வெயில் சுள்ளென்று தெறித்துக்கொண்டிருந்த நேரத்தில், அற்புதம் அம்மாள் வந்திருந்தார். முதுமையின் படபடப்பு. பயணமும் அலைச்சலும் தந்த களைப்பு. முகச்சுருக்கங்களில் ஓடி வழியும் வியர்வை. மூச்சிரைப்பு இன்னும் அடங்கவில்லை. 69 வயதாகிறது. ஏறாத படிகள் இல்லை. சிறைச்சாலை, வழக்கறிஞர்களின் அலுவலகங்கள், அரசியல்வாதிகள் - மனித உரிமைச் செயல்பாட்டாளர்களின் வீடுகள், ஊடக அலுவலகங்கள் நீதிமன்றங்கள், சட்டப்பேரவை... மகனை மீட்பதற்காக 25 ஆண்டுகளாக அலைகிறார். பார்த்த மாத்திரத்தில் அவருடைய கனத்த பைக்குள் கைகள் செல்கின்றன. காகிதங்களை உருவுகிறார். “யப்பா, கடைசியில அறிவு வாழ்க்கைய சிறைக்குள்ளேயே முடிச்சுடுவாங்கபோல இருக்குப்பா. எல்லார் கவனத்துலேர்ந்தும் அதை வேற பக்கம் கொண்டுபோயிட்டாங்கப்பா!”
கத்தை கத்தையாகக் காகிதங்களை மேஜை மீது போடுகிறார்.
வெள்ளம் அடித்துச்சென்ற தீர்ப்பு
தமிழகத் தலைநகரம் வரலாறு காணாத வெள்ளத்தில் தத்தளித்த 2015, டிச.2-ல், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது தொடர்பான வழக்கில் தீர்ப்பு வெளியானது. ராஜீவ் கொலை வழக்கில், மரண தண்டனை வளையத்திலிருந்து வெளியே வந்து, இப்போது ஆயுள் தண்டனையை அனுபவித்துவரும் இவர்களை விடுவிக்க தமிழக அரசு மேற்கொண்ட முயற்சிக்குப் பேரிடியாக விழுந்தது அன்றைய தினம் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு.
உச்ச நீதிமன்றம் குறிப்பிட்ட மூன்று விஷயங்கள் இத்தீர்ப்பில் முக்கியமானவை.
1. ஆயுள் தண்டனை என்பதற்கு, ‘எஞ்சிய ஆயுள் முழுவதற்குமான தண்டனை’ என்பதே அர்த்தம்.
2. மத்தியப் புலனாய்வு அமைப்பால் விசாரிக்கப்பட்ட வழக்கில் தண்டனைக் குறைப்பு வழங்க முற்பட்டால், அந்த முடிவை மாநில அரசு மட்டுமே எடுத்துவிட முடியாது; மத்திய அரசின் ஒப்புதல் வேண்டும்.
3. தேசப் பாதுகாப்பை மனதில் கொள்ளாமல் மன்னிப்பின்பேரில் ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுவிக்க முடியாது. தேசத் தலைவர்கள் கொல்லப்படுவதை உள்நாட்டு அல்லது வெளிநாட்டுத் தாக்குதல் நடவடிக்கையாகவே கருத வேண்டும்.
சாதாரண நாட்களில் வெளியாகியிருந்தால், தமிழகத்தில் பெரும் அதிர்வுகளை இந்தச் செய்தி உருவாக்கியிருக்கக் கூடும்.

