தமிழகம் எங்கும் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்துகொண்டிருந்த நாட்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நண்பர்கள் அழைத்த வண்ணம் இருந்தார்கள். தமிழர் அல்லாத நண்பர்களுக்கு அது ஆச்சர்யம். தமிழ் நண்பர்களுக்கோ அது பெரிய குஷி. “நம்ம பசங்க எல்லோரையும் திரும்பிப் பார்க்க வெச்சிட்டாங்க. இங்கெல்லாம் ரொம்ப மரியாதையோடு பார்க்குறாங்க.”
இங்கே தமிழ்நாட்டில் எப்போதுமே நாம் நெஞ்சை நிமிர்த்தி விரைத்துக்கொண்டு நடக்கிறோம் என்றாலும், தமிழகத்துக்கு வெளியே செல்பவர்களுக்குத்தான் சாதாரண நாட்களில் ‘மதராஸி’ ஆக இருப்பதன் துயரம் புரியும். தமிழ்நாட்டின் சமகால அரசியல்வாதிகள் நமக்குச் சேர்த்து வைத்திருக்கும் ‘அடிமைப் பெருமை’ அப்படி!
ஜல்லிக்கட்டுப் போராட்டம் இந்தப் பிம்பத்தைக் கணிசமான அளவுக்கு மாற்ற முனைந்தது. போராட்டத்தின் உள்ளடக்கம் ஜல்லிக்கட்டாக இருந்தாலும், அதன் வெளிப்பாடு ஆட்சியாளர் களுக்கும் அதிகாரத்துக்கும் எதிரான துணிச்சலான அறைகூவல் என்பதை நாடு சரியாகவே உணர்ந்தது. தமிழகத்தைத் தாண்டி பல்வேறு மாநிலங்களிலும் டெல்லியிலும் ஆட்சியாளர்களை இந்தப் போராட்டம் பதைப்பதைப்பில் தள்ளியதற்கான நியாயம் உண்டு. இத்தகைய போராட்டங்கள் நாடு முழுக்கப் பரவக் கூடியவை.
பெரும் திரளான மக்கள் கூட்டத்தை அதிகாரம் கண்டுகொள்ளாமல் விட்டதன் பின்னணியில் ஆரம்பத்தில் ஒரு காரணம் சொல்லப்பட்டது. ஆளும் அதிமுகவின் புதிய தலைமைக்கு எதிரான அதிருப்தி குரல்களிலிருந்து மக்களின் கவனம் திசை திரும்ப அனுமதிப்பதே அது. அடுத்தடுத்த நாட்களில், போராட்டம் தமிழகம் எங்கும் விசுவரூபம் எடுத்ததும் மாணவர்கள் ஜல்லிக்கட்டைத் தாண்டி மத்திய, மாநில ஆட்சியாளர்கள் இரு தரப்பையுமே கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியதும் தமிழக அரசு எதிர்பாராதது. ஆட்சியாளர்களுக்கு எதிரான இந்தச் சூழலை எதிர்க்கட்சிகள் பயன்படுத்திக்கொள்ள முனைந்தன. அதற்கும் மாணவர்கள் அனுமதிக்கவில்லை. ஆக, பாரம்பரிய அரசியல் கட்சிகள் பெரும்பாலானோருக்கு எரிச்சலூட்டியபடி போராட்டம் தொடர்ந்தது. ஜனவரி 26 நெருங்கிய சூழலில், மத்திய, மாநில அரசுகளுக்கு மாணவர்களின் கோரிக்கைக்கு உடனடியாகப் பணிவதைத் தவிர வேறு வழியில்லாமல் போனது.
ஜல்லிக்கட்டு தொடர்வதற்கேற்ப சட்டப்பேரவையில் அவசரச் சட்டத்தைக் கொண்டுவருவதோடு கூட்டத்தைக் கலைக்க இரு அரசுகளும் முடிவெடுத்தன. தொடக்கத்தில் கூறியபடி, இந்தப் போராட்டத்துக்கான உள்ளடக்கம் ஜல்லிக்கட்டு என்றாலும், அதன் உண்மையான இலக்கும் மக்கள் வெளிப்படுத்திய கோபமும் ஜல்லிக்கட்டைத் தாண்டியவை. போராட்டக்காரர்களும் இதை உணர்ந்திருந்தனர். அரசும் உணர்ந்திருந்தது. பொதுச்சமூகமும் உணர்ந்திருந்தது. ஊடகங்களும் இதை அறிந்திருந்தன. என்றாலும் எல்லோருக்குமே ஜல்லிக்கட்டு முகமூடியே பாதுகாப்பானதாகத் தோன்றியது. கூடவே ஜல்லிக்கட்டைத் தாண்டிய அரசியல் கிளர்ச்சியாக இது உருமாறுமா என்ற அந்தரங்க எதிர்பார்ப்பும் பலரிடமும் தெரிந்தது.