சமத்துவத்தின் தாய்


கெட்ட செய்திகளின் நாட்களில் மனம் ஒரு நல்ல செய்திக்காக ஏங்குகிறது. உலகெங்கும் உள்ள தலைவர்கள் புத்தாண்டுச் செய்திகளாக எதையெல்லாம் சொல்கிறார்கள் என்று வாசித்துக்கொண்டிருந்தேன். பின்லாந்து பிரதமர் சன்னா மரினின் செய்தி கவர்ந்திழுப்பதாக இருந்தது. “ஒரு சமூகத்தின் பலம் அதில் எத்தனை பேர் பணக்காரர்கள் என்பதில் அல்ல; அதனுடைய நலிவுற்ற பிரிவு மக்கள் எப்படி வாழ்க்கையைத் தீரத்துடன் எதிர்கொள்கிறார்கள் என்பதில்தான் இருக்கிறது… ஒரு சமூகத்தில் எல்லோருமே கண்ணியமாக வாழ்வதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்பதுதான் நாம் கேட்டுக்கொள்ள வேண்டிய முக்கியமான கேள்வி” என்று சொல்லியிருந்தார் சன்னா மரின். கூடவே தன்னுடைய செய்தி வெறும் மாய்மாலம் அல்ல என்பதை வெளிப்படுத்தும் வகையில் 2020 ஜனவரி முதலாக அவருடைய அரசு செயல்படுத்தவுள்ள நடவடிக்கைகளைக் குறிப்பிட்டு, பின்லாந்தின் எழுபது சத மக்களின் வருமானத்தை இந்த மாற்றங்கள் உயர்த்தும் என்று நம்பிக்கையும் விதைத்திருந்தார்.

இதற்குச் சில நாட்கள் முன்புதான் ‘வாரத்தில் நான்கு நாட்கள்; ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் மட்டும் வேலை’ கொள்கையை முன்னிறுத்தியிருந்தார் மரின். அவருடைய சமூக ஜனநாயகக் கட்சியின் 120-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் பேசுகையில் இந்தக் கருத்தை அவர் வெளியிட்டார். பின்லாந்தில் இப்போது வாரத்தில் ஐந்து நாட்களுக்கு மக்கள் வேலை செய்கின்றனர்; ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் வேலை என்பதே விதியாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

முன்னதாக மரின் அமைச்சராக இருந்த காலத்திலேயே இதே கருத்தை முன்மொழிந்திருக்கிறார். அவர் கூறும் யோசனை பின்லாந்தின் அண்டை நாடான ஸ்வீடனில் ஏற்கெனவே வெற்றிகரமாகச் செயல்பாட்டில் இருக்கிறது. நிர்வாகம், ஊழியர்கள் இரு தரப்பிலுமே இது ஆக்கபூர்வமான மாற்றத்தை உண்டாக்கியிருக்கிறது. பணியிடங்களில் உற்பத்தித் திறன் அதிகமாகியிருப்பதுடன் ஊழியர்களின் ஆரோக்கியமும் மேம்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

வேலை நேரம் இப்படிக் குறைக்கப்படுவது சமூக மாற்றத்துக்கும் வழிகோலுகிறது. மக்களுக்கான சேவைகள் பெருகுகின்றன. அதிகம் பேர் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். இதனால், அரசுக்கும் வரி வருவாய் அதிகமாகிறது. “எல்லாவற்றுக்கும் மேல் மக்கள் அதிக நேரத்தைக் குடும்பத்துடனும், தாங்கள் விரும்பும் நண்பர்களுடன், தங்களுக்குப் பிடித்தமான பொழுதுபோக்குகள் - இதர வேலைகளிலும் செலவிடுவதைக் கலாச்சாரமாக்கிக்கொள்ள வேண்டும். இதுதான் நம்முடைய உழைப்புலகின் அடுத்தகட்ட நகர்வாக இருக்க வேண்டும்” என்கிறார் மரின்.

குடும்பம் எனும் அமைப்பின் இன்றைய பண்பு மாறாமல் - சமையல்கட்டு வேலைகள் முழுக்கப் பெண்கள் மீது சுமத்தப்படுவதிலிருந்து அவர்கள் விடுவிக்கப்படாமல், பெண்களுக்கான விடுதலை சாத்தியம் இல்லை.  இதற்கு குடும்பத்துக்கு உள்ளே மட்டுமல்லாது, குடும்பத்துக்கு வெளியேயான பணி வாழ்விலும் இன்றைய பணிக் கலாச்சாரத்திலும் மாற்றம் அவசியமாகிறது. மரினின் முன்மொழிவு அந்த மறுவரையறையோடு சென்று பொருந்துகிறது.

மரின் ஏன் கவனத்துக்குரியவராகிறார்?
சமீப காலத்தில் நான் ஆர்வத்தோடு கவனித்துவரும் உலகத் தலைவர்களில் ஒருவர் மரின். ஜனநாயகம் மற்றும் சமூக நல மதிப்பீடுகளுக்கு மிகுந்த முன்னுரிமை அளிக்கும் நார்டிக் நாடுகள், அவற்றின் தலைவர்கள் மீது எனக்குள்ள இயல்பான ஆர்வம் போக இன்றைய உலகத் தலைவர்களில் பல விதங்களில் தனித்துவமான வாழ்க்கைப் பின்னணியைக் கொண்டவர் என்பதும் அவர் மீதான அபிமானத்துக்கான காரணம்.

சென்ற மாதம் தன்னுடைய 34-வது வயதில் பின்லாந்து பிரதமராக மரின் தேர்ந்தெடுக்கப்பட்டபோது இன்றைய உலகின் இளம் பிரதமர் என்ற பெருமை அவரைத் தேடிவந்தது. ஐந்து கட்சிக் கூட்டணி அரசின் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் அவருடைய அரசின் 19 அமைச்சர்களில் 12 பேர் பெண்கள். பிரதான துறைகளான நிதித் துறை, உள்துறை, கல்வித் துறை மூன்றின் அமைச்சர்கள் காட்ரி குல்மானி, லி ஆண்டர்சான், மரியா ஒஹிசால் மூவருமே 35 வயதுக்கு உட்பட்ட பெண்கள்.

ஒரு நூற்றாண்டுக்கும் முன்னதாகவே (1907) பெண்களை நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுத்து அனுப்பிய ஒரே நாடு, நாட்டின் நாடாளுமன்றத்தில் கிட்டத்தட்ட சரிபாதி இடங்களில் பெண்களைத் தேர்ந்தெடுத்திருக்கும் நாடு, பாலின வேறுபாட்டையும் பாலினம் சார்ந்து ஒருவர் பாரபட்சமாக நடத்தப்படுவதையும் சட்ட விரோதமாகக் கருதும் நாடு என்ற பெருமைகள் எல்லாம் இருந்தாலும், பின்லாந்தின் அரசியல் வரலாறு ஆணாதிக்கத்துக்கு அப்பாற்பட்டது அல்ல. கால் நூற்றாண்டு காலமாகத்தான் அமைச்சரவையில் பெண்களின் எண்ணிக்கை மெல்ல வளரலானது. மரினுக்கு முந்தைய அரசும்கூட உலகின் பல நாடுகளைப் போல ஐம்பது வயதுக்கு மேற்பட்ட ஆண்களின் அதிகாரக் கூடாரமாகவே இருந்தது. மரினுக்கும் முன் பின்லாந்தின் வரலாற்றில் இரண்டு பெண்கள் பிரதமர்களாக இருந்திருக்கின்றனர். அவர்கள் இருவராலுமே ஓராண்டுக்கு மேல் பதவியில் நீடிக்க முடிந்ததில்லை.

இப்போதும்கூட மரின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டு, ஒட்டுமொத்த மக்களாலும் தேர்ந்தெடுக்கப்பட்டுவிடவில்லை; நெருக்கடி மிக்க ஒரு சூழலில் அவருடைய கட்சி அவரைத் தேர்ந்தெடுத்திருக்கிறது. சமூக ஜனநாயகக் கட்சிக்குள்ளான பல்வேறு போக்காளர்களை எதிர்கொள்வது, கூட்டணிக் கட்சிகளைச் சமாளிப்பது, அமெரிக்க – சீன வர்த்தகப் போர் பின்னணியில் பின்லாந்தின் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்துவது என்று ஏராளமான சவால்கள் அவர் முன் நிற்கின்றன. இவ்வளவுக்கு மத்தியிலும்தான் இளம்பெண்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் அமைச்சரவையை மரின் உருவாக்கியிருக்கிறார்.

ஒரே பாலினப் பெற்றோரின் மகள்
மரினின் வாழ்க்கைப் பாதை கரடுமுரடானது. இளவயதிலேயே விவாகரத்தான தாயின் வளர்ப்பு அவர். குடிகாரக் கணவரைப் பிரிந்த பின் தன் சம்பாத்தியத்திலேயே மரினை அவர் தாய் வளர்த்திருக்கிறார். வேலைக்குத் தாய் சென்றுவிட்ட பின் வீட்டுத் தனிமையிலேயே மரினின் குழந்தை நாட்கள் கழிந்திருக்கின்றன. பிற்பாடு, மரினின் தாயுடைய தன்பாலின ஈர்ப்பின் விளைவாக மரினின் குடும்பம் ‘வானவில் குடும்பம்’ ஆகியிருக்கிறது; பொருளாதாரத் தட்டுப்பாட்டுடன் சமூகத்தின் வித்தியாசமான பார்வையையும் எதிர்கொண்டிருக்கிறார் மரின். ஆயினும், வீட்டுக்குள் சந்தோஷம் இருந்திருக்கிறது. “எங்களை உண்மையான குடும்பமாகப் பலர் அங்கீகரித்ததில்லை; சமமாக நடத்தியதில்லை. ஆனால், என்னை யாரும் அதிகம் அச்சுறுத்தியதில்லை. நான் மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசுவேன்; என்னுடைய கருத்தில் உறுதியாக நிற்பேன். எதையுமே நான் சாதாரணமாக எண்ணிச் செயல்பட்டதில்லை” என்று ஒருமுறை சொன்னார் மரின்.

பொருளாதாரச் சிக்கலை எதிர்கொள்ள பள்ளிக்கூட நாட்களிலேயே பகுதிநேர வேலைக்குச் சென்றிருக்கிறார் மரின். தொடக்கத்தில் ஒரு பேக்கரியில் வேலை பார்த்தவர், பிறகு பருவ இதழ்களை விற்பவரானார். அவருடைய குடும்பத்தில் பல்கலைக்கழகம் சென்ற முதல் ஆள் அவர்தான். பட்டம் பெற்ற பிறகு ஒரு நிறுவனத்தில் காசாளராக வேலை பார்த்தவர் தன்னுடைய 20-வது வயதில் அரசியல் நோக்கி நகர்ந்திருக்கிறார்; சமூக ஜனநாயகக் கட்சியில் படிப்படியாக உயர்ந்து 27 வயதில் டாம்பிரே நகரத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நாடாளுமன்ற உறுப்பினரானார். அடுத்து அமைச்சர், இப்போது பிரதமர்.

அரசியல் களத்தில் குடும்ப முன்கதைகள் யாவும் அவரைத் துரத்தின. மரின் பிரதமரான பிறகும்கூட, “ஒரு விற்பனைப் பெண் எப்படி நாட்டை நிர்வகிக்க முடியும்?” என்று கேட்டார் எஸ்தோனிய அமைச்சர் மார்ட் ஹெல்ம். பிறகு, எஸ்தோனியா அவருடைய கேலிப் பேச்சுக்காக பின்லாந்திடம் மன்னிப்பு கோரியது. மரின் இதுகுறித்தெல்லாம் அலட்டிக்கொள்ளவில்லை. “பின்லாந்தின் பெருமைகளில் ஒன்று இது. ஏழைக் குடும்பத்துக் குழந்தைகள்கூட தம் கல்வியை இங்கே தாமே தேடிக்கொள்ள முடியும்; வாழ்க்கையில் உயரிய லட்சியங்களை அடைய முடியும். ஒரு காசாளரால் பிரதமராகக்கூட பதவி வகிக்க முடியும்!” என்று சொல்லிவிட்டு வேலையைக் கவனிக்கலானார்.

மரின் சார்ந்திருக்கும் சமூக ஜனநாயகக் கட்சியானது அடிப்படையில் இடதுசார்பு கொண்ட மையவாதக் கட்சி. ஐரோப்பாவை அலைக்கழிக்கும் அகதிகள் விவகாரம் உள்பட பல விவகாரங்களில் தாராளத்தன்மையையும் எளிய மக்கள் நல மேம்பாட்டையும் பேசும் குரல்களைக் கொண்டது. மரின் இந்தக் குரல்களுக்கு வலு சேர்க்கிறார். மிக முக்கியமாக, பாலினச் சமத்துவத்துக்குக் கூடுதல் கவனம் அளிக்கிறார்.

மரின் இப்போது இளம் தாயும்கூட. அவருடைய மகள் எம்மா அமலியாவுக்கு ஒன்றரை வயதாகிறது. கரு உண்டாகி வயிறு மேடிட்டது முதல் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பது வரை தன்னுடைய தாய்மைக் கால அனுபவங்கள் அனைத்தையும் படங்களாக்கி சமூக வலைதளங்களில் வெளியிட்டவர், அதே காலகட்டத்தில் சமூகத்தில் ஒரு அரசியலராகப் பங்கெடுத்துக்கொண்ட நிகழ்வுகளையும் பதிவிட்டுவந்தார். அமைச்சராக இருந்த அன்னிகா சாரிக்கோ கருவுற்றபோது பின்லாந்தில் அது ஒரு விவாதமானதோடும், ‘ஒரு அமைச்சராக இருப்பவர் பிள்ளைப்பேறடைவது அவருடைய வேலையைப் பாதிக்கும்’ என்று பேசப்பட்டதோடும் இணைத்துப் பார்க்கப்பட வேண்டிய அரசியல் இது. ஒரு பெண் கருவுறுதலும் பிள்ளைப்பேறும் சமூகச் செயல்பாடு; அது தனிப்பட்ட ஒரு பெண்ணின் விவகாரம் மட்டும் அல்ல என்பதைச் சொல்வதுபோல இருந்தது மரினின் அணுகுமுறை.

வெளிவேலைக்குச் செல்லும் இளம்பெண்களின் பிரதிநிதியாக மரின் பார்க்கப்படுவதைத் தாண்டி, நம் நாட்டுச் சூழல் பின்னணியில் வேறு பல தளங்களிலும் அவர் கதையை விவாதிக்கலாம்.

இந்தியாவில் இளம்பெண்களின் இடம் எங்கே?
இந்தியாவின் அக்கறைகள் எங்கே சென்றுகொண்டிருக்கின்றன என்ற கேள்வியை எழுப்பிக்கொள்வோம். ஏன் நம்முடைய பிரதான அக்கறைகளில் ஒன்றாகப் பாலினச் சமத்துவம் அமையவில்லை? இந்தியாவில் மரின் போன்ற ஒரே பாலினக் குடும்பப் பின்னணியைக் கொண்ட எளிய குடும்பத்து இளம்பெண் ஒருவர் என்றைக்குப் பிரதமராக முடியும்? அத்தகைய மனவிரிவை என்றைக்கு இந்தியச் சமூகம் பெறும்? என்றைக்கு நம்முடைய நாடாளுமன்றமும் சட்டமன்றங்களும் பெண்களாலும் இளைஞர்களாலும் நிறையும்?

இதே நாட்களில்தான் உலகின் 200 நாடுகளை உள்ளடக்கிய உலகப் பொருளாதார மன்றத்தின் ‘பாலினச் சமத்துவ இடைவெளிக் குறியீடு 2020’ அறிக்கை வெளியாகியிருக்கிறது. முதல் மூன்று இடங்களில் உள்ள நாடுகளின் பெயர்களைப் பார்த்தேன். ஐஸ்லாந்து, நார்வே, பின்லாந்து. இந்தியா எங்கே இருக்கிறது என்று தேடினேன். நூற்றிப்பன்னிரெண்டாவது இடத்தில் இருக்கிறது.

அரசியல், பொருளாதாரம், அறிவியல் ஆராய்ச்சி. முக்கியமான இந்த மூன்று துறைகளிலுமே இந்தியாவில் பெண்களின் பங்களிப்பு வெறும் 14%. இன்றைய இந்திய மொத்த மக்கள்தொகையில் 35 வயதுக்குக் கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை 65%. ஆனால், இந்தியப் பிரதமர்களின் சராசரி வயது 64. இன்றைய மத்திய அமைச்சரவையின் சராசரி வயது 60. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் சராசரி வயது 54. நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் பெண்களின் நிலையைப் பற்றி விளக்கவே வேண்டாம். இத்தகைய விஷயங்கள் ஏன் நம்மை உறுத்துவதோ, அன்றாட அரசியல் விவாதத்தின் மையத்தளத்துக்கு வருவதோ இல்லை?

இந்தியாவில் பெண் தலைவர்கள் இல்லையா, இன்றைக்கெல்லாம் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே இந்திராவைப் பிரதமராக இந்தியா ஏற்கவில்லையா என்றெல்லாம் யாரேனும் கேட்கக்கூடும். என்னளவில் சுதந்திர இந்தியாவின் அரசியல் அரங்கு இதுநாள் வரை ஒரேயொரு சாமானியப் பெண்ணுக்கு மட்டுமே அவருடைய சொந்த செல்வாக்கின் வழி ஒரு பெரிய இடத்தைக் கொடுத்திருக்கிறது என்று கருதுகிறேன்; மம்தா பானர்ஜி. இந்திரா தொடங்கி மாயாவதி வரை ஏனைய தலைவர்கள் அத்தனை பேருமே யாரோ ஒரு ஆண் தலைவரின் நீட்சியாகவே இங்கு உள்ளே நுழைந்தவர்கள். 130 கோடிக்கு மேற்பட்ட மக்களிலிருந்தும், இத்தனை மாநிலங்களிலிருந்தும் ஒரு மம்தா போதுமா?

நம்மைக் காட்டிலும் முன்னணியில் உள்ள நாடுகளின் ஏனைய பின்னணிகளைப் பேசுவதைக் காட்டிலும் நம்முடைய அக்கறைகளை ஆழ்ந்து பரிசீலிப்பதே இதற்கான பதிலைத் தரும். விண்வெளிக்கு ஆள் அனுப்ப 2021-ஐ இலக்காக நிர்ணயித்திருக்கிறோம்; மக்கள் மன்றங்களில் பெண்களுக்கான 33% இடஒதுக்கீட்டை நிறைவேற்ற ஏன் அப்படி இலக்கு நிர்ணயிக்கவில்லை? நம்முடைய அக்கறைகளில் அது பிரதான இடம் வகிக்கவில்லை என்பதைத் தவிர காரணம் ஏதும் இல்லை. ஒருகாலத்தில் மோசமான இனப் படுகொலைகளுக்குப் பேர்போன ஆப்பிரிக்க நாடான ருவாண்டா பாலினச் சமத்துவப் பட்டியலில் தொடர்ந்து முதல் பத்து இடங்களுக்குள் வந்துகொண்டிருப்பதைக் கவனித்தால் இதை உணர முடியும்.


ருவாண்டா முன்னுதாரணம்
உள்நாட்டுச் சண்டையில் கிட்டத்தட்ட பத்து லட்சம் ஆண்களைப் பறிகொடுத்த ருவாண்டா ஒரு தேசமாக நொடித்துக்கொண்டிருந்த நாட்களில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கொள்கையை முன்னெடுக்கலானது. ஏனென்றால், நாட்டின் மக்கள்தொகையில் 60%-க்கும் மேற்பட்டவர்கள் பெண்கள். வெறும் ஆண்களை மட்டுமே கொண்டு பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்த முடியாது. உலகப் போருக்குப் பின் அமெரிக்காவில் எப்படி வேலைக்களத்தில் கணிசமாகப் பெண்களை நியமிக்கும் சூழல் உருவானதோ அதே சூழல் ருவாண்டாவிலும் ஏற்பட்டது. பெண்கள் வெளிவேலைக்கு வர வேண்டும்; அவர்களுடைய பிரதிநிதித்துவம் எல்லா இடங்களிலும் அதிகரிக்க வேண்டும். 2003-ல் நாடாளுமன்றத்தில் 30% இடங்களைப் பெண்களுக்கு அளிக்கும் முடிவை ருவாண்டா எடுத்தது. இன்றைய ருவாண்டாவின் நாடாளுமன்றத்தில் 64% பேர் பெண்கள். நாட்டின் அமைச்சரவையிலும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கையிலும் பாதிக்குப் பாதி பெண்கள். நிறுவனங்களின் தலைமைப் பதவிகளில், வியாபாரத்தில், விவசாயத்தில் என்று எல்லா இடங்களிலும் பெண்களின் பங்கேற்பு அதிகரித்திருக்கிறது.

இதற்கெல்லாம் அர்த்தம் பெண்களின் சொர்க்கம் ருவாண்டா என்பது அல்ல; ஆனால், சூழல் மேம்பட்டிருக்கிறது; அரசின் கூட்டுமுயற்சி பெண் வாழ்வோடு சேர்த்து ஒட்டுமொத்த சமூக வாழ்வையும் மேம்படுத்தியிருக்கிறது. ருவாண்டாவால் முடிவது, இந்தியாவால் முடியாதா?

நாம் என்னவாக ஆசைப்படுகிறோம் என்பதை நோக்கியே நம்முடைய பயணங்கள் அமைகின்றன.

உண்மையான சமத்துவத்தின் தாய்
மீண்டும் மரினின் புத்தாண்டுச் செய்தி நோக்கிச் செல்லலாம். “ஒரு சமூகத்தில் எல்லோருமே கண்ணியமாக வாழ்வதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்பதுதான் நாம் கேட்டுக்கொள்ள வேண்டிய முக்கியமான கேள்வி” என்ற மரினின் அறைகூவல், “ஒரு சமூகத்தில் எல்லோருக்கும் எல்லா இடங்களிலும் சம வாய்ப்பு இருக்கிறதா?” எனும் சமத்துவத்துக்கான ஆதாரக் கேள்வியையே வேறு வார்த்தைகளில் ஒவ்வொரு சமூகத்துக்கும் மறுநினைவூட்டுவதாகக் கருதுகிறேன்.

இங்கே எழுபதாண்டு இந்தியாவின் குடியரசுத்தன்மையை எத்தனையோ கேள்விகள் வழி நாம் சுயபரிசீலனைக்கு உட்படுத்தலாம். சாதி, மத, இனரீதியாக இங்கு நிலவும் பாகுபாடுகள், ஏற்றத்தாழ்வுகள் அடிப்படையில் எவ்வளவோ கேள்விகளை நாம் அடுக்கலாம். இந்தக் கேள்விகளுக்கெல்லாம் அடிப்படையானதாகப் பாலினப் பாகுபாட்டைக் கருதாதவரை, பாகுபாடுகளின் ஆதித் தாய் பாலினப் பாகுபாடு என்பதை நாம் உணராதவரை சமத்துவத்துக்கான நம்முடைய போராட்டம் முழு ஆகிருதியை அடையப்போவதே இல்லை.

நாம் என்னவாக ஆசைப்படுகிறோம் என்பதையே நம்முடைய அக்கறைகள் வெளிப்படுத்துகின்றன.

- ‘இந்து தமிழ்’, ஜனவரி, 2020

2 கருத்துகள்:

  1. நம்முடைய நாடாளுமன்றமும் சட்டமன்றங்களும் பெண்களாலும் இளைஞர்களாலும் நிறையும் காலம் வெகு தொலைவில் இருந்தாலும் மரின் போன்றோரின் வாழ்வியல் செய்தி இந்திய பெண்களுக்கு நிச்சயம் ஒரு துவக்கப் புள்ளியாக இருக்கும். சிறந்த கட்டுரை !

    பதிலளிநீக்கு
  2. முதலில் படித்த முட்டாள்கள் தன் நாட்டுக்கு தலைவனை திரையில் தேடுவதை நிறுத்த வேண்டும்.

    பதிலளிநீக்கு