சாகும் வரை போராடு!
ந்தியாவில் எவ்வளவோ வாழ்க்கை முறைகள் இருக்கின்றன. ஆனாலும், ஜந்தர் மந்தரின் வாழ்க்கை முறையை எந்தக் கலாச்சாரத்தோடும் ஒப்பிட முடியாது. போராட்டத்தையே வாழ்க்கையாக வரித்துக்கொண்டவர்களின் வாழ்க்கை முறை இது. ஒருகாலத்தில் ஜெய்ப்பூர் மகாராஜா இரண்டாவது ஜெய் சிங் கட்டிய கால நிர்ணய ஆய்வுக்கான கட்டிடங்களுக்காக டெல்லியில் பேர்போன இடம் ஜந்தர் மந்தர். இப்போதோ, இந்திய மக்களுக்குப் போராட்டத்தில் இருக்கும் நம்பிக்கைக்கான அடையாளம். டெல்லியில் ஆண்டு முழுவதும் ஆயிரக் கணக்கில் போராட்டங்கள் நடக்கும் களம் இது. போராட வேண்டும் என்றால், ஜந்தர் மந்தர் வாருங்கள்என்று டெல்லி காவல் துறையே அழைக்கும் இடம்.

வரலாறு இங்கே எழுதப்படுகிறது
எல்லா அரசாங்கங்களும் போராட்டங்களை வெறுக்கவே செய்கின்றன. நகரின் மையத்தில் போராட்டங்கள் நடந்தால், மக்கள் கவனத்தை அவை ஈர்க்கும் என்பதால், நகரின் மையத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக அவர்களை மக்கள் பார்வைக்கு அப்பால் துரத்தும் உத்தியையே கையாள்கின்றன. டெல்லி அரசு நாடெங்கிலிருந்தும் வரும் போராட்டக்காரர்களை அப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக மையத்திலிருந்து விரட்டி, இறுதியில் அவர்கள் அடைக்கலமான இடம்தான் ஜந்தர் மந்தர்.
பொதுவாக, மாநில அரசாங்கங்களால் புறக்கணிக்கப்பட்டு, தங்கள் கோரிக்கைகளோடு மத்திய அரசாங்கத்தை அணுக வரும் ஜந்தர் மந்தர் போராட்டக்காரர்களை இரு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று, பெரும் கூட்டத்துடன் திரளும் தற்காலிகப் போராட்டக்காரர்கள். இவர்கள் எல்லா ஊர்களையும்போல பொதுவான கோரிக்கைகளுடன் ஓரிரு நாட்களிலிருந்து ஒரு வாரம் வரை நீடிக்கும் போராட்டங்களில் ஈடுபடுபவர்கள். இரண்டு, ஆண்டுக் கணக்கில் இங்கேயே அமர்ந்திருக்கும் நீண்ட காலப் போராட்டக்காரர்கள். தங்கள் கோரிக்கைகளுக்காகவும் போராட்டங்களுக்காகவுமே உயிரைவிடவும் தயாராக இருப்பவர்கள். நிறைய பேர், முதல் வகை போராட்டக்காரர்களாக வந்து இரண்டாம் வகை போராட்டக்காரர்களாக மாறியவர்கள்.

கொஞ்சம் படிப்பு... நிறைய அரசியல்!


ரு வகுப்பறை. ஆசிரியர் மன்மோகன் சிங். கரும்பலகையில் குச்சியை வைத்து சுட்டிக்காட்டிப் பாடம் நடத்துகிறார் சிங். மாணவர்களாகத் தரையில் குத்தவைத்து உட்கார்ந்திருக்கிறார்கள் அவருடைய மந்திரிமார்கள். கரும்பலகையில் எழுதப்பட்டிருக்கும் பாடத் தலைப்பு: ஊழல் செய்வது எப்படி?

இப்படி வரையப்பட்ட ஒரு சுவரோவியத்தை இந்தியாவில் எந்தக் கல்வி நிலையத்திலாவது - அதுவும் துணைவேந்தர் அறைக்கு எதிரிலேயே - நாம் பார்க்க முடியுமா? பிரதமரில் தொடங்கி அருணாச்சலப் பிரதேசத்தின் உள்ளூர் அரசியல்வாதி வரை சகலரையும் கிண்டலடிக்கும் கேலிச் சித்திரங்கள், இந்திய ராணுவம் காஷ்மீரில் நடத்தும் அத்துமீறல்களைக் காட்டமாக விமர்சிக்கும் சுவரொட்டிகள், இனவாத அரசியலுக்குக் கடுமையான எச்சரிக்கைகளை விடுக்கும் சுவரோவியங்கள்...
- டெல்லிவாசிகளுக்கு ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ஆச்சர்யம் இல்லை. ஆனால், டெல்லி எல்லைக்கு அப்பாலிருந்து வரும் எவரையும் ஆச்சர்யத்திலும் பரவசத்திலும் ஆழ்த்தும் ஒரு கனவுக் கல்விச்சாலை அது.

ஒரு குட்டி இந்தியா
டெல்லியின் தென் பகுதியில் ஆரவல்லி மலைத்தொடரின் கரடுமுரடான பரப்பில், கிட்டத்தட்ட ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விரிந்திருக்கும் ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ஒரு குட்டி இந்தியா. மலைப் பாறைகளும் புல்வெளிகளும் மரங்களும் நூற்றுக்கணக்கான பறவைகளும் வன உயிரினங்களும் அடங்கிய இந்தப் பல்கலைக்கழகத்தின் வளாகம், ஒரு பாடசாலை என்பது வெறும் செங்கற்களால் மட்டுமே கட்டப்படுவது இல்லை என்பதைச் சொல்லாமல் சொல்லக் கூடியது.

நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்து வரும் ஏழாயிரத்துச் சொச்ச மாணவ - மாணவிகள் இங்கு படிக்கின்றனர். தவிர, நூற்றுமுப்பது வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்கள். ஏராளமான துறைகள் இந்தப் பல்கலைக்கழகத்தில் உண்டு. அனைத்துத் துறை மாணவர்களுக்கும் பொதுவான துறை அரசியல்!

பேச்சுதான் ஆதாரச் சுருதி
ஒரு பல்கலைக்கழகம் என்பது மனிதநேயம், சகிப்புத்தன்மை, பகுத்தறிவு, உண்மையைத் தேடுவதற்கான களமாக இருக்க வேண்டும்; சாகச சிந்தனைகளை வளர்ப்பதற்கான களமாக இருக்க வேண்டும்; மிக உயர்ந்த லட்சியங்களுக்காக மனித இனம் மேற்கொள்ளும் முன்னோக்கிய பயணத்துக்கு உதவ வேண்டும் என்று கனவு கண்டார் நேரு. அவருடைய மகள் இந்திராவால் தொடங்கப்பட்ட இந்தப் பல்கலைக்கழகம், 40 ஆண்டுகள் ஆகும்போதும் அந்த தாகத்தை இன்னமும் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். எங்கு பார்த்தாலும் மாணவ - மாணவிகள் கைகோத்து நடக்கிறார்கள். நள்ளிரவிலும் மணிக்கணக்காக உட்கார்ந்து பேசுகிறார்கள். “பேச்சுதான் இந்தப் பல்கலைக்கழகத்தின் ஆதாரச் சுருதி. பாலினச் சமத்துவத்திலிருந்துதான் இந்தப் பல்கலைக்கழகத்தின் ஜனநாயக மாண்புகள் தொடங்குகின்றன” என்கிறார்கள்.

வாய்ப்பு அல்ல; அதிகாரம்


லகின் மிகப் பெரிய ஜனநாயக நிகழ்வான இந்தியத் தேர்தலை தேசத்தின் திருவிழா என்று குறிப்பிட்டால் அது மிகையான வர்ணணையாக இருக்காது என்று நினைக்கிறேன். ஏனைய திருவிழாக்களைப் போலவே விந்தைகளுக்கும் விசித்திரங்களுக்கும் கொஞ்சமும் பஞ்சம் இல்லாத இந்தியத் தேர்தலின் வெவ்வேறு வடிவங்களை தேசத்தின் வெவ்வேறு பகுதிகளில் பார்க்கும்போது கிடைக்கும் சுவாரஸ்யம் அலாதியானது.

இந்தியாவின் முதல் தேர்தலைப் பற்றிப் படிக்கும்போது பல விஷயங்கள் ஆச்சர்யம் அளிக்கக்கூடியவையாக இருக்கும். பாலைவனத்தில் ஒட்டகங்களை ஓட்டிக்கொண்டு, சாப்பாடு கட்டிக்கொண்டு ஓட்டுப் போட வந்தவர்கள் கதைகள், முதல் நாளே வந்து காத்திருந்து ஓட்டுப் போட்டவர்கள் கதைகள், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் அழுது புரண்டவர்கள் கதைகள், வயதானவர்களைத் தூக்கிக்கொண்டுவந்து ஓட்டுப் போட வைத்தவர்கள் கதைகள்... இந்தக் கதைகளுக்கெல்லாம் கொஞ்சமும் பஞ்சம் இல்லாத கதைகள் இப்போதும் இருக்கின்றன. இன்னமும் நீளும் என்றே தோன்றுகிறது. காரணம்... இந்நாட்டின் மக்களுக்கு இந்தத் தேர்தல் அமைப்பின் மீது இருக்கும் ஆழமான நம்பிக்கை.

இந்திய ஜனநாயகத்தின் மீது முன்வைக்கப்படும் கடுமையான விமர்சனங்களில் முக்கியமானது நம்முடைய தேர்தல் முறை. நிச்சயம் ஏராளமான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய ஒரு முறைதான் இது. ஆனால், விமர்சிப்பவர்கள் பலரும் சொல்வதுபோல நிராகரிக்கக் கூடிய முறை இல்லை அது என்பதை இந்தப் பயணம் வலுவாகவே உறுதி செய்தது. காஷ்மீரிகள் வாக்களிப்பதற்கு ஒரு நியாயம் இருக்கிறது என்றால், அசாமிகள் வாக்களிப்பதற்கு ஒரு நியாயம் இருக்கிறது. தமிழகத்திலும் உத்தரப் பிரதேசத்திலும் அந்த நியாயங்கள் வேறுபட லாம். ஆனால், தங்கள் தலையெழுத்தைத் தீர்மானிப்பவர்களின் தலையெழுத்தைத் தீர்மானிப்பதில் தங்க ளுக்குப் பங்கிருக்க வேண்டும் என்பதில் மக்களிடத்தில் இருக் கும் உறுதிப்பாடு அசாத்தியமானது. இந்த விஷயத்தில் நாட்டின் எல்லாக் குடிமக்களுக்கும் அவர்களுடைய இந்த உரிமையை உறுதிசெய்யும் தேர்தல் ஆணையத்தின் பணி மகத்தானது.

இரண்டு ஓட்டுகளுக்கு ஒரு சாவடி


சத்தீஸ்கரில் ஒரு சில குடும்பங்கள் மட்டுமே வசிக்கும் ஏராளமான கிராமங்கள் உண்டு. சுற்றிலும் வனம்தான். சாலை, மருத்துவமனை, மின்சாரம் எதுவும் கிடையாது. அப்படிப்பட்ட கிராமங்களில் ஒன்றுதான் கோரியா மாவட்டத்தைச் சேர்ந்த சேரதந்த். தேவராஜ் சேர்வா, அவருடைய மனைவி பூளாவாட்டி சேர்வா, மகன் மஹிபால் சேர்வா இந்த மூவருக்காக மட்டும் இங்கே ஒரு வாக்குச்சாவடி ஒவ்வொரு தேர்தலின்போதும் அமைக்கப்படுகிறது. மலைப் பாதையில் ஏராளமான சங்கடங்களுக்கு இடையே பயணிக்கிறது தேர்தல் அலுவலர்கள் குழு, கூடவே பாதுகாப்புப் படையினர் ஐந்து பேருடன். இப்போது பூளாவாட்டி சேர்வா இறந்துவிட்டார். இரு ஓட்டுகளுக்காகப் பயணிக்கிறார்கள். தேவராஜ் சேர்வாவுக்குக் கல்வி, மருத்துவம், மின்சாரம் எல்லாவற்றையும்விட கோடையில் கிணற்றில் தண்ணீர் ரொம்ப ஆழத்துக்குச் சென்றுவிடுவதுதான் பிரச்சினை. ஆனால், இதையெல்லாம் அரசாங்கத்திடம் எப்படிக் கேட்க முடியும் என்று அவருக்கு அவரே ஆறுதல்படுத்திக்கொள்கிறார். அவரைச் சந்திக்க நாம் செல்வதையே அவர் ஒரு பெருமையாக நினைப்பார் என்று சொல்கிறார்கள் அதிகாரிகள்.

மோடி, குஜராத், வளர்ச்சி: கதவுகளில் கசியும் உண்மை!

வளர்ச்சியின் குறுக்குவெட்டுத் தோற்றம்: அகமதாபாத் நகரில் புழுதி அப்பும் சாலையுடன் உள்ள ஒரு வீதி... கலவரங்களின்போது எதிர்கொள்ள கதவுடன்.  

ந்தச் சுற்றுப்பயணத்தில் நாடு முழுவதும் நான் மக்களிடம் அதிகம் கேட்ட மூன்று வார்த்தைகளுக்கு இந்த அத்தியாயத்தை ஒதுக்கலாம் என்று நினைக்கிறேன்: மோடி - வளர்ச்சி - குஜராத்.

வரலாற்றில் வித்தியாசமான தேர்தல்


இந்திய வரலாறு மிக வித்தியாசமான ஒரு தேர்தலை எதிர்கொள்கிறது. இதுவரையிலான 15 மக்களவைத் தேர்தல்களும், இந்திய மக்கள் முன் எத்தனையோ பேசுபொருள்களை முன்னிறுத்தியிருக்கின்றன. சாதனைகளும் வாக்குறுதிகளும் முன்னிறுத்தப்பட்ட தேர்தல்கள், ஊழல்களும் அதிகார துஷ்பிரயோகங்களும் முன்னிறுத்தப்பட்ட தேர்தல்கள், மரணங்களும் தியாகங்களும் முன்னிறுத்தப்பட்ட தேர்தல்கள், தனிக்கட்சி ஆட்சியும் நிலையான அரசும் முன்னிறுத்தப்பட்ட தேர்தல்கள், கூட்டாட்சியும் அனைவருக்குமான வளர்ச்சியும் முன்னிறுத்தப்பட்ட தேர்தல்கள்... எல்லாத் தேர்தல்களிலுமே குறைந்தபட்சம் மக்கள் முன் இரு தேர்வுகள் முன்னிறுத்தப்பட்டது உண்டு: இந்தக் கட்சியா, அந்தக் கட்சியா அல்லது இந்தக் கூட்டணியா, அந்தக் கூட்டணியா?

முதல்முறையாக மக்களவைத் தேர்தலை அதிபர் தேர்தல்போல எதிர்கொள்கிறது இந்தியா. பிரச்சாரத்தில் கட்சிகளின் பெயர்கள் அடிவாங்கிவிட்டன. இன்னும் சொல்லப்போனால், ஒரேயொரு மனிதரும் அவர் முன்னிறுத்தும் முழக்கமும்தான் இன்றைய இந்தியாவின், இந்தத் தேர்தலின் பேசுபொருள்: மோடி - குஜராத் - வளர்ச்சி.

நாட்டின் மிகப் பெரிய கட்சியான காங்கிரஸ் மோடிக்குப் பதில் அளிப்பதை மட்டுமே தேர்தல் பணியாகக் கொண்டிருக்க… ஏனைய கட்சிகளோ, மோடியை நோக்கிக் கேள்வி எழுப்புவதையே தேர்தல் பணியாகக் கொண்டிருக்கின்றன. ஆக, வாக்காளர்கள் முன் ஒரேயொரு கேள்விதான் எங்கும் தொக்கிநிற்கிறது: மோடி - குஜராத் - வளர்ச்சி வேண்டுமா; வேண்டாமா?

மக்களிடம் இப்படி ஒரு கேள்வி தொக்கி நிற்கிறது என்றால், நாடு முழுவதும் உள்ள ஊடகங்களிலும் இப்போது இதுதான் முக்கியமான விவாதம் - குஜராத்தில் உண்மையான வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறதா, இல்லையா? அது உண்மையாகவே ஒரு நல்ல முன்மாதிரிதானா, இல்லையா? மக்கள் உண்மையாகவே எப்படி இருக்கிறார்கள்? எது குஜராத்தில் மீண்டும் மீண்டும் மோடியைப் பதவியில் அமர்த்துகிறது?

மாற்று அரசியல் இடதுசாரிகளால்தான் சாத்தியம்: பிரகாஷ் காரத்


ந்திய இடதுசாரிகளின் குவிமையம் எப்போதுமே கேரளம்தான். இந்திய அரசியலில் எப்போதும் இல்லாத அளவுக்கு வலதுசாரிகள் சூறாவளி வேகத்தில் முன்னேறும் சூழலில், இடதுசாரிகளின் கப்பலை வழிநடத்துகிறார் கேரளத்திலிருந்து வந்த பிரகாஷ் காரத். நாட்டின் பிரதானக் கட்சிகளான காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி இரண்டுக்குமே பொருளாதாரக் கொள்கைகளில் வேறுபாடுகள் இல்லாமல் போய்விட்ட நிலையில், காரத் இடதுசாரிகளின் மாற்றுப் பொருளாதாரக் கொள்கையை நோக்கி மக்களுக்கு அழைப்பு விடுக்கிறார் . கட்சி தொடங்கிய காலம் முதல் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் எல்லா விமர்சனங்களுக்கும் இடம் தந்தார்; ஒரு கேள்வி நீங்கலாக எல்லாக் கேள்விகளுக்கும் பதில் தந்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அரை நூற்றாண்டுக்கு முன் பிரிந்ததற்கான நியாயம் இன்னும் நீடிக்கிறதா? ஏன் இந்தியாவில் உள்ள எல்லா இடதுசாரி அமைப்புகளும் ஒன்றுசேரக் கூடாது?

இந்தியாவுக்குத் தேவை மகிழ்ச்சிகரமான முதலாளித்துவம்: அரிந்தம் சௌத்ரி


ரிந்தம் சௌத்ரி இன்றைய தலைமுறையின் முக்கியமான பிரதிநிதிகளில் ஒருவர். பன்முக ஆளுமை. அடிப்படையில் பொருளாதார நிபுணரான அரிந்தம், திட்டமிடல் - மேலாண்மைக்கான இந்திய நிறுவனம் (ஐ.ஐ.பி.எம்.) எனும் மேலாண்மைக் கல்வி நிறுவனத்தின் தலைவர். எதையும் பிரம்மாண்டமாக யோசிக்கச் சொல்லும் அரிந்தம், தன்னுடைய 'சண்டே இந்தியன்' பத்திரிகையை 14 மொழிகளில் தொடங்கியவர். திரைப்படத் தயாரிப்பாளராக மூன்று முறை தேசிய விருதுகள் பெற்றிருக்கிறார். மத்திய திட்டக் குழுவின் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக இருந்திருக்கிறார். கடந்த 2001-ல் தொடங்கி ஒவ்வோர் ஆண்டும் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முந்தைய தினம், தொலைக்காட்சியில் மாற்று பட்ஜெட் ஒன்றைத் தாக்கல்செய்வது இவருடைய வழக்கம். அரிந்தத்தின் ‘கவுண்ட் யுவர் சிக்கன் பிஃபோர் தே ஹேட்ச்' மற்றும் ‘டிஸ்கவர் த டைமண்ட் இன் யூ' இரு புத்தகங்களும் தலா பத்து லட்சம் பிரதிகள் விற்றவை. ஃபேஸ்புக்கில் 44.32 லட்சம் பேர் அரிந்தத்தைப் பின்தொடர்கிறார்கள். அரிந்தம் வசிப்பது டெல்லியில் என்றாலும், அவர் மனம் வாழ்வது கொல்கத்தாவில். ஒரு வங்காளியான அரிந்தம், மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளின் கால் நூற்றாண்டு ஆட்சியைத் தகர்ப்பதில் முன்வரிசையில் நின்றவர்.

இடது சிந்தனை பேசும் வலதுசாரி என்று உங்களை அழைக்கலாமா?

நல்ல கேள்வி! நான் சுதந்திரமான சந்தை, தடையற்ற தொழில் முதலீடு ஆகியவற்றில் நம்பிக்கை உள்ளவன். இதை நான் ‘மகிழ்ச்சிகரமான முதலாளித்துவம்' என்று அழைப்பேன். இதையே ‘ஜனநாயக முதலாளித்துவம்' என்றால் மற்றவர்களை ஏற்க வைப்பது எளிதான செயல் அல்ல. ஆனால், இதுதான் எனது நம்பிக்கை. கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, நீதி பெறும் உரிமை ஆகிய அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வழிகண்டுவிட்டால் பிறருடைய ஆக்கபூர்வ சிந்தனைகளுக்கும், தொழில் முனைவோர்களுக்கும் தடை விதிப்பதற்கு அவசியமே ஏற்படாது.

வளர்ச்சி என்பதற்கு உங்களுடைய இலக்கணம் என்ன?முந்தைய கேள்விக்குச் சொன்ன அதே பதில்.

மோடிஜியைப் பற்றி நான் பேச விரும்பவில்லை: குதுபுதீன் அன்சாரி


லகை உலுக்கிய புகைப்படங்களில் ஒன்று குதுபுதீன் அன்சாரியினுடையது. உடலில் காயங்களுடனும் சட்டையில் ரத்தக் கறைகளுடனும் கண்களில் மரண பயத்துடனும் இரு கைகளையும் கூப்பி உயிர்ப் பிச்சை கேட்கும் குதுப்பின் படம்தான் குஜராத் கலவரத்தின் கொடூர முகத்தை உலகம் முழுவதும் கொண்டுசென்றது. 2002, பிப்ரவரியில் முஸ்லிம்கள் மீது இந்து அமைப்புகள் நடத்திய வெறியாட்டத்தை நரேந்திர மோடியின் காவல் துறை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சூழலில், அகமதாபாதில் துணை ராணுவப் படைகள் நுழைந்தன. அகமதாபாத் நகரின் மேல் கரும் புகை சூழ்ந்திருந்தது. ஆங்காங்கே தீவைக்கப்பட்டிருந்த முஸ்லிம்களின் வீடுகளில் ஒன்று குதுப்பினுடையது. இரு நாட்களாகவே வெவ்வேறு கும்பல்கள் அந்தப் பகுதியையே சூறையாடிக்கொண்டிருந்த நிலையில், உயிருக்குப் பயந்து பதுங்கியிருந்தார் குதுப். அன்று காலை அந்த வீடும் கலவரத்துக்கு இலக்கானது. வீட்டைச் சுற்றிலும் தீ சூழ்ந்திருந்த நிலையில் - மரணத்தின் தீ நாக்குகள் - நெருங்கிக் கொண்டிருந்த சூழலில்தான் - அதிர்ஷ்டவசமாக ஒரு துணை ராணுவ வாகனம் அந்தப் பகுதியில் நுழைந்தது. குதுப் மீட்கப்பட்டார். ‘ராய்ட்டர்ஸ்’ நிறுவனத்தில் பணியாற்றிய அர்கோ தத்தாவால் எடுக்கப்பட்ட குதுப்பின் படம் மறுநாள் உலகெங்கும் உள்ள பல முன்னணிப் பத்திரிகைகளிலும் வெளியான பின் அந்தப் படம் குதுப்பை வாழ்நாள் முழுக்கத் துரத்தத் தொடங்கியது. அவர் உயிர் பிழைக்க குஜராத்திலிருந்து மகாராஷ்டிரம் சென்றார்; அங்கிருந்து அவர் வேலையை விட்டு அந்தப் புகைப்படம் துரத்தியது. மேற்கு வங்கம் சென்றார்; அங்கும் துரத்தியது. 10-க்கும் மேற்பட்ட முதலாளிகள் இந்தப் படத்தைப் பற்றித் தெரியவந்த பின்னர், அவரை வேலையை விட்டுத் துரத்தினர். ஒருகட்டத்தில் குதுப்பே இந்தத் துரத்தலுக்கு முடிவுகட்டினார். அவர் மீண்டும் குஜராத் திரும்பினார். அடிப்படையில் ஒரு தையல்காரரான அவர், தன் தையல் இயந்திரத்திடம் தன்னை ஒப்படைத்துக்கொண்டார். சிறிய வீடொன்றை அவர் இப்போது கட்டியிருக்கிறார். அங்கு தாய், மனைவி, இரு குழந்தைகளுடன் வசிக்கும் குதுப்பைச் சந்தித்தேன். இன்னமும் மறையாத பயமும் நிறைய தயக்கமும் உறைந்திருக்கும் குதுப்பிடமிருந்து வெளிப்படும் வார்த்தைகள் நேரடியானவை அல்ல. ஆனால், அவற்றின் பின் ஆயிரமாயிரம் அர்த்தங்கள் பொதிந்திருக்கின்றன. மனிதத்தின் மனசாட்சியை உலுக்கும் வார்த்தைகள் அவை.

உண்மையான ஜனநாயகத்தைப் பெற இந்த ஜனநாயகம் அவசியம் - பினாயக் சென்


ந்தியாவின் தாறுமாறான வளர்ச்சியின் கோரமான முகத்துக்குச் சரியான உதாரணம் மத்திய இந்தியாவின் சத்தீஸ்கர். தலைநகர் ராய்பூரின் பிரம்மாண்டமான மேக்னட்டோ மால் ஒரு முனை என்றால், சாலையில் ஐந்து ரூபாய்க்குச் சவாரி ஏற்றத் தயாராக இருக்கும் ரிக்‌ஷாக்கள் இன்னொரு முனை. சத்தீஸ்கரின் 41% நிலம் வனம். கனிம வளங்களை இந்தியப் பெருநிறுவனங்கள் வாரியணைத்து அள்ளுகின்றன. இந்தியாவின் மின் உற்பத்தி, இரும்பு உற்பத்தியின் மையம் இன்றைக்கு சத்தீஸ்கர்தான். ஆனால், மனிதவளக் குறியீட்டில் இந்தியாவிலேயே மோசமான மாநிலமும் இதுதான். படித்தவர்கள் எண்ணிக்கை தேசிய சராசரியைவிடக் குறைவு. சுகாதாரத்திலும் நாட்டிலேயே மோசம். ஊட்டச்சத்துப் பற்றாக்குறை, குழந்தைகள் இறப்புவிகிதம் இப்படி எந்த விஷயத்தில் ஒப்பிட்டாலும் மோசம். மாவோயிஸ்ட்டுகள் ஆதிக்க பூமியான சத்தீஸ்கரில் அவர்களின் கோட்டைகளில் ஒன்றாகக் கருதப்படும் பஸ்தாரும் தண்டேவாடாவும் மாநிலத்திலேயே கல்வியறிவு குறைவான மாவட்டங்கள் - வறுமை தாண்டவமாடும் பகுதிகள் என்பது இந்திய வரலாற்றின் மிகப் பெரிய உள்நாட்டுப் போருக்கான அடிப்படையை நாம் புரிந்துகொள்ள உதவும்.

மனிதநேயம் மிக்க மருத்துவரான பினாயக் சென் சத்தீஸ்கரில் பணியாற்றச் சென்றபோது, அவருக்குள்ளிருந்த மனித உரிமைச் செயல்பாட்டாளர் வெளியே வந்தார். வறுமை யில் வாடிய சத்தீஸ்கர் மக்களிடையே கிராமம் கிராமமாகச் சென்று சேவையாற்றினர் சென்னும் அவருடைய மனைவி இலினாவும். தொழிலாளர்கள் அமைப்பால் நடத்தப்படும் சத்தீஸ்கர் முக்தி மோட்சா சாஹித் மருத்துவமனை கட்ட அவர் உதவினார். ஜன் ஸ்வஸ்த்யா ஸஹயோகின் அமைப்பின் ஆலோசகராக இருந்து பிலாஸ்பூர் பகுதியில் பழங்குடியின மக்களுக்கு நல்ல சிகிச்சைகள் கிடைக்க உதவினார். சென்னின் சேவைகள் மருத்துவ அமைப்புகளால் கொண்டாடப்பட்டன; சுகாதாரத்தை மேம்படுத்தும் அவருடைய சிந்தனைகள் இந்தியாவின் மிகச் சிறப்பு வாய்ந்த அறிவியலாளர்களில் ஒருவராக அவரை அடையாளப்படுத்தின. கூடவே, அடக்குமுறைக்கு எதிராக மனித உரிமைகளுக்காகவும் அவர் குரல் கொடுத்தபோது, சத்தீஸ்கர் அரசு மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்புபடுத்தி அவரைக் கைதுசெய்தது. அவர் தேசத் துரோகி ஆக்கப்பட்டார். சர்வதேச அளவில் அதிர்வுகளை உண்டாக்கிய இந்த வழக்கில் அமர்த்திய சென் முதல் நோம் சாம்ஸ்கி வரை சென்னுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார்கள். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பேரணிகள் நடந்தன. இதற்கு இடையிலேயே சென்னுக்கு உலகளாவிய சுகாதாரம் மற்றும் மனித உரிமைகளுக்கான ஜொனாதன் மன் விருது அறிவிக்கப்பட்டது. ஆனாலும், அரசு பொருட்படுத்தவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் அவருக்குப் பிணை மறுக்கப்பட்டது. இறுதியாக உச்ச நீதிமன்றம் அவரைப் பிணையில் விடுவித்தது. சென் வெளியிலிருந்து இப்போது வழக்கை எதிர்கொள்கிறார். சத்தீஸ்கரைப் பற்றியும் ‘வளர்ச்சி'யைப் பற்றியும் சென்னிடம் பேசினேன்.

கடவுள் ஊரின் அரசியல் கலாச்சாரம்


திருவனந்தபுரத்துக்குள் எங்கெல்லாம் சுற்றலாம் என்று உள்ளூர்க்காரர் யாரிடம் கேட்டாலும், “முதலில் பத்மநாப சுவாமி கோயிலைப் பார்த்துவிடுங்கள்” என்கிறார்கள். நியாயம்தான். ஊரின் பெயரே பத்மநாபர் பெயரில்தான் இருக்கிறது திரு + அனந்த + புரம். அனந்தரின் நகரம்.

உலகின் பணக்கார சாமி
தென்னிந்தியாவில் கோயில்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்துக்கு ஓர் அடையாளக் குறியீடு பத்மநாப சுவாமி கோயில். சேரமான் பெருமானால் எழுப்பப்பட்ட இந்தக் கோயில், ஆரம்பக் காலம் தொட்டே செல்வாக்குக்குக் குறைவில்லாதது. ராஜா மார்த்தாண்ட வர்மா 1750-ல் தனது அரசாங்கம், ராஜ்ஜியம், செல்வம் அனைத்தையும் அனந்த பத்மநாப சுவாமிக்குப் பட்டயம் எழுதித்தந்து, தன் உடை வாளையும் திருவடியில் வைத்துப் பரிபூரண சரணாகதி அடைந்த பின்னர், கோயில் இன்னும் செல்வாக்கு பெற்றதாகிவிட்டது. அதாவது, பத்மநாப சுவாமியே திருவிதாங்கூர் அரசின் தலைவர் ஆகிவிட்டார். ஆங்கிலேயர் காலத்தில், பத்மநாப சுவாமிக்கு 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதை செய்யும் வழக்கம் இருந்திருக்கிறது. சுதந்திர இந்தியாவில் மன்னர் மானிய முறை நீக்கப்படும் வரை இந்திய ராணுவமும் இந்தச் சடங்கைப் பின்பற்றியிருக்கிறது. இந்த வரலாற்றையெல்லாம் தாண்டி இப்போது உலகின் பணக்கார சாமி பத்நாப சுவாமி. கோயிலில் உள்ள ஆபரணங்களின் மதிப்பு மட்டும் சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய்.

கோயிலுக்குள் ஆண்கள் சட்டை அணிய அனுமதி இல்லை. போலீஸ்காரர்களுக்குக்கூட இங்கே துண்டும் வேட்டியும்தான் சீருடை. பெண்களுக்கும் புடவையுடன் மட்டுமே அனுமதி. ஆகையால், பேன்ட் அணிந்துவரும் ஆண் - பெண் பக்தர்கள் இருபாலரும் வித்தியாசமின்றி அதற்கு மேல் கோயிலில் தரப்படும் வேட்டியை அணிந்துகொண்டு சுற்றுகிறார்கள். “ஒருகாலத்தில் அரசப் பரம்பரையும் உயர் சாதி என்று சொல்லிக்கொண்டிருந்தவர்களையும் தாண்டி யாரையும் இந்தக் கோட்டை வீதிக்குள்கூட விட மாட்டார்கள். அவ்வளவு சாதிப் பாகுபாடு இங்கிருந்தது” என்று நினைவுகூர்ந்தார் ஒரு பெரியவர். கோயிலை ஒரு சுற்று சுற்றிவிட்டு, ஊரைச் சுற்ற ஆரம்பித்தேன்.

இந்தியாவின் மிகப் பெரிய வாக்கு வங்கி


ரு சுவாரஸ்யமான மனிதர் மூலமாக சுவாரஸ்யமான சயோனா சானாவைப் பற்றித் தெரிந்துகொண்டேன். மிசோரமின் பக்த்வாங் கிராமத்தின் ‘செல்வாக்கு' மிக்க குடிமகன் சயோனா சானா. ராஜ வாழ்க்கை என்று சொல்வார்களே... ஜனநாயக நாட்டில் அப்படி ஒரு வாழ்க்கையை வாழ்கிறார் இந்த மனிதர்.

மலைக் குன்றுகளும் ஏற்ற இறக்கங்களும் கொண்ட நிலத்தின் மீது பசும் போர்வையைப் போர்த்தியதுபோல இருக்கும் மிசோரம் மாநிலத்தின் பக்த்வாங் கிராமம்தான் சயோனாவின் ஆளுகைப் பிரதேசம். பெரும்பாலும் இரும்புத் தகடுகளால் அமைக்கப்பட்ட குடில்களிடையே நான்கு தளங்களில் 100 அறைகள், 22 படுக்கை அறைகள், 17 குளியல் அறைகளுடன் விரிந்திருக்கிறது சயோனாவின் கான்கிரிட் வீடான ‘சுவாந்தர் ரன்' - இந்தியாவின் மிகப் பெரிய வாக்கு வங்கி. இங்கேதான் 39 மனைவிகள், 94 பிள்ளைகள், 36 பேரப் பிள்ளைகளுடன் வாழ்வாங்கு வாழ்கிறார் எழுபது வயது சாயோனா, உலகின் மிகப் பெரிய குடும்பத் தலைவர்.

இந்தியா என்ன சொல்கிறது?: தெற்கு


தென்னிந்தியப் பயணத்தை சென்னையில் தொடங்கவில்லை; முடித்தேன். வேறு வார்த்தைகளில் சொல்வது என்றால், இந்த இந்தியச் சுற்றுப்பயணத்தின் அடைவிடத்தை அடைந்தேன். இந்தியாவின் ஏனைய பகுதிகளில் பயணிப்பதற்கும் தெற்கில் பயணிப்பதற்கும் ஒரு கவனிக்கத்தக்க வேறுபாடு உண்டு. ரயில் பயணத்திலோ, பஸ் பயணத்திலோ ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஒரே மாதிரி நிலத்தைத் தெற்கில் நாம் பார்க்க முடியாது. பசுமையான வயல்களோ, மலைகளோ, ஆறுகளோ, வறண்டவெளியோ அது எதுவானாலும் மாறி மாறி காணக் கிடைப்பது தென்னிந்தியாவின் புவியியல் அமைப்பை மட்டும் காட்டுவதல்ல; சமூகப் பொருளாதாரப் போக்கையும் காட்டுவது. இந்தியாவின் ஏனைய நான்கு எல்லைப் பகுதிகளுடன் ஒப்பிடுகையில், ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம், தமிழகம், கேரளம், புதுவை, லட்சத் தீவுகளை உள்ளடக்கிய தென்னிந்தியா ஓரளவுக்கு நாம் செல்ல வேண்டிய சரியான திசையில் இதுவரை சென்றிருப்பதாகவே தோன்றுகிறது இந்தியாவின் ஐந்தில் ஒரு பங்கு நிலப்பரப்பைக் கொண்டிருக்கும் தெற்கில் ஒருபுறம் இன்னமும் சரிபாதிப் பேர் விவசாயத்தைத் தொடர்கின்றனர்; மறுபுறம் தொழில்துறையின் உச்சமான தகவல் தொழில்நுட்பத் துறையில் அதுவே ஆதிக்கம் செலுத்துகிறது. சுதந்திரத்துக்குப் பின் தெற்கின் பெரும்பாலான தலைவர்கள் முன்னெடுத்த கலப்புப் பொருளாதாரக் கொள்கையின் வெற்றி என்றுகூட இதைக் கூறலாம். இதன் மிகச் சிறந்த வெளிப்பாட்டை கேரளத்தில் பார்த்தேன். கேரளம்தான் இன்றைக்கு நாட்டிலேயே பொருளாதாரத்திலும் மனித வள மேம்பாட்டிலும் சமமான வளர்ச்சியைப் பெற்றிருக்கும் மாநிலம்.

அரசியல் பங்கேற்பின் அவசியம்
கேரளம் சென்றபோது மாநிலத்தின் எல்லா இடங்களிலும் நல்ல பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் அமைந்திருப்பதை அறிந்துகொள்ள முடிந்தது. “முதலில் நாம் இருக்குமிடம் நன்றாக இருக்க வேண்டும். நல்ல காற்று, நல்ல தண்ணீர், பிள்ளைகள் படிக்க நல்ல கல்விக்கூடங்கள், போக்குவரத்து வசதிகள், நல்ல மருத்துவமனைகள். அப்புறம்தான் எல்லாமும். எங்கள் தலைவர்களிடம் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துவதும் இதைத்தான். தொழிற்சாலைகளையோ, பிரமாண்டமான பாலங்களையோ அல்ல. பொதுவாகவே மலையாளிகளுக்கு அரசியல் விழிப்புணர்வு அதிகம். ஒரு தபால் அட்டையில் காரியம் சாதிக்க மலையாளிகளுக்குத் தெரியும். பக்கத்து மாநிலங்களில் நடக்கும் நல்ல விஷயங்கள் எல்லாவற்றையுமே நாங்கள் கவனிக்கிறோம். அவற்றை இங்கு கேட்கிறோம். உலகிலேயே ஜனநாயகரீதியில் இடதுசாரிகள் ஆட்சி அமைத்த இடம் இது. இன்னமும் அவர்கள் வலுவாக இருப்பதால், பொதுஜன விரோத நடவடிக்கைகளை அரசாங்கம் அவ்வளவு சீக்கிரம் இங்கு கொண்டுவந்துவிட முடியாது” - இப்படிப் பேசிய அந்தோனி கோட்டயத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி.

தென்னிந்தியா பொருளாதாரரீதியாகச் செய்த தவறுக்கான அடையாளம் தெலங்கானா. தனி மாநில அறிவிப்பு வெளியாகிவிட்ட உற்சாகம் கரை புரள மாற்றத்துக்காகக் காத்திருக்கிறது இந்த வறண்ட நிலம். கரீம்நகரைச் சேர்ந்த சாரையாவிடம் பேசியபோது அவர் சொன்னார்: “இனிமேலும் யாரும் யாரையும் அழுத்தி உட்கார்ந்திருக்க முடியாது என்பதற்கான அடையாளமாகவும் தெலங்கானாவைப் பார்க்க வேண்டும். கடைசியில் இந்த ஏழைகளின் போராட்டம் ஜெயித்துவிட்டது. இனி அரசியல்வாதிகளால் புறக்கணிக்கப்படும் பகுதிகளில் எல்லாம் தெலங்கானா என்ற பெயர் உச்சரிக்கப்படும். தனி மாநிலக் கோரிக்கை அவர்களை வழிக்குக் கொண்டுவரும்.”

கேரளமோ, தெலங்கானாவோ... உணர்த்தும் விஷயம் ஒன்றே. தென்னிந்தியாவின் பரவலான வளர்ச்சிக்கு மக்களிடம் உள்ள அரசியல் விழிப்புணர்வும் பங்கேற்பும் முக்கியமான காரணம். பாண்டிச்சேரியிலோ, திருவனந்தபுரத்திலோ, பெங்களூருவிலோ, ஹைதராபாத்திலோ மக்களிடையே காணக் கிடைக்கும் ஆராவாரமான, ஆர்ப்பாட்டமான தேர்தல் பிரச்சாரங்களை நாட்டின் வேறு பகுதிகள் எங்கிலும் பார்க்க முடியாததற்கு இதுவே அடிப்படையான காரணம் என்று நினைக்கிறேன்.

சென்னை மேற்கு சைதாப்பேட்டையில் வெறும் ஆறுக்கு ஆறு பரப்பளவைக் கொண்ட சின்ன இடம் அது. அங்கு தையல் கடை நடத்துகிறார் ஆறுமுகம். தி.மு.க-வைச் சேர்ந்தவர். எண்பதுகளில் நடக்கக்கூடச் சிரமப்படும் நிலையில் இருக்கிறார். கண்களும் மோசமான நிலையில் இருக்கின்றன. ஆனால், தன்னாலான தேர்தல் பணி என்று கட்சிக்குக் கொடி தைத்துக்கொண்டிருக்கிறார். “கழகம் ஆட்சிக்கு வந்தால்தான் நாம் விரும்புகிற காரியங்கள் நடக்கும்” என்பதைத் தாண்டி எந்த எதிர்பார்ப்பும் அவரிடத்திலிருந்து வெளிப்படவில்லை. ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் சந்தித்த பீமராவ் ஒரு தியாகி. நூறை நெருங்கிக்கொண்டிருக்கிறார். காந்தி குல்லாவுடனும் கையில் காங்கிரஸ் கொடியுடனும் பார்ப்பவர்களிடம் எல்லாம் “கைக்கு ஓட்டு போடுங்கள் - நாட்டு ஒற்றுமைக்கு காங்கிரஸ் முக்கியம்” என்று கும்பிடு போடுகிறார். “நான் கட்சி உறுப்பினர் எல்லாம் இல்லை;  ஆனால், காங்கிரஸ் தொண்டன். தப்பு செய்யும்போது கேள்வி கேட்பேன், அது உரிமை. இப்போது கட்சிக்காக ஓட்டு கேட்பது கடமை” என்கிறார். ஆனால், இப்படிப்பட்ட சாமானியர்களின் அரசியல் செயல்பாடுகள் எல்லாம் இன்றைக்குக் காலாவதியாகிக்கொண்டிருப்பது தென்னிந்திய அரசியலின் கவலைக்குரிய போக்கு.

இந்தியா என்ன சொல்கிறது? - மேற்கு


மேற்கு இந்தியாவின் பயணத் திட்டம் தெளிவாக இருந்தது. கோவா, குஜராத், மகாராஷ்டிரம், டையு டாமன், நாகர் ஹவேலியை உள்ளடக்கிய இந்தப் பிராந்தியம் ஆரம்பக் காலத்திலிருந்தே தொழில் வளர்ச்சிக்குப் பேர்போனது. குறிப்பாக, சுதந்திரத்துக்குப் பின் தொழில்துறை வளர்ச்சியையும் நகரமயமாக்கலையும் படு வேகமாக முன்னெடுத்த மாநிலங்கள் மகாராஷ்டிரமும் குஜராத்தும். இதே முந்தைய காலகட்டமாக இருந்தால், மும்பையிலிருந்து பயணத்தைத் தொடங்குவதே பொருத்தமாக இருந்திருக்கும். இப்போது? ஆம், அகமதாபாத்திலிருந்தே பயணத்தைத் தொடங்கினேன்.

மேற்கின் ஆபரணம் என்று அழைக்கப்படும் குஜராத் வளத்துக்குப் பஞ்சம் இல்லாதது. அபார உழைப்பும் தொழில் உத்திகளையும் கொண்ட குஜராத்திகள் அந்த வளத்தைப் பயன்படுத்திக்கொள்ளத் தவறாதவர்கள். காந்தியும் படேலும் குஜராத்தில் பிறந்தவர்கள் என்பதைக் காட்டிலும் ஜாம்ஷெட்ஜி டாடாவும் திருபாய் அம்பானியும் இந்த பிராந்தியத்தில் பிறந்தவர்கள் என்பது குஜராத்திகளுக்கு இந்தியத் தொழில் துறையோடு உள்ள பிணைப்பைச் சரியாக அடையாளப்படுத்தும்.

இந்தியா என்ன சொல்கிறது - வடக்கு

 

பெரிய குழப்பம் இது... வட இந்தியாவை எங்கிருந்து தொடங்குவது? மேலே ஜம்மு காஷ்மீரிலிருந்து இமாசலப் பிரதேசம், உத்தராகண்ட், டெல்லி, சண்டீகர், ஹரியாணா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் வரை நீண்டு கிடக்கும் மாபெரும் பரப்பின் பயணத்தை எங்கிருந்து தொடங்குவது? உண்மையிலேயே மிக நீண்ட அலைச்சல் இது. ராஜஸ்தானை எடுத்துக்கொண்டால், நிலப்பரப்பில் அது காங்கோவுக்குச் சமம். உத்தரப் பிரதேசத்தை எடுத்துக்கொண்டால், மக்கள்தொகையில் அது பிரேசிலுக்குச் சமம். டெல்லி, ஜெய்பூர், லக்னோ, கான்பூர், இந்தூர், போபால், காசியாபாத், லூதியானா, அமிர்தசரஸ் என்று நீளும் வாய்ப்புகளில் வாரணாசியைத் தேர்ந்தெடுத்தேன்.

ஒரு நகரத்தை எவ்வளவு நாசம் ஆக்கலாம், எப்படியெல்லாம் நாசம் ஆக்கலாம் என்பதற்கான அடையாளங்கள் வாரணாசியின் ரயில் நிலையத்திலிருந்தே தெரிகின்றன. புகையும் புழுதியும் கலந்த காற்றைக் கிழித்துக்கொண்டு, நெரிசல் மிகுந்த குறுக லான சாலைகளில் ஏராளமான வாகனங்கள் இடையே மெல்லப் புகுந்தது ஆட்டோ. “எங்கள் ஊர் உள்ளபடி இரண்டு ஊர்கள். நீங்கள் இந்த நவீன ஊரை மறந்துவிட வேண்டும். கங்கைக் கரையை ஒட்டியுள்ள பழைய காசியை மட்டும் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். காசிக்கு ஐந்து சிறப்புகள் உண்டு. இங்கு மாடுகள் முட்டாது, கருடன்கள் பறக்காது, பல்லிகள் கவுளி சொல்லாது, பூக்கள் மணக்காது, பிணங்கள் நாறாது” என்று தொடங்கினார் ஆட்டோக்காரர். “இங்கு போக்குவரத்து விதிகள் எதுவும் எடுபடாது என்ற இன்னொரு சிறப்பையும் சேர்த்துக்கொள்ளுங்கள்” என்றேன். அவர் சிரித்துக்கொண்டே சொன்னார், “அந்தச் சிறப்பு ஒட்டுமொத்த உத்தரப் பிரதேசத்துக்கும் சொந்தமானது. வாரணாசிக்காரர்கள் மட்டும் எப்படி உரிமை கொண்டாட முடியும்?”

சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தை ஒரு மணி நேரப் பயணத்துக்குப் பின் அடைந்து காசி கங்கைக் கரையை அடைந்தேன்.

இந்தியா என்ன சொல்கிறது - கிழக்கு


கிழக்கு இந்தியாவின் அசலான முகத்தைப் பார்க்க வேண்டும் என்றால், கொல்கத்தாவிலிருந்தோ பாட்னாவிலிருந்தோ பார்ப்பதில் அர்த்தம் இல்லை; ஜார்க்கண்டின் எந்தப் பகுதியிலிருந்து வேண்டுமானாலும் பயணத்தைத் தொடங்குங்கள் என்றனர் நண்பர்கள். தன்பாத் ரொம்பவே பொருத்தமானதாக இருந்தது. ஜார்க்கண்டின் முக்கியமான நகரங்களில் ஒன்று தன்பாத். மேற்கு வங்கம், பிஹார், ஜார்க்கண்ட், ஒடிசா, அந்தமான்-நிகோபார் தீவுகளை உள்ளடக்கிய கிழக்கு இந்தியாவின் சகல அம்சங்களையும் தன்பாத்திலிருந்து தொடங்கிய பயணம் பார்க்க உதவியது. தன்பாத்தைச் சுற்றிச் சுற்ற ஆரம்பித்தேன்.

தன்பாத், இந்தியாவின் நிலக்கரித் தலைநரம். தன்பாத்தைச் சுற்றிப் புறப்பட்டால் நான்கு ஊருக்கு ஒரு ஊர் என்கிறரீதியில் நிறைய சுரங்கங்களைப் பார்க்க முடிகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட சுரங்கங்கள் இருக்கின்றன என்று சொன்னார்கள். ஆண்டுக்குச் சுமார் 27.5 மில்லியன் டன் நிலக்கரியை இந்தச் சுரங்கங்கள் உற்பத்திசெய்கின்றன. அனல்மின் உற்பத்தியும் புனல்மின் உற்பத்தியும் ஜரூராக நடக்கின்றன. நாட்டிலேயே மும்பைக்கு அடுத்து, இந்திய ரயில்வேக்கு வருமானம் கொடுப்பது தன்பாத் கோட்டம்தானாம். ஆனால், இந்தத் தொழில் - வருமானப் புள்ளிவிவரங்களையெல்லாம் வைத்து, தன்பாத்தையோ ஜார்க்கண்டையோ கற்பனைசெய்தால் ஏமாந்துபோவீர்கள். சுற்றிலும் வனாந்தரம், நடுநடுவே சுரங்கங்கள், பெரும் இடைவெளி விட்டு வீடுகள், பரிதாபமான உடைகளில் வியர்க்க விறுவிறுக்க ஓடும் மக்களே இங்கு பெரும்பான்மை அடையாளங்கள்.

இந்தியா என்ன சொல்கிறது?- வட கிழக்கு


வானிலிருந்து பார்க்கும்போது தன் அழகால் வாரிச்சுருட்டுகிறது குவாஹாத்தி. சுற்றிலும் மலைகளும் குன்றுகளும். பிரம்மாண்டமான பிரம்மபுத்திரா நதிக் கரையில் விரிந்திருக்கிறது. குழந்தைகள் வரையும் இயற்கைக் காட்சி ஓவியம்போல இருக்கும் நகரம், கால் பதித்து உள்ளே நுழைய நுழைய… ஒரு அழுமூஞ்சிக் குழந்தை ஆகிறது. ஒரு அழகான குழந்தையை மூக்குச்சளி வழிய அழுதுகொண்டேயிருக்கும்போது பார்க்க எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது.

கிழக்கு இந்தியாவின் நுழைவாயில்


குவாஹாத்திக்கு நீண்ட வரலாறு உண்டு. நரகாசுரன், சூரன் பகதத்தனின் புராணக் காலத்திலேயே அதன் கதை தொடங்கிவிடுகிறது. இப்போதும் அது அசாமின் தலைநகரம் மட்டும் அல்ல; அதுதான் வட கிழக்கு இந்தியாவின் நுழைவாயில். அசாம், திரிபுரா, மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, மிசோரம், அருணாசலப் பிரதேசம் ஆகிய ஏழு சகோதரிகள் மாநிலங்களுக்கும் அதுதான் கல்வி - வணிக மையம். குவாஹாத்தியின் ஓராண்டு உற்பத்தி மதிப்பு ரூ. 6,000 கோடி ரூபாய் என்கிறார்கள். சர்வதேச அளவில் கொழும்புக்கு அடுத்த நிலையில் குவாஹாத்தி தேயிலை ஏல மையம் இருக்கிறது. குவாஹாத்தியில் உள்ள இந்திய அறிவியல் கழகமும் பல்கலைக்கழகமும் காட்டன் கல்லூரியும்தான் இன்றைக்கும் இந்த ஏழு மாநில மாணவர்களின் கனவுக் களங்கள். இங்குள்ள மருத்துவக் கல்லூரியே ஏழு மாநில எளிய மக்களின் கடைசி மருத்துவ நம்பிக்கை.

இவ்வளவு மதிப்புமிக்கதாக இருந்தாலும் ஒரு மழை பெய்தால், நகரம் தண்ணீரோடு போக்குவரத்து நெரிசலில் மிதக்கிறது. நகரைப் பிரிக்கும் ரயில் பாதையில் ஊருக்குள் ஒரு ரயில் நுழைந்தால் 100 இடங்களில் வாகனங்கள் தேங்கி நிற்கின்றன. ஊருக்குள் வீதிக்கு வீதி சாக்கடைகள் வாய்க்கால்கள்போல ஓடுகின்றன. குவாஹாத்தியின் பிரதான சாலைகளில்கூட விளக்குகள் எரிவதில்லை. “உங்களுக்குத் தெரியுமா? ஒருகாலத்தில் கீழை உலகின் ஒளி நகரம் என்று அழைக்கப்பட்ட இடம் இது. நீங்கள் பார்ப்பது குவாஹாத்தியின் அவலம் அல்ல; வட கிழக்கு இந்தியாவின் அவலம்” என்கிறார் பேராசிரியர் தெபர்ஷி தாஸ்.

தேர்தல் களமும் போராட்டக் களம்தான்: சுப.உதயகுமார்


சுப. உதயகுமார்
வெக்கையே செடி கொடிகளாக மாறியதுபோல இருக்கிறது. யாருமற்ற பிரதேசத்தில் ஆங்காங்கே பிரமாண்டமாகச் சுழன்றுகொண்டிருக்கின்றன காற்றாலைகள். அங்கொன்றும் இங்கொன்றுமாக இடைப்படும் சாலையோரக் கொட்டகைகளில் இளநீர்க் காய்களையும் நுங்கு சுளைகளையும் வைத்துக்கொண்டு சாலையையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கின்றனர் பெண்கள். பஸ் போக்குவரத்து அரிதானது என்பதால், சாலையில் மோட்டார் சைக்கிள்களையும் ஜீப்புகளையும் மட்டுமே பார்க்க முடிகிறது. ஒவ்வொரு ஜீப்பும் வேலைக்குச் செல்லும் கூலித் தொழிலாளிகள், சாமான்கள் வாங்க நகரத்துக்குச் செல்லும் பெண்கள், கல்விக் கூடங்களுக்குச் செல்லும் மாணவ - மாணவிகளால் நிரம்பி வழியச் செல்கின்றன. கூடங்குளம் அணு உலையைத் தாண்டும்போது ஏராளமான போலீஸார் அங்கு ஒரு பெரும் கொட்டகையில் உட்கார்ந்திருந்ததைப் பார்க்க முடிகிறது. பொட்டல் காடுபோல விரியும் இடிந்தகரையில் நுழைகிறது வண்டி. வெயிலை எதிர்கொள்ள பையைப் போட்டுத் தலையை மறைத்துக்கொண்டு சாலையில் ஓட்டமும் நடையுமாகச் சென்ற ஒரு பெண்ணிடம் வழி கேட்கிறார் ஓட்டுநர். லூர்து மாதா ஆலயத்துக்கு அவர் வழிகாட்டுகிறார். 1906-ல் கட்டப்பட்ட ஆலயம் இது. ஒருகாலத்தில் நெய்தல் கிராமங்களில் அழகான கெபிக்காகவும் நேர்த்தியான தேரோடும் வீதிக்காகவும் பெயர் பெற்றிருந்த ஆலயம்; இப்போது சுதந்திர இந்தியா எதிர்கொள்ளும் மிக நீண்ட தொடர் போராட்டத்தின் மையக் களம். சுப. உதயகுமார் இப்போது அணு சக்திக்கு எதிரான போராளி மட்டும் அல்ல; கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியின் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர். இந்திய அரசியல் வரலாற்றில் சுற்றுச்சூழல் அரசியலை முன்வைத்துத் தேர்தலை எதிர்கொள்ளும் முதல் வேட்பாளரைச் சந்தித்தேன்.

இந்த ஜனநாயகம்தான் நம் ஆதாரம்: கொடிக்கால் ஷேக் அப்துல்லா

கொடிக்கால் ஷேக் அப்துல்லா

முக்கடல்கள், சுற்றிலும் மலைகள், பரந்து விரிந்த வயல்கள்... கன்னியாகுமரியின் அழகை விவரிக்கவும் வேண்டுமா? ஐந்திணைகளில் நான்கு திணைகளும் ஒருங்கமைந்த குமரி, தமிழகத்தின் அழகிய அடையாளம்.
சுதந்திரம் அடைந்தபோது குமரிப் பகுதி தமிழகத்தின் ஒரு பகுதியாக இருக்கவில்லை. சேரர்களின் வீழ்ச்சிக்குப் பின் ஏராளமான படையெடுப்புகளைச் சந்தித்த அது கடைசியில் திருவிதாங்கூர் மன்னர்களின் ஆளுகைக்குக் கீழ் இருந்தது. ஆங்கிலேயர்கள் அகன்ற பின்னரும் திருவிதாங்கூர் சமஸ்தானப் பகுதியிலேயே கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் அது நீடித்தது. மார்ஷல் நேசமணி தலைமையிலான விடுதலைப் போராட்டத்தின் விளைவாகவே அது தமிழகத்தின் ஒரு பகுதியாக மாறியது. நிலப் பகுதியில் கிட்டத்தட்ட சரி பாதி விவசாய நிலமாகவும் மூன்றில் ஒரு பகுதியை வனமாகவும் கொண்ட குமரியைத் தாமிரவருணியும் வள்ளியாறும் பழையாறும் நிறைக்கின்றன. அந்தக் காலத்தில் குமரியைத் திருவிதாங்கூரின் களஞ்சியம் என்று சொல்வார்களாம். இப்போதும் தமிழகத்தின் வளர்ச்சி அடைந்த மாவட்டங்களில் முதல் மூன்று இடங்களுக்குள் குமரியும் இடம்பெற்றிருக்கிறது. என்றாலும், தலைநகருக்குச் செல்லும் தேவை ஏற்படும்போதெல்லாம், கூப்பிடு தொலைவில் இருக்கும் திருவனந்தபுரத்தை விட்டுவிட்டு, சென்னைக்குச் செல்ல வேண்டியிருப்பது முணுமுணுப்பாகக் குமரிக்காரர்களிடமிருந்து இன்னமும் வெளிப்படுகிறது.

இந்தியச் சுற்றுப்பயணத்தைக் குமரியிலிருந்து தொடங்குவது எவ்வளவு பொருத்தமானதோ, அவ்வளவு பொருத்தமானது கொடிக்கால் ஷேக் அப்துல்லாவிடமிருந்து தொடங்குவதும். ஓர் ஏழை இந்துவாக, தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவராக, செல்லப்பாவாகப் பிறந்த ஷேக் அப்துல்லா, தன்னுடைய இளம்வயதிலேயே தாய் - தந்தை இருவரையும் இழந்தவர். தன் வாழ்வைத் தானே வடிவமைத்துக்கொண்டவர். தன்னுடைய 15-வது வயதில், நாட்டின் முதல் பொதுத்தேர்தலில் அன்றைய ஐக்கிய முன்னணி வேட்பாளர்களான சி. சங்கர், டி.எஸ். ராமசாமிப் பிள்ளை, கற்காடு எஸ். சாம்ராஜுக்கு ஆதரவாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டதன் மூலம் அரசியலில் அடி எடுத்துவைத்தவர் ஷேக் அப்துல்லா. தொடர்ந்து ஈத்தாமொழியில் தெற்கெல்லை விடுதலைப் போராட்ட ஆதரவு மாநாடு, குமரியைத் தமிழகத்துடன் இணைப்பதற்கான தொடர் போராட்டங்கள், கக்கன் பங்கேற்ற தாழ்த்தப்பட்டோர் லீக் மாநாடு என இறங்கியவரின் ஆரம்பக் கால அரசியல் களம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. மனைவியும் கட்சிக்காரர் என்பதால், கட்சி, அமைப்புப் பணிகள், எழுத்து, பத்திரிகை, போராட்டம், சிறை என்று காலத்தைக் கழித்தவர், ஒருகட்டத்தில் தலித் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டார். இஸ்லாத்தை வரித்துக்கொண்ட பிறகு இஸ்லாமிய அமைப்புகளோடு இணைந்து பணியாற்றினார். ஷேக் அப்துல்லாவின் அரசியல் தொடர்புகளை கருணாநிதி முதல் இந்திரா காந்தி வரை சொல்லிக்கொண்டே போகலாம். தமிழகத்தின் விளிம்புநிலை அரசியலின் முக்கிய முன்னோடிகளில் ஒருவரான ஷேக் அப்துல்லாவுக்கு இப்போது 80 வயதாகிறது. மனிதர் படு உற்சாகமாகப் பேசுகிறார்.

இந்தியாவின் வண்ணங்கள்ரு மாபெரும் தேசத்தை எப்படிப் புரிந்துகொள்வது?
பிராயணம்தான் சிறந்த வழி என்கிறார் காந்தி. பிராயணங்கள் மூலமாகத்தான் சுதந்திர இந்தியாவின் வரைபடத்தை அவர் உருவாக்கினார்.

உலகின் மாபெரும் ஜனநாயகத் திருவிழாவுக்கு இன்னொரு முறை தயாராகிக்கொண்டிருக்கிறது தேசம்.  அதைப் புரிந்துகொள்ளும் ஒரு பயணத்துக்கு இதைவிடவும் பொருத்தமான தருணம் இருக்க முடியுமா?