 |
சமஸ் - சம்பந்தன் உரையாடல் |
இராஜவரோதயம் சம்பந்தன். இலங்கைத் தமிழர்களின் அரசியல் குரல்.
வடக்கு மாகாணத்தை ஆளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர். போருக்குப் பின்
இலங்கைத் தமிழர்கள் விஷயத்தில் சர்வதேசம் எடுத்துக்கொண்டிருக்கும் அக்கறைக்கு
முக்கியக் காரணம், எண்பதைத் தொடும் நிலையிலும் அசராமல் ஓடிக்கொண்டிருக்கும் சம்பந்தனின்
முயற்சிகள். ஒருபுறம் தமிழர்களிடம் சாத்வீகத்தையும் சிங்களர்களிடம்
நல்லிணக்கத்தையும் போதித்துக்கொண்டே மறுபுறம் பேரினவாத இலங்கை அரசுக்கு எதிரான
தம்முடைய அறப் போராட்டங்களை எல்லைகள் தாண்டி எடுத்துச் செல்கிறார் சம்பந்தன்.
போருக்குப் பிந்தைய
ஐந்தாண்டுகள், கால் நூற்றாண்டுக்குப் பின் நடந்த தேர்தல்… இலங்கையில் தமிழர்கள் நிலைமை எப்படி இருக்கிறது?
தமிழர்கள் ஒவ்வொரு
வீட்டிலும் இழப்பை ஏற்படுத்திய போர் இது. எம் மக்கள் தம் வாழிடங்களை, வாழ்வாதாரங்களை, சொந்தங்களை எல்லாவற்றையுமே இழந்தார்கள். யுத்தம்
முடிந்தாலும் அது ஏற்படுத்திய பாரிய பாதிப்பிலிருந்து இன்னமும் அவர்கள்
வெளிவரவில்லை. அவர்கள் மறுவாழ்வுக்கான நடவடிக்கைகள் இலங்கை அரசினால் இன்னமும்
முன்னெடுக்கப்படவில்லை; அரசு சார்பில் அப்படி உதவிகள் என்று செய்யப்பட்டவை மிகவும் அற்ப சொற்பமானவை.
உள்ளபடி, இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளின் ஆக்கபூர்வமான சில
உதவிகள்தான் மக்கள் தலையெடுக்க ஓரளவேனும் உதவுகின்றது. ஒருபுறம் மக்களின்
மறுவாழ்வைக் கட்டி எழுப்புவதில் இப்படி அலட்சியம் செய்யும் அரசு, மறுபுறம் போருக்குப் பின் ஏறத்தாழ ஐந்து ஆண்டுகள் ஆகும்
நிலையிலும்கூட ராணுவ ஆதிக்கத்தை வலுப்படுத்திக்கொண்டே செல்கின்றது. ஏறத்தாழ ஒன்றரை
லட்சம் படைப்பிரிவினர் - அதாவது, தமிழர் பகுதியில் நான்கு அல்லது ஐந்து பேருக்கு ஒரு ராணுவ
வீரர் என்ற வீதத்திலே - அங்கே ராணுவத்தினர் நிற்கின்றார்கள்.
ராணுவம் எல்லாக்
கருமங்களிலும் ஈடுபடுகின்றது. ராணுவம் விவசாயம் செய்கின்றது; வியாபாரம் செய்கின்றது; பலவிதமான போர்வைகளில், எம் காணிகளை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கின்றது. எவ்வளவோ
நெருக்கடிகளுக்கும் சங்கடங்களுக்கும் இடையிலேதான் எம் மக்கள் இருக்கின்றார்கள்.
சுய மரியாதையுடனும் கௌரவத்துடனும் எம் மக்கள் வாழ்கின்றார்கள் என்று சொல்லும் நிலை
இல்லை. இந்த நிலை மாறவேணும்; மாறாவிட்டால், நல்லிணக்கம் ஒருபோதும் உருவாகாது.