திருவானைக்கா.
ஆயிரக் கணக்கான ஆண்டுகள் வரலாற்றையும் அற்புதமான கோயிலையும் தன்னகத்தே அடக்கி நிற்கும் ஊர். சிற்றூர்களின் அடையாளங்களை விழுங்கிவிடும் மாநகரங்களுக்கே உரிய துர்குணத்தால் இன்று திருவானைக்காவும் திருச்சி மாநகரின் ஒரு பகுதியாகிவிட்டது. ஒருபுறம் காவிரியாலும் மறுபுறம் கொள்ளிடத்தாலும் சூழப்பட்டிருக்கும் திருவானைக்காவில் இரண்டு விஷயங்கள் பிரசித்தம். ஒன்று... கருவறையில் சிவலிங்கத்தைச் சுற்றி எப்போதும் நீர் ஊற்றெடுத்துக்கொண்டிருக்கும் ஜம்புகேஸ்வரர் கோயில். மற்றொன்று... திரும்பத்திரும்பச் சாப்பிட அழைக்கும் 'பார்த்தசாரதி விலாஸ்' ஒரு ஜோடி நெய் தோசை.
தமிழர்கள் வாழ்வில் அலுக்காத விஷயங்களில் ஒன்று தோசை. தோசையை விரும்பாதவர்கள் யார் இருக்கிறார்கள்? பக்கத்து வீட்டில் முறுகும் வாசம் பிடித்து எனக்கும் தோசை வேண்டும் என அடம்பிடிக்காத குழந்தைப் பருவம் யார் வாழ்வில் இல்லாமல் இருந்திருக்கிறது? ''என் பிள்ளைக்கு மூன்று வேளையும் தோசை கொடுத்தாலும் சாப்பிடும்'' என்ற வசனத்தை நாம் எல்லோருமே ஏதோ ஒரு காலகட்டத்தில் கடந்து வந்திருக்கிறோம். வீட்டில் ஒரு பள்ளிக்கூடமே நடத்தும் அளவுக்குக் கூட்டத்துடன் இருந்த நம் மூத்த தலைமுறையைக் கேட்டுப்பாருங்கள். யாருக்கும் தெரியாமல் அம்மாவிடம் கேட்டு, தான் மட்டும் திருட்டுத்தனமாய் தோசை தின்ற கதையைச் சொல்வார்கள். ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு நாள் வந்திருக்கும். வீட்டில் நெய்யும் தோசை சுடுபவருக்குப் பிரியமும் ஒன்று கூடி வந்த ஒரு நாள். அந்நாளில் அருமையான நெய் முறுகல் தோசைகளை நாம் சாப்பிட்டிருப்போம். ஒரு தோசை சட்னி தொட்டு, ஒரு தோசை ஜீனி தொட்டு, ஒரு தோசை வெறும் தோசையாய் என்று அந்நாளில் பிரமாதப்படுத்தி இருப்போம். பின்னர், அத்தகைய தோசை நமக்கு கிடைப்பதேயில்லை. காலமெல்லாம் சுற்றித்திரியும்போது எங்காவது ஒரு நாள் மீண்டும் கிடைக்கும் அப்படியொரு தோசை 'பார்த்தசாரதி விலாஸ்' நெய் தோசையைப் போல. சாப்பிட்டுவிட்டு பின்னர் அதைப் பற்றியே பேசிக்கொண்டிருப்போம். ஆனால், திருவானைக்காகாரர்களுக்குக் கொடுத்துவைத்திருக்கிறது. நினைத்தபோதெல்லாம் சாப்பிடுகிறார்கள்.