ஒரு மனிதன் குடியரசு ஆகும் காலம்!


செய்தித்தாள்களில் முதல் பக்கம் - ஒரு முழுப் பக்கம் அந்த விளம்பரம். தொலைக்காட்சிகளில் அந்த விளம்பரம். சமூகவலைதளங்களில் அந்த விளம்பரம். சாலைகளில் பெரிய பெரிய பதாகைகளில் அந்த விளம்பரம். எல்லா விளம்பரங்களிலும் ஒரு ஊடகவியலாளரின் முகம் ஆக்கிரமித்திருக்கிறது. முகம் என்றால், முகம் மட்டும் – சில விளம்பரங்களில் அது அரை முகம். அந்த முகம் மக்களை உற்றுப்பார்க்கிறது. அகங்காரத்துடன், இறுமாப்புடன். பக்கத்தில் ஒரு வாசகம் - ‘தேசம் இன்னும் தெரிந்துகொள்ள விரும்புகிறது!’  கீழே கையெழுத்துபோல கொட்டை எழுத்தில் அந்தப் புதிய தொலைக்காட்சியின் பெயர் - ‘ரிபப்ளிக்’ (குடியரசு).

நொடிக்குக் கோடி விளம்பரங்கள் கொட்டும் யுகத்தில், மாதம் கடந்து அந்த விளம்பரம் திரும்பத் திரும்ப மண்டையைக் குடைவதற்கான நியாயம் இருக்கிறது. எழுபதாண்டு சுதந்திர இந்தியா இன்று வந்தடைந்திருக்கும் ஒரு புள்ளியைத் தீர்க்கமாகச் சுட்டுகிறது அந்த விளம்பரம். ஒரு மனிதன் தேசமாகும் காலத்தில் நாம் இருப்பதை அது பகிரங்கமாக நமக்குச் சொல்கிறது. மேலும் அந்தப் பெயர் – ‘குடியரசு’ - எவ்வளவு சூட்சமமானது! ஒரு மனிதன் தன்னையே தேசமாகக் கட்டமைக்கும் காலத்தில் ஒரு மனிதனின் எண்ணமே ஒரு குடியரசின் எண்ணமாகவும் பிரகடனப்படுத்தப்பட்டுவிடுகிறது.

அரை நூற்றாண்டுக்கு முன் தங்களுடைய சர்வாதிகார ஆட்சியை அலங்கரமான வார்த்தைகளால் அழைத்த ராணுவ அதிபர்கள் – தன்னுடைய அரசை ‘அடிப்படை ஜனநாயகம்’ என்றழைத்த அயூப்கான், ‘நெறிப்படுத்தப்பட்ட ஜனநாயகம்’ என்றழைத்த சுகர்னோ, ‘புதிய ஜனநாயகம்’ என்றழைத்த ட்ரூயிலோ - ஞாபகத்துக்கு வருகிறார்கள். நாம் ஒன்றை நினைவூட்டிக்கொள்ள வேண்டும், மோடியின் காலத்தில் அர்ணப் கோஸ்வாமிகள் உருவாகவில்லை; மாறாக அர்ணப் கோஸ்வாமிகளே மோடியின் காலத்தை உருவாக்குக்கியிருக்கிறார்கள். துல்லியமாகச் சொல்வது என்றால், நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் காலத்தின் வெளிப்பாடு அல்லது விளைவுகளில் ஒன்றே மோடி.

இப்படி, ஒரு மனிதன் குடியரசாகும் காலத்தில்தான் நாம் இந்த தேசத்தின், மக்களின் உண்மையான குடியரசுக் கனவைப் பற்றியும் அதன் இன்றைய நிலையையும் பேச வேண்டிய அவசியம் உண்டாகிறது. நாம் மாபெரும் இந்த இந்திய நாட்டை ஆளும் அமைப்பை ஜனநாயகம் என்று மட்டும் குறிப்பிடவில்லை; குடியரசு என்றும் குறிப்பிடுகிறோம். அதாவது ஜனநாயகக் குடியரசு. ஆனால், நம்முடைய அரசு எப்படியான ஆட்சியை நமக்குத் தருகிறது? ஜனநாயக ஆட்சியையா, குடியரசு ஆட்சியையா? நாம் எதை விரும்புகிறோம்? ஜனநாயக பாணி ஆட்சியையா, குடியரசு பாணி ஆட்சியையா? கல்லூரிகளில் பேசச் செல்லும்போது மாணவர்கள் மத்தியில் இந்தக் கேள்விகளைக் கேட்பது உண்டு. அப்போதெல்லாம் மாணவர்களிடமிருந்து வரும் பதில் கேள்வி: ‘ஜனநாயகத்துக்கும் குடியரசுக்கும் என்ன வித்தியாசம்?’

என் அனுபவத்தில் இதுவரை இந்தக் கேள்விக்கான பதில் அளித்த ஒரு மாணவரைச் சந்தித்ததில்லை. அதிர்ச்சி அடைய ஏதும் இல்லை. ஏனென்றால், அது தனியார் கல்வி நிறுவனமோ, அரசுக் கல்வி நிறுவனமோ; கல்வியின் உள்ளடக்கமான பாடத்திட்டத்தை அரசு தன் கைகளில் வைத்திருக்கிறது. இப்படியான விஷயங்கள் மாணவர்களுக்குத் தெரிந்துவிடக் கூடாது என்று அரசே எண்ணும்போது, பாடத்திட்டம் அரசியல் நீக்கப்பட்டதாகத் தயாரிக்கப்படும்போது மாணவர்களை எப்படி நாம் நொந்துகொள்ள முடியும்?

ஆனால், ஜனநாயகத்தைப் பற்றியும் குடியரசைப் பற்றியும் ஆசிரியர்கள் பேச முடியும். “இந்தியா என்பது வெறும் ஜனநாயகம் மட்டும் அல்ல; அது ஒரு குடியரசும் ஆகும். ஜனநாயகமும் குடியரசும் ஒன்றல்ல. தனி நபருக்கும் அரசுக்குமான தொடர்பில், இவை இரண்டுக்கும் வெவ்வேறு பங்குகள் இருக்கின்றன. ஜனநாயகம் என்பது அடிப்படையில் பெரும்பான்மையின் கைகளில் ஆட்சியை ஒப்படைத்துவிடுகிறது. ‘தலைக்கு ஒரு ஓட்டு’ என்பது ஒரு உயரிய நியாயமாக மேலோட்டத்தில் இருந்தாலும், ‘சிறுத்தைகள், ஓநாய்களுக்கும் ஒரு ஓட்டு; ஆடுகள், மாடுகளுக்கும் ஒரு ஓட்டு’ என்பது அடிப்படையிலேயே வலியவர்கள் கை ஓங்கும் அபாயத்தையும் இயல்பாகவே கொண்டிருக்கிறது. புலிகள் ஒன்றுசேர்ந்து அவற்றின் பெரும்பான்மையில் ஒரு ஆட்சி அமையும்போது மான்களின் கதி என்னவாகும்? இந்த இடம்தான் ஜனநாயகத்தின் மிகவும் சிக்கலான, பலவீனமான பகுதி. இந்தப் பிரச்சினையைக் கையாளும் தீர்வாகவே குடியரசு உருவெடுக்கிறது. அது புலியோ, ஓநாயோ எந்தத் தரப்பு ஆட்சியிலும் வந்தாலும் மான்கள், மாடுகளின் சுதந்திரமும் உரிமைகளும் பாதிக்கப்படாமல் இருப்பதைச் சட்டபூர்வமாக உறுதிசெய்கிறது. அதாவது, குடியரசின் உச்சபட்ச பண்பு அது சட்டபூர்வமாக உறுதிசெய்யும் குடிமக்களின் தனிநபர் சுதந்திரத்தில் நிலைகொண்டிருக்கிறது” என்று மாணவர்களிடத்தில் ஆசிரியர்கள் விளக்க முடியும்.

ஆசிரியர்கள் இப்படி வளர்த்தெடுத்தால் நிச்சயம் அந்த மாணவர்கள் இப்படி ஒரு கேள்விகளை எழுப்புவார்கள்: “அப்படி என்றால், ஒரு ஜனநாயகக் குடியரசான இந்திய அரசு ஏன் தன் குடிமக்களை வெறும் ஜனநாயக அரசுபோலவே நடத்துகிறது? அதாவது, சிறுபான்மையின மக்களின், ஒடுக்கப்பட்ட மக்களின், விளிம்புநிலை மக்களின், எளிய மக்களின், தனிமனிதர்களின் மிக அடிப்படையான உரிமைகளைக்கூட இந்திய அரசால் ஏன் உறுதிப்படுத்த முடியவில்லை? ஒரு தனி மனிதர் இதைச் சாப்பிடக் கூடாது என்று எப்படி இன்னொருவரால் சொல்ல முடிகிறது? ஒரு தனி மனுஷி இப்படியான உடையை உடுத்தக் கூடாது என்றோ இன்னாரைத் திருமணம் செய்துகொள்ளக் கூடாது என்றோ எப்படி இன்னொருவரால் வலியுறுத்த முடிகிறது? எல்லோர்க்கும் நியாயமான ஒரு குடியரசு எப்படி இதையெல்லாம் வேடிக்கை பார்க்க முடியும்?”