ஓர்
இனமே
அகதியானதற்கு நானும்
ஒரு
மௌன
சாட்சி.
இப்போது யோசித்துப் பார்க்கும்போது என்னுடைய தவறும்
தெரிகிறது. சாகசத்தை நம்புபவர்களால் நீண்ட
தூரம்
பயணிக்க முடியாது. நாம்
அதீதமாக எதிர்பார்த்தோம்; அதீதமாக நம்பினோம்; அதீதமாக ஏமாந்தோம். முட்டாள்தனமாக.
ஈழப்போர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஈழப்போர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உண்மையைப் பேசுவோம்!
போர் வெற்றியின் உற்சாகத்தில் இருந்த ராஜபக்ஷ இந்தியப் பத்திரிகையாளர் ஒருவருக்குப் பேட்டி அளித்தபோது சொன்னார்: ‘‘நாங்கள் இந்தியாவுக்காகவும் போரிட்டிருக்கிறோம்!’’
ஆமாம். ராஜபக்ஷ பொய் சொல்லவில்லை. இந்தப் போரில் இந்தியா பின்னின்று பங்கேற்றது. போருக்கு முன் ‘எம்.ஐ. 17’ ரக ஹெலிகாப்டர்களில் தொடங்கி போருக்குப் பின் ‘விக்ரஹா’ ரோந்துக் கப்பல் வரை சகல படைக்கலன்களையும் இலங்கைக்கு வழங்கியது; ஆட்களை அனுப்பியது; சிங்களப் படைக்கு இங்கு பயிற்சி அளித்தது. கோடியக்கரையில் இருந்தும் உச்சிபுளியில் இருந்தும் கடல் பகுதியைக் கண்காணித்து உளவு சொன்னது; ராஜ தந்திர ரீதியாக போருக்கு எந்தத் தடையும் வராமல் பார்த்துக்கொண்டது. யோசித்துப் பாருங்கள்... இலங்கையின் போர்க் குற்றங்களுக்கு எதிராக இந்தியா குரல் கொடுக்க வேண்டும் என்று கோருவது எவ்வளவு அபத்தம்?
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
2009-ம் ஆண்டு மே 15-ம் தேதி அமெரிக்க பசிபிக் பிராந்திய கட்டளைத் தளபதி திமேத்தி ஜே கீட்டிங் அன்றைய இந்திய தேசியப் பாதுகாப்புச் செயலர் எம்.கே.நாராயணனையும் வெளியுறவுத் துறைச் செயலர் சிவசங்கர் மேனனையும் சந்தித்தார். பின்னர், ‘‘இலங்கையில் போர்ப் பகுதியில் ‘பாதிக்கப்பட்ட மக்களுக்கு’ உதவ அமெரிக்கக் கப்பல் படைக் கப்பல்கள் தயார் நிலையில் இருக்கின்றன’’ என்று அறிவித்தார். விடுதலைப் புலிகள் தலைமை அமெரிக்காவிடமிருந்தும் இங்கிலாந்திடமிருந்தும் பொது மன்னிப்பு உறுதிமொழியை எதிர்பார்த்து சரணடைய காத்திருந்த நாள் அது. ‘ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரண் அடைந்தால் பொது மன்னிப்பு’ என்ற பொய்யான வாக்குறுதி சர்வதேசத்தால் வழங்கப்பட்டதற்கான மறைமுக சாட்சி அது. ஆமாம். அமெரிக்காவுக்கும் இதில் பங்கு உண்டு. கொத்துகொத்தாக குண்டுகள் விழுந்தபோதும் தமிழ் உயிர்கள் வீழ்ந்தபோதும் எல்லோரும்தானே வேடிக்கை பார்த்தார்கள்? எல்லாருடைய விருப்பத்தின்பேரில்தான் அது நடந்தது!
மன்னியுங்கள், வெட்கித் தலைகுனிகிறோம்!
பல்லாயிரக் கணக்கான பிச்சைக்காரர்கள். ஆம். பிச்சைக்காரர்கள்தான். கொஞ்சம் பைத்தியம் வேறு. கூடவே பெண்கள். அவர்களும் அப்படிதான். கூடவே குழந்தைகள். அவர்களும் அப்படிதான். எல்லாம் நடைப்பிணங்களாய்க் கையேந்தி நின்றுகொண்டிருக்கிறார்கள்; ஒரு வேளை கஞ்சிக்கு, ஒரு வாளி தண்ணீருக்கு. சின்னச்சின்ன கூடாரங்களில் அஞ்சி ஒடுங்கிக்கிடக்கிறார்கள்; வெட்டவெளியில், பொட்டல் காட்டில்; சூழ்ந்திருக்கும் ராணுவத்தினரின் கொடிய சந்தேக நடவடிக்கைகளுக்கும் கூரிய வேலிக்கும் நடுவே.
இன்னும் சில காத தூரத்தில் இன்னும் பல்லாயிரக் கணக்கான பிச்சைக்காரர்கள். ஆம். பிச்சைக்காரர்கள்தான். கொஞ்சம் பைத்தியம் வேறு. கூடவே பெண்கள். அவர்களும் அப்படிதான். கூடவே குழந்தைகள். அவர்களும் அப்படிதான். எல்லாம் நடைப்பிணங்களாய் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்; மிச்சமிருக்கும் உயிரை மட்டுமாவது காப்பாற்றிக்கொள்ள எங்கேனும் இடமிருக்குமா என்று தேடி; வெட்டவெளியில், பொட்டல் காட்டில்; ஓயாது பாயும் குண்டுகளுக்கும் சூழ்ந்திருக்கும் ஆயுததாரிகளுக்கும் நடுவே.
இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வவுனியா 'நலன்புரி நிலையங்க'ளிலிருக்கும் தமிழர்களின் நிலைக்கும் விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டிலிருக்கும் முள்ளிவாய்க்கால் 'பாதுகாப்பு வளைய'த்திலிருக்கும் தமிழர்களின் நிலைக்கும் உள்ள வேறுபாடு இவ்வளவுதான். இயற்கை உபாதைகளைக் கழிக்கக்கூட ஒதுங்குமிடம் ஏதுமின்றி வவுனியாவும் முள்ளிவாய்க்காலும் மனிதர்களால் நிரம்பி வழிகின்றன. ஆனால், குண்டுகள் சத்தமும் மனிதக் கூக்குரலும் கண நேர ஓய்வின்றி ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. உலகின் அத்தனைக் கண்களும் பார்த்திருக்க இப்படியோர் அவலம் மாதக் கணக்காய் தொடர்வதைவிடவும் சர்வதேச நாடுகளுக்கும் சர்வதேச அமைப்புகளுக்கும் ஒரு கேவலமில்லை. இதன் பின்னணியில் உள்ள நாடுகள், அரசியல்வாதிகள், அரசியல் சூட்சமங்கள், தேர்தல் கால நாடகங்கள் எல்லாவற்றையும் நாம் எல்லோருமே அறிந்திருக்கிறோம். எனினும், இதில் ஆச்சர்யப்பட ஏதுமில்லை. நவீன அரசியல் அகராதியில் மனிதநேயம், மனித உரிமைகள் போன்ற வார்த்தைகளுக்கெல்லாம் நேரடியான அர்த்தம் ஏதும் கிடையாது. எல்லாமே ஆதாயம் சார்ந்த விஷயங்கள்தான். ஆகையால், அரசியல்வாதிகளிடம் எதிர்பார்க்க ஏதுமில்லை. ஆனால், சமகாலத்தின் வரலாற்றுத் துயரமான இந்த மனிதப் பேரவலத்தை ஊடகங்கள் குறிப்பாக - இந்தியாவின் தேசிய ஊடகங்கள் கையாளும் விதம் மிகுந்த அதிர்ச்சியையும் வெட்கத்தையும் ஏற்படுத்துகின்றது. நாம் நமக்கென்று ஏதேனும் தார்மிகக் கொள்கைகளைக் கொண்டிருக்கின்றோமா என்ற கேள்வியை ஏற்படுத்துகின்றது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)





